UNEP-13

  அத்தியாயம்…13



                பெரும் போர்களத்தையும், அதைவிட பெரும் அமைதியையும் ஒரு சேர கொண்டிருப்பதை போல் கலவையான உணர்வுகளில் தத்தளித்து கொண்டிருந்தாள் அமிர்தா. கொஞ்ச நாளாகவே ஆரவ்வின் மீது வந்த ஈர்ப்பை அவன் புரிந்து கொண்டானே என்ற நிம்மதியா? இல்லை, அவனுக்கும் தன் மீது காதல் உள்ளதே எப்படி? என்ற கலவரமா? இரண்டுமே அவளை ஒருசேர ஆட்டுவித்தது.


அவளுக்கென்று இருந்த சிறிய மனதில், கொஞ்சமே கொஞ்சமாய் உருவான நம்பிக்கையில், அதனால் மலர்ந்த காதலை கூண்டிற்குள் அடைத்து, வலிக்க,வலிக்க மருந்தினை செலுத்தி, பின் விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காது, பரிசோதனை எலியாய், சோதனைக்குட்படுத்தப்பட்ட வலி இன்னமும் அவள் மனதில் ஒரு ஓரமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 


அதனால் தான், மரித்து போன மனதுடன் உயிருள்ள பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


ஆனால், அதனை, உயிர்ப்பித்து உறவாக்கும் முயற்சியில் ஆரவ் இறங்கினால் எங்கனம் அவளால் ஏற்றுக்கொள்ள முடியும். மீண்டும் தம்மை பரிசோதனை எலியாக்கி விட்டால் என்ன செய்வது? மீண்டுமொரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி உண்டா அவளுக்கு? அந்த பயம் கொஞ்சம் இல்லை நிறையவே கொட்டி கிடக்கிறது அவள் மனதில். 


ஆரவ் மீது நம்பிக்கை இருக்கிறது தான், ஆனால் அவன் தன் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்பதெல்லாம்  இல்லையே !! அந்த அளவிற்கு எல்லாம் அவள் யோசிக்கவே இல்லையே!!


கடைசியாக அவன் சொன்ன வார்த்தைகள், உனக்கும் என் மீது காதல் இருக்கு, அதை இல்லைன்னு பொய் சொல்லாதே! என்பது. எப்படி தெரியும் அவனுக்கு? நான் தான் யாரிடமும் சொல்லவில்லையே !! ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் கூட வெளிக்காட்டியது இல்லையே அப்புறம் எப்படி கண்டு பிடித்தான்?


கேள்விகளும், அதற்கு இணையான பதில்களும் ஒரு சேர தோன்றியது அவளுக்குள். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. கிடைத்த பதில்களுக்கு சரியான கேள்விகள் இல்லை. யோசித்து யோசித்து குழப்பம் மட்டும் தான் மிஞ்சியது.


வான்மகளின் வட்டநிலா, அவளை போலவே அரை உயிராய் வானில் வலம் வந்து கொண்டிருக்க, அதனை வெறித்து பார்த்து கொண்டிருந்தவளின் சிந்தனை தான் இவையனைத்தும்.


கையில் அவன் அணிவிருந்திருந்த மோதிரம் வேறு அவளிடம் அவன் காதலை அடிக்கடி கூறிக் கொண்டிருக்க, தவிர்க்க நினைத்தாலும் பார்க்காமல்  இருக்க முடியவில்லை அவளால்.


திரையரங்கில் வைத்து அவன் கூறிய அத்தனையும் ஒரு இமியளவு கூட மாறாது இன்னமும் அவள் காதுகளில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது.


“அமிர்தா, நீதான்..., நீ மட்டும் தான்... அவ்வளவு தான் என் காதல்," என ஒற்றை வாக்கியத்தில், அவனுக்கு எல்லாம் அவள்தான் என்று கூறியவனிடம் என்ன தான் மறுப்பு  சொல்ல முடியும்?


“நீயும் என்னை காதலிக்கிறன்ணு எனக்கு தெரியும், இல்லைன்னு பொய் சொல்லாதே,” என்னும் போதே வழிந்த கண்ணீரை சட்டென்று கை நீட்டி துடைத்து விட்டவன், 


“அழாதே!!, நான் கூட இருக்கிற வரை நீ எதுக்கும் அழ கூடாது. இப்போ என்ன? நான் உன்னை லவ் பண்றேன் தானே சொன்னேன் அதுக்கு போய் யாராவது அழுவாங்களா? திரும்ப நீயும் ஐ லவ் யூ சொல்லிடு. இல்லைன்னா எப்போ கல்யாணம் வச்சுக்கலாம் கேளு. அதை விட்டுட்டு ஏன் அழுதுட்டு இருக்க!!”


என கண்டிப்புடன் கூறிய அக்கறையை கண்டவளுக்கு இன்னும் இன்னும் அவன் மீதான நேசம் அதிகரிக்கவே செய்தது. தன் உள்ளத்து உணர்வுகளை, வெளிகாட்டாது அவனையே பார்த்து கொண்டிருக்க, ஆரவ்வோ,


“படம் முடிஞ்சு போச்சு. போலாமா?" என்று கேட்டதும் தான் அமிர்தா சுற்றமே உணர்ந்தாள். சுற்றி பார்க்க, ஒருவர் கூட திரையரங்கில் இல்லை. படம் முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கே சென்று இருக்க கூடும் போல.


சட்டென்று அவன் கைகளில் இருந்து தன் கையை உருவி கொண்டவள், வேகமாக எழுந்து அங்கிருந்து வெளியேறினாள்.


வாசல்வரை சென்றவளை, 


“அமிர்தா நில்லு” என்ற ஆரவ்வின் குரல் அவள் நடையை தடை செய்தது.


அவளருகில் வந்தவன், அவளை தன் புறம் திரும்பி, வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை அழுந்த துடைத்து விட்டவன்,


“இப்போ தானே சொன்னேன், அழக் கூடாதுன்னு. இப்படியே வெளியே போன, எல்லாரும் என்னை தான் தப்பா சொல்வாங்க. ஓகேன்னா அப்படியே போ”

என்றவன் அப்படியே நிற்க, அவன் கூற வரும் விஷயம் அவளுக்கு புரிந்தது. சட்டென்று முகத்தை துப்பட்டவால் துடைத்து. கொண்டவள், அமைதியாக வெளியேற, உடன் அவனும் அவளுடன் நடந்தான்.


இதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. சின்ன சிரிப்புடன் அவளுடன்  வெளியே வர, திரையரங்கு உரிமையாளர், அவர்களை வழியனுப்ப அவ்விடம் வந்தார்.


அவரை கண்டதும் அவளுக்கோ மீண்டும் பயம் தொற்றி கொள்ள, ஆரவ்வின் கையை சட்டென்று பிடித்து கொண்டாள். தற்பொழுதும் அவன் அவளை திரும்பி பார்த்தான். முன்பு அதை கவனியாதவள் தற்பொழுது அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தாள்.


சட்டென்று கைகளை விலக்கி கொண்டவள், நிமிர்ந்து அவனை பார்க்கவே இல்லை. இருவரும் காரின் அருகில் வந்ததும், ஹரி, காரின் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு,


"சார் எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. நீங்க அமிர்தாவை டிராப் பண்ணிடுங்க" என்று ஆரவ் மனமறிந்து அவன் நகர்ந்து கொள்ள, மீண்டும் அவனிடம் நன்றி கூறினான் ஆரவ்ஜெயந்தன்.


இருவரின் பயணமும் அமைதியாக கழிந்தது. சுற்றுப்புறம் எதுவும் அமிர்தாவின் கருத்தை நிறைக்கவில்லை. முழுக்க முழுக்க ஆரவ் வார்த்தைகளே தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆரவ்வோ அமிர்தாவின் அசைவுகளை தான் கவனித்து கொண்டே வந்தான்.


அவனுக்கு அவள் நிலை புரிந்தது, ஒரு சுடிதார் வாங்கி கொடுத்ததற்கே, அத்தனை பேசினாள். அவளிடம் சென்று காதலை கூறினால், இப்படி இல்லாது இருந்தால் தான் அதிசயம்.  அவள் வீட்டு தெருவின் ஓரம் காரை நிறுத்தி விட்டு அவளை பார்க்க, வீடு வந்தது கூட தெரியாமல் தன் யோசனையிலேயே அமர்ந்து இருந்தாள்.


"அமிர்தா" என அவன் அழைத்ததும், அதில் திடுக்கிட்டு அவள் பார்க்க, அவனோ பெருமூச்சுடன்,


"உன்னை கூப்பிட தானே செஞ்சேன். அதுக்கு எதுக்கு இப்படி பயப்படுற?" என்றதும் அவளோ தலையை குனிந்து கொண்டாள்.


"என்னை பார்த்தா அவ்வளவு டெரராவா இருக்கு. நான் நல்லா இல்லையா? உன் அளவுக்கு அழகு இல்லை தான். ஆனாலும் ஏதோ பார்க்கிற மாதிரி இருக்கேன்ல. என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதா?"


என கண்ணாடியில் தன்னை பார்த்தப்படி கேட்க, அமிர்தாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் தான் அவன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் வெளிவரவே இல்லையே!! 


அமைதியாக காரை விட்டு இறங்க போனவளிடம், 


"அமிர்தா, சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடு. அம்மா உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க"


என்று வேறு கூறி அவளை நிலைகுலைய வைத்து விட்டே அவளிடமிருந்து விடைபெற்று கொண்டான்.


அப்பொழுது வந்து அமர்ந்தவள் தான். இன்னும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, மனம் முழுவதும் ஆரவ்வின் முகமே ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. செவிகள் அவன் கூறிய வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தது. 


பள்ளியில் இருந்து வந்த அஞ்சலி, அமிர்தாவை காண, அவள் முகமோ வாட்டமாக இருப்பதை கண்டு அவளிடம் கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்று கூறிவிடவே தொந்தரவு செய்யாது விட்டுவிட்டாள். ஆனால் இவ்வளவு நேரம் ஆகியும் அவள் அப்படியே இருப்பதை கண்டு, அஞ்சலிக்கோ யோசனையாக இருந்தது.


அவள் அருகில் சென்று, அவளை தொட, அதில் திரும்பி பார்த்தவள் முகம் கண்ணீரால் நிறைந்து இருந்தது.


அதனை கண்டு அதிர்ந்த அஞ்சலி,


“என்ன? என்னவாயிற்று?” என்று பதற,


அவளோ, தங்கையிடம் ஆரவ் அணிவித்த மோதிரத்தை காட்டினாள். அஞ்சலி புரியாமல் அதனை பார்க்க,


“இதை ஆரவ் சார் போட்டு, அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் சொல்றார் அஞ்சலி. எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன் இப்படி? எதனால்னு  எதுவும் விளங்கல.


அவர் எவ்வளவு உயரம். நானெல்லாம் அவர் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்லாதவ. என்னை போய்”


என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் தான் வந்தது. அதனை அவரசரமாக துடைத்து விட்ட அஞ்சலி,


“நீ என்ன முடிவு எடுத்திருக்க கா”  என செய்கையில் கேட்க, 


“எல்லாருக்கும் நல்லதான ஒரே முடிவு, அவர் ஆசைப்படுறது நடக்காது என்பது தான்.


நான் அன்னைக்கு சந்தோஷ் பத்தி இனி பேசாதே சொன்னேன்ல, அது எதனால் உனக்கு தெரியுமா?”


என அஞ்சலியிடம் கேட்க, அவளோ தெரியாது என தலையை ஆட்டினாள்.


அன்று சந்தோஷ் நடந்து கொண்டதையும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட ஆபத்தையும், அதன் பின் ஆரவ் காப்பற்றியதையும், அவள் தற்கொலைக்கு முயன்றதையும், அப்பொழுதும் ஆரவ் காப்பாற்றியதையும் கூறி முடிக்க, அஞ்சலி கதறலுடன், அவளை அணைத்து கொண்டாள்.


தமக்கைக்கு தான் எத்தனை துயரம்? அனைத்து வலிகளையும் உள்ளே வைத்து கொண்டு, வெளியே சாதரணமாக நடமாடுவது என்பது எத்தனை வேதனையான விஷயம், தினம் தினம் அனுபவித்து இருக்கிறாளே என்று அஞ்சலி, அமிர்தாவை எண்ணி கதறினாள்.


அவளை அணைத்து கொண்ட அமிர்தா,


“அது அப்போ அஞ்சலி. இப்போ சந்தோஷ் என்ற ஒருத்தனையே நான் மறந்துட்டேன். ஆனால் அவன் கொடுத்துட்டு போன ஏமாற்றத்தோட வலி இன்னும் இருக்கும் தானே!! எனக்கு இருக்கு!!


ஆரவ் சார் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் நல்லவர் தான். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கார். அவரால் தான் நாம இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம் எல்லாம் சரி தான், ஆனால், அதுக்காக அவரை நான் கல்யாணம்லாம், நினைச்சு கூட பார்க்க முடியல. அவரோட அஸ்தந்து, புகழ், வசதி எல்லாமே ரொம்ப ரொம்ப உயரம். அவருக்கு பொண்ணு கொடுக்க, பெரிய இடத்தில் இருந்து வருவாங்க. ஆனால் நான், நம்ம நிலைமை எப்படி இருக்கு? அதுவும் நம்ம அம்மா பத்தி தெரிஞ்சா அவ்வளவு தான். இதெல்லாம் வேண்டாம். நாளைக்கு அவரை பார்த்து பேசிடனும். வேலையை விடமுடியாது. போய் தான் ஆகணும். இருந்தாலும் நான் சொன்னா அவர் புரிஞ்சுப்பார் நினைகிறேன்.. இல்லைனா வேலையை விட்டுட்டு வேற வேலை தான் தேடனும்”


என முடிவெடுத்தவளாக முகத்தை அழுந்த துடைத்து கொண்டு திடமாக கூறினாள். அஞ்சலி அவள் முகத்தையே யோசனையாக பார்த்து கொண்டிருக்க,


“என்ன அஞ்சலி?” என்று கேட்டாள். அமிர்தா.


“நான் கேட்கிறேனு தப்பா நினைக்காதே, உனக்கு ஆரவ் சாரை பிடிச்சு இருக்கா?” என்று சைகையில் கேட்டதும், அவளுள்ளே ஓர்                                          அதிர்வு.


அவளை திகைப்புடன் அமிர்தா பார்க்க, அஞ்சலியோ,


"இல்ல, அவர் காதலை ஏத்துக்க முடியாதுன்னு ஏதேதோ காரணம் சொன்ன, ஆனால் உனக்கு பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே அதான் கேட்டேன்" 


என்றதும், அமிர்தாவோ அசையாமல் அவளை பார்த்தாள். அவள் சொல்வதும் உண்மை தானே, படிப்பு, பணம், அந்தஸ்து என்று ஆரவ்வின்  காதலை ஏற்று கொள்ள கூடாது என்று காரணங்களை அடுக்கினாலும், அவனை பிடிக்காமல் இல்லையே!! மனதில் துளிர்விட்ட நேசம் அவனுக்கும் தன் மீது இருக்கிறது என்றதும் பூத்து குலுங்க தான் செய்தது.


ஆனால், அதை ஏற்று கொள்ளும் நிலையில் அவளில்லை என்பது தான் உண்மை.


“கேட்கணும் தோணுச்சு, அதான் கேட்டேன். மத்தப்படி  நீ என்ன முடிவு எடுகிறியோ அது தான் கா. ஒரு வேளை என்னை யோசிச்சு ஏதாவது முடிவெடுக்கிறன்னா, அது வேண்டாம் கா. எனக்கான தான் இவ்வளவு காலம் வாழ்ந்து இருக்க, இனியும் எனக்காகவே வாழ்ந்து உன் வாழ்க்கையை அழிச்சுகாதே!!”


என ஒவ்வொரு வரியையும், பொறுமையாக சைகையில் கூறியவளை கண்டு மனம் வெதும்பி போனாள் அமிர்தா.


“ஏன் டி இப்படியெல்லாம் பேசுற நீ. என் வாழ்க்கையே உனக்காக தான், அதை நீயே வேண்டாம் சொன்னாலும் என்னால் மாத்திக்க முடியாது. என் குழந்தை டி நீ, உன்னை எப்படி விட்டு கொடுப்பேன் நான். இதை பத்தி எதுவும் யோசிக்காமல் நீ படிப்பில் கவனம் செலுத்து, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்”


என கூறியவள், மீண்டும் யோசனைக்கு சென்று விட்டாள். அந்நேரம் சரியாக ஆரவ் அழைத்தான் அஞ்சலியின் அலைபேசிக்கு.


இருவரும், அலைபேசியின் சத்தத்தில் திரும்பி பார்க்க, அஞ்சலியோ, அழைத்தது ஆரவ் என்றதும், திகைத்து அலைபேசியை அமிர்தாவிடம் காட்டினாள்.


எதற்கு அஞ்சலிக்கு அழைத்தான்? என்று யோசிக்கும் போதே, அஞ்சலி அவனின் அழைப்பை உயிர்ப்பித்து இருந்தாள். அவனோ வீடியோ காலில் அழைத்திருக்க, அஞ்சலி திரையில் தோன்றியதும், புன்னகை முகமாக,


“ஹாய் அஞ்சலி, எப்படி இருக்க?” என்று கேட்க, அவளும் அமிர்தாவை பார்த்து விட்டு


“நல்ல இருக்கேன்” என்று சைகை செய்தாள்.


“ஸ்டடீஸ் எப்படி போது? நல்ல படிக்கணும், இப்போ நீ பிளஸ்டூல. நல்ல மார்க் எடு, பிடிச்ச கோர்ஸ் நான் படிக்க வைக்கிறேன்”


என்றவனுக்கு சரியென்று தலையாட்டினாள்.


“என்ன உன் அக்கா, நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டாளா? வந்ததிலிருந்து அழுத்துட்டே இருந்து இருப்பாளே?!! அவ அழுதாலே எனக்கு பிடிக்கல. அதான் உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்.


நான் உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறேன். அதை அவகிட்ட சொல்லிட்டேன். இருந்தாலும் உன்கிட்டயும் சொல்லணும்ல, உன் அக்காக்கு நீன்னா உயிர் ஆச்சே!! அமிர்தா எங்க வீட்டுக்கு வந்துட்டா, நீ தனியா இருக்கணும்னு அவசியம் இல்லை. நீயும் என்கூடவே இருக்கலாம். இருக்கணும். 


அமிர்தாவுக்கு தங்கச்சின்னா, எனக்கும் நீ தங்கச்சி தான். எனக்குன்னு கூட பிறந்தவங்க யாருமில்லை. அமிர்தா மூலமா தங்கச்சினு ஒரு பந்தம் கிடைகிறத்தில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்.


அப்புறம், என்னை பிடிச்சு இருக்கா, உன் அக்காக்கு ஏத்த மாப்பிள்ளையா இருக்கேனா நான். இல்லைனாலும் பரவாயில்லை. என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லு. உன் அக்கா இல்லாமல் இந்த வாழ்க்கையை என்னால் வாழவே முடியாது. 


சும்மா அழுத்துட்டே இருக்காம, ஒழுங்கா சாப்பிட்டு தூங்க சொல்லு அவளை. நாளைக்கு கரெக்ட் டைம்க்கு ஆபீஸ்க்கு வந்துடனும். லேட்டா வந்தா, சம்பளத்தை பிடிச்சுடுவேனு சொல்லிடு.


நீயும் நல்ல சாப்பிட்டு, தூங்கு, உன் அக்காவை நினைச்சு வருத்தப்படாதே!! அவ என் பொறுப்பு. உன் அக்கா என்னை கல்யாணம் பண்றாளோ இல்லையோ, அதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். ஆனால் உனக்கு எப்போதும், அண்ணனா நான் இருப்பேன். ஓகே”


என படப்படவென பேசிக் கொண்டே போனவனை அதிசயமாக பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சலி.


அத்தனை உரிமையாய், அத்தனை புன்னகையோடு, நாமெல்லாம் ஒன்று என்ற சொந்ததோடு என்று  அவளிடம் பேசும் ஒருவனை இன்று தான் பார்க்கிறாள்.


அவளும் அமிர்தாவும் என்ற சிறிய கூட்டினுள் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு, சுற்றம் என்று யார் தான் இருக்கிறார்கள்? பள்ளியில் கூட தோழி என்று யாருமே இல்லையே! அவளுக்கு அமிர்தா துணை. அமிர்தாவிற்கு அவள் துணை. இப்படி தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.


அமிர்தாவிற்கு அடுத்து, அவளிடம் இத்தனை அன்பாக ஒருவர் பேசி இருக்கிறார் என்றால் அது ஆரவ் மட்டுமே!! ஏற்கனவே சின்ன சின்ன செயல்களால் அவன் மீது பெரும் மதிப்பு அவளுக்கு.


சொந்தமாக ட்ரஸ்ட் வைத்து நடத்தி வருகிறவன், அதன் மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கிறான். அது மட்டுமில்லாமல் வெளியே தெரியாது,  விளம்பரத்திற்கு என்று செய்யாது, பல பேருக்கு பல உதவிகளை வாரி வழங்குகின்றான் என்று அமிர்தா மூலம் அறிந்திருக்கிறாள்.


தான் பார்த்ததிலே, அத்தனை உயர்ந்த மனிதராக இருந்த ஆரவ் மீது அவளுக்கும் தனி மதிப்பு உண்டு. அவனே தன் அக்காவை பிடித்திருக்கிறது என்றதும், மனதிற்குள், அத்தனை சந்தோஷம் வரத்தான் செய்தது. அக்காவின் வாழ்க்கை அவனுடன் என்றால், அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவளின் உள்ளம் நினையாமல் இல்லை. ஆனால் தமக்கையின் முடிவு வேறாக இருக்க, அவளால் என்ன செய்ய முடியும்?


“ஓகே அஞ்சலி, நான் கால் கட் பண்றேன். உன் அக்காவை, இல்லை.., இல்லை என் பொண்டாட்டியை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது. சாப்பிட வை, கண்டிப்பா சாப்பிடாமல் தான் இருப்பா, அப்படியே தூங்கவும் வச்சுடு”


என ஆரவ் கூற, அஞ்சலியும் சரியென்று தலையாட்டினாள். ஆரவ் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அமிர்தாவிற்கு, உள்ளுக்குள் என்னவோ பிசைந்தது. இந்த அக்கறையும், அன்பும் வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்று ஆசைப்பட்டது மனம். அடுத்த நிமிடம் எதுவும் வேண்டாம் என்று புறக்கணிக்கவும் செய்தது.


உடனே, முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள், அஞ்சலியிடமிருந்து அலைபேசியை பிடுங்கி,


“இப்போ எதுக்கு அவ கிட்ட தேவையில்லாதது எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?”

என கோபமாக கேட்க, அவனோ நிதானமாக,


“ஹாய் மா” என்றான் அத்தனை காதலாக. 


அதிலே அவள் தடுமாறி போனாள். அடுத்து பேச அவளுக்கு வார்த்தையே வரவில்லை.


“போனை வைங்க,” என்று மட்டும் கூற, அவனோ


“ஓகே, ஐ லவ் யூ மா” என்று கூறிவிட்டு அலைபேசியை அணைக்க, அவளோ அலைபேசியையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.


மறுநாள், எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்பி வந்தவள் ஒரு முடிவாக ஆரவ்வை சந்திக்க அவன் அறைக்குள் நுழைய, அவனும்


“ஹாய் அமிர்தா, வா” என அவளை ஆரவாரமாக வரவேற்றான்.


“இதோ பாருங்க, இதெல்லாம் சரி வராது. என்னோட நிலைமை வேற, உங்களுக்கு நானெல்லாம் சரி வர மாட்டேன். யோசிச்சு தான் இந்த முடிவெத்தீங்களா நீங்க? என்னால் இன்னும் கூட நம்ப முடியல, நீங்க ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன், ஆனால் என்னை போய்...."


என்றவள் முடிக்க முடியாது தடுமாறி நிற்க, ஆரவ்வோ, அவளது பேச்சினை இமை வெட்டாமல் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.


அவள் பேசிக் கொண்டிருக்க அவன் பதிலேதும் சொல்லாது அமைதியாக இருப்பதை கண்டு, அவனை பார்த்தவள், அவனது பார்வையில் சில்லாக உடைந்து போனாள். அவன் விழிகளில் அத்தனை நேசம் வழிய, அவளால் அவளது பார்வையை திருப்பவே முடியவில்லை. 


“பேசி முடிச்சாச்சா, வேற ஏதாச்சும் சொல்லனுமா?”

என்ற கேட்டவனின் குரலில் தன்னை மீட்டு கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்க, 


“இதெல்லாம் மட்டும் தான் காரணமா? நீ என்னை வேண்டாம் சொல்றதுக்கு?”

என கேட்க,


“இன்னும் ஆயிரம் காரணம் இருக்கு சொல்லறதுக்கு” என்றவளிடம்,


“அப்படியா? எங்க சொல்லு கேட்போம்”

என்றான் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி, கேட்கும் ஆர்வத்துடன்.


என்ன சொல்வது என்று தெரியாது விழித்தவள்,


“சரி, நீங்க சொல்லுங்க, நான் தான் வேணும்னுன்றதுக்கு உங்ககிட்ட என்ன காரணம் இருக்கு?”

என கேட்க, அவனோ


“வெறும் ஆயிரம் காரணம் இல்லை, தினம், தினம் ஆயிரம் காரணத்தை உருவாக்கி கிட்டே இருக்க, இன்னும் இன்னும் உன்னை காதலிக்க வைக்க. எல்லாத்துக்கும் மூலக்காரணம், நீயும் என்னை காதலிக்கிற என்பது மட்டுமே!!”


என, நிறுத்தி நிதானமாய், அத்தனை தெளிவாக பதில் கூறினான். அவளுக்கிருந்த பதற்றம், பயம் எதுவும் அவனுக்கு இல்லை தான்!!


“சும்மா, இதையே சொல்லாதீங்க, நான் எப்போ உங்களை காதலிக்கிறேன் சொன்னேன். நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு பேசாதீங்க”

என்றவளுக்கு, அவள் காதலை அவன் உணர்ந்த தருணத்தை ஒவ்வொன்றாய் ஆரவ் கூற, முற்றும் முழுதாய் தோற்று போய் நின்றாள், அவன் மீதான அவளின் காதலின் முன்!!


யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காத

என் மனம்

உன்னிடம் மட்டும்

எதிர்பார்த்து, ஏக்கத்தோடு

காத்து நிற்கிறது

நின் காதலை வேண்டி!!

இந்த காதல் தான் எத்தனை விசித்திரமானது இல்லையா?!!


பிடிக்கும்…
































Comments