UNEP-12

 அத்தியாயம்-12


அன்றைய நாளில் மீண்டும் விழாக்கோலம் பூண்டது நகரம். ஏஜே இயக்கத்தில், காதலை காவியமாக படைத்திட்ட திரைப்படம் இன்று வெளியாகிறது. ரசிகர்களுக்கோ ஏகபோக கொண்டாட்டம்.


அவனின் தனித்தன்மையான இயக்கத்திற்கு மற்றுமொரு சான்றாக இருந்த இத்திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. 


இன்று திரைப்படம் வெளிவர, இந்த முறை எங்கும் வெளியில் செல்லவில்லை அவன். வீட்டிலே தான் மக்களின் கருத்துக்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.


மற்ற கலைஞர்கள், அவரவருக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு வசதியான நேரத்தில் திரைப்படத்தை காண சென்றிருந்தனர்.


“ஆரவ், இன்னைக்கு படம் ரிலீஸ் ஆச்சே!! நீ தியேட்டர் போய் பார்கலையா? ஆடியன்ஸ் ரியாக்ஷன் என்னன்னு நேரில் பார்த்தா தானே திருப்தியா இருக்கும்”

என பாலகிருஷ்ணன் கூற, 


“எஸ் பா, பார்க்கணும் தான் ஆசையா இருக்கு. ஆனால் நான் இந்த படத்தை அமிர்தாவோட பார்க்க வெய்ட் பண்றேன் ப்பா”

என மனதில் இருப்பதை மறையாமல் வெளிப்படுத்தினான்.


“அப்படி என்ன ஸ்பெஷல்? அமிர்தா கூட தான் பார்க்கணும்னு?

என்ற தகப்பனின் கேள்விக்கு,


“இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான் ப்பா. ஆல்மோஸ்ட் என்னோட லவ் ஸ்டோரி போல தான், இந்த பிலிம்மும் எடுத்து இருக்கேன். இந்த பிலிம் மேக் பண்ணும் போது பல இடங்களில் அமிர்தா கூட இருந்து பார்த்து இருக்காங்க. அமிர்தா இதுவரை தியேட்டர் போய் படம் பார்த்ததில்லை. அதனால், முதன் முதலில் அவங்க தியேட்டர் போய் பார்க்கிற படம் என்னோடவும், என் படமாகவும், இருக்கணும்னு ஆசைபடுறேன். கூடவே இன்னொரு சர்பரைஸ்ம் அவங்களுக்கு இருக்கு.. அது அவங்க கிட்ட தான் முதலில் சொல்லுவேன்”


என வெட்கம் கலந்த புன்னகையுடன் கூறினான் ஆரவ்ஜெயந்தன்.


“ஆரவ், அது என்ன டா அப்பா கிட்ட மட்டும் தனியா பேசிக்கிட்டு இருக்க?!! அம்மாவை கண்டுகிறதே இல்லைல போடா. அம்மாவை மறந்துட்ட நீ”

என அந்நேரம் நிர்மலா செல்லமாக கோபித்து கொள்ள,


“ம்மா” என அவரை அருகில் அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தவன்,  அவர் மடியில் படுத்து கொண்டான். தானாக அவர் கை அவன் தலை கோதிட,


“ம்மா, உங்க கிட்ட சொல்லாமல் இருப்பேனா? எப்படியும் அப்பா உங்க கிட்ட சொல்லி இருப்பார்னு எனக்கு தான் தெரியுமே! நீங்க தான் இணைபிரியா காதலர்கள் ஆச்சே!!”

என கூறி ஆரவ் சிரிக்க, 


“போதும் போதும் ஐஸ் வச்சது. அப்பா சொன்னார் தான். இருந்தாலும், என் மகன் வாயால கேட்கணும்னு அம்மா ஆசைப்படுறேன். என் மருமக யாரு? எப்போ காட்டுவேனு ஆர்வமா இருக்கு டா”

என்றார் நிர்மலா எதிர்பார்ப்புடன்.


“அதுக்கான நேரம் இன்னும் வரல ம்மா. அமிர்தா கிட்ட இன்னும் என் காதலை சொல்லவே இல்லை. முதலில் சொல்லணும், அப்புறம் அவங்க என் காதலை ஏத்துக்கணும். எவ்வளவு இருக்கு? அமிர்தா என் காதலை ஏத்துகிட்டதும் முதலில் உங்க கிட்ட தான், இவ தான் உங்க மருமகனு கூட்டிட்டு வந்து நிப்பேன். ஓகே வா”

என செல்லம் கொஞ்ச, 


“அது யாருடா? அவ்வளவு பேரழகி, என் பிள்ளையை வேண்டாம் வேற சொல்லுவாளாம் அவ. அப்படி மட்டும் சொல்லட்டும், பொண்ணை தூக்கிட்டு வந்து தாலி கட்ட வைக்கிறேன் நான்”

என நிர்மலா கூறியதும் சத்தமாக சிரித்து விட்டனர் ஆரவ்வும், பாலகிருஷ்ணனும்.


“என் செல்ல அம்மா. அதுக்குள் அவசரப்படாதீங்க. சீக்கிரமே என் காதல் அவங்களுக்கு புரியும். அவங்க ஊருக்கு அழகா தெரியறாங்களோ இல்லையோ? எனக்கு பேரழகி தான் ம்மா. அதனால் அவங்களுக்காக நான் காத்திருக்கிறது தப்பு இல்லை”


என்று ஆரவ் கூற, மகனின் காதலின் ஆழம் அவருக்கு புரிந்தது. கூடவே மகனின் காதலை சீக்கிரமே அமிர்தா ஏற்று கொள்ள வேண்டும் என்ற பிராத்தனையும் தோன்றியது.


முதல் காட்சி முடிவடிந்த நிலையில், எப்பொழுதும் போல இப்படமும் ஆரவ்விற்கு வெற்றியை அள்ளி குவித்து இருந்தது. படம் பார்த்துவிட்டு ஏகப்பட்ட பேர் அவனுக்கு அழைத்து வாழ்த்து கூறினர். அனைவரின் வாழ்த்தையும் உளமாற ஏற்று கொண்டவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. 


 அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆரவ்வை  எதிர்கொண்ட, ஹரியோ, 


“இப்போ எதுக்கு ஆபீஸ் போய்ட்டு இருக்கீங்க? ஷோ போய் பார்த்தா நல்ல இருக்கும்ல”

என்றவனுக்கு,


“ஷோ போக தான் கிளம்பி வந்தேன்”

என்று பதில் கூறியவனை குழப்பத்துடன் பார்த்தான் ஹரி.


அலுவலகம் வந்து சேர்ந்தவன், அமிர்தாவின் வரவிற்காக காத்திருந்தான்.


அலுவலகம் கிளம்பி பேருந்து நிலையம் வந்து நின்ற அமிர்தாவோ ஏஜே இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் போஸ்டர்களும் பேனர்களும் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்தாள். அதனை கண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.


பேருந்திற்காக நின்றவர்களில் சிலர், படத்தை பற்றி பெருமையாக கூறியதும் அவளது செவிகளில் விழுந்தது. பேருந்து ஏறிய பின்னரும், பேருந்தில் இருந்த சிலர், படத்தை பார்த்து விட்டதாகவும், இயக்குனர் தரமாக இயக்கி இருப்பதாகவும் கூற, அமிர்தாவிற்கு ஆரவ்வின் முகம் மின்னி மின்னி மறைந்தது.


ஏனோ அவளுக்கும் அத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. எதற்கு ஆசைப்பட்டாலும், அடக்கி கொண்டே வாழ்ந்து பழகியவளுக்கு, இந்த ஆசையையும் தன்னுள் அடக்கி கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள்.


அலுவலகம் நுழைந்ததும் அவளை எதிர்கொண்டான் ஆரவ். ஆரவ்வை அங்கு சற்றும் எதிர்பார்க்காத அமிர்தா, அதிர்ந்து விழிகளை விரிக்க, அவனோ,


“வாங்க அமிர்தா, என்ன இவ்வளவு ஷாக்கா பார்க்கிறீங்க?”


“இல்.. லை நீங்க, எங்க இங்க?  உங்க படம் வெளி வந்துருக்கே. நீங்க பார்க்க போகலையா?”

என்று கேட்க,


“போக தான் போறேன். நீங்களும் தான் வரீங்க. போலாமா?”


என கூறிவிட்டு அவன் முன்னோக்கி நடக்க, அவளோ அதிர்ந்து பார்த்தாள் அவனை. 


“நானா? நா..ன் எது...க்கு? “

என அவள் திக்கி திணற, ஆரவ்வோ, 


"எதுக்குன்னா என்ன அர்த்தம்? படம் பார்க்க தான். ஏன் நான் டைரக்ரெட் பண்ண படத்தை பார்க்க உங்களுக்கு விருப்பமில்லையா?  அவ்வளவு கொடுமையாவா எடுத்து இருக்கேன்"

என புன்னகையுடன் கேட்டதும், அமிர்தாவோ,


"அதான் ஊரே சொல்லுதே சார், உங்க படம் சூப்பர்ன்னு. நான் ஏன் பிடிக்கலனு சொல்ல போறேன்" என்றாள் அவரசமாக.


"எனக்கு நீங்க தான் சொல்லணும். வாங்க"  என்றவன் அவள் அடுத்து பேச கூட இடம் கொடுக்காமல் முன்னே நடக்க, அமிர்தாவோ திருத்திருத்தப்படி அங்கேயே நின்றாள்.


"ஹரி, அந்த தியேட்டர் ஓனர் கிட்ட பேசிடு. நான் வரது வெளியே லீக் ஆக வேண்டாம் சொல்லிடு. எந்த ப்ரோப்ளேமும் வந்துர கூடாது ஓகே வா, எல்லாத்தையும் பக்காவா அரேஞ் பண்ணிடு"


என அவன் ஹரியிடம் பேசிக்கொண்டே அமிர்தாவை பார்க்க, அவளோ இன்னமும் கைகளை பிசைந்தப்படி அங்கேயே தான் நின்றாள்.


"அமிர்தா, ஷோக்கு டைம் ஆச்சு. சீக்கிரம் வாங்க" என அவன் ஓங்கி குரல் கொடுத்ததும் தான் தன்னிலை அடைந்து அவனருகே வேகமாக நடந்து வந்தாள். அதற்குள் ஆரவ்வும், ஹரியும் காரில் ஏறி அமர்ந்து விட்டனர்.


ஓட்டுநர் இருக்கையில் ஹரி அமர, பின் இருக்கையில் ஆரவ் அமர்ந்து, அமிர்தாவை உள்ளே அழைத்தான். அவள் தயங்கியபடி நின்றதை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளவே இல்லை.


“ஹ்ம்ம் சீக்கிரம்,” என கதவை திறந்துவிட, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை, அவள் ஏறி அமர்ந்ததும், உடனே அங்கிருந்து கார் புறப்பட்டது திரையரங்கை நோக்கி.


காரில் அமர்ந்ததும், ஆரவ்விற்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை காதுக்கு கொடுத்தவன் தான், வழியெங்கும் பேசிக்கொண்டே வந்தான்.

அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவோ, அவனிடம் தான் வரவில்லை என்று கூற, முயற்சிக்க, எங்கே அவன் இவளை கண்டுகொண்டாலும், இவள் புறம் திரும்பவே இல்லையே!!


கண்ணாடி வழியாக இருவரையும் பார்த்த ஹரி, நமட்டு சிரிப்புடன்  வண்டியை செலுத்தினான். போனை அணைத்து விட்டு, அவள் புறம் திரும்பியதும், அமிர்தாவோ,


“சார் . நா.. ன்” என ஆரம்பித்த உடனே, 


“ஹரி, தியேட்டர் பேக் சைட்லையே வண்டியை பார்க் பண்ணிடு” என கூற, அப்பொழுது தான் சுற்றுப்புறத்தையே பார்த்தாள் அமிர்தா. திரையரங்கமே வந்துவிட்டு இருந்தது.


ஹரி, காரை நிறுத்தியதும், காரில் இருந்து இறங்கிய ஆரவ்விற்கு, திரையரங்கின் உரிமையாளர் அங்கேயே வந்து அவனுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க, அதனை இன்முகத்துடன் வாங்கி கொண்டவன்,  எப்பொழுதும் போல தனது இடது மார்பில் வலது கையை வைத்து அவர்களது வரவேற்பை ஏற்று கொண்டான்.


“வாங்க சார்,” என அவனை உள்ளே அழைக்க, உடன் இருந்த அமிர்தாவையும் 


“வாங்க மேடம்” என மிகுந்த மரியாதையுடன் அழைத்ததும், அவளுக்கோ படப்படப்பாக வந்தது. பயத்தில் சட்டென்று, ஆரவ்வின் முழங்கையினை தன் இரு கைகளாலும் பற்றி கொண்டாள். 


இதுபோல் எல்லாம் இதற்கு முன் பழக்க படாதவள், இப்படி திடுமென நடக்கவும், பயந்து போய், ஆரவ்வை பிடித்து கொண்டாள். அவன் பின்னே ஒதுங்கி கொள்ள, ஆரவ்வோ அவளையும், அவள் கைகளையும் பார்த்து லேசாக புன்னகைத்து கொண்டான்.


ஆரவ்வும், அமிர்தாவும் முன்னோக்கி நடக்க, ஹரியோ அங்கேயே பின் தங்கினான். ஹரி உடன் வராததை கவனித்த ஆரவ்,


“ஹரி, நீ வரல?”


“இல்ல சார். நீங்க போங்க. நான் இங்கேயே இருக்கேன்”


என ஹரி அமிர்தாவை கண் காட்ட, ஆரவ்வோ சிரித்து கொண்டே


“தேங்க்ஸ் ஹரி” என வாயசைத்து விட்டு அமிர்தாவுடன் முன்னோக்கி நடந்தான். அர்ஜுனனுக்கு ஏத்த சாரதி ஆயிற்றே அவன்!!


 திரைப்படம் வெளியிடப்படும் இடத்திற்கு நுழையும் சமயம் ஆரவ்வோ, முகமூடி மற்றும் தொப்பியை அணிந்து, தன் முகத்தை ஓரளவிற்கு மறைத்து கொண்டான்.


நிர்வாகம் அவனுக்கு கடைசி இருக்கையை ஒதுக்கி இருக்க, அதில் அமிர்தாவுடன் சென்று அமர்ந்து கொண்டான். அவ்வளவாக வெளிச்சம் இல்லாததால், அங்கிருந்தவர்களால் அவனை அடையாளம் காண முடியவில்லை. 


ரசிகர்ளோடு, ரசிகனாக அவன் இயக்கிய படத்தை, அவன் மனத்திற்கினியவளோடு பார்ப்பது என்பது அத்தனை நிறைவை தந்தது ஆரவ்ஜெயந்தனுக்கு.


அமிர்தா, பயந்து போய் இருக்கையின் முனையில் அமர்ந்து சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருக்க ஆரவ்வோ,


“ரிலாக்ஸ் அமிர்தா. எதுக்கு இவ்வளவு டென்ஷன்? படம் இப்போ போட்டுடுவாங்க. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”


என அவளை நிதானப்படுத்த, அந்நேரம் திரைப்படமும் ஆரம்பமானது.


ரசிகர்களின் ஆரவாரத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. திரையரங்கு முழுவதும் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகமா இருக்க, அனைத்தையும் அதிசயமாக பார்த்தாள் அமிர்தா.


அது ஒரு அழகான காதல் படம், உணர்ச்சி பூர்வமாக ஒவ்வொரு காட்சியையும் அவன் உருவாக்கி இருக்க, அதனை கண்டு கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதில் லயித்து போயினர் என்று சொல்வதை விட அதனுள்ளே வாழ்ந்து கொண்டிருந்தனர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அவனின் படைப்பு.


வெகு நாட்களாக நாயகியின் மீது காதலை கொண்ட நாயகன்,  இத்தனை நாள் பூட்டி வைத்திருந்த தன் ஒட்டுமொத்த காதலையையும் உள்ளார்ந்து, உணர்வு பூர்வமாக தெரிவிக்க, அவனின் அந்த உண்மை காதலை நாயகி ஏற்றுக்கொள்வாளா? மாட்டாளா? என்ற உணர்வு போராட்டம் அங்கே காட்சி படுத்தப்பட்டிருந்தது. 


அரங்கில் நிறைந்திருந்த அனைவரும் ஒருவித மோனநிலையிலேயே வைத்த கண் எடுக்காமல் அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தனர்.


அனைவரது வேண்டுதலும், நாயகனின் காதலை நாயகி ஏற்று கொள்ள வேண்டும் என்பதாக தான் இருந்தது. சிறிது இடைவெளிக்கு பின், நாயகி அவனின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டேன் என்பது போல் மொழியில்லா பாவனைகளில் வெளிப்படுத்த, அதற்கு கதாநாயகன் காட்டிய சந்தோஷமிகு உணர்வுகள், என அனைத்தும் அவர்களது விழிமொழிகளே பேசி கொள்ளும் படி  அத்தனை தத்துரூபமாக காட்சியமைக்கப்பட அந்நேரம் அரங்கமே அதிர்ந்தது ரசிகர்களின் ஆரவாத்தினால்.


இருவரும் இணைந்த அந்த தருணம், ரசிகர்கள் அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. தங்களது மகிழ்ச்சியை, அவர்கள் எழுந்து நின்று, கைதட்டி அதனை உருவாக்கிய கலைஞனனுக்கு மரியாதை செய்ய, இதனை எல்லாம், ரசிகர்களோடு ரசிகனாக, அரங்கின் ஓரத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த ஆரவ்விற்கோ உள்ளம் நிறைந்து போனது.


தனது உள்ளத்து மகிழ்ச்சியை தனக்குள் உட்புகுத்தி கொண்டவன் மெல்ல தன் இதயத்தை வலதுகை வைத்து தட்டி கொடுத்தான். அவன் எதிர்பார்த்த தருணம் இதுதானே!! ரசிகர்களின் பாராட்டை தவிர பெரிய விருது என்ன இருக்கிறது? ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பதே அவனுக்கு பெருத்த மகிழ்ச்சி.


அவன் அருகில் அமர்ந்திருந்தவளோ, சுற்றி இருந்த அனைவரது  ஆரவாரத்தையும் பார்த்து  பூரித்து போனாள்.


அவன் புறம் திரும்பாமலே தன்னை மறந்து, சட்டென்று அவன் கைகளை பற்றி,


"சார், சார், உங்களை தான் எல்லாரும் பாராட்டுறாங்க. பாருங்களேன் இந்த சீனுக்கு எவ்வளவு கைத்தட்டல், விசில்னு"


என்று ஆரவாரமாக கூற, அவனும் சுற்றும் பார்த்துவிட்டு அமைதியாக அவள் பிடித்திருந்த கையை தான் பார்த்து கொண்டிருந்தான். காதலின் ஒவ்வொரு  க்ஷணமும் போற்றி பொத்தி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் அல்லவோ!! அவனும் அவனோடு அவள் இருக்கும் இந்த ஒவ்வொரு கணத்தையும் தனுக்குள் பொத்தி பொக்கிஷமாய் சேமித்து வைத்து கொண்டான்.


அவனிடமிருந்து எந்தவித எதிர்வினையும் வராமல் போக அவன் புறம் திரும்பியவள்,


"சார், உங்க கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன். இந்த படத்தை நீங்க தானே டைரக்ட்  பண்ணது. யாரோ பண்ணது போல அமைதியாக இருக்கீங்க?"


அவனின் அமைதியாய் கண்டு பொறுக்க முடியாமல் அமிர்தா கேட்க, 


"பெயர் போடும் போது எழுத்து-இயக்கம்ன்னு என் பெயர் தானே போட்டாங்க. அதை பார்த்த பின்னாடியும் உனக்கு டபுட் வருதா என்ன?"

என சின்ன சிரிப்புடன், அமைதியாக பதில் கூறியவனை கண்டு அவளோ வியந்து பார்த்தாள்.


எப்படி இவரால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது? என்று அவள் நினையாத நாளில்லை. இப்பொழுதும் அவளுக்கு அது தான் தோன்றியது. எத்தனை பேர் பாராட்டினாலும், எவ்வளவு பெரிய விருது கிடைத்தாலும் அவனிடம் காணப்படும் இந்த தன்னடக்கம் என்றும் போல் இன்றும் அவளுக்கு வியப்பை தந்தது என்பதே உண்மை.


மேலும் அவனிடம் எதுவும் கேட்காமல் திரைப்படத்தில் அவள் கவனம் செலுத்த, திரைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தவளை கண்டவனுக்கோ சற்று படப்படப்பாக வந்தது.


எத்தனையோ காதல் காட்சிகளை படமாக எடுத்திருக்கிறான். எப்படியோ வித விதமாக காதலை கூறும் காட்சிகள் எழுதி இருக்கிறான். இன்று அவனுடைய காதலை கூற, அவனுக்கு ஒருவழி தெரியவில்லை. 


இத்தனை நாட்களாக மனதில் பூட்டி வைத்திருந்த காதலை இன்று அவளிடம் எப்படியும் கூறிவிட வேண்டும் என்ற முனைப்புடன், 


“அமிர்தா” என்று அத்தனை காதலுடன் அழைக்க, அதன் பேதம் உணராது, அவளும்


"சொல்லுங்க சார்" என்றாள் அவன் புறம் திரும்பாமலே. 


அவள் ஆர்வமாக திரைப்படத்தை 

பார்த்து கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது. 


"உன் கிட்ட ஒன்னு கேட்கணும் அமிர்தா. இந்த பிலிம்ல வந்தது போல, உனக்கும், யாராவது ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்களா?"


என்று கேட்டதும், அவளுக்கோ முதலில் ஒன்றும் புரியவில்லை. தற்பொழுது அவன் புறம் நன்கு திரும்பி அமர்ந்தவள்,


"என்ன? என்ன சார் கேட்டீங்க?" என்று கேட்க, அவனோ,


"உனக்கும் இது போல லவ் ப்ரொபோசல் வந்து இருக்கான்னு கேட்டேன்"


என அவன் தெளிவாக கேட்டதும், ஒரு நொடி அவளது முகம் பழையதை நினைத்து கசங்கியது. இருந்தும் சட்டென்று தன்னை மீட்டு கொண்டவள்,


"என்ன சார் நீங்க? என்கிட்ட போய் இப்படி கேட்கிறீங்க?  என்னையெல்லாம் யார் லவ் பண்ணுவா?"

என அவள் விரக்தி புன்னைகையுடன் கூற, அவனோ,


"ஏன்? உனக்கென்ன குறை. ஏன் இப்படி சொல்ற அமிர்தா?"


என்று கேட்டான் அவளின் முகத்தை ஆழ பார்த்துக்கொண்டே.


"சார், இப்படி கேட்டா என்ன சொல்றது? குறையோட மொத்த உருவமே நான் தானே!! லவ் பண்றதுக்கான அடிப்படை தகுதி கூட என்கிட்ட இல்லை. அப்புறம் எப்படி ப்ரொபோசல் வரும்?


முதல் தகுதி அழகா இருக்கணும். அது என்கிட்ட இல்லைனு எனக்கே தெரியும். நான் தான் தினமும் கண்ணாடி பார்க்கிறேனே!!

என்றவள் மேலும்,


“படிச்சு இருக்கணும், அதுவும் எனக்கில்லை. குறைந்தபட்சம் காசு, பணம், நல்ல குடும்பம் இதெல்லாம் இருக்கணும். இது எதுவுமே என்கிட்ட சுத்தமா இல்லை அப்புறம் யார் என்னை போய் லவ் பண்ணுவா?”

என இலகுவாக பதில் கூறினாள்.


"ஒருவேளை என்னை லவ் பண்ணனும்னா, போனால் போதுன்னு பிச்சைக்காரனும், குப்பை பொறுக்கிறவனும் தான் பண்ணுவாங்க போல. அவங்க கூட சந்தேகம் தான்”


என்று தன்னை மீறி இயல்பு போல் சிரிப்புடன் கூறியவள், மீண்டும் படத்தை பார்க்க திரும்பி கொண்டாள்.


"ஏன் உன்னை லவ் பண்ண, பிச்சைக்காரனும், குப்பை பொறுக்கிறவனும் தான் வரணுமா என்ன? இந்த டைரக்டர் லவ் பண்ணா அக்ஸப்ட் பண்ணிக்க மாட்டியா?"


என்று, தன் காதலை  அழகாக அவளிடம் பட்டென்று கூறிவிட, அவன் கூறியது அவள் மூளைக்கு எட்டவே சில நொடிகள் தேவைப்பட்டது. புரிந்த விஷயம் அத்தனை உவப்பானதாக இல்லாமல் இருக்க, அதில் அவனை  அதிர்வுடன் திரும்பி பார்க்க, அவள் முன் அவனின் வதனம் வெகு அருகில் தெரிந்தது. அதுவும் அதில் அவள் மீதான காதல் மட்டுமே நிறைந்து காணப்பட, அவளோ உள்ளுக்குள் தவித்து போனாள்.


நிச்சயம் ஆரவ் இப்படி கூறுவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதயம் எல்லாம் அதிர்ந்தது அவளுக்கு. கை, கால்கள் எல்லாம் சில்லிட்டது போனது. உறைந்து போய் இமை கூட சிமிட்டாமல், அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருக்க, ஆரவ்வோ, அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தப்படி, அவளது கைகளை பற்றி உயர்த்தி காட்ட, அந்த இருளில் ஒளிர்ந்த திரையின் வெளிச்சம் அவள் விரல்களில் பட்டு தெறிக்க, அந்த கதிர்களை குனிந்து பார்த்தாள் அமிர்தா.அவனின் காதல் சின்னம் ஓய்யரமாக, அவள் விரல்களில் மிளிர்ந்து கொண்டிருந்தது.


“நிறைய பேசணும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வந்தேன். பட் இந்த நொடி என்னால் எதையும் வாய் வார்தையா சொல்ல முடியல. அதனால் எல்லாத்தையும் உன்கூட வாழ்ந்து காட்ட ஆசைப்படுறேன்.  என் ஆசையை நிறைவேத்தி வைக்கிறியா!! என்னோட வாழ்க்கையில் எல்லாமுமா நீ இருக்கணும். அதுக்கு என் வாழ்க்கை முழுக்க நீ வேணும். எனக்கு வாழ்க்கை கொடுக்கிறியா அமிர்தா?!!  உன்னோட என் வாழ்க்கை இருந்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். உன்னை சந்தோஷமா பார்த்துகவும் செய்வேன்.


இப்போ தியேட்டர் உள்ள நுழையும் போது, பயத்தில் என் கையை பிடிச்ச, இப்போ மட்டுமில்ல எப்போ உனக்கு பயம் வருதோ, ஒரு ஆறுதல் தேவைப்படுதோ, அப்போதெல்லாம் இப்படி தான் உன்னையும் மீறி பண்ணி இருக்க?  நீ சுயநினைவில்லாத போது கூட!!


அந்த நம்பிக்கையை, அந்த ஆறுதலை, அந்த அரவணைப்பை, அந்த சந்தோஷத்தை, என் ஒட்டுமொத்த காதலால் எப்போதும் உனக்கு தருவேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோ அமிர்தா.


“ஐ லவ் யூ” என தன் மனதில் உள்ளதை மறையாமல் அத்தனை காதலாக, உள்ளார்ந்து உணர்வு பூர்வமாக கூறினான் ஆரவ்ஜெயந்தன். 


அவன் ஒவ்வொரு வார்த்தையாக கூற கூற, உள்ளுக்குள் ஒரு பெரிய பூகம்பமே வெடித்து சிதறியது அவளுக்குள். காதலிக்கும் நிலையிலா அவள் உள்ளாள். யாரையும் காதலிக்கும் தகுதியும் இல்லை. யார் காதலையும் ஏற்றுக்கொள்ளும் தகுயதியும் அவளுக்கு இல்லையே!! அப்படி தானே நினைத்து வாழ்த்து கொண்டிருக்கிறாள்.


இப்படி திடுமென காதலை கூறினால், அதுவும் எத்தனை செல்வாக்கு உடையவன், ஊர் போற்றும் உயரத்தில் இருப்பவன், அவன் போய் தன்னை காதலிப்பதாக கூறினால், அவளின் நிலையை சொல்லவும் வேண்டுமோ!!


அமிர்தாவிற்கு கண்களில் நீர் கோர்த்தது. அவனையே பார்த்து கொண்டிருந்தவள், மறுப்பு தெரிவிக்க வேண்டி,


“இல்….லை, நா….ன்” என எதையோ ஆரம்பிக்க,


“தயவுசெய்து, நான் உங்களை அப்படியெல்லாம் நினைக்கல, என் மனசில் உங்க மேலே காதல் இல்ல. என்னால் உங்க காதலை ஏத்துக்க முடியாது. அப்படி இப்படின்னு ஏதாவது பொய் சொன்ன அவ்வளவு தான். நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரியும். உன் மனசிலும் நான் இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.


என்று அவள் மனதில் இருப்பதையும் மறையாமல் கூறியதும், சடாரென்று அவள் கண்ணில் இருந்த வழிந்த கண்ணீர், அவன் அணிவித்திருந்த மோதிரத்தில் பட்டு தெறித்தது.




எத்தனை மேற்கூரை போட்டாலும்

அத்தனையையும் 

தவிர்த்து விட்டு

மழை மண்ணோடு தானே

கலக்கிறது

அது போல தான்,

உன் அத்தனை விலகளையும்

தவிர்த்து விட்டு

உன்னோடு நான் கலப்பதில்

தவறு என்ன இருக்கிறது?


பிடிக்கும்..









 















Comments