UNEP-10

 அத்தியாயம்..10



                 கார்மேக மரங்கள் தூவிய மலர்கள், பூமியெங்கும் படர்ந்து பரவிய நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்க, அந்த பிரபலமான மருத்துவமனையில், காயமடைந்த காலில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக, காலை சுற்றி போடப்பட்ட கட்டுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆரவ்வோ உச்சகட்ட எரிச்சலில் காணப்பட்டான்.


காலின் காயத்தால் அல்ல!! அவனுக்கு எதிரே இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் செய்தியால்!!


 ‘படப்பிடிப்பு தளத்தில் விபத்து, இளைய இயக்குனர் ஏஜேவிற்கு காலில் பலத்த காயம். பெரிய இரும்பு கம்பி ஒன்று குத்தி ரத்தம் நிறைய சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர்  நடப்பதே சிரமம் என தகவல்கள் கிடைத்துள்ளன’


என அவனின் எதிரே இருந்த தொலைக்காட்சி பெட்டியில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பி கொண்டிருந்தை கண்டு, தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.


அதற்குள் அவனின் தொலைபேசி வேறு, விடாது அடித்து கொண்டிருக்க, அதில் இன்னும் சலித்து போய் அதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். 


“சாருக்கு சின்ன காயம் தான். இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். அப்புறம் பேச சொல்றேன்”


என ஹரி அலைபேசியில் பேசிக்கொண்டே ஆரவ்வை அனுமதித்திருந்த, அறைக்குள் நுழைய, ஆரவ் அவனை நிமிர்ந்து பார்த்தான். அலைபேசியை அணைத்துவிட்டு, ஆரவ்விடம்,


“சார், இப்போ எப்படி இருக்கு? வலி பரவாயில்லையா?” என கேட்பதற்குள், மீண்டும் அவனின் அலைபேசி அலற, இந்தப்பக்கம் ஆரவ்வின் அலைபேசியும் அலறியது.


அலைபேசியை எடுத்து பார்த்த ஆரவ், அதனை சைலண்ட் மோடில் போட்டு ஓரம் வைத்து விட, ஹரியோ, தன்னுடைய அலைபேசியை உயிர்ப்பித்து,


“சாருக்கு சின்ன காயம் தான், பயப்படும்படி ஒன்னுமில்லை. ஹோச்பிடலுக்கா, அதெல்லாம் வேண்டாம் சார். அப்புறம் பப்ளிக்கு டிஸ்டபன்ஸா இருக்கும். நடக்க முடியாமலாம் இல்லை. நான் சாரை அப்புறம் பேச சொல்றேன்”


எனக்கூறி அலைபேசியை அணைத்துவிட்டு, ஏஜேவின் புறம் திரும்ப, மீண்டும் ஹரியின் அலைபேசி அடித்தது.


“ஊப்” என சலித்து கொண்டவன், ஆரவ்வை பார்க்க, அவனும் ஹரியின் நிலைமையில் தான் இருந்தான்.


“டேய் யார் டா அது? மீடியாவுக்கு இப்படி ஒரு நியூஸ் கொடுத்தது. சின்ன காயம் தான், அதுக்கு போய் என்னவோ, என்னோட காலே போய்ட்ட மாதிரி பேசிகிட்டு இருக்காங்க. முடியல ஹரி"


என ஆரவ் உச்சக்கட்ட எரிச்சலில் கூற, ஹரியோ,


"உங்களுக்கு மேலே எனக்கு இருக்கு சார். நீங்க போன் எடுக்கலைனா, அத்தனை பேரும் எனக்கு தான் பண்றாங்க, பேசி பேசியே நான் டையர்ட் ஆகிட்டேன் தெரியுமா?! உங்களுக்கு ஒன்னுமில்லை சொன்னா யாரும் நம்ப கூட மாட்டேன்கிறாங்க. எல்லாம் புதுசா முளைச்ச உங்க நலம் விரும்பியால் வந்தது"

என சலித்து கொண்டவன், அவனருகில் அமர்ந்தான்.


"யாரை சொல்ற? யார் என் நலம் விரும்பி?"


"ஹ்ம்ம், ராமமூர்த்தி சார் தான்" 


"அவரா? அவர் ஏன் டா இப்படி சொல்லி வச்சு இருக்கார்?  என ஆரவ் அதிர்ச்சியாக,


"எதுக்கு? எல்லாம் உங்க நல்லதுக்காம்!! இப்படியெல்லாம் சொன்னா தானே, உங்க கிட்ட நல்ல பெயர் வாங்க முடியும். உங்களுக்கு ஹெல்ப் பண்ணறதா நினைச்சு இப்படி பண்ணிட்டு இருக்கார். என்னத்த சொல்ல? பிரெஸ் கிட்ட வேற நான் கூடவே இருந்து பார்த்துகிறேன். யாரும் பதற வேண்டாம் வேற சொல்லி வச்சு இருக்கிறார்.


அவங்களும், உங்களுக்கு ஏஜே சார் மீது தான் எவ்வளவு அன்பு?ன்னு அவரை பாராட்டிட்டு இருக்காங்க. அடுத்து இங்க தான் வந்துட்டு இருக்கார். இங்க நலம் விசாரிச்சுட்டு அடுத்து அப்டேட் சொல்றேன்னு சொல்லி இருக்கார் போல"


என ஹரி கூறியதும், ஐயோ என்றானது ஆரவ்விற்கு.


"இவரை..” என பல்லை கடித்தவன்,


“இதோ பாரு ஹரி, யாரா இருந்தாலும் தயவு செஞ்சு என்னை பார்க்க அனுப்பிடாதே!! முக்கியமா ராமமூர்த்தி சார் வந்தா, நான் தூங்குறேன் சொல்லி அப்படியே வெளியே அனுப்பிடு. யாரையாச்சும் உள்ளே விட்ட அப்புறம் இருக்கு உனக்கு”


என கண்டிப்பாக கூரியவன், கட்டிலில் நன்றாக சாய்ந்து கொள்ள, 


“ஓகே சார், நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன்”


எனக் கூறிய ஹரி, அறையை விட்டு வெளியே வர முனைய, 


“ஹரி” என அழைத்து அவனை நிற்க வைத்தான் ஆரவ்.


“ஹரி, அமிர்தா வீட்டுக்கு கிளம்பிட்டாங்களா?” எனக் கேட்க, ஹரியும்,


“இல்ல சார். வெளியே தான் இருக்காங்க. உங்களுக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு கிளம்புறதா சொன்னாங்க,”

என்றான்.


“ஒஹ்ஹ், சரி அவங்களை வர சொல்லு ஹரி”

என ஆரவ் கூற, ஹரியும் சிரிப்புடன் சரியென்று வெளியேறினான்.


கட்டிலின் அருகில், ஆரவ்வின் காலில், அமிர்தா கட்டிவிட்ட துப்பட்டாவின் துண்டு இருக்க, அதனை எடுத்து பார்த்து கொண்டிருக்கும் வேளையில், அறைக்குள் நுழைந்தாள் அமிர்தா.


“வாங்க, வாங்க அமிர்தா” என ஆரவ் அழைக்க, அவளும்,


“இப்போ எப்படி இருக்கு சார்? வலிக்குதா?”

என அவன் கால் காயத்தை பார்த்தப்படி கேட்டாள்.


“இப்போ பெட்டர், பெயின் கில்லர் போட்டதால் வலி கொஞ்சம் குறைஞ்சு இருக்கு”

என அவன் பதில் கூற, அதற்குமேல் என்ன கேட்பது என்று தெரியாது அமைதியாகி நின்றாள் அமிர்தா.


ரத்தம் படிந்த, அந்த துணியை பார்த்தப்படியே அவனோ,


“ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா. உங்க ட்ரெஸை கிழிச்சு எனக்கு கட்டு போட்டு இருக்கீங்க. யாருக்கு வரும் இந்த மனசு. எனக்கு ஒரு சின்ன காயம் பட்டாலும் உங்களால் தாங்க முடியலல”

என்றவன் உள்அர்த்தம் வைத்து கூற, அந்த அர்த்தங்கள் யாவும் அவளுக்கு விளங்கவில்லை.


“அதில் என்ன இருக்கு சார்? யாருக்கு காயம் பட்டாலும் உதவி செய்றது ஐயல்பு தானே!! அதை தான் பண்ணேன். தேங்க்ஸ் லாம் வேண்டாம் சார்”

என்றவள், 


“உங்களுக்கு  சாப்பிட ஏதாவது வேண்டுமா சார்? ஜூஸ் குடிக்கிறீங்களா”


என கேட்க, அவனோ அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வேண்டாம் என்றான்.


சைலண்ட் மோடில் இருந்த அலைபேசி அழைப்பு வரும் அறிகுறியாக ஒளிர்ந்து கொண்டிருக்க, அதனை திரும்பி பார்க்க, அவனின் தாய் நிர்மலா தான் அழைத்திருந்தார்.


உடனே, அதனை எடுத்து காதுக்கு கொடுக்க, எதிர்முனையில் இருந்தவரோ, ஒரே அழுகை.

அழுகையுடன் அவர் விசாரிக்க, இவனோ,


“அம்மா, எனக்கு ஒன்னுமில்லை. நியூஸ்ல சும்மா சொல்லிட்டு இருக்காங்க. சின்ன காயம் தான், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துருவேன். 


என்றதும் கூட, அவரின் அழுகையோ நின்றபாடில்லை.


“ஷூ அழக்கூடாது. இதென்ன சின்ன பிள்ளை மாதிரி அழுத்துட்டு இருக்கீங்க. அதான் ஒன்னுமில்லை சொல்றேன்ல. நம்புங்க. 


அதெல்லாம் ஒன்னும் வர வேண்டாம் எனக்கு  பிடிச்சதை சமைச்சு வைங்க. வந்ததும் நீங்க தான் ஊட்டி விடணும் சரியா!! அழாமல் செய்ங்க. என் செல்ல அம்மால, அழக்கூடாது. அப்பா கிட்டயும் சொல்லிடுங்க”


என அன்னையை செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்த, அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அமிர்தா. மனதில் ஏகப்பட்ட கவலையான உணர்வுகள். 


எல்லா அம்மாக்களும் இப்படி தானோ!! எத்தனை வயது சென்றாலும், அம்மாவிற்கு தன் பிள்ளைகள் குழந்தைகள் தான் போலும், அவர்களுக்கு ஒன்று என்றால் அவர்களால் தாங்கவே முடியாதோ!! எல்லாரோட அம்மாவும் இப்படியிருக்க, என்னுடைய அம்மா மட்டும் ஏன் இப்படி இல்லாமல் போனார்?!! நினைக்க நினைக்க வேதனை சூழ்ந்தது அவளை.


அம்மா, இல்லவே இல்லை என்றால் அது ஒருவகை வேதனை!! இருந்தும் இல்லாமல் போவது கொடிய நரக வேதனையை அல்லவா தந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ நாட்களில் எவ்வளவோ காயங்களை  அனுபவித்து இருக்கிறேன். ஆனால் அந்த வலியை கண்டு பதற என் அன்னை கூட இருந்ததில்லையே!!


ஏன்? பூப்படைந்த போது பட்ட வேதனை கொஞ்சமா? நஞ்சமா? அதன் வலி ஒரு புறம், பயம் ஒரு புறம், கலாவின் பேச்சு ஒருபுறம் என்று  பட்ட வேதனைகள் சொல்லில் அடங்காது. அப்பொழுதெல்லாம் எவ்வளவு தேடி இருப்பேன்!! அணைத்து ஆதரவு தர வேண்டிய அன்னை ஏன் இப்படி அனாதையாக்கி விட்டு சென்றார்?!! இதுபோல  ஆறுதலான வார்த்தை கூறினால் கூட போதுமே!! அந்த அளவிற்கு எங்களை பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? அவர் சுமந்து பெத்த பிள்ளைகள் தானே நாங்கள்!! எப்படி விட்டுட்டு போக மனசு வந்தது?”

என ஏகப்பட்டது தோன்றி, அவளின் வேதனையை அதிகரித்து அதிலே அவளை மூழ்க செய்தது. ஏக்கம் நிறைந்த மனது, தாயின் பாசத்திற்கு ஏங்கி நின்றது. அதன் விளைவு அவள் கண்களோ கலங்கி நிற்க, விழ தயாராக காத்து கொண்டிருந்தது கண்ணீர். 


அலைபேசியை வைத்து விட்டு, அமிர்தாவை, ஆரவ் திரும்பி பார்க்க, அவள் முகம் காட்டிய வேதனையும், அவள் கண்கள் காட்டிய ஏக்கமும் தவறாமல் அவன் கண்ணிற்கு தெரிந்தது. எதனால் என யோசித்தவன், தற்பொழுது கேட்டால் கொஞ்சம் அதிகப்படியோ என்று நினைத்து, அவளிடம் சாதாரணமாக,


“அம்மா தான் பண்ணாங்க, அவங்க எப்போதும் இப்படி தான். ஜாலினா ஓவர் ஜாலியா இருப்பாங்க, கஷ்டம்ன்னா ஓவரா வருத்தப்படுவாங்க. வீட்டுக்கு ஒரே பையனா, அதான் அவங்க மொத்த பாசமும் எனக்கே எனக்குன்னு  கொடுத்துட்டாங்க. அடிப்பட்டுச்சுன்னு கேள்வி பட்டதும், ஒரே அழுகை. சின்ன காயம் தான்னு சமாதானம் பண்றத்துக்குள் எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு. எனக்கு ஒன்னுன்னா சின்ன குழந்தை மாதிரி மாறிடுவாங்க. இன்னமும் வீட்டில் சாப்பாடு எனக்கு அவங்க  ஊட்டி விடுவாங்க. மீடியாவில் வேற இப்படி நியூஸ் போட்டுடாங்களா, அதான் ரொம்ப பயந்துட்டாங்க. நேரில் பார்த்தாங்கன்னா சரியாகிடும்”


என அவன் கூறிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, அவளின் கண்ணீர் இமையை தாண்டி கீழே வழிந்தது.


பெருவாரியான ஏக்கங்களின் ஏகபோக அறிகுறி கண்ணீரை தவிர வேறென்ன இருக்க முடியும்?!! 


அவளின் கண்ணீரை கண்டு அதிர்ந்தவன்,


“என்னாச்சு அமிர்தா?” என பதற, அவளோ, சட்டென்று அவனுக்கு தன் கண்ணீரை காட்டாது திரும்பி நின்றவள், கண்ணீரை துடைத்து கொண்டாள்.


“அமிர்தா என்னாச்சு?” என மீண்டும் ஆரவ் கேட்க, 


“ஒன்னுமில்லை சார். ஒன்னுமில்லை. கண்ணில் தூசி விழுந்துடுச்சு அதான்”


என சமாளித்தவள், கண்களை அழுந்த துடைத்து கொண்டு அவன் புறம் திரும்பி புன்னகைத்தாள்.


வலியுடன் வரும் புன்னகை,

நரகத்தின் வாசலை தொட்டு விட்டு வருவதற்கு சமம் அல்லவா!!


“ஓஹ்ஹ் சரி, உங்க பேமிலி பத்தி சொல்லுங்களேன்!! உங்க அம்மாவும் இப்படி தானா!!”


என அவன் புன்னகையுடன் கேட்க, அவளுக்கு தான் நெருப்பின் மேல் நிற்பது போல இருந்தது.


என்னவென்று கூறுவாள்? எதையென்று கூறுவாள்? மீண்டுமொருமுறை அசிங்கப்பட்டு அவமானப்பட வேண்டிய நிலை வருமோ?! என தத்தளித்து கொண்டிருந்தாள். உன் தாய் இப்படி பட்டவளா?, அந்த கேடு கெட்ட தாய்க்கு பிறந்த மகளா நீ? என்று கேட்டு விட்டால்!!  நினைக்கவே படப்படப்பாக வந்தது ஆமிர்தாவிற்கு.

என்ன சொல்வது என்று தெரியாது,


“அது.. அது…வந்து சார்.., அம்மா…”

என அவள் தயங்கி தயங்கி நிற்க, அதற்குள்,


"ஏஜே.., ஏஜே..." என அவசரமாக குரல் கொடுத்தப்படியே உள்ளே நுழைந்தார் ராமமூர்த்தி, கூடவே அவர் மகள் ஸ்ரேயாவுடன்.


திடுமென கேட்ட குரலில் இருவருவருமே திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். அதற்குள் அவர்களோ அவனருகில் வர, அமிர்தாவோ அவர்களுக்கு வழிவிட்டு பின்னே நகர்ந்து கொண்டாள்.


“ஏஜே, இப்போ எப்படி இருக்கு? காயம் பரவாயில்லையா? உங்களுக்கு இப்படி அடிபட்டதும் எனக்கு மனசே ஆறல. அதான் ஓடி வந்துட்டேன். ஸ்ரேயாவும் ரொம்ப துடிச்சு போய்ட்டா. உங்களை பார்த்தே ஆகணும்னு தான் வீட்டுக்கு கூட போகாம, ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து நேரே இங்கே வந்துட்டோம். இப்போ ஒன்னும் இல்லையே!! இல்லை, வேற பெரிய ஹாஸ்பிடல் போகலாமா?”


என அவர் படப்படக்க, ஆரவ்வோ எதிர்பாராது வந்தவர்களை கண்டு, என்ன சொல்வது என்றே தெரியாது பார்த்தான்.


அதற்குள் அறைக்குள் ஹரி நுழைய, அவனை ஆரவ் முறைத்து பார்க்க, அவனோ கெஞ்சுதலாக இவனை பார்த்தான்.


“ஸ்ரேயா, உங்களுக்கு அடிப்பட்டதும் பதறி போய்ட்டா, அப்பவே உங்க கூட ஹாஸ்பிடல் வர பார்த்தா, அதுக்குள் உங்க கார் கிளம்பிடுச்சு. உங்களை பார்த்தே ஆகணும்னு ஒரே அடம்”

என மகளைபற்றி கூற, ஆரவ்வோ,


‘யாரு இவ பதறி போய்ட்டா? மழையில் எங்கே மேக்அப் கலைஞ்சுடுமோன்னு வேக வேகமாக போய் ஒளிஞ்சுகிட்டத்தை நான் பார்க்கல பாரு’

என மனதோடு நினைத்து கொண்டு கொண்டவன், அவரை பார்த்து சலிப்பாக புன்னகைத்து கொண்டான்.


தான் மட்டுமே பேசிக் கொணடிருக்க, மகள் எதுவும் பேசாமல் நிற்பதை கண்டு, மகளின் கையை தட்டி, ஜாடை காட்ட அதில் புரிந்து கொண்டவள்,


“எஸ் ஆரவ், உங்களுக்கு அடிப்பட்டதும், நான் ஓடி வந்தேன். பட், ரெயின்ல என்னால் பாஸ்டா வாக் பண்ண முடியல. கஷ்டமா இருந்தது. இருந்தும் நானும் டாடியும் உங்களுக்கு என்னாச்சோன்னு ஓடிவந்து பார்கிறதுக்குள் நீங்க கிளம்பிடீங்க”

என அவளும் பெரிய கதை சொல்ல, ஆரவ்வோ எந்தவித உணர்வும் காட்டாது அதனை கேட்டு கொண்டிருந்தான்.


அவன் ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்த்து கொண்டிருந்த தந்தைக்கும், மகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.


“என்னப்பா இது?” என ஸ்ரேயா தந்தையிடம் முகத்தை சுருக்க, அவரோ இரு, இரு என தட்டி கொடுத்தார்.


“ஆரவ், ஏதாச்சும் பிராக்ச்சர், இல்லை ஸ்டிசெஸ் போட்டு இருக்காங்களா?!!”

என மீண்டும் ராமமூர்த்தி பேச்சை ஆரம்பிக்க, அவனோ பெருமூச்சுடன் இல்லை என்று தலையாட்டினான்.


“இல்லை ஏன் கேட்கிறேனா? மீடியாவுக்கு அப்டேட்ஸ் கொடுக்கிறேன் சொல்லி இருக்கேன். எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க”

என அவர் எதையோ சாதித்தப்படி பெருமிதத்துடன் கேட்க,


ஆரவ்வோ,

“உங்களை யாரு மீடியாவுக்கு இன்போமேஷன் கொடுக்க சொன்னது? என்னோட அனுமதி இல்லாமல் என் விஷயங்களை மீடியாவுக்கு பப்ளிஷ் பண்ண நீங்க யாரு? நீங்க என்ன இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல! அதுவும் எனக்கு காலே போய்ட்ட மாதிரி சொல்லி இருக்கீங்க”

என காட்டமாக கேட்க, ராமமூர்த்தியோ அவனின் பேச்சில் விழி விரித்தார்.


“இல்லை ஆரவ், நாங்க பார்க்கும் போது பெரிய அடியா தானே தெரிஞ்சது. ரத்தம் கூட வந்துச்சே” என சமாளிக்க,


“எது? இது தான் காலே போற அளவுக்கு காயமா?”

என காலை மறைந்திருந்த போர்வையை விலக்கியப்படி கேட்க, அவன் காலிலோ அடிபட்ட இடத்தை சுற்றி கட்டு கட்டி இருந்தனர். பார்த்தால் அந்தளவிற்கு பெரிய காயம் போல் தெரியவில்லை.

அதனை கண்டு திருத்திருத்தவர்,


“இல்லை  ஆரவ், ரத்தம்லாம் வரவே பெரிய காயமா இருக்கோம்னு தான். அப்படி சொன்னேன். உங்க நல்லத்துக்கு தான்..,”

என தற்பொழுதும் அவன் நலனுக்காக தான் செய்தது என்பதை போலவே காட்டி கொண்டார். 


அவரை முறைத்து கொண்டே ஹரியின் புறம் திரும்பியவன்,


“ஹரி, சோசியல் மீடியாவில், எனக்கு ஒன்னுமில்லை. அம் ஓகேன்னு போஸ்ட் போட்டுட்டு, கூடவே டாக்டர் சம்மரியும் அட்டாச் பண்ணிடு இமீடியட்டா,”

என கூற, ஹரியும் ஓகே சார் என்று அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


“உங்களுக்கும் தான், மீடியா கிட்ட சொல்லும் போது, எனக்கு ஒன்னும் இல்லை சின்ன காயம் சொல்லிடுங்க”

என கண்டிப்பாக கூற, அவரால் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.


“ஸ்ரேயா, ஆரவ்விற்கு புரூட்ஸ் வாங்கிட்டு வந்தோம்ல, அதை ஜூஸ் போட்டு கொடு மா”

என ராமமூர்த்தி கூற, ஆரவ்வோ, “இல்லை சார் எனக்கு வேண்டாம்”

என மறுப்பு தெரிவித்தும் அவர் விடுவதாக இல்லை.


“ஆரவ் அப்படி தான் சொல்லுவாங்க. நீ கொடு மா”

என ராமமூர்த்தி கூறியதும், கொண்டு வந்த பழங்களை எடுத்து அருகில் உள்ள மேஜையில் வைத்து ஜூஸ் போட ஆரம்பித்தாள் ஸ்ரேயா.


அவளும் பழத்தை அரிந்து, பிழியும் பாத்திரத்தில் வைத்து பிழிய, ஒரு சொட்டு ஜூஸ் கூட அதில் வரவில்லை. கைக்கும் வலிக்காது, பழத்திற்கும் வலிக்காது, அவள் பிழிந்ததன் விளைவு ஜூஸ் வரவே இல்லை.


ஆரவ்வோ அதனை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டான். அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த அமிர்தாவிற்கும் சிரிப்பு தான் வந்தது. அடக்கி கொண்டாள். வெகுநேரம் பழத்துடன் போராடி கொண்டிருந்த ஸ்ரேயா, 


“அப்பா, கைலாம் வலிக்குது. மெஷின் சரியில்லை போல, ஒரு ட்ராப் கூட வரல”


என சலித்து கொண்டவள் நகர்ந்து கொள்ள, ராமமூர்த்தியோ மகளின் செய்கையை நினைத்து பல்லை கடித்தார்.


“நான் வேணும்னா போட்டு தரட்டுமா?” என பின்னால் கேட்ட குரலில், இருவரும் திரும்பி பார்க்க, அப்பொழுது தான் அமிர்தாவை இருவருமே நன்றாக கவனித்தனர்.


‘இவ எங்கே இங்கே? அதுவும் இவன் ரூமுக்குள் இவ்வளவு நேரம் இருந்திருக்கா, கவனிக்கவே இல்லை,’ மனதிற்குள் முணுமுணுத்த ராமமூர்த்தி,


“வேண்டாம்…,” என வாய் திறக்கும் முன்,


“ஒஹ்ஹ் சூர். உங்களுக்கு கஷ்டமா இல்லைனா போட்டு கொடுங்க”

என மலர்ந்த புன்னகையுடன் ஆரவ் கூற, ராமமூர்த்தியும், ஸ்ரேயாவும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.


உடனே அமிர்தா, வேக வேகமாக பழங்களை கொண்டு ஜூஸ் எடுக்க, ஸ்ரேயாவோ அதனை அதிசயமாக கூர்ந்து கவனித்தாள். அதனை கண்ட ராமமூர்த்தியோ தலையிலேயே அடித்து கொண்டார்.


என்ன இருந்தாலும் அமிர்தா அங்கு இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. அதுவும், அவளை கண்டதும் மலரும் ஆரவ்வை காண காண, அத்தனை எரிச்சலாக வந்தது.


ஜூஸை எடுத்து ஆரவ்விற்கு பருக கொடுக்க, ராம்மூர்த்தியோ,


“யார் நீ? இங்க என்ன பண்ற?” என்று அமிர்தாவிடம் அதட்டலாக கேட்க,


அமிர்த்தாவோ திடுக்கிட்டு அவரை திரும்பி பார்த்தார். அமிர்தா பேசும் முன் ஆரவ்வோ,


“அவங்க அமிர்தா. என்னோட ஆஃபீஸில் ஒர்க் பண்றாங்க. அடிப்பட்டதும், அவங்க தான் பிரஸ்ட் எய்ட் செய்து, என்னை கூட்டிட்டு வந்தது”

என கூற, ராமமூர்த்தி  மீண்டும் மீண்டும் சந்தேக வலையில் விழுந்தார்.


“எது? இந்த கரித்துணியை கட்டி விட்டது பிரஸ்ட் எய்ட்டா?!”


என நக்கல் சிரிப்புடன் ஸ்ரேயா கூற, அமிர்தாவோ சங்கடமாக  நின்றாள். ஆரவ்விற்கு தான் கோபம் தாளவில்லை. இருந்தும் அடக்கி கொண்டு,


“இதோ பாருங்க ராமமூர்த்தி சார். அவங்க என்னோட ஸ்டாப். அவங்களை இப்படி இன்சட்லட் பண்றது நல்லா இல்லை. உங்க பொண்ணு கிட்ட சொல்லி வைங்க"


என கண்டிக்க, ராமமூர்த்தியோ,

“தப்பா எடுத்துக்காதீங்க ஆரவ், அவ சும்மா ஏதோ தெரியாமல் சொல்லிட்டா, அதை விடுங்க. உங்க கிட்ட தனியா முக்கியமான விஷயம் பேசணும் ஆரவ்”


எனக் கூறி அவர் அமிர்தாவை பார்க்க, அவளோ ஆரவ்வை திரும்பி பார்த்தாள்.


“சொல்லுங்க என்ன விஷயம்?” என ஆரவ் கேட்க, 


“அதான் தனியா பேசணும் சொன்னேனே!!”

என்றார் ராமமூர்த்தி.


“சார் நான் வெளியே இருக்கேன்” என அமிர்தா, கூறி வெளியேற, ஆரவ்வோ 

“பரவாயில்லை நீங்க இருங்க அமிர்தா,” என வற்புறுத்தியும், அவள் அங்கு நிற்கவே இல்லை, வெளியே வந்து விட்டாள்.


அவள் சென்றதும், அவனருகில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டவர், 


“ஏன் ஆரவ்?!! உங்க ஆபீஸ்க்கு ஆள் வேணும்னா, என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. நான் நல்ல படிச்ச, எக்ஸ்பீரியன்ஸ் உள்ள, ஹைகிளாஸ் ஆளை பார்த்து சொல்லி இருப்பேன்ல.


இந்த பொண்ணை பார்த்தா, படிச்சபொண்ணு போலவும் தெரியல, எக்ஸ்பீரியன்ஸ் போலவும் தெரியல. லோகிளாஸ் போல இருக்கா. இவ எதுக்கு நம்ம ஆபீஸுக்கு”

என அமிர்தாவை பற்றி கூறியதும், ஆரவ்வின் முகமே மாறிவிட்டது.


“இப்போ கூட சொல்லுங்க, இந்த பொண்ணை தூக்கிட்டு வேற ஒரு ஆளை வைப்போம். இவங்களை எல்லாம் நம்ப முடியாது. நாம அசந்த நேரம் பார்த்து, நம்ம கிட்டயிருந்தே எதையாச்சும் தூக்கிட்டு போய்டுவாங்க”


என அவர் கூற கூற, ஆரவ்விற்கோ கோபம் தாளவில்லை.


“சார், மைண்ட் யூர் வேர்ட்ஸ்”


என அதட்டியவன், அடுத்து அவர் பேசும் முன், கையுயர்த்தி, அவர் பேச்சிற்கு தடை போட்டவன், 


“என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க. அவங்க என்னோட ஸ்டாப், அவங்களை பத்தி யார் தப்பா பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்கு நீங்க சொன்ன எந்த குவாலிபிகேஷனும் தேவையில்லை. அப்புறம் அது என்னோட ஆபீஸ், யாரை வேலைக்கு வைக்கணும், யாரை வைக்க கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும். இதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.


அமிர்தா, ரொம்ப ஜெனியூன் பெர்சன். அவங்களுக்கு நீங்க சொல்ற போலலாம் யோசிக்கவே தெரியாது. தென் இந்த ஹைகிளாஸ் லோகிளாஸ் இதெல்லாம் உங்களோட வச்சுக்கோங்க. எனக்கு தேவையில்லாதது. எனக்கு எல்லாரும் ஈக்வல் தான். ஐ நோ வாட் அம் டூய்ங். சோ நீங்க என்னோட பேஸ்குள்ள தலையிடாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.


என முகத்தில் அறைந்தார் போல கூறியவனை திகைப்புடன் பார்த்தார் ராமமூர்த்தி.


அவர் எதிர்பார்க்காத ஆரவ் அல்லவா அங்கு இருந்தான். அவர் என்ன கூறினாலும் பிடிக்கவில்லை என்றாலுமே, வயதுக்காகவது மரியாதை கொடுத்து சரியென்று சொல்பவன், தற்பொழுது அமிர்தாவிற்காக இப்படி அவரையே எடுத்தெறிந்து பேசுவதை அவராலே நம்ப முடியாமல் பார்த்தார்.


“ஆரவ், டாட் என்ன சொல்ல வராங்கன்னா”

என ஸ்ரேயா விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கும் முன்னரே,


“ஷூ” என என கர்ஜித்தவன், 


“ஐ நீட் ரெஸ்ட். சோ பிளீஸ்”


என வாசலை நோக்கி கை கட்டியவன், கண்களை மூடி கட்டிலில் சாய்ந்து கொண்டான். அவனின் செயல் இருவருக்கும் மிகுந்த அவமானத்தை தர, வேகமாக வெளியே வந்து விட்டனர்.


அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டவன், ஹரியை அழைக்க, அவன் வந்ததும்,


“ஹரி, அமிர்தா எங்கே?” என்று கேட்டான் ஆர்வமாக.


“அவங்க கிளம்பிட்டாங்க சார்” 


கிளம்பிட்டாங்களா?!! இந்த ராமமூர்த்தி  சாரை ஏன் உள்ளே விட்ட, அவர் வந்து என்னென்னமோ பேசிட்டு போய்ட்டார். சரியான இம்சை. தேவையில்லாததை பேசி அமிர்தா மனசை கஷ்டப்படுத்திட்டார். பாவம் அவங்க கண்டிப்பா ரொம்ப பீல் பண்ணி  இருப்பாங்க”

என அவளுக்காய் யோசித்து வருந்தினான்.


அதன் பின் சில மணி நேரங்களிலே, வீடு திரும்பியவன், அன்னையிடமும் தந்தையிடமும் நேரத்தை செலவிட்டுவிட்டு, நேராக அறைக்கு வந்தவனின் சிந்தனை முழுவதையும் அமிர்தா மட்டுமே ஆக்கிரமித்து இருந்தாள்.


அலைபேசியை கையில் எடுத்தவன், அவளுக்கு அழைப்போமா? வேண்டாமா? என சிந்தித்து கொண்டிருந்தான்.


‘ராமமூர்த்தி பேசியது  எனக்கே அவ்வளவு கஷ்டமா இருந்தது. அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 

என அவனின் காதல் மனம் அவளுக்காய் வாதாடியது.


‘அவருக்கு பதில் நாம ஸாரி கேட்டா தான் கொஞ்சமாச்சும் அவங்களுக்கு ஆறுதலா இருக்கும். என முடிவெடுத்தவன், உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான். மறுமுனையில் அவள் இணைப்பு கிடைத்ததும், 


"ஹெலோ அமிர்தா, வீட்டுக்கு போய்ட்டிங்களா?"


“ஹான் வந்துட்டேன் சார்" என்றாள் ஒற்றை வார்த்தையில்.


"அப்புறம் அமிர்தா. வெரி ஸாரி. ராமமூர்த்தி சார் இப்படி நடந்துப்பார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"

என அவன் மன்னிப்பு வேண்டியதும், அமிர்தாவோ,


“சார்.., நீங்க எதுக்கு ஸாரி கேட்குறீங்க? அவர் சொன்னதில் என்ன தப்பு இருக்கு? நான் படிக்கல தானே! எனக்கு முன் அனுபவம் இல்லை தானே! உங்ககிட்ட வேலை செய்ய தகுதி இல்லை தானே! நான் லோகிளாஸ் தானே! நான் போடுற ட்ரெஸ் எல்லாம் கந்ததுணி போல தானே இருக்கு! என ஒவ்வொரு வாக்கியத்திற்கும்  அவள் குரல் கமற, கடைசி வாக்கியத்தில் கதறியே அழுது  விட்டாள். 



அவள் சொல்ல சொல்ல தான் ஆரவ்விற்கே தெரிந்தது, ராமமூர்த்தி பேசிய அனைத்தையும் அவள் கேட்டு இருக்கிறாள் என்பது. அவள் கதறி அழுததில் துடித்து போனவன்,


"அமிர்தா" என்க, அவளோ அழுகையை அடக்கி கொண்டு, 


"பரவாயில்லை சார். இதனால் நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. அதுக்கு தான் நான் இருக்கேன்னே, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல. அவமானப்படுறதும், அசிங்கப்படுறதும் அதுக்காக அழறதும் எனக்கு பழகின ஒன்னு தான்.  நான் வச்சுறேன் சார்"


என்றவள் அணைப்பை துண்டிக்க, ஆரவ் தான் அவள் பேச்சில் நிலைகுலைந்து போய்விட்டான். அவள் மனது எத்தனை காயப்பட்டிருந்தாள் இப்படி பேசுவாள். என்னால் அவளது வேதனையை போக்க முடியவில்லையே  என தன்னையே நொந்து கொண்டான்.


ஒரு வர காலம் கடந்திருந்தது. காலின் காயமாக ஓய்வெடுக்க வேண்டி இந்த ஒரு வாரமும் வீட்டிலே தான் இருந்தான் ஆரவ் ஜெயந்தன். கண்களை மூடும் பொழுது கனவாகவும், கண்களை திறந்துருக்கும் பொழுது காட்சியாகவும் அமிர்தா மட்டுமே அவனை ஆட்கொண்டு இருந்தாள். அவ்வப்பொழுது அவளுக்கு அழைத்து பேசுவான் தான் அவளோ அந்த சம்பவத்திற்கு பின்பு ரொம்பவே ஒதுங்கி கொண்டாள். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறி வைத்து விடுவாள்.


அவளிடம் எப்படி தான் நெருங்கி பேசுவது என்பது தெரியாது தவித்து போனான் ஆரவ். அவ்வப்பொழுது அவள் காலில் கட்டி விட்ட அந்த துண்டை சுத்தமாக்கி வைத்து கொண்டவன், அதை  எடுத்து  பார்த்து கொள்வான். 


ஒருவாரம் கழித்த நிலையில், அவன் அவளுக்காய் புத்தம் புதிய சுடிதார் ஒன்று  எடுத்து வந்து கொண்டு கொடுக்க, அதனை கண்டவளுக்கு அன்னிச்சையாக பயம் வந்து சூழ்ந்து கொண்டது. 



அவள்  மீதுள்ள காதலை வர்ணிக்க 

என்னென்னவோ 

கிறுக்கி தள்ளுகிறேன்!!

அத்தனை கிறுக்கல்களையம் புறம் தள்ளி விட்டு 

அவள் என்ற ஒற்றை வார்த்தையே 

போதுமானதாக 

இருக்கிறது 

என் காதலுக்கு!!



பிடிக்கும்….














Comments