UNEP-5

 அத்தியாயம்..5


        நிசப்தமான இரவின் இருளில், மெல்லிய அலையோசைகள், அந்த இரவின் இருளை இனிமையாய் அலங்கரித்து, இதத்தை பரவ செய்ய, அதில் சுகமாய் முழ்கி இருந்தான் ஆரவ்ஜெயந்தன்.


ராமமூர்த்தி அழைத்ததன் பெயரில், விருப்பமே இல்லாமல் வந்தவன், முதலில் கண்டது, அந்த பிரம்மாண்டமான இல்லத்தை தான். இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது இந்த இடம் ராமமூர்த்தியின் கெஸ்ட் ஹவுஸ் என்பது.


மரியாதை நிமித்தமாக அவருக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு, தனித்து வர முயற்சிக்க, எங்கே அவர் விட்டால் தானே!!, தெரிந்தவர், தெரியாதவர் என ஒருவர் விடவில்லை அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தி, அவனை புகழ்ந்து பேச, அவனுக்கோ சலிப்பாக இருந்தது. 


எப்படியோ அவரிடமிருந்து தப்பித்து தனித்து வந்தவன் இதோ இருளில் தெரிந்த அலையோசைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். கடவுளின் படைப்பில் எல்லாமே அழகு தான் அவனை பொறுத்தவரையில். 


நல்லவேளையாக ராமமூர்த்தி பார்ட்டியை வீட்டின் மொட்டை மாடியில் ஏற்பாடு செய்ந்திருந்தார். அது ஒன்று தான் அவனுக்கு இங்கு  கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம். கருப்பு காகிதத்தில் அள்ளி தெளிக்கும் வெள்ளி சரிகையாய், தெரிந்த கடலும், கடலலையும், அவனின் மனதை சற்றே அமைதிபடுத்தியது என்றே சொல்லலாம்.


குறிப்பிட்ட சிலர் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் ராமமூர்த்தியின் நண்பர்கள் போலும், அவருடன் சிலரை அவன் ஏற்கனவே பார்த்திருக்கிறான். ஆனால் யாருடனும் நெருங்கி பேச முடியவில்லை. எதிலும் ஒன்ற முடியவில்லை. எப்பொழுதுடா இங்கிருந்து கிளம்புவோம் என்ற மனநிலைமையில் தான் இருந்தான்.


ராமமூர்த்தி, அவன் தனிமையில் நின்றிருப்பதை கவனித்து மகள், ஸ்ரேயாவை தனியே அழைத்தவர்,


"ஸ்ரேயா, அங்க பாரு ஆரவ் தனியா இருக்கான். போய் பேசு. குடிக்க ஏதாவது எடுத்துட்டு போ, அப்படியே பேச்சு கொடு"


என அவளை அனுப்பி வைக்க, அவளும் அங்கு வகை வகையாக அடுக்கி வைத்திருந்த மதுபானங்களை அவனுக்காக தேர்ந்தெடுத்தப்படியே,


"காலையில் வெல்கம்ஹக் பண்ணதுக்கே, ஓவரா சீன் போட்டான். இப்போ கூட, வந்திருக்கிற அத்தனை பேரும் என்னை தான் பார்த்துட்டு இருக்காங்க. இவன் மட்டும் இருட்டை பார்த்துட்டு இருக்கான். எல்லாமே சீனுக்காக பண்றான். அப்போ தான் எல்லாரும் இவனை பார்ப்பாங்கன்னு. நாம இதுபோல எத்தனை பேர் கிட்ட, எப்படியெல்லாம் செய்து இருப்போம், நம்ம கிட்டயே சீன் போடுறான்.

என தான் செய்யும் கீழ்த்தரமான செயல்களை, ஆரவ்வின் எதார்த்தமான செயல்களோடு ஒப்பிட்டு கொண்டாள். 


“இதில் அவன் என்ன பிராண்ட் அடிப்பான் வேற தெரியல. சரி நாம அடிக்கிற பிராண்டே எடுத்துட்டு போவோம்"

என்று  ஒரு மதுபானத்தை இருவருக்கும் எடுத்துக் கொண்டு அவனருகில் சென்றவள்,


"ஹெலோ ஆரவ்" என்று பளிச்சென்று அழைத்தாள். குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய ஆரவ்,


"ஹெலோ மேடம்" என்றான் அவள் முகம்பார்த்து. எந்த பெண்ணிடமும், முகம் பார்த்து பேசுவது தான் அவன் வழக்கம். அதற்கு கீழ் அவன் பார்த்தால், ஆரவ் ஜெயந்தன் என்ற ஒருவன் இறந்து விட்டதற்கு சமம் அவனை பொறுத்தவரையில். ஒழுக்கத்தில் ஸ்ரீராம் தான் ஆரவ்ஜெயந்தன். ஸ்ரேயா அத்துணை கவர்ச்சியாக ஆடை அணிந்து இருந்திருந்த போதும், முகம் பார்த்து பேசும் அவனின் கண்ணியம், அவன் ஒரு சிறந்த ஆண்மகன் என்பதை தெள்ள தெளிவாக காட்டியது.


"ஏன் மேடம்லாம் கூப்பிறீங்க? கால் மீ ஸ்ரேயா"

என்று வசீகரமாக கூறியவள்,


"டேக் யூவர் ட்ரிங்க்," என கையில் இருந்த மதுபானத்தை அவனிடம் நீட்டினாள்.

அவனோ அதனைக்கண்டு,


"ஸாரி, எனக்கு பழக்கம் இல்லை

என பதில் கூறியவன் மீண்டும் இருளின் அழகை ரசிக்க திரும்பி கொண்டான்.


"வாட்?? ஆர் யூ ஜோகிங்? பழக்கமில்லையா? என்னால் நம்பவே முடியல. சினி பீல்டில் இருந்துட்டு பழக்கம் இல்லைன்னு சொன்னா நான் நம்புவேன்னு நினைக்கிறீங்களா?!! நான் தப்பா நினைப்பேன் தானே பழக்கம் இல்லைன்னு பொய் சொல்றீங்க!! அதெல்லாம் நான் நினைக்க மாட்டேன். நான் ரொம்ப பிரீ டைப். இன்பேக்ட் நானே சோசியல் ட்ரிங்கர் தான், சோ எடுத்துக்கோங்க”

என அவள் கூறியதும், அவனுக்கோ உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது.


" வாட்? நீங்க என்னைப்பத்தி தப்பா நினைப்பீங்கன்னு பொய் சொல்றேன்னா? சில்லி”

என அத்தனை எரிச்சலையும் புன்னகையாக கட்டியவன், 


“என்னைப் பத்தி நீங்க தப்பா நினைச்சா எனக்கென்ன? நினைக்கலைன்னா எனக்கென்ன?  உங்க கிட்ட நல்லவன் வேஷம் போடனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. என்னை பொறுத்தவரை நீங்க ராமமூர்த்தி சார் பொண்ணு. அவ்வளவு தான். தென், ட்ரிங்ஸ் பண்றது என்ன? சினி பீல்டில் இருக்க முக்கியமான குவாலிஃபிகேஷனா? அப்படி தான் நினைச்சுட்டு இருக்கீங்களா? ஸாரி, அப்படி எதுவும் இல்லை.


என கூறியவனின் குரலில் சிறிதளவும் கடுமை இல்லை, ஆனால் வார்த்தைகளில் அத்தனை கடுமை தெறித்தது.


மீண்டும் விட்ட வேலையை ஆரவ் தொடர, ஸ்ரேயாவுக்கு தான் இதுபோல அவன் நடந்து கொள்வது மிகுந்த அவமானமாக இருந்தது. 


'மறுபடியும், மறுபடியும், இவன் என்னை இன்சல்ட் பண்ணிட்டே இருக்கான். திமிர் பிடிச்சவன்'

என மனதோடு திட்டிக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்.


நேராக தந்தையிடம் சென்றவள்,


"டாட், அவன் ரொம்ப ஓவரா பண்றான். அகைன் அண்ட் அகைன் இன்சல்ட் பண்ணிக்கிட்டே இருக்கான். எனக்கு செம டென்ஷன் ஆகுது. ஓவர் ஆட்டிடுயூட் காட்டுறான்"

என அதீத கோபத்தில் கத்த, அவரோ,


"ஷூ.., ஏன் இப்படி கத்துற ஸ்ரேயா? ஆரவ்கு இந்த பழக்கமெல்லாம் இல்லை. நீ குடிக்கிறியா கேட்டா, அவன் அப்படி தான் பேசுவான்"

என அவரும் அவளிடம் கடுமையை கட்டினார்.


"என்ன டாட் சொல்றீங்க? இந்த காலத்தில் போய் இப்படி இருக்கான். நானே நல்ல ட்ரிங்க்ஸ் பண்ணுவேன். இதெல்லாம் நார்மல் தானே டாட். ஒரு ட்ரிங்க்ஸ் கூட பண்ணாதவனை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க. எனக்கு இவன் ஒத்து வர மாட்டான் டாட், எனக்கு வேண்டாம் இவன்”

என மறுப்பு தெரிவித்தவளை முறைத்து பார்த்த ராமமூர்த்தி.


"ஸ்ரேயா, லூசு மாதிரி பேசாதே! இதுக்கா உன்னை அமெரிக்காவில் இருந்து  இங்கு வரவழைச்சேன்! அவனோட பேக்ரௌண்ட் தெரியாமல் பேசுற நீ. ஆனால் எனக்கு தெரியும். அவங்க அப்பா, என்னை விட சீனியர். இந்த இண்டஸ்ட்ரியில் அவருக்கு இருக்கிற பெயர், யாருக்கும் இல்லை. அவ்வளவு ஆள் பலமும், பணபலமும், செல்வாக்கும் உடையவர். 


இப்படி நான் சொல்றதால, ஆரவ்வவை குறைச்சு நினைச்சுடாதே!! அவனோட டேலெண்ட், அவனுக்கு இருக்கிற பேம், மக்கள் மத்தியில் இருக்கிற செல்வாக்கு எல்லாமே டு தி டாப் தான். அவனை மட்டும் நீ மேரேஜ் பண்ணிகிட்ட வை நமக்கு ஏகப்பட்ட பெனிபிட். வீட்டுக்கு ஒரே பையன், அவ்வளவு சொத்தும் நமக்கு வந்துரும். அதுவுமில்லாமல், நாமளும் நல்ல பேமஸ் ஆகலாம். 


ஆரவ் பார்க்கவும் செம ஹான்சம். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பொண்ணுங்க பழக்கம் அவனுக்கு இல்லவே இல்லை. இது போல ஒருத்தன் நமக்கு எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான். எல்லாமே சேர்ந்து ஒருத்தன் கிட்ட இருக்குன்னா அது ஏஜே கிட்ட மட்டும் தான். சொல்றதை கேளு, ஒழுங்கா அவனோட நெருங்கி பழகி, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வை,"

என மகளிடம் தன் ஆசையினை கூறி, அறிவுரை வழங்க, அவளோ, 


"ஒஹ் இதில் இவ்வளவு இருக்கா? இனி பாருங்க அவனை எப்படி என் வலைக்குள் விழ வைக்கிறேன்னு"


என்றவள் ஆரவ்வை நோக்கி திரும்ப, தூரத்தில் நின்றிருந்தவன் தற்பொழுது அவளருகில் தான் இருந்தான்.


சட்டென்று அவனை அருகில் கண்டதும் தடுமாறியவள்,


‘நானும், டாடும் பேசினதை கேட்டு இருப்பானோ’

என மனதோடு நினைத்தப்படியே, அவன் முகம் பார்க்க அவனோ சாதரணமாக தான் இருந்தான்.


"சார், நான் கிளம்புறேன்" என்று ஆரவ் ராமமூர்த்தியிடம் கூற,

 அவருக்கும் அவனை அருகில் கண்டது சற்று அதிர்ச்சி தான். 

இருந்தும் சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக்கொண்டவர்,


"என்ன ஆரவ்? அதுக்குள்ளவா? இன்னும் நீங்க சாப்பிடலையே?"

என அக்கறையாய் கேட்க, அவனோ,


"நீங்க உங்க பொண்ணு கூட பேசிட்டு இருந்த போதே  நான் சாப்பிட்டேன் சார். உங்க வைப் தான் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க. நீங்க வேணும்னா கேட்டு பாருங்க"

என தெளிவாக பதில்கூறியதும், திரும்பி, மனைவியை பார்த்தார் ராமமூர்த்தி.


“ஆமாங்க, சீக்கிரம் கிளம்பனும் சொன்னாங்க, அதான் சாப்பிட வச்சேன். அப்போ கூட நிறைய எதுவும் எடுத்துக்களை. சும்மா லைட்டா தான் சாப்பிட்டாங்க"

என கூறிய கீதாஞ்சலியை முறைத்த ராமமூர்த்தியோ,


“உங்க அம்மாவை வச்சுட்டு ஒரு புல்லை கூட புடுங்க முடியாது” என மகளிடம் முணுமுணுத்தார். 


வெளியில் ஆரவ்வை பார்த்து இளித்தப்படியே,


“என்ன ஆரவ்? எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் நினைச்சேன், அதுக்குள் சாப்பிட்டு கிளம்பிட்டேன்னு சொல்றீங்க, அதுவும் சரியா சாப்பிடலைன்னு வேற சொல்றா. இருங்க இன்னொரு தடவை  நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்”


என அவர் எங்கே அவன் சென்று விடுவானோ என்று படப்படக்க,


"இல்லை சார். இட்ஸ் என்னஃப் பார் மீ. தேங்க்ஸ் டூ இன்வைட்டிங். நான் கிளம்புறேன் பார்க்கலாம்"


என அவனின் வழக்கமான முறையில் தன் வலது கையை எடுத்து இடது மார்பில் வைத்து நன்றியை சொல்லியவன், அவர் அடுத்து பேச இடம் கொடுக்காமல் அங்கிருந்து விடைபெற்று கொண்டு வெளியேறினான்.


"ஹரி, கார் எடு" என நகர்ந்தப்படி சொல்லிக்கொண்டே சென்றவனை கண்டு, நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று நொந்தபடியே பார்த்தனர் ராமமூர்த்தியும், ஸ்ரேயாவும்.


"என்ன டாடி? அதுக்குள் கிளம்பிட்டான். நான் ஒருவார்த்தை கூட பேசவே இல்லையே!!"

என்று ஸ்ரேயா கூற,


"ஆமாம், இப்போ கேளு. இவ்வளவு நேரம் என்ன பண்ண?  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பார்ட்டியை அரேஞ் பண்ணி, அவனை எவ்வளவு கெஞ்சி வரவழைச்சேன் தெரியுமா?!! எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு இப்போ கேளு என்ன டாடி நொன்ன டாடின்னு. நான் தான் சொன்னேனே!! அவன் செம டேலண்ட்டுன்னு. எல்லாம் உங்க அம்மாவை சொல்லணும்”

என மகளிடம் காய்ந்தவர், மனைவியின் புறம் திரும்பி,  


“ஏன்டி? அறிவிருக்கா உனக்கு? அவன் சாப்பிடும் போது ஏன் என்னை கூப்பிடலை?

என எரிந்து விழுந்தார்.  கீதாஞ்சலி பதில் கூறும் முன்பே, ஏதோ ஞாபகம் வந்தவராக, 


"ஐயோ, அவனை உன் பக்கத்தில் நிக்க வச்சு போட்டோ எடுக்கணும் நினைச்சேன். அதுவும் பண்ணலை. போச்சு, நான் போட்ட திட்டம் எல்லாமே இன்னைக்கு சொதப்பல். இங்கிருந்து போங்க ரெண்டு பேரும், வந்தவங்களை கவனிச்சு அனுப்புங்க. யாருக்காக பார்ட்டி அரேஞ் பண்ணோமோ அவனே போய்ட்டான். இனி யார் இருந்தா என்ன? போனா என்ன?  கண்ணு முன்னாடி நிக்காதீங்க போங்க"


என அவர்களை விரட்டி அடித்தவர் தொய்ந்து போய்  இருக்கையில் அமர்ந்து விட்டார்.


விட்டால் போதும் என கிளம்பிய ஆரவ், மளமளவென்று காரில் ஏறியதும், ஹரி காரை அங்கிருந்து விருட்டென்று கிளம்பினான்.


காரின் பயணம் அந்த இடத்தை விட்டு தள்ளி வந்ததும் தான் ஆரவ்வால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது. கார் கண்ணாடியை இறக்கி விட்டவன், சில்லென்று வீசிய இரவின் வாடை காற்றை சுவாசித்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான். வாடைகாற்றின் வசந்தம் அவனது மனதை இலகுவாக்க, அதனை ஆழ்ந்து அனுபவித்தப்படியே பயணத்தை மேற்கொண்டான்.


சீரான வேகத்தில் வாகனம் பயணிக்க, ஹரியோ, அவனிடம்


"சார், உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்"

என பேச்சை துவங்க, ஆரவ்வும்


"கேளு ஹரி" என்றான் அவன் புறம் திரும்பியவாறு.


"ராமமூர்த்தி சார் இப்போ எதுக்கு பார்ட்டி அரேஞ் பண்ணார். அதை பத்தி பார்ட்டியில் ஒண்ணுமே சொல்லலையே சார் அவர். உங்களையே தான் சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தார். என்னவா இருக்கும் சார்?"

என்று ஹரி கேட்க, மீண்டும் வெளியில் வேடிக்கை பார்த்தப்படியே ஆரவ்வோ,


"இதுகூடவா புரியல ஹரி உனக்கு. அவர் என் கூட இன்னும் ரொம்ப குளோசாக பார்க்கிறார். இண்டஸ்ட்ரில அவர் தான் எனக்கு எல்லாம் என்பது போல காட்டிக்க ட்ரை பண்றார்.

என்றான் ராமமூர்த்தியின் மனநிலை புரிந்தவனாக.


"அப்படியா சொல்றீங்க, இதெல்லாம் எதுக்கு பண்ணனும், அவருக்கே இந்த இண்டஸ்ட்ரியில் நல்ல செல்வாக்கு இருக்கே!! உங்க கிட்ட எதுக்கு எதிர்பார்க்கிறார்?"

என்று குழப்பத்துடன் ஹரி கேட்க, 


"என்னோட கெஸ் என்னன்னா, அவர் பொண்ணை எனக்கு மேரேஜ் பண்ண வைக்க பார்க்கிறார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட பெனிப்பிட் இருக்கு. அதனால் தான் என்னையே சுத்தி சுத்தி வரார்"

என்றான் ஆரவ் சரியாக கணித்து. 


"என்ன சார்? இப்படி சொல்றீங்க?  அவர் பொண்ணா? உங்களுக்கா?"

 என்று அதிர்ந்து கத்திய ஹரியை புன்னைகையுடன் பார்த்தவன்,


"நீ ஏன் ஹரி இவ்வளவு ஷாக் ஆகுற? ஜஸ்ட் என்னோட கெஸ் தான் சொன்னேன். ஏதாவது வரும்போது பார்த்துக்கலாம்,"

என பதில் கூறியவன் மனமோ நடந்த விஷயங்களை தான் அசை போட்டது. சமீபமாக ராமமூர்த்தி நடந்து கொள்ளும் முறை, அவனை அப்படி தான் யோசிக்க வைத்தது. கூடவே ஸ்ரேயா நடந்து கொள்ளும் விதமும் அவனுக்கு சரியாகபடவில்லை.


"சார் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ஒருவேளை அப்படி அவர் ஏதாவது சொன்னா, நீங்க அவர் பொண்ணை வேண்டாம் சொல்லிடுங்க சார். அந்த பொண்ணை உங்க பக்கத்தில் கற்பனை செஞ்சு கூட என்னால் பார்க்க முடியல. உங்களுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத பொண்ணு சார்,”


என ஆதங்கமாய் அவன் கூறியதும், 

அவனை மேலும் கீழும் சிரிப்புடன் பார்த்தவன்,


"ஏன் ஹரி இவ்வளவு டென்ஷன் ஆகுற? நீ ஏதாவது அந்த பொண்ணை ட்ரை பண்ண போறியா. நான் எங்கே குறுக்கே வந்துருவேன்னு நினைக்கிறியா?"

என கிண்டலடிக்க,


"ஐயோ சார், நான் அந்த பொண்ணை உங்களுக்கே வேண்டாம் சொல்றேன். எனக்கு போய் ஜோடி சேர்க்க பார்க்கிறீங்க!!”


என பதற்றமானவன், முகம் போன போக்கில் சத்தமாக சிரித்து விட்டான் ஆரவ்.


சிறிது நேரத்திற்கெல்லாம்

"காரை ஓரம் நிறுத்து ஹரி,"

என்றவன், அவன் நிறுத்தியதும்,


"ஹரி, நானே டிரைவ் பண்றேன், நீ கார்ட்ஸ் கூட வா. ஏனோ மைண்ட் ஒரு மாதிரி இருக்கு. தனியா ட்ரைவ் பண்ணா ஐ பீல் பெட்டர்"

என கூற,


"சார் என்னாச்சு? உடம்புக்கு ஏதும் முடியலையா?  ஹாஸ்பிடல் போகலாமா?"

என பதற்றமாகினான் ஹரி. அவன் வார்த்தைகளில் உண்மையில் அக்கறை தெளித்தது.


"எனக்கு ஒன்னும் இல்லை டா. ட்ரைவ் பண்ணா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் அதான்"


என்றவன் காரிலிருந்து இறங்கி சுற்றி வர, ஹரியும் காரில் இருந்து இறங்கி கொண்டான்.


ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பியவன், கூடவே இசைத்தட்டையும் இயக்க செய்து, அதில் தன்னை தொலைக்க ஆரம்பித்தான்.


சிலருக்கு பாடல் கேட்க பிடிக்கும், சிலருக்கு கதைகள் கேட்க பிடிக்கும், சிலருக்கு தொகுப்பாளர்களின் பேச்சை கேட்க பிடிக்கும். ஆனால் அவனோ சற்று விதியாசமனவன். கவிஞர்கள் எழுதிய கவிதைகளை, அந்த கவிதைக்கு ஏற்றார்போல் பின்னணி இசையுடன், மயக்கும் குரலில் அவர்கள் கூறும் கவிதை வரிகளை கேட்பதில் அவனுக்கோ அலாதி பிரியம்.


அவர்கள் கூறும்பொழுது உருவாகும் இதம், அந்த வரிகள் தரும் இன்பம் அவனை புதுஉலகத்திற்கு அழைத்து செல்லும்.


இப்பொழுதெல்லாம் கவிதை வரிகள் கூறியதும், அதனை தொடர்புப்படுத்தி, கடைசியில் பாடல்வரிகளை இசைக்க செய்வது என்பது சமீபமாக கேட்க முடிகிறது. அப்படி கேட்டகப்படும் இசையும், பாடல்வரிகளும் இன்னும் இனிமை தந்து, மனதை லேசாக்கும் மந்திரமாய் இருப்பதில் அவனுக்கு இன்னும் இன்னும் பிடித்தம்.


யாரோ அவளோ?

எங்கோ பிறந்தாளோ?!!

எப்படியோ வளர்ந்தாளோ!!

ஆனால் இன்று  என் கண்முன்னே

காரிருளில் முகிழ்த்த கருவிழி போல!!

ஏகாந்தத்தில் எழும் ஏக்கம் போல!!

அலையின் நடுவில்

நர்த்தனம் ஆடும் ஓசை போல!!

சட்டென்று தோன்றி,

சடுதியில் என்னுள் நுழைந்து விட்டாளே!!

ஒருநிலையில் இல்லாமல் இதயத்தை ஆக்கி விட்டவள்

அதனை 

இருமடங்காக துடிக்கவும் செய்து விட்டாளே!!


என்று ஒருவன், முதன் முதலாக பார்த்த மாத்திரத்திலே, தன்னை ஆட்கொண்டவளை பற்றி, அந்த தருணத்தை கவிதையாய் வடிக்க, அதனை  பின்னணியில் திரைப்பட பாடலின் மெல்லிய இசையோடு, மெல்லிய குரலில் வாசித்ததும் அந்த வரிகளில், அந்த பாவனையில் ஆரவ்வோ தன்னையே தொலைத்து விட்டான்.


மீண்டும் மீண்டும் அதையே ஒலிக்க விட்டவன், அந்த வரிகளை உள்வாங்கியபடியே காரை செலுத்த, சட்டென்று ஒரு திருப்பத்தில் அவன் காரை திருப்பிய தருணம், எதிரே எதிர்பாராமல் ஓடிவந்த அமிர்தா மீது மோதி விட்டான்.


மோதிய வேகத்தில் அவள் அடிபட்டு கீழே விழ,


"ஒஹ் ஷிட்"

என சட்டென்று பிரேக் போட்டவன், காரை விட்டு இறங்கி வந்து பார்க்க, இருட்டில் அவள் முகம் சரியாக தெரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல், அவளை தன் பக்கம் திருப்பி பார்க்க, பார்த்தநொடி. பார்த்தவனின் விழிகளில் பாவையளின் முகம் பதிந்து, காதலின் பதியத்தை விதைத்தது.


சற்று முன்னே கேட்ட கவிதை உண்மையில் அவனுக்காக எழுதியது போலவே இருக்க, அவனின் மனம் அறிந்த இசைதட்டும், 


தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து

அறியாத இன்பங்கள் கலந்து

புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி!!


என்று அவன் மனநிலையை எடுத்துக்காட்டி பாட, சுத்தமாக நிகழ்காலத்தை மறந்து போனான் ஆரவ்ஜெயந்தன் அமிர்தாவின் வதனத்தை கண்டதும்.


பின்னால் வந்து கொண்டிருந்த அவனது பாதுகாவலர்களும், ஹரியும், இவனின் கார் வழியில் நிற்பதை கண்டு இறங்கி வந்து பார்த்தனர். நெற்றியில் ரத்தம் வழிய மயங்கி இருந்த பெண்ணின் உருவத்தையும், அருகில் அமர்ந்திருந்த ஆரவ்வையும் கண்டு பதறியவர்கள்,


"சார், என்னாச்சு?"

என கேட்டதும் தான் சுயநினைவிற்கே வந்தான் ஆரவ். நடந்தது என்னவென்று, அப்பொழுது தான் அவன் மூளைக்குள் உரைக்க, அடிபட்டு கிடைந்தவளை பார்த்தவன்,


"ஹரி, கமான் குயிக், வண்டி எடு, நான் இந்த பொண்ணு மேலே மோதிட்டேன். பக்கத்தில் ஹாஸ்பிடல் எங்கே இருக்குனு பாரு. சீக்கிரம். இந்த பொண்ணோட திங்ஸ் ஏதாவது கீழே விழுந்து இருந்தா எடுத்துக்கோ"


என மளமளவென்று கூறியவன், அவளை கையில் ஏந்தி, காரில் கொண்டு கிடத்தினான். அவள் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு, வழியும் ரத்தத்தை துடைத்தவனின் மனமோ நிலையில்லாமல் தவித்தது.


அவளின் கைப்பையையும், அதிலிருந்து சிதறிய பொருட்களையும், எடுத்து வந்த ஹரி, ஆரவ் பக்கத்தில் வைத்துவிட்டு காரை மருத்துவமனை நோக்கி துரிதமாக கிளம்பினான்.


"ஹலோ, எந்திரிங்க" என அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவளிடம் சிறு அசைவு கூட இல்லை.


"ஹரி, ப்ளீடிங் நிக்கவே இல்லை. சீக்கிரம் போ"


என அவனை துரித்தப்படுத்தியவன், இருக்கும் துணியை வைத்து துடைத்து எடுக்க, அது போதாது என, அவள் பையில் தென்பட்ட கைக்குட்டையையும் எடுத்து துடைத்து விட்டான். அவள் ரத்தத்தை துடைக்க துடைக்க இவனுக்கோ தாங்கவே முடியவில்லை. அத்தனை பதற்றமானான்.


“ஹரி, சீக்கிரம், ஹரியப் மேன்” என அவன் பதற்றத்தை எல்லாம் ஹரியிடம் காட்ட, அவனும்,


“இதோ சார், இன்னும் கொஞ்ச தூரம் போயிடலாம்”

என வழிநெடுகிலும் கூறிக்கொண்டே வந்தான்.


எப்படியோ ஒரு மருத்துவமனையை கண்டுபிடித்து,  அங்கு வர, காரை நிறுத்திய ஹரி,


"சார், இங்கேயே இருங்க,  நான் போய் உள்ளே பார்த்துட்டு வரேன். பப்ளிக், மீடியா யாராவது பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆகிடும். டூ மினிட்ஸ்"


என மருத்துவமனை உள்ளே ஓடிய ஹரி, அங்கிருந்த செவிலியரிடம் அவசரம் எனக்கூறி அவர்களை அழைத்து வர, அதற்குள் ஆரவ்வே அவளை தன் கைகளால் தாங்கியப்படி உள்ளே நுழைந்து விட்டான்.


இரவு நேரம் என்பதால், பொதுமக்கள் அங்கு யாருமே இல்லை. அங்கிருந்த, செவிலியர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் அவனை நன்கு அடையாளம் தெரிந்தது.


"ஏய் டைரக்டர் ஏஜே சார்" என அவர்களுக்குள் சலசலக்க, அவனை கண்டதும் அருகில் ஓடிவந்த ஹரி, 


"சார், நீங்க ஏன் வந்தீங்க? நான் தான் டீன் கிட்ட பேசிட்டு இருகேன்னே"

என்றவனுக்கு,


"யார் பார்த்தாலும் கவலையில்லை ஹரி, ஒருத்தரோட உயிர் சம்பந்தப்பட்டது. இப்போ கூட சுயநலமா என்னை மட்டும் பார்க்கிறது சரியில்லை. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கசொல்லு"


என்றான் சற்றே காட்டமாக. அதற்குள் தலைமை மருத்துவர் வந்துவிட, அவர் செவிலியர்களை அழைத்து முதலுதவி செய்ய கூறினார்.


அப்பொழுது தான் அவளை ஸ்டேச்சரில் கிடத்தினான். அதுவரை அவளை தாங்கியபடியே தான் நின்றிருந்தான்.


அதன் பின் எல்லாமே துரிதமாகவே நடைபெற்றது. அவன் இருக்க வேண்டி தனியாக இரண்டாவது  தளத்தையே ஒதுக்கி இருந்தது மருத்துவமனை. யாரும் அந்த வழியில் செல்ல அனுமதிக்காமல், அங்கேயே அவனின் பாதுகாவலர்கள் நின்று கொண்டனர். அதே தளத்தில் தான் அமிர்தாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.


கண்மூடி சாய்வாக அந்த நீண்ட வளாகத்தில் இருந்த நாற்காளியில் அமர்ந்திருந்தவன் மூடிய விழிகளில் அடிபட்டு விழுந்து கிடந்த அமிர்தா மட்டுமே நிறைந்து இருந்தாள். என்ன இது? என்று யோசனை செய்தாலும், அது அவனுக்கு பிடித்தமாகவே இருந்தது!!


ஏதோ ஞாபகம் வந்தவனாக, கண்களை திறந்தவன், அருகில் நின்றிருந்த ஹரியிடம்,


"ஹரி, அவங்க பேக்கில் போன் ஏதாவது இருந்ததா? அவங்க வீட்டுக்கு இன்போர்ம் பண்ணனும். தேடுவாங்களே"

என்றவனுக்கு,


"சார் விழுந்த வேகத்தில் போன் உடைஞ்சு இருக்கு. சரிபண்ண முடியுமா பார்க்க கொடுத்திருக்கிறேன். வெய்ட் பண்ணலாம் சார்"

என்று பதில் கூறினான் ஹரி.


"சரி அந்த பேக்கில் வேற ஏதாவது இருக்கா?"

என்று மீண்டும் கேட்டவனுக்கு,


"நமக்கு இன்போ கிடைக்கிற மாதிரி எதுவுமே இல்லை சார். ஒரே ஒரு பென் தான் இருந்தது. அது யாருக்கோ கிப்ட் கொடுக்க வச்சு இருக்காங்க போல. ஒரு பிப்டி ருப்பீஸ் அமெண்ட் இருக்கு"


என்று ஹரி கூறியதும், தலையை இரு கைகளால் தாங்கியபடி அமர்ந்து விட்டான் ஆரவ். அமிர்தாவிற்கு எதுவும் ஆகிவிட கூடாது என்பது மட்டுமே அவனின் பிரத்தனையாக இருந்தது


"சார் போலீஸ்க்கு  இன்போர்ம் பண்ணுவோமே?"

என்ற ஹரிக்கு,


"வெயிட் பண்ணலாம் ஹரி" என்று கூறிவிட்டு மீண்டும் அதே நிலையில் அமர்ந்து கொண்டான் ஆரவ்.


சிறிது நேரத்திற்கெல்லாம், சிகிச்சை அளித்த மருத்துவர், வெளியில் வர, அவரருகே சென்ற ஆரவ், பதற்றத்துடன் விசாரிக்க, அவரோ,


"நந்திங் வொரி மிஸ்டர் ஏஜே, தலையில் அடிபட்டு மயக்கம் ஆகிட்டாங்க.  அதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்கோம். எதுக்கும் ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம். மார்னிங் வரை அப்சேர்வேஷன்ல இருக்கட்டும். அங்கங்கே சின்ன சின்ன காயம் தான். மத்தப்படி சீரியஸா எதுவும் இல்லை"


என அவர் கூறிய பின்பு தான், ஆரவ்விற்கு சீரான மூச்சே வந்தது.


"தேங்க்ஸ் டாக்டர். போய் பார்க்கலாமா?"

என்று ஆரவ் கேட்க,


"யா சூர்" என கூறிவிட்டு அவர் விடைபெற்று கொண்டார்.


"ஹரி, இன்பமேஷன் ஏதாவது கிடைக்குதா பார். நான் அவங்க கூட இருக்கேன்"

என்றதும்,


"சார் நான் அவங்களை பார்த்துகிறேன், நீங்க கிளம்புங்க. ரொம்ப டையார்டா இருப்பீங்க. ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே"

என்ற ஹரியை முறைத்து பார்த்தவன்,


"தப்பு ஹரி. நான் தான் அந்த பொண்ணை இடிச்சது. எனக்கென்னனு விட்டுட்டு போறது தப்பு. இப்போ மட்டும் என்ன நான் வேலையா செஞ்சுட்டு இருக்கேன்? சும்மா தான் உட்கார்ந்துட்டு இருக்க போறேன். நான் அவங்க கண் விழிக்கிற வரை இருக்கேன். நீ வேணும்னா கிளம்பு"


என்று கூறியவன் அமிர்தாவை அனுமதிப்பட்டு இருக்கும் அறையின்  உள்ளே செல்ல முற்பட்டான். ஹரியோ,


"நானும் இங்கேயே  இருக்கேன் சார். உங்களை விட்டுட்டு நான் எங்கே போக?"

என்றவன் அங்கேயே இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனை பார்த்து புன்னகைத்த ஆரவ் அறைக்குள்  நுழைந்தான்.


நிர்மலான முகத்தோடு, தலையில் கட்டுடன், ஆங்காங்கே சிராய்ப்புகள் கொண்டு  மருந்தின் வீரியத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை காண காண அவனுள் ஏகப்பட்ட மாற்றம். அவளருகில் இருக்கையை போட்டு அமர்ந்தவன் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.


எத்தனை பெண்களை கடந்த போதும்

அமைதியாய் இருந்த இதயம்

இவளை கண்டதும்

ஏதோ பேச தொடங்கியது!!

எப்பொழுதும்

ஆரப்பாட்டமாய் அலைந்து திரிந்து

கொண்டிருந்த வாழ்க்கை

அவளை கண்டதும்

மிக அடக்கமாய் மாறிவிட்டதே!!


எப்பொழுதோ எங்கேயோ வாசித்த கவிதை இன்று, அவளை கண்டதும் தானாகவே அவனது உதடுகள் உச்சரிக்க, அதில் அவனை நினைத்து அவனே ஆச்சரியப்பட்டு தான் போனான்.


"யார் நீ? உன்னை பார்த்ததிலிருந்து என்னை என்னென்னமோ செய்யுற? எதனால் இப்படி இருக்கு? எனக்கு ஒன்னும் புரியல?"


என்று உறங்கும் அவளை பார்த்து கேட்டவன், தன்னிடமே அதற்கான விடையையும் தேடினான். அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தவன், ஒருகட்டத்தில், அப்படியே இருக்கையிலேயே உறங்கியும் விட்டான்.


விடியலின் பொழுது, ஹரி அவனிடம் தகவல் கூற வேண்டி "ஏஜே சார்" என்ற அழைப்போடு உள்ளே நுழைய, அவனின் குரல் கேட்டு, துயில் கலைந்தவன்,


"என்ன ஹரி" என கேட்டுக்கொண்டே எழ போனவனை தடுத்து நிறுத்தியது, அவன் கையை, ஆதாரமாய் இறுக்கி பிடித்திருந்த அமிர்தாவின் கை.



விழியினில் அன்பை தேக்கி, 

வழியினில் கரம் கோர்த்து,

மொழியினில் காதலை கூறி, 

இதயத்தினில் உன்னை நிறைத்து, 

காவியமாய் வாழும் நாளுக்காய் காத்திருக்கிறேன்!!!


பிடிக்கும்…








































Comments