UNEP-11

 அத்தியாயம்..11


   ஆதவனின் கரங்களால், அழகிய பொற்றாமரை மலர்வது போல, அன்றைய நாளும் அழகாய் விடிந்தது. அதுவும், ஆரவ்விற்கோ அத்தனை துள்ளலுடன் விடிந்தது. காரணம் என்னவாக இருந்திட போகிறது, அமிர்தாவை காணபோகிறான். அவனின் உற்சாகத்திற்கு குறைச்சலும் உண்டோ?!!


கால் காயம் முற்றிலும் குணமாகி இருந்தது அவனுக்கு. அதனால் இன்று அலுவலகம் செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தான். படப்பிடிப்பிற்கு கூட உடனே வருவதாக கூறி இருக்க, ஆனால் தயாரிப்பாளரோ இன்னும் ஒரு வாரம் ஓய்வு எடுத்த பின்னரே வாருங்கள் என்று வற்புறுத்தி கூறிவிட்டதால் அங்கு செல்லவில்லை.


அதுவுமில்லாது, ஒரு வார காலமாக அமிர்தாவிடம் அவனால் சரியாக பேச முடியவில்லை. அந்த சம்பவத்தின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. நேரில் சந்தித்து பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே சீக்கிரமே அலுவலகம் கிளம்பி இருந்தான் ஆரவ்ஜெயந்தன்.


உற்சாகத்துடன் கிளம்பி வரும் மகனை கண்டு நிர்மலா, அவன் கன்னம் வழித்து,


"என் பிள்ளை எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்" என்று கூறியவரை புன்னகையுடன் பார்த்தவன்,


"கண்டிப்பா ம்மா. என் மனசுக்கு பிடிச்சவங்க எல்லாரும் கூடவே இருக்காங்களே!! என் சந்தோஷத்திற்கு குறை வருமா என்ன?” என்றான் அதே உற்சாக குரலில். 


"என்ன ஆரவ் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட? ஷூட்டிங் இருக்கா என்ன?" என பாலகிருஷ்ணன் கேட்க,


“இல்லை பா, சும்மா ஆபீஸ் போகலாம் தான் கிளம்பினேன். வீட்டுக்குள்ளே இருக்க ஒரு மாதிரி இருக்கு. ஷூட்டிங் நெஸ்ட் வீக்கு தள்ளி வச்சுட்டாங்க. அதுவரையும் அங்கே போய் இருக்கிற வேலை பார்க்கலாம் தான்"


என காரணம் கூறியவனை யோசனையுடன் பார்த்தார் அவர். மகனின் அசைவுகள் அவருக்கு புரியாமல் இருக்குமா? மகன் மனதில் யாரோ இருக்கிறார் என்பது அவருக்கு நன்கு புலப்பட்டது. மகனாகவே சொல்லட்டும் என தற்பொழுது அதைப்பற்றி எதுவும் கேட்காமல் இருந்தார்.


அதன்பின் காலை உணவை எடுத்துக்கொண்டவன் அங்கிருந்து கிளம்பி விட,  பாலகிருஷ்ணன் தன் மனைவியிடம்,


“நிர்மலா, ஆரவ் கிட்ட ஏதோ சேஞ்சஸ் தெரியுற போல இருக்குல”

என்று கேட்க, அவரும்,


“ஆமாங்க நானும் கவனிச்சேன். கொஞ்ச நாளாவே இப்படி தான் இருக்கான். அன்னைக்கு போனை பார்த்து தனியா பேசிட்டு இருந்தான். அப்பவே டபுட் தான். சரி இருந்தாலும் சில நேரங்கள, வாய்ஸ் நோட் எடுத்துட்டு இருப்பானே, அதுபோல நினைச்சு விட்டுட்டேன். இப்போ நீங்க சொன்ன பின்னாடி தான், யோசனையா இருக்கு”

என்றதும்,


“அப்போ கன்பார்ம்  பையன் எங்கேயோ விழுந்துட்டான்”

என்று கூறி சிரித்தார் பாலகிருஷ்ணன்.


“என்னங்க, சொல்றீங்க? அப்படி இருந்தா கண்டிப்பா நம்ம கிட்ட தானே முதலில் சொல்லுவான்”

என நிர்மலா கூறியதும், 


“கண்டிப்பா நம்ம கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டான். சொல்லுவான் அதுக்கான நேரம் வரும் போது”

என்றார் மகன் மீது இருக்கும் நம்பிக்கையால்.


காரில் அலுவலகம் வந்து கொண்டிருந்த ஆரவ்வோ, ஹரியிடம், 


“ஹரி, அன்னைக்கு அமிர்தா மனசுடைஞ்சு பேசினதில் இருந்து, எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா. யாருமே என்கிட்ட இதுவரை இதுமாதிரி பேசினது இல்லை. அவளுக்குள்ளும் நிறைய வலிகள் இருக்கும்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. அன்னைக்கு முடிவு பண்ணிட்டேன், இனி அவ எதுக்கும் பீல் பண்ணாத அளவுக்கு லைப் முழுக்க நான் பார்த்துக்கணும்னு”


என மனம் விட்டு பேசிக்கொண்டே வர, ஹரியும்


“நீங்க பார்த்துக்கிறதுலாம் சரி, முதலில் உங்க லவ்வை அவங்க கிட்ட சொன்னீங்களா? அதுவே இன்னும் பண்ணல. அப்புறம் எப்படி காலம் முழுக்க பார்த்துப்பீங்க?”


என்றதும் தான் அவனுக்கும் புரிந்தது. என்று முதன் முதலில் அவளை பார்த்தானோ, அன்றே அவன் மனதில் நுழைந்து விட்டவளை தனக்கு உடைமையாளவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் தான். ஆனால், அவளிடம் தன் காதலை இன்னும் வெளிப்படுதவில்லையே!! 


யாராக இருந்தாலும் தன் காதலை, தான் காதலிப்பவர்களிடம் சொல்வது என்பது அத்தனை சுலபம் இல்லையே!! எத்தனை எத்தனை தயக்கங்கள் இருக்கும், எத்தனை எத்தனை ஒத்திகைகள் இருக்கும், எத்தனை எத்தனை எதிர்பார்புகள் இருக்கும். அனைத்தும் அவனுக்கும் இருந்தது. ஊரறியும் இயக்குனராக இருக்கலாம். உள்ளுக்குள் அவனும் சாதரண மனிதன் தானே!!


எப்படி தன் காதலை அமிர்தாவிடம் சொல்வது என்பதே அவனுக்கு தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது, சொன்னால் ஏற்றுக்கொள்ளாவாளா? இல்லை மறுத்து விடுவாளா? என ஏகப்பட்ட கேள்விகள் வண்டாய் அவனை குடைந்தது


“ஹரி, எனக்கு அமிர்தா கிட்ட எப்படி லவ்வை சொல்றதுன்னே தெரியல டா. சொன்னா என்ன சொல்வாளோன்னு பயமா இருக்கு”

என பாவமாய் கூறியவனை கண்டு பக்கென்று சிரித்து விட்டான் ஹரி.


“என்ன சார் நீங்க? எவ்வளவு பெரிய டைரக்டர் நீங்க, எவ்வளவு லவ் சீன்ஸ் எடுத்து இருப்பீங்க?!! நீங்க போய் இப்படி சொல்லலாமா? உங்களை பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது சார்”

என சிரித்தவனை கண்டு, 


“என்னை பார்த்தா சிரிப்பு வருதா உனக்கு? வரும் வரும், நல்ல சிரிச்சுக்கோ, எனக்கும் ஒருக்காலம் வரும் அப்போ உன்னை பார்த்து நான் விழுந்து விழுந்து சிரிக்கல என் பெயர் ஆரவ் இல்லை”

என சவால் விட்டவன், வேடிக்கை பார்க்க திரும்பி கொண்டான். 


“இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்காது சார். அதனால் நீங்க உங்க சவாலில் ஜெயிக்கிறது கஷ்டம் தான்”

என புன்னகையுடன் கூறியவன், சாலையை நோக்கி வண்டியை செலுத்தினான். அவன் வாழ்க்கையிலும் இது ஒரு போன்ற சூழ்நிலை ஏற்பட தான் போகிறது என்பது விதி மட்டுமே அறிந்த ஒன்று.


வேடிக்கை பார்த்து கொண்டே வந்த ஆரவ், துணி கடையை பார்த்ததும் அவனுக்கோ யோசனை பிறந்தது. உடனே ஹரியை காரை நிறுத்த கூறியவன்,


“ஹரி, அமிர்தாவுக்கு ஒரு சுடி எடுத்துட்டு போலாம். அன்னைக்கு எனக்காக தானே, அவங்க ட்ரெஸை கிழிச்சு கட்டு போட்டாங்க. அதனால் எடுத்து கொடுக்கணும் தோனிட்டே இருந்தது. வா கடைக்கு போலாம்”

என அவனை அழைக்க, 


“சார், வர வர ரொம்ப தேறீட்டிங்க நீங்க. கிப்ட்லாம் கொடுக்கிற அளவுக்கு வந்துடீங்களே. சரி இருங்க, நான் போய் கடை ஓனர் கிட்ட பேசிட்டு வரேன். திடீர்னு போய் நின்னா, கடையில் இருக்கிறவங்க எல்லாம் ஷாக் ஆகிட போறாங்க”

என்றவன் உள்ளே சென்று அங்கு இருந்த கடையின் முதலாளியிடம் சென்று பேசிவிட்டு வந்தவன், ஆரவ்வை அழைத்து கொண்டு வந்தான்.


காலையில் சீக்கிரமே சென்றதால் கடையில் மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லை. இவர்கள் மட்டுமே சென்றதால், எந்தவித இடையூறும் இல்லாது அவளுக்கு சுடிதார் எடுக்க முடிந்தது.


முதன் முதலாக, மனதிற்கு பிடித்தவளுக்கு கொடுக்கப்படும் பரிசு என்பதால், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து முழுதாக ஒரு மணிநேர அலசலுக்கு பின்னரே அமிர்தாவுக்கென்று பொருத்தமான அவனுக்கு பிடித்தமான வானின் வண்ணத்திலே எடுத்திருந்தான் ஆரவ்.


அலுவலகத்திற்கு வந்தவன் முதல் வேலையாக, அமிர்தாவை தன்னறைக்கு அழைத்தான்.

அவள் வந்ததும், 


“ஹெலோ அமிர்தா, எப்படி இருக்கீங்க?” என்று கேட்க


“இருக்கேன் சார், உங்க கால் எப்படி இருக்கு?”

என்று பதிலுக்கு கேட்டாள்.


அவள் பதில் கூறும் தோரணையிலேயே அவனுக்கு புரிந்தது, இன்னும் அவள் அந்த சம்பவத்தை மறக்கவில்லை என்பது.


“பைன். தென் அன்னைக்கு நடந்ததுக்கு என் மேலே கோபமா இருக்கீங்களா?”

என மனதில் பட்டதை கேட்க, அவளோ,


“நான் எதுக்கு சார் உங்க மேலே கோபப்பட போறேன். அவர் தானே பேசினது. அதான் அன்னைக்கே சொன்னேனே, எனக்கு இதெல்லாம் பழகி போன ஒன்னுனு.


உங்க மேலே கோபப்படுற அளவுக்கு நீங்க ஒண்ணுமே பண்ணலையே!! நீங்கதான் என் உயிரையும் வாழ்க்கையையும் மீட்டு கொடுத்து இருக்கீங்க. உங்க மேலே கோபப்பட்டா அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார். சொல்ல போனால்  எனக்கு யார் மேலையும் கோபமே கிடையாது சார். அன்னைக்கு அவர் சொன்னது உண்மை தானே!


எனக்கு இருக்கிற வருத்தமெல்லாம், எனக்காக பேச போய் உங்களுக்கு அதனால் எதுவும் பாதிப்பு வந்துருமோனு தான்”


என அவளின் பதிலை கண்டு அவனுக்காக அவள் யோசிக்கிறாள் என்பதும் அவன் மீது அவளுக்கு எந்த வருத்தமும்  இல்லை என்பதுமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. 


“உங்களால் எனக்கு பாதிப்பா, நெவர். அப்படி ஒருக்காலும் நடக்காது. சரி இந்தாங்க”

என அவன் எடுத்து வந்ததை கொடுக்க, அதனை வாங்கியவள்,


“என்ன இது?” 


“பிரிச்சு பார்த்தா தெரிய போது”


அதனை பிரித்து பார்த்தவள் உள்ளே சுடிதார் இருக்க, 


“எப்படி இருக்கு? என்று கேட்டான் ஆரவ் ஆர்வமாக.


 “நல்ல இருக்கு சார்” என்றவள், எதேர்ச்சையாக அதன் விலையை பார்க்க, அதிலோ பத்தாயிரத்துக்கு மேல் இருந்தது.


‘என்னோட ஒரு மாச சம்பளத்தோட விலையா இந்த ட்ரெஸ். அடேங்கப்பா’ என மனதோடு மலைத்து போனாள் அமிர்தா.


“உங்களுக்கு பிடிச்சு இருக்கா?” என்று ஆரவ் கேட்க,


“எனக்கு ஏன் சார் பிடிக்கணும்? யாருக்கு கொடுக்க போறீங்களோ அவங்க கிட்ட கேளுங்க சார்”

என்றவளுக்கு, 


“அவங்க கிட்ட தானே கேட்டுட்டு இருக்கேன்”  என்றதும், அவள் கைகளோ நடுங்க ஆரம்பித்தது.


பட்டென்று அதனை மேஜை மீது வைத்தவள், ஏன் என்ற

கேள்வியாய் அவனை நோக்க, 


“அன்னைக்கு என்னால் தான் உங்க சுடிதார் டேமேஜ் ஆச்சு. அதான் புதுசு வாங்கிட்டு வந்தேன். வாங்கிக்கோங்க”

என அதனை எடுத்து அவளிடம் கொடுக்க, அவளுக்கோ படப்படப்பாக வந்தது.


பழைய நினைவுகள் எல்லாம் வந்து அலைமோதி, அவளை சூறாவளியாய் சுழற்றியது.  

‘எதற்கு இப்போ இதை எடுத்து தருகிறார். இதில் ஏதாவது உள்அர்த்தம் இருக்குமோ?!! ஏற்க்கனவே பட்ட அடி அவளை யோசிக்க வைத்தது. அதனை வாங்கி விட்டால் தன்னிடம் வேறு எதையாவது எதிர்பார்ப்பாரோ? என அன்னிச்சையாக பயம் தோன்றி அவளை கலங்க வைத்தது.


“இல்லை சார், எனக்கு வேண்டாம்” என சட்டென்று கூறியவளிடம்,


“ஏன் வேண்டாம்?, இந்த கலர் பிடிக்கலையா? போய் மாத்திக்கலாம், இல்லை வேற டிசைன் ஏதாவது பார்கிறீங்களா?” என அவனோ அவள் மனம் அறியாது கேட்க,


“ஐயோ சார், எனக்கு இந்த ட்ரெஸ்ஸே வேண்டாம் சொல்றேன். இதுபோல பரிசுபொருள்லாம் நீங்க எதுக்கு எனக்கு வாங்கி தரணும். நீங்க என் ஓனர். நான் உங்க கிட்ட வேலை பார்க்கிற ஒரு ஸ்டாப். எனக்கு போய் இவ்வளவு அதிகமான விலையில்  ட்ரெஸ் வாங்கிட்டு வந்தா, பார்கிறவங்க என்ன நினைப்பாங்க. நான் போட்டுட்டு இருந்ததே பழைய ட்ரெஸ் தான். இன்னும் ரெண்டு தடவை போட்டு இருந்தா அதுவே கிழிஞ்சு தான் போய் இருக்கும். அதுக்காக போய், இவ்வளவு விலை கொடுத்து வாங்குவீங்கன்னு எதிர்பார்க்கல. 


உங்க மனசு கஷ்டப்படுத்தனும்னு சொல்லல. உங்களை நான் ரொம்ப உயர்வான இடத்தில் வச்சு இருக்கேன். அது அப்படியே இருக்கட்டும் சார். நமக்குள் இருக்கும் இந்த உறவு இப்படியே போகட்டும் சார். வேறு எதையும் உட்புகுத்தனும் நினைக்காதீங்க பிளீஸ்”


என உள்அர்த்ததோடு படப்படத்தவளின் வார்த்தைகள் நிச்சயம் அவனுக்கு புரியவே இல்லை. அவள் பயத்தின் காரணமும் புரியவில்லை. அவள் மறுப்பின் காரணமும் விளங்கவில்லை.


“அமிர்தா, நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல. இது ஒரு சாதாரண விஷயம், இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க”


“எது? இது உங்களுக்கு சின்ன விஷயமா? நீங்களாம் பணக்காரங்க உங்களுக்கு என் நிலையும், மனசும் புரியறது கொஞ்சம் கஷ்டம் தான்.

நீங்க செய்யுற எந்த விஷயமும் தப்பா போகாது. தப்பா தெரியாது, தப்பா யாரும் சொல்லவும் மாட்டாங்க. இதுவே ஏழைங்க நாங்க சின்னதா ஒரு விஷயம் பண்ணாலும், அது பூகம்பம் மாதிரி வெடிக்கும். பிளீஸ் சார் வேண்டாம்னா விட்டுடுங்களேன்”

என கையெடுத்து கும்பிட்டு கேட்டதும், அசைவற்று போனான் ஆரவ்ஜெயந்தன்.


இதற்கு போய் எதற்கு கையெடுத்து கும்பிட்டு கேட்க வேண்டும்? இது அவ்வளவு பெரிய விஷயமா? யோசிக்க யோசிக்க மண்டை குழம்பி போனான் ஆரவ்.


காரிருள் நடுநிசியில், அதீத ஒளியில் அழன்று கொண்டிருக்கும் ஆயிரம் சாலை விளக்குகளில், ஒன்று மட்டும் தன்னிடமுள்ள குறைந்த ஒளியை தக்க வைத்து கொள்ள போராடும் நிலை தான் அவளின் வாழ்க்கை என்பது அவனுக்கு யார் தான் சொல்வது?


அவன் முதன் முதலாக அவளுக்காக ஆசை ஆசையாக எடுத்து வந்ததை அவள் வேண்டாம் என்று மறுத்ததை எண்ணி ரொம்பவே வருந்தினான் ஆரவ்.


இதற்கே முடியாது என்றவள், தன் காதலை சொன்னால் என்ன சொல்வாளோ என்று அவனுக்கு அத்தனை பயமாக இருந்தது. இதே போல் அவனையும் மறுத்து விட்டால், அதனை அவனால் தாங்க முடியுமா? யோசித்து யோசித்து வெகுவாக துவண்டு போனான் ஆரவ்.


நாளெல்லாம் அவனுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள். நேரம் போனதே தெரியவில்லை. இரவு வேளையை நெருங்கியதும், ஹரி வந்து நியாபகப்படுத்தியதும் தான் இல்லத்திற்கே புறப்பட்டான்.


காரின் பயணம் அமைதியாகவே கழிந்தது. ஹரியும் அவனை அவ்வப்பொழுது பார்த்த வண்ணமே தான் வந்தான். அவனாக கூறாமல் தானாக எதையும் கேட்க முடியாது என்று அமைதி காத்தப்படியே பயணத்தை மேற்கொண்டான்.


இல்லம் வந்தவன், நேராக அறைக்கு சென்று விட, அவனையே யோசனையாக  பார்த்தப்படி இருந்தனர் நிர்மலாவும், பாலகிருஷ்ணனும். 


அறைக்கு வந்தவன், அவளுக்கு வாங்கி வைத்த சுடிதாரை கட்டிலில் போட்டுவிட்டு குளிக்க சென்றான். பின் தயாராகி, உணவு மேஜைக்கு வர, நிர்மலா அவனுக்கு உணவு பரிமாற, உணவினை ஒன்னும் பாதியாக கொரித்தவன், மீண்டும் அறைக்கு வந்துவிட்டான்.


சதா எப்பொழுதும், கலகலவென்று பேசும் மகன் தற்பொழுது கலை இழந்தது போல காணப்படவே இருவருமே யோசனைக்குள்ளானர். 


“என்னங்க ஆச்சு இவனுக்கு? எப்பொழுதும் ஜாலியா பேசிக்கிட்டே இருப்பான். இப்போ இவ்வளவு அமைதியா இருக்கான். காலையில் கூட அவ்வளவு சந்தோஷமா போனான். இப்போ என்ன வந்துச்சு. இப்படி இவன் இருந்ததே இல்லையே. சரியா சாப்பிட கூட இல்லையேங்க"

என நிர்மலா கவலையாக கேட்க, பாலகிருஷ்ணனும், 


“நானும் அதை தான் யோசிச்சுட்டு இருக்கேன். எப்பவும் இப்படி இருந்ததில்லை.  இப்போ ஏன் இப்படி இருக்கான்னு தெரியலையே!! சரி நீ கவலைப்படாதே. நான் அவன் கிட்ட பேசுறேன். இப்போ போய் தூங்கலாம் அவனும் தூங்கி எழட்டும், ஒரு ரெண்டு மூணு நாள் போனத்துக்கப்புறம்,  ரிலாக்ஸா பேசலாம்”

என மனைவிக்கு ஆறுதல் கூறியவர், தனக்கும் அதில் பங்கு போட்டு கொண்டார்.


அதன் பின் வந்த ஒரு வார காலமும், ஆரவ் எங்கும் வெளியில் செல்லவில்லை. வீட்டிலே தான் அடைந்து இருந்தான். அமிர்தாவின் மனதில் என்ன இருக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது? புரியாத புதிராக ஏன் இருக்கிறாள்? என்று சதா அவளின் நியாபகம் தான் அவனுக்கு.


மகன் இப்படியே இருப்பது நல்லதல்ல, அவன் மனதில் அரித்து கொண்டிருக்கும் விஷயத்தை கேட்டறிந்து அதற்கு தகுந்த வழியை ஏற்படுத்தி கொடுப்பது தான் நல்ல தந்தைக்கு அழகு என்று யோசித்த பாலகிருஷ்ணன் ஆரவ்வை தனிமையில் சந்தித்து பேச முடிவெடுத்தார்.


அவனறை வாசலில் நின்று அவர் கதவை தட்ட, எழுந்து வந்து கதவை திறந்தவன், அங்கே பாலகிருஷ்ணன் நின்றதும்,


“அப்பா, என்ன கதவையெல்லாம் தட்டுறீங்க. அப்படியே வரலாமே!!”

என உள்ளே அழைக்க, அவரும் உள்ளே நுழைந்தார்.


“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ஆரவ். அதான் வந்தேன்


“சொல்லுங்க ப்பா, கூப்பிட்டு இருந்தா நானே வந்து இருப்பேனே!!”


“பரவாயில்லை, என் பிள்ளைகிட்ட பேச நான் வரதில் என்ன இருக்கு?”

என புன்னகையுடன் கூறி, இருக்கையில் அமர்ந்தவர், அறையை சுற்றி பார்க்க, எப்பொழுதும் போல் அவன் அறை அத்தனை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. 


இதெல்லாம் பெண்கள் வேலை, ஆண் மகன் வெளியே சென்று சம்பாதித்து வந்தால் போதும் என்று இருக்கும் சமூகத்தில், வீட்டு வேலைகளிலும் ஆண்களுக்கு பங்கு உண்டு என்று அவனுக்கு சிறு வயதில் இருந்தே போதித்த போதனைகள் தான் இவையெல்லாம். நம் வீட்டிலே இருக்கும் வேலைகள் அனைத்தும், நம்முடைய வேலைகள் தான். அதை நீதான் செய்ய வேண்டும், என்று பிரித்து பார்க்கும் பேதம் ஆரவ் குடும்பத்தில் அறவே இல்லை.


கடைசியாக, கட்டிலில் இருந்த அந்த சுடிதாரின் மீது அவர் பார்வை விழுந்தது. அவரின் பார்வையை தொடர்ந்து ஆரவ்வின் பார்வையும் அதில் பட, அவனோ தந்தையை திரும்பி பார்த்தான்.


அவரும் புன்னகையுடன், அதை கையில் எடுத்தவர்,


“யாருக்கோ  ப்ரெசென்ட பண்ண வாங்கி இருக்க போல!! சோ இந்த ட்ரெஸ்க்கு உரியவங்களால் தான் இப்படி மூட்ஆப்பா இருக்க சரியா?”


என அவன் மனதை சரியாக கணித்து கேட்டவரை ஆச்சரியமாக பார்த்தான் அவன்.


“அப்பா,” என்றவனுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.


“ரிலாக்ஸ் ஆரவ். என் பையன் மனசு எனக்கு புரியாதா சொல்லு? சரி என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? என்ன பிரச்சனை”

என அவனிடம் கேட்க, அவனும் அமிர்தாவை சந்தித்தது முதல் அவள் அவனின் பரிசு பொருளை வேண்டாம் என்று கூறியது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் அவரிடம் பகிர்ந்து கொண்டான்.


 அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட பாலகிருஷ்ணனுக்கு ஆரவ்வின் வருத்தமும் புரிந்தது, அதேபோல் அமிர்தாவின் நிலைமையும் புரிந்தது.


“ஜஸ்ட் ஒரு கிப்ட்க்கு போய் நீங்க பணக்காரங்க, நாங்க ஏழைங்க, உங்களை தப்பு சொல்ல மாட்டாங்க. எங்களை தான் சொல்லுவாங்க, அப்படி இப்படின்னு என்னென்னமோ பேசுறாங்க. ஒண்ணுமே புரியல ப்பா. இதுக்கே இவ்வளவு பேசினவங்க, இன்னும் நான் லவ் பண்றேன், மேரேஜ் பண்ண ஆசைப்படுறேன் சொன்னா, அவ்வளவு தான் போல, எனக்கு ஒரு மாதிரி இருக்கு ப்பா. எதிலும் கான்சென்ரேட் பண்ண முடியல. மனசெல்லாம் ஏதே பண்ணுது”

என்ற வருத்தப்பட்டு கூறியவனிடம்,


“ஆரவ், நான் சொல்றதை தெளிவா கேட்டுக்கோ. இது உன்னோட லைப். உனக்கு என்ன தேவை, உன் லைப் யார் கூட  இருந்தா நல்ல இருக்கும்னு நீ தான் முடிவு பண்ணனும். ஜஸ்ட் நான் ஒரு அப்பாவா உனக்கு கைட் பண்ணலாம். ஆனால் முழுக்க முழுக்க முடிவு உன்னோடதா தான் இருக்கணும்.


சரி இப்போ சொல்லு, உன் லைப் யாரோடனு கன்பார்மா முடிவு பண்ணிட்டியா?”

என தெளிவாக அவனை கேட்டார் பாலகிருஷ்ணன்.


“எஸ் அஃப்கோர்ஸ் அமிர்தா தான் பா”

என பட்டென்றும், சட்டென்றும் பளீரென்று பதிலுரைந்தான் ஆரவ்.


“குட் ஆரவ். நீ ஒரு செகண்ட் யோசிச்சு இருந்தாலும், நீ லவ் பண்றேன் சொல்றதே வேஸ்ட். தூக்கி போட்டுட்டு வேற வேலையை பாருன்னு சொல்லி இருப்பேன். அமிர்தா தான் உன் வாழ்க்கை துணைனு முடிவு பண்ணது, எந்த நிலையிலும் மாறாது இருப்பது தான், உன்னோட உண்மையான காதலுக்கான அர்த்தம்.


இவங்க தான் நம்ம லைப்னு முடிவு பண்ணது பின்னாடி, அவங்க எப்படி இருந்தாலும், அப்படியே ஏத்துக்கறது தான் ட்ரு லவ். அது எந்த மாதிரியான சூழ்நிலையா இருந்தாலும்”


என்ற தந்தையின் வார்த்தைகளை கூர்ந்து கவனித்தான் ஆரவ். 


“அப்பா, எனக்கு அமிர்தாவை பிடிச்சு இருக்கு. அவங்க கூட தான் என் மொத்த வாழ்க்கையையும் சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன். அவங்க மேலே நான் வச்ச காதல் எந்த சூழ்நிலையிலும் மாறவே மாறாது ப்பா”


என உறுதியாக கூறிய மகனை கண்டு மனதோடு மெச்சி கொண்டார் பாலகிருஷ்ணன்.


“உன் மனசில் அமிர்தா மீது காதல் வந்துடுச்சு. சரி, அதே போல அமிர்தா மனசிலும் உன் மேலே காதல் வரணுமே. உன் விருப்பம் மட்டுமே முக்கியம் கிடையாதே!!”

என்ற தந்தையை சோகமாக பார்த்தவன்,


“அதான் ப்பா, அவங்க என்ன நினைக்கிறாங்கன்னே புரியல. அவங்களுக்குள் நிறைய சோகம், வலி, விரக்திலாம் இருக்கு. அது என்னன்னு தெரியல.

அமிர்தாவுக்கும் என் மேலே லவ் வர நான் என்ன பண்ணனும் ப்பா”


“அதுக்கு நீ போராடனும் ஆரவ்”

என்றவரை புரியாமல் பார்த்தான் ஆரவ்.


“நீ பொறந்ததிலிருந்தே, உனக்கு என்ன பிடிக்குமோ, அதை நாங்க இல்லைன்னு சொன்னது இல்லை. உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் நினைச்சு தான் எல்லாமே பண்ணோம். பிடிச்ச படிப்பு, பிடிச்ச தொழில் எல்லாமே உன் விருப்பதிற்கு நாங்க ஒத்துக்கொண்டோம். அதனால் நீ எதுக்காகவும் எங்ககிட்ட போராடுனது இல்லை. அடம் பிடிச்சதில்லை. சோ, இதுவரைக்கும் உன் லைப் ரொம்ப ஈஸியா போயிட்டு இருந்தது. ஆனால் இப்போ உன் காதலை நீ போராடி, அடம்பிடிச்சு வாங்க வேண்டிய நிலைமையில் இருக்க.


இந்த விஷயத்திலும், எங்களால் உனக்கு உதவி பண்ண முடியும். நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் அமிர்தாவை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ண வைக்கலாம். ஆனால் அது உன் காதலுக்கு செய்யுற மிகப்பெரிய அவமானம்.


ஒருத்தவங்கள காதலிப்பது என்பது தவம் மாதிரி. தவம்னா சும்மா இல்லை. அதுக்குனு முறையான வழிகள் இருக்கு. அந்த வழியில் போனா தான் சரியா தவம் பண்ண முடியும்.


அதேபோல, ஒருத்தவங்களால் நாம காதலிக்கப்படுவது என்பது வரம் மாதிரி. எவ்வளவு பேர், எப்படி எப்படியோ தவம் இருந்தாலும், சிலருக்கு மட்டும் தான் வரம் கிடைக்கும்.


அந்த வரம் கிடைக்கிற வரை நாம தவம் பண்ணி தான் ஆகணும். காதலிக்கிற எல்லாருக்கும் காதலிக்கப்படுவது என்பது கிடைக்குதா என்ன? அது கிடைக்கிற வரை காத்திருக்க தான் வேணும்.


 உனக்கும் இதே நிலை தான். அமிர்தாவோட காதலை பெற நீ ரொம்பவே போராட வேணும் ஆரவ். அது எப்படி என்னன்னு நீதான் முடிவு பண்ணனும்"


என நீண்ட அறிவுரை கூற, ஆரவ் யோசனைக்குள்ளானான்.


"அமிர்தவாவோட நிலைமை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோ!!. அவளை பத்தி எதுவுமே தெரியாம காதல்னு சொன்னா, அவ பயந்து தான் போவா"

என்றவருக்கு,


"அது தானே ப்பா லவ். அவளை பத்தி எதுவுமே எனக்கு தெரிய வேண்டாம். இப்போ எப்படி இருக்காங்களோ அப்படியே போகணும் தான் ஆசைப்படுறேன்"


என கூறியவனை சிரிப்புடன் பார்த்தார் பாலகிருஷ்ணன். 


“ஆரவ், உன்னோட காதல் எனக்கு புரியுது, ஆனால் அமிர்தாவுக்கு புரியணும்னா உன் காதலை அவளுக்கு உணர்த்தினா தானே!! அவளுக்குள் இருக்கும் வலி, விரக்தி இது எல்லாம் என்னன்னு தெரிஞ்சா தானே அதை உன்னால் போக்க முடியும். வெறும் கல்யாணத்தில் முடியறது இல்லை உண்மையான காதல். அதுக்கு பின்னாடி நீங்க ரெண்டு பெரும் வாழுற வாழ்க்கையில் தானே இருக்கு உங்க காதலோட உண்மை தன்மை. இனி என்ன பண்ணனும்ன்னு நீ முடிவெடு. அமிர்தாவை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கோ. புரிஞ்சுக்கோ!! உன் காதலை அவ கிட்ட காட்டிட்டே இரு. ஒரு நாள் அதுக்கான ரிசல்ட் கண்டிப்பா கிடைக்கும்"


என அறிவுரை கூறியவர் அவனிடமிருந்து விடைபெற்று கொள்ள, ஆரவ், தந்தை கூறியதை தான் அசைபோட்டு கொண்டிருந்தான். 


தந்தை கூறிய அனைத்தும் அவனுக்கு புரிந்தது. அமிர்தாவின் காதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை, தெளிவாக சிந்தித்தான். அடைய வேண்டிய இலக்கு இது தான் என்பது தெரியும். எந்த பாதையில் சென்றால் என்ன? நாமளே ஒரு வழியை உருவாக்குவோம் என, அதற்கான வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டான் ஆரவ்ஜெயந்தன்.


கானல்நீர் என்று நினைத்த காதலை

கவிசாரலாய் மாற்றியவள்

அந்த கவிசாரலின்

கடைசி புள்ளியிலும்

வாழ்ந்து

காதலால் இம்சிக்கிறாள் என்னை!!

































Comments