UNEP-3

 அத்தியாயம் ..3


     அலைமகளும், ஆதவ தலைவனும் முத்தமிட்டு, கூடிகளித்து கொண்டிருந்த, இரவும் அல்லாது, பகலும் முடியாது, இருந்த ரம்மியமான இளமாலை பொழுது, அமிர்தாவின் மகிழ்ச்சியை மேலும் கூட்டி இருந்தது என்றே சொல்லலாம்.


அலைமகளின் அளவற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவள் முகத்தில் ஈரகாற்றின் மூலம் வந்து மோத, அதில் சிலிர்த்து போனாள் அமிர்தா.


அந்த கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த காரின் உள்ளே அமர்ந்திருந்தவளுக்கு இந்த பயணம் புதுவித அனுபவமாய் இருந்தது. இதுவரை காரில் பயணித்தது இல்லை அவள், இன்று தான் முதல் முறை பயணம் செய்கிறாள். இதுவரை கடற்கரையை கூட அவள் பார்த்ததில்லை, இன்று காண்கிறாள். அலைமகள், கரை காதலுனுடன் தொட்டு தொட்டு விளையாடி கொண்டிருந்ததை தூரத்தில் இருந்தே ரசித்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. 


'அஞ்சலியையும் ஒருநாள் இங்கு கூட்டிட்டு வரணும்'

என மனதோடு நினைத்து கொண்டவளுக்கு, அப்பொழுது தான் நினைவே வந்தது, தான் இன்று இல்லம் வர நேரமெடுக்கும் என்ற செய்தியை அஞ்சலிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே!!


உடனே அலைபேசியின் வழியாக அஞ்சலிக்கு 'தாம் தாமதமாக வருவேன், எனக்காக காத்திராமல், நேரமே சாப்பிட வேண்டும்" என்று குறுந்செய்தியில் அனுப்பி வைக்க, அவளும் சரி என்று கூறி பதில் அனுப்பினாள். 


அவளது பதிலை திருப்தியுடன் பார்த்த அமிர்தா, அலைபேசியை தன் பைக்குள் போட்டு கொண்டு, மீண்டும் அந்த நீண்ட தூர பயணத்தின் இனிமையை ரசிக்க ஆரம்பித்தாள். 


அந்த இனிமையின் கூடவே இதனை, தனக்காக உருவாக்கி கொடுத்த சந்தோஷின் நினைவும் அவள் முன் நிழலாடியது. அவனின் நினைவுகளுடனே தன் கடந்தகாலத்தை நோக்கி அவளது சிந்தனை பயணித்தது.


பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்த  அமிர்தாவிற்கு மேலே படிக்க விருப்பம் இருந்தாலும், அதற்கான போதிய வசதி இல்லாமல்  போக, படிப்பை தொடர முடியாத சூழ்நிலை. 


வீட்டிலும் சும்மாவே உட்கார்ந்த்திருக்கவும் முடியவில்லை. தினம் தினம் கலாவின் சுடுசொல் வேறு அவளை வாட்டி வதைத்தது. 


"இப்படி ஓசியிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க உனக்கெல்லாம் வெட்கமா இல்லை. காலத்துக்கும் உங்களுக்கு சேவகம் செய்ய தான், என் அப்பாம்மா என்னை பெத்து போட்டாங்களா? இப்படி உட்கார்ந்து திங்கிற சோறெல்லாம் ஜீரணிக்குமா?"


என தினம் தினம் அவரின் சொல்லம்புகளின் வேதனையை தாங்க முடியாது, வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தாள்.


அவள் வேலை தேடும் பொழுது கிடைத்த வேலை தான் தற்பொழுது அவள் செய்யும் வேலை.


அவர்கள் கொடுக்கும் தகவல்களை கணினியில் தட்டச்சு செய்து வைப்பது தான் அவள் வேலை. குறைந்த சம்பளம்தான், இருந்தாலும், தான் படித்த படிப்பிற்கு வேறு என்ன உயர்ந்த வேலை கிடைக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு கிடைத்த வேலையை எந்தவித தயக்கமும் இன்றி மேற்கொண்டவள், அந்த வேலையில் பொருந்தி போனாள்..


அந்த கம்பெனியில் சூப்பர்வைசராக பணிப்புரிபவன் தான் சந்தோஷ். ஆரம்பித்தில் இவள் ஒரு தொழிலாளி, அவன் இவளுக்கு மேலதிகாரி என்ற ஸ்நேகம் தான்  இருவருக்குள்ளும் இருந்தது.


நாளைடைவில் சந்தோஷிற்கு அமிர்தாவின் மீது மெல்ல ஈர்ப்பு வர தொடங்கியது. அவளின் பொறுமை, நிதானம், அமைதி என அவளின் நற்குணங்கள் அனைத்தும் அவனை கவர, கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஈர்ப்பு அவள் மீது காதலை மலர செய்திருந்தது.


சந்தோஷின் போன பிறந்தநாளில், அலுவலகத்தில் இருந்த அனைவரும் அவனுடைய பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வாங்கி வைத்து அவனை வெட்ட சொல்லி, பிறந்தநாளை கொண்டாட, அவனும் அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, கேக் வெட்டி, அனைவருக்கும் அதனை பிரித்து கொடுத்தான்.


அப்படி அமிர்தாவிடம் கொடுக்கும் பொழுது, கூடவே தன் காதலையும் அவன் கூற, அவளோ அதிர்ந்து போய் அவனை நோக்கினாள். 


அவள் தந்தை இறந்த பின், வேறெந்த ஆண்மகனிடமும் அவள் பேசி பழகியதில்லை. தந்தை ஸ்நானத்தில் இருக்கும் தாய்மாமனிடம்  மட்டுமே அமிர்தா பேசுவதும், பழகுவதும். 


மாமன் மகன் என்ற முறையில் மகேஷிடம் கூட அவள் பேசியதில்லை. அப்படி பேச தான் கலா விட்டு விடுவாரா?  சாதரணமாக ஏதாவது கேட்டால் கூட,


"என் பிள்ளை கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? பேசி பேசி என் பிள்ளையை மடக்கி போட்டு இங்கேயே நிரந்தரமா கூடாரம் போடலாம் என்ற எண்ணமோ?"


என தகாத வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்தி விடுவார். அப்படி பேச்சு வாங்குவதற்கு பதில் மகேஷிடம் பேசாமல் இருப்பதே உத்தமம் என்று அமிர்தாவும், அஞ்சலியும் மகேஷ் இருக்கும் திசை பக்கம் கூட செல்ல மாட்டார்கள்.


அப்படியிருக்க, முதன் முதலில் ஒரு ஆண்மகன் அவளிடம் காதலை தெரிவித்த்தும் அவளுக்கோ படப்படப்பாக வந்தது. தன்னுடைய நிலை என்ன என்பது அவள் அறிவாளே!! 


தினம் தினம் உணவிற்கே  கலாவிடம் கையேந்த வேண்டிய நிலை இருக்க, இதில் காதல், கல்யாணம் போன்றவற்றை எல்லாம் அவள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. 


அதுவும் தன்னுடைய குடும்ப பின்னணி பற்றி தெரிய வந்தால், அது அவளுக்கு எத்தகைய அவமானத்தை  உருவாக்கி தரும் என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். 


சட்டென்று அவன் இப்படி கூறியதும், அவளோ, முதலில் பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். சந்தோஷை பார்ப்பதை தவிர்த்து வந்தாள்.


ஒரே அலுவலகத்தில் வேலை, இதில் அவன் இவளுக்கு மேலதிகாரி, இவளே தவிர்க்க நினைத்தாலும், அவனே வலிய வந்து பேசினான்.


அடுத்தடுத்து அவனை சந்திக்கும் பொழுதெல்லாம் அவனோ அவன் காதலை வெவ்வேறு விதமாக கூற, ஒருநாள், அவளே தன் பயத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் நிலையை பற்றி சந்தோஷிடம் கூறினாள்.


"இல்லை சார், என்னோட நிலைமை என்னன்னு உங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா இது போல பேச மாட்டீங்க.  இதெல்லாம் என் வாழ்க்கைக்கு ஒத்து வராது. எங்க வீட்டில் பெரியவங்கன்னு யாரும் இல்லை.  வாய் பேச முடியாத தங்கச்சி மட்டும் தான் இருக்கா, அவளுக்கு எல்லாமே நான் தான். நாங்களே மாமா வீட்டில் அண்டி பிழைச்சுட்டு இருக்கோம். 


தங்கச்சியை நல்ல படியா பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு. இதுக்கு நடுவில் காதல் கல்யாணம்லாம் என்னால் யோசிக்க முடியாது. உங்க நல்ல மனசுக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பாங்க. என்னை விட்டுடுங்க"


என அவள் முடிவாக அவனின் காதலை நிராகரித்து சென்று விட, ஆனால் சந்தோஷோ அதற்கெல்லாம் சோர்ந்து போய் விடவில்லை. அவளின் நிலை அவனுக்கு புரிந்தது. இருந்தும் மனதில் தோன்றிய காதல் உத்வேகம் தர, விடாது முயற்சி செய்தான். அவளின் பிறப்பு முதல், தற்பொழுது வரை அனைத்தையும் தெரிந்து கொண்டவன், அவளிடம் விடாது தன் காதலை காட்டிக்கொண்டே இருந்தான்.


அவன் காதலிப்பதும், அதற்கு அவள் மறுப்பு தெரிவித்ததும் அலுவலகத்தில் இருக்கும் ஒருவருக்கும் தெரியாது. வீண் பேச்சுகள் தேவையில்லாது அவளை வந்து சேர வேண்டாம் என்று எண்ணி வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தான். கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையுமாம்!! எனற பழமொழிக்கு ஏற்ப, அவன் விடாது முயற்சி செய்ததன் விளைவு அவளுள்ளும் சிறுக சிறுக காதல் மலர்ந்தது. 


ஒரு சின்ன ஆறுதலுக்கு கூட ஆதரவு இல்லாமல் தவித்தவளுக்கு, ஆறுதல் தந்து அன்பை பொழிய ஒருவன் வரவே, அதனை அவளால் மறுக்க முடியவில்லை. கட்டிப்போட்டு வைத்த மனம் மெல்ல மெல்ல அவன்பால் சாய்ந்தது. 


அதுமட்டுமில்லாமல் சந்தோஷ் எப்பொழுதும், அவளிடம் கண்ணியதோடு நடந்து கொள்வான்.


அவளையும் அவள் தங்கையையும் தான் பார்த்து கொள்வதாக கொடுத்த நம்பிக்கையும், அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தும், என அவனின் அனைத்து குணங்களும் அவளை வெகுவாக கவர்ந்தது. இதுவரை அவன் அவளிடம் எல்லை மீறி பேசியதில்லை, நடந்து கொண்டதும்  இல்லை.


விலகி போனவள், அவன் பக்கத்தில் வந்தாள். மௌனமாய் இருந்தவள், அவனுடன் மட்டும் பேசினாள்.  இப்படியே தொடரந்ததன் விளைவு தான் இன்று இருவருக்கும் திருமண பேச்சை பேசும் அளவிற்கு வளர்ந்திருந்தது.


அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி. முகம் அத்தனை பூரிப்புடன் காணப்பட்டது. அவனுக்காக, கைக்குட்டை ஒன்றில் அவள் பெயரின் முதல் எழுத்தையும், அவன் பெயரின் முதல் எழுத்தையும் அவளே எம்பிராய்டரி போட்டு இருந்ததை எடுத்து பார்த்தவள், அவனிடம் அதனை பிறந்தநாள் பரிசாக கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்கும் பொழுதே தன்னுடைய காதலையும் வாய்மொழியால் கூற வேண்டும் என பல ஒத்திகைகளை மனதிற்குள்ளே போட்டு பார்த்து கொண்டே பயணத்தை மேற்கொண்டாள்.


"மேடம், நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு"


என காரின் ஓட்டுநர் கூறியதில் நினைவு கலைந்தவள், அதிலிருந்து இறங்கி, வீட்டை காண, சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லாது காணப்பட்டது அந்த இடம். இருள் வேறு வான்மகளை கவ்வியப்படி இருக்க, ஒரு வீட்டிற்கும், மற்றொரு வீட்டிற்கும் இடைவெளிகள் வேறு  சற்று அதிகமாகவும் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தன்னை அறியாமல் ஒருவித பயம் வந்து ஒட்டிக்கொண்டது.


அமிர்தா, வீட்டு வாசலில் நின்றபடி திருத்திருவென முழிப்பதை பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சந்தோஷ். உடனே அவளின் தொலைபேசிக்கு அழைக்க, அந்த நிசப்தமான சூழ்நிலையில் அந்த அலைபேசி சத்தம் கூட அவளை திடுக்கிட செய்தது. உடல் தூக்கி வாரி போட, அதனை பார்த்தவள், சந்தோஷ் என்றதும், சற்றே ஆசுவாசமடைந்து,


"ஹெலோ' என்றாள். அவனோ,


"என்னாச்சு அமிர்தா? உள்ளே வராமல் வெளியேவே நின்னு என்ன பார்த்துட்டு இருக்க?" 

எனக் கேட்டதும்,


"ஹான் ஒன்னுமில்லை, ஒண்ணுமில்ல" என்றவள் வெளிக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.


அதற்குள் வாசலுக்கு ஓடிவந்த சந்தோஷ், 


"வெல்கம் மை ஸ்வீட் ஹார்ட்" என அவளை அட்டகாசமாய் வரவேற்க, அவளும் இது என்ன தேவையில்லாத பயம், சந்தோஷ் தான் கூட இருக்கிறாரே!! என தன்னை தானே தேற்றிக் கொண்டவள் புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்தாள். 


அவனோ அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வர, அவளோ வீட்டை சுற்றி கண்களை சூழல விட்டுக் கொண்டிருந்தாள். வீட்டில் யாருமில்லை, இவர்கள் மட்டுமே இருக்க, ஜூஸை வாங்கி கொண்டவள், 


"என்ன யாருமே காணும்? அப்பா, அம்மாலாம் வரதா சொன்னீங்களே"

என கேட்டாள்.


"ஆமாம் வரதா தான் சொன்னாங்க, வந்துடுவாங்க, எனக்கு கிப்ட் வாங்கிட்டு வரேன் சொன்னாங்க. கொஞ்சம் டிராஃபிக்கில் வேற மாட்டிகிட்டதா சொன்னாங்க வந்துடுவாங்க. வெயிட் பண்ணுவோம்"


என விளக்கம் கூறியவனிடம் "ஒஹ்" என்ற பாவனையுடன் முடித்து கொண்டாள்.


அடுத்து என்ன பேசுவது? என்ன கேட்பது? என்பது எதுவும் புரியாது அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளிடம் சந்தோஷ்  நெருங்கி அமர, அதில் திடுக்கிட்டவள், 


"எ..ன்..ன..?" என  நா தந்தியடிக்க கேட்டாள். அவனோ, அவள் கையுடன் தன் கையை கோர்த்துக் கொள்ள முனைய, இதற்கு முன் இப்படி நடந்திராதவன், இன்று புதிதாக நடந்து கொள்ளும் முறையில் அவளுக்கோ படப்படப்பாய் வந்தது.


அவன் கையில் இருந்து தன் கையை உருவிக் கொள்ள முயன்று கொண்டே,


"என்னாச்சு? எதுக்கு இப்படி நடந்துக்கிறீங்க? கையை விடுங்க"


என வலுக்கட்டாயமாக பிரித்துக்கொண்டவள் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். அவனது பார்வையும், செய்கையும் ஒருவித அசவுகரியத்தை கொடுக்க, எதுவும் சரியில்லாததது போல தோன்றியது அமிர்தாவிற்கு.


"சந்தோஷ், நீங்க நடந்துகிறது எனக்கு சரியாபடலை. நான் வீட்டுக்கு போகணும். வண்டி பிடிச்சு கொடுங்க நான் போறேன். இன்னொரு நாள் உங்க அப்பா, அம்மாவை பார்த்துகிறேன்"


என படபடப்புடன் பேசியவளை நிதானமாக பார்த்தவன்,


"இப்போ என்னாச்சு? நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோம், கல்யாணம் பண்ண போறோம். உன் கையை பிடிச்சுகிறது தப்பா சொல்லு"

என அவனின் செய்கைக்கு நியாயம் பேசினான். அமிர்தாவோ,


"ஆமாம், காதலிக்கிறோம் தான், கல்யாணம் பண்ண போறோம் தான். எல்லாமே உண்மை தான். யார் இல்லைன்னு சொன்னது? ஆனால் இது போல கைபிடிக்கிறது, நெருங்கி வந்து பேசுறது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். இதை நீங்க தான் என்கிட்ட சொல்லி இருக்கீங்க. இப்போ எதுக்கு அதை மாத்த பார்க்கிறீங்க? 


கல்யாணம் ஆன பின்னாடி உரிமையா, நீங்க என் கையை பிடிச்சீங்கன்னா எதுவும் தப்பா தெரியாது. இப்போ இதுபோல் பண்றது பெரிய தப்பு"


என படப்படத்தவளுக்கு, ஏனென்று தெரியாத பயம் வந்து சூழ்ந்து கொண்டது. மனமெல்லாம் படப்படவென அடித்து கொண்டது. தற்பொழுது சந்தோஷூடன் இருப்பதற்கே பயமாக இருந்தது.


நிதானமாக அவளருகில் வந்து நெருங்கி நின்ற சந்தோஷ் 


"கையை பிடிக்கிறது தப்பா? நீ எந்த காலத்தில் இருக்க? இந்த காலத்தில் அவனவன் குழந்தை பெத்த பின்னாடி தான் கல்யாணமே பண்ணிக்கிறான், அது தெரியுமா உனக்கு?"

என நக்கலாக கூறியவனை திகைப்புடன் பார்த்தவள், 


"இதெல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கீங்க? எனக்கு ஒன்னும் புரியல. யார்ன்னா என்ன வேணும்னாலும் பண்ணிட்டு போகட்டும். ஆனால் நாம ஒழுங்கா இருப்போம்"

என படப்படத்தாள்.


"என்மேல் நம்பிக்கை இல்லையா?. உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா?"

என்று நிதானமாக கேட்டவனிடம், 


"இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது இல்லை. ஒழுக்கம், நெறிமுறைகள் சம்பந்தப்பட்டது. இது எல்லாம் நாம கடைபிடிக்க கூடாதுன்னு சொல்றீங்களா? மத்தவங்க அதையெல்லாம் கடைபிடிக்காம இருக்கிறதால் அது தான் சரின்னு சொல்ல வரீங்களா? 


நமக்குன்னு சில ஒழுக்க நெறிகள் இருக்கு. மத்தவங்க சொல்றாங்கன்னு அம்மாவை அப்பான்னும், அப்பாவை அம்மான்னும் கூப்பிறீங்களா? இல்லை மத்தவங்க செய்றாங்க என்பதற்காக உங்க தங்கச்சி கூடவே நீங்க உறவு வச்சுப்பீங்களா?"

என பட்டென்று  கேட்டு விட,  அதில் அவனுக்கு ஏகத்துக்கும் கோபம் வந்தது. 


"ஏய்" என ஆத்திரத்தோடு அவளை நோக்கி கை ஓங்கினான் சந்தோஷ். அவளை அடிக்காமல் அப்படியே கைகளை உயர்த்தி, கண்கள் முழுவதும் கோபத்தில் சிவந்து, இத்தனை நாள் பார்க்காத புதிய சந்தோஷை, கண்டவளுக்கு அத்தனை பயமாக இருந்தது. கண்ணீல் நீர் வழிய, 


"நா.ன், நான்.. வேணும்ன்னு சொல்லலைங்க. நீங்க தப்பா பேசினத்துக்கு தான், என்னை மீறி வந்துடுச்சு. மன்னிடுச்சுங்க"


என மன்னிப்பு கேட்டதும், ஓங்கிய கையை இறக்கி கொண்டவன், அவளை மேலிருந்து கீழ்வரை வக்கிரமாக அளவெடுத்தான்.


அவனின் பார்வை எதுவும் அவளுக்கு சரியாக படவில்லை. ஒருவித படப்படப்புடனே நின்றிருந்தவள், இதற்கு மேலும் இங்கிருப்பது உத்தமம் இல்லை என்பதை உணர்ந்து,


"நான் வீட்டுக்கு போறேன். அஞ்சலி தனியா இருப்பா"


என முடிக்கும் முன்பே, அவளை இழுத்து அணைத்திருந்தான் சந்தோஷ்.


முதலில் திகைத்தவள், பின் அவனின் எண்ணம் புரிந்து, 


"சந்தோஷ் என்ன பண்றீங்க? விடுங்க என்னை"


என அவனிடமிருந்து திமிர, அவனின் கைகளோ அவள் மேனியில் அத்துமீறியது.


அவனின் செய்கையில் அருவருத்து போனவள், பலம் கொண்டு அவனை தள்ளி விட, ஏற்கனவே அவள் வரும் முன்பே மது அருந்தி இருந்தவன், அவள் சட்டென்று தள்ளி விட்டதும், நிலைகொள்ள முடியாது அவனோ தூரம் போய் விழுந்தான்.


கண்ணீர் நீர் வழிய, அவனை பார்த்தவள்,


"சந்தோஷ் என்ன இது? ஏன் இப்படி நடந்துகிறீங்க? உங்களை நான் எவ்வளவு நம்பி இருந்தேன். இப்படி என் நம்பிக்கையை உடைசீட்டிங்களே!! நாம கல்யாணம் பண்ணி எப்படியெல்லாம் வாழணும் ஆசைப்பட்டோம். எவ்வளவு பேசி இருப்பீங்க என்கிட்ட? இப்போ என்னாச்சு உங்களுக்கு?"


என ஆற்றாமையாய் கேட்க, போதையின் பிடியில் விழுந்து கிடந்தவன், அவளின் வார்த்தைகளில், ஏதோ நகைச்சுவை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக  துரோகத்தின் வலியை உணர்ந்தாள் அமிர்தா.


"அடியேய் அமிர்தா, நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னுமா நம்பிக்கிட்டு இருக்க?


என கூறியவனின் கூற்றில் அவள் உலகமே நின்று போனது. தட்டு தடுமாறி எழுந்தவன், அவளருகில் வந்து நின்று, அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தப்படியே, 


"இருந்தாலும், உனக்கு இவ்வளவு பேராசை இருக்க கூடாது அமிர்தா. உன் நிலைமை என்ன? உன் தகுதி என்ன? உனக்கு என் கூட கல்யாணமா?"

என நக்கலாக கேட்டவன்,


"நீயெல்லாம் எதுக்கு ஒழுக்கத்தை பத்தி பேசுற? அதுக்கு உனக்கு தகுதி இருக்கா என்ன? உன் அம்மாவே, உன் அப்பா போய் சேர்ந்ததும், உன்னையும் உன் தங்கச்சியையும் அனாதையா விட்டுட்டு வேற எவன் கூடவோ ஓடி போனவ தானே!! அவளுக்கு பொறந்த நீ ஒழுக்கம், நெறி, அது இதுன்னு பேசிக்கிட்டு திரியுற. ஓடுகாலி பொண்ணுக்கு கல்யாணம் தான் ஒரு கேடு. எதுக்கு? நீயும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்ததும், வேற எவன் கூடவாவது ஓடி போகவா!!"


என அவள் தலையில் தணலை அள்ளிக்கொட்ட, அதில் அணலில் இட்ட புழு போல் துடிதுடித்து போனாள் அமிர்தா.


 "சந்தோஷ்" என ஈனமான குரலில் அவனை அழைத்தவளுக்கு. கண்ணீல் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அவளை துரத்தும் அதே பழிச்சொல், யார் வாயில் இருந்து வரக்கூடாது என்று நினைத்து இருந்தாளோ, அவனே அவளை அசிங்கப்படுத்தி பேசுகிறான், தாங்கி கொள்ள முடியவில்லை அவளால்!!


அவன் மீதான அவளது நம்பிக்கையை, காதலை, நேசத்தை அனைத்தையும் சந்தோஷ், ஒவ்வொரு நரம்பாய் பிய்த்து எடுத்து கொண்டிருக்க, அதன் வலியில் துடிதுடித்து போனாள் பெண்ணவள்.


"என்ன இவ்வளவு ஷாக்கா பார்க்கிற? இதையெல்லாம் தெரிஞ்சு தானே காதலிச்சான், இப்போ என்ன இப்படி சொல்றான்னே பார்க்கிறியா? என்ன பண்றது அழகா இருக்க, என்ன பண்ணாலும் கேள்வி கேட்க ஆள் இல்லையே!! இப்படி ஏதாவது செஞ்சா தானே உன்னை அடைய முடியும். அதான், இந்த காதல், கல்யாணம், நல்ல பார்த்துகிறேன் அப்படி இப்படின்னு பொய் சொல்ல வேண்டியதா போச்சு. அப்புறம் இன்னொரு விஷயம், கூடவே இனாமா உன் தங்கச்சியும் கிடைக்குமே அதான்"


என ஏளனமாக கூறியவன் பேச்சில் அருவருத்து போனவள், தங்கையை பற்றி கூறியதும் கொதிந்தெழுந்து விட்டாள். எங்கிருந்து தான் அவளுக்கு அத்துணை வேகம் வந்ததோ, சிறிதும் யோசிக்கவில்லை, பட்டென்று அவன் கன்னத்திலே ஓங்கி ஒரு அறை விட்டாள்.


"ச்சீ, இவ்வளவு கேவலமானவனா நீ, உன்னை எவ்வளவு நம்பினேன்? எவ்வளவு காதலிச்சேன். கடைசியில் உன் புத்தி இவ்வளவு கீழ்தரமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை"


என ஏமாற்றத்தின் வலி அவள் வார்த்தைகளில் வெளிப்பட, அவள் அடித்ததால் உண்டான கோபத்தில் அவனோ அவளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.


"என்னையா கை நீட்டி அடிக்கிற? அவ்வளவு திமிரா உனக்கு? ஒன்னுத்துக்கும் வழி இல்லாமல் பிச்சை எடுத்து வாழும் போதே உனக்கு இவ்வளவு கொழுப்பா? இருடி, இன்னைக்கு உன்னை ஒருவழி பண்ணாமல் விட மாட்டேன். அப்படியே இதையே காரணமாக்கி, அந்த ஊமையையும் என் வழிக்கு கொண்டு வரேன்"


என ஆக்ரோஷமாக கர்ஜித்தவன், அவள் அணிந்திருந்த சுடிதாரை, முரட்டு தனமாக கிழிக்க ஆரம்பிக்க, அவளோ, அவனிடமிருந்து தப்பித்து கொள்ள பாடுப்பட்டாள்.


"விடுடா, என்னை, விடு" என அவனிடம் போராடியவள், அவனின் ஆக்ரோஷத்தில் சற்று துவண்டு தான் போனாள். அருகில் ஏதாவது கிடைக்கிறதா என கைகளை துழாவி, தேட, அவள் கைகளில் சிக்கியதோ, அவன் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்த ஜூஸ் டம்ளர். அதனை எடுத்தவள், ஓங்கி அவன் நெற்றியிலேயே அந்த கண்ணாடி டம்பளரால் அடிக்க, அது சரியாக சந்தோஷின் நெற்றியை பதம்பார்த்தது.


வழியும் ரத்தத்தை பிடித்தப்படி, "ஆ என்ற அலரளுடன் இவள் மீதிருந்த பிடியை சந்தோஷ் தளர்த்த, கிடைத்த இடைவெளியில் அவனை கீழே தள்ளி விட்டவள், தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியில் வந்தாள். நல்ல வேளையாக கதவின் சாவி அதிலே தொங்கி கொண்டிருக்க, அதனை எடுத்து வெளிப்புறமாக பூட்டி, சாவியை தூர தூக்கி போட்டவள், சாலைக்கு ஓடி வர, அதுவோ கும்மிருட்டாக நிசப்தமான சூழ்நிலையில் காணப்பட்டது.


எங்கு செல்வது? எப்படி செல்வது? எது சரியான வழி? எதுவும் புரியவில்லை அமிர்தாவுக்கு. அவளின் போதாதா நேரம் சாலை விளக்கு கூட எரியவில்லை அந்த பகுதியில். 


பதற்றத்தில் பையில் வைத்திருக்கும் கைபேசி கூட அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. ஏதோ தெரிந்த பாதையில் கால் போன போக்கில் வேகமாக ஓடினாள். எங்கே சந்தோஷ் வந்துவிடுவானோ என்ற பயம் மட்டுமே அவளை முழுவதும் ஆட்கொண்டது. அந்த பயத்தினால் உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது.


ஏதோ ஒரு இடத்தில் சற்றே வெளிச்சம் தெரிவது போல் இருக்க, நெடுஞ்சாலை தான் வந்துவிட்டது போல என்றெண்ணி வேகமாக அந்த திருப்பத்தில்  ஓடியவள் மீது சற்றும் எதிர்பாரா வண்ணம் மோதியது அந்த வழியாக வந்த கார் ஒன்று. கடைசி நிமிடத்தில் காரில் இருந்தவனும் அவளை கவனிக்க தவற, அமிர்தாவும் சுதாரிக்க தவற, சட்டென்று வந்து மோதியதில், அவள் அதில் இடிப்பட்டு, தலை மோதி கீழே விழுந்தாள். ரத்தம் வழிய கீழே விழுந்தவள் கொஞ்சம் கொஞ்சமாகஅவ்விடத்திலே தன் சுயநினைவை இழந்தாள்.




எண்ணங்கள் ஒன்றாகி,

இதயங்கள் இணைந்து

தூரங்கள் இல்லாத

காலங்கள் விடிய 

காத்திருக்கிறது 

என் காதல் 

நின் காலடியில்…!!



பிடிக்கும் .... 

















        


Comments

Post a Comment