UNEP-6

 அத்தியாயம்..6


   சட்டென்று ஏஜே திரும்பி பார்த்ததும், அமிர்தாவின் கரங்கள் அவன் கையை இறுக பிடித்திருந்தது தெரிய, மெல்லிய புன்னகை அவன் இதழ்களுக்குள் பரவியது.


'அதுக்கு இன்னும் நாள் இருக்கு, அப்போ நீயே விலகனும் நினைச்சாலும் நான் உன் கையை விட மாட்டேன்'


என மனதோடு நினைத்து கொண்டவன்,  அவள் கையை அத்தனை மென்மையாக விலகி விட்டான்.


"சொல்லு ஹரி," என ஹரியின் அருகில் வர, அவனோ,


"சார், அவங்க போன் சரி பண்ணிட்டேன். அஞ்சலி என்ற நேமில் இருந்து கால் வந்துட்டே இருக்கு ஆனால் அட்டெண்ட் பண்ணா பேசவே மாட்டேன்கிறாங்க. வெறும் அழுகை சவுண்ட் தான் வருது."


எனக் கூறி அலைபேசியை அவனிடம் கொடுக்க, அதனை அவன் வாங்கியவுடனே, மீண்டும் அஞ்சலியிடமிருந்து அழைப்பு வந்தது. அதனை உயிர்ப்பித்து,


"ஹெலோ.., யார் பேசுறது? "

என அவன் கேட்டதும்  மறுமுனையில் இருந்து,

"ஹ்ம்ம்,ஹ்ம்ம்.., ஊஊ..," என்ற சத்தம் மட்டுமே கேட்டது.


அஞ்சலியால் பேச முடியாது என்பது அவர்களுக்கு தெரியாதே!!


அஞ்சலியோ தமக்கையை காணாது தவித்து போனாள்.. உதவிக்கு என்று யாருமே இல்லாது, அமிர்தாவை எதிர்பார்த்து அல்லாடி கொண்டிருந்தாள்.


அமிர்தா அனுப்பிய குறுந்செய்தியை பார்த்தவள், நேரம் எடுத்தாலும் எப்படியும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தாள். ஏனென்றால் இதுவரை அவள் காலதமாதமாக இல்லம் வந்ததே இல்லை.


முன்ன பின்னே ஆனாலும், எப்படியும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து விடுவாள் என்ற  நம்பிக்கையில் தான் அஞ்சலி அவளுக்காக காத்திருந்தாள். நேரம் கடந்து சென்றதும் தான் அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.


வாயிலுக்கும், வீட்டிற்கும் நடைபயணம் மேற்கொண்ட படி இருக்க, அமிர்தா வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இனியும் தாமதிக்க முடியாது என உதவிக்காக கலா வீட்டு கதவை தட்டினாள் அஞ்சலி.


தூங்கி கொண்டிருந்த, கலா, சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவை திறக்க, அங்கு அஞ்சலியோ கண்ணீருடன்  நின்றிருப்பதை கண்டு.


"ஏன் டி? பகல்ல தான் என்னை நிம்மதியா இருக்க விடுறதில்லை. ராத்திரியிலாவது நிம்மதியா தூங்க விடுறீங்களா? ஏன் டி என் உயிரை வாங்குறதுக்குன்னே இங்கே இருக்கீங்க? எங்கையாச்சும் போய் தொலைஞ்சா தான் என்னவாம்?" எல்லாம் என் தலையெழுத்து"


என அந்நேரமும் கிடைத்த வாய்ப்பை தவறவிடாது அவர்  தன்னுடைய விஷத்தை கக்க, அதில் நொந்து போனாலும், தமக்கை பற்றிய பதற்றம் அதனை பொருட்படுத்தாது,


"மாமா, மாமா.. இல்லையா?" என அவள் மீசை இருப்பது போல் காட்டி, அவரையும் சுட்டிக்காட்டி தன் கழுத்தில் கைகளை சுற்றி செய்கையில் கேட்க, 


தூக்க கலக்கத்தில் அவருக்கு அவள் செய்யும் சைகைகள் எதுவும் புரியவில்லை.


"என்ன? என்ன கேட்கிற? ஒரு மண்ணும் புரியல?"


என எரிந்து விழ, மீண்டும் அதே போல் நிதானமாக செய்கை செய்த்தவளது செய்கை தற்பொழுது அவருக்கு புரிய,


"ஒஹ்ஹ், உங்க மாமாவா? அவருக்கு நயிட் வேலை  காலையில் தான் வருவார். எதுக்கு உங்க மாமாவை தேடுற?"

என கேட்டதும்,


அவளோ, மீண்டும் செய்கையில்,


"அக்கா இன்னும் வீட்டுக்கு வரல?  அவ போன் கூட போக மாட்டேங்குது? பயமா இருக்கு அதான். நீங்க கொஞ்சம் விசாரிச்சு பாருங்க அத்தை"

என அவள் செய்கையில் கூறியதும்,


"போய்ட்டாளா? அவ்வளவு தான், முடிஞ்சு போச்சு.  நான் எதிர்பார்த்தது தான். உங்க அக்கா, உங்க அம்மா மாதிரி எவன் கூடவோ ஓடி போய்ட்டா. பின்னே, பெத்த அம்மாவுக்கே உங்க மேலே பாசம் இல்லாமல் தானே எவன் கூடவோ ஓடி போனா!! அவ ரத்தம் தானே இவ உடம்பிலும் ஓடுது. அவளுக்கு என்ன தலையெழுத்தா உனக்கு எல்லாம் செய்யறதுக்கு. அதான் உங்க அம்மா உங்களை எங்க தலையில் கட்டிட்டு போன மாதிரி இவளும் உன்னை எங்க தலையில் கட்டிட்டு போயிட்டா.


ஐயோ., ஐயோ இவ கொடுக்கிற காசை வச்சு தான் நகை சீட்டு கட்டிட்டு வந்தேன். இப்போ அதுக்கு வழியில்லாமல் பண்ணிட்டாளே!! இனி நீ வேலைக்கு போற வரைக்கும் நான் காத்திருக்கணுமே!! என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்!! எல்லாம் போச்சே!!"

என அவர் புலம்ப, அஞ்சலியோ, அவரின் குற்றச்சாட்டில் பொறுமை இழந்தாள்.


"என் அக்கா அந்த மாதிரி கிடையாது. அவளுக்கு என் மேலே நிறைய பாசம் இருக்கு. தப்பா பேசாதீங்க"

என அவள் கோபமாய் செய்கையில் கூற,


"க்கும். நீ தான் மெச்சிக்கனும். உண்மையை சொன்னா உனக்கு கோபம் வருதா? அப்போ நீயே போய் தேடிக்கோ உன் பாசக்கார அக்காவை. என்னை எதுக்கு தொல்லை பண்ற? இனி கதவை தட்டுன அவ்வளவு தான்"


என கோபமாய் கூறியவர், கதவை பட்டென்று அடைத்து விட்டு சென்று விட, செய்வதறியாது கண்ணீருடன் மூடிய கதவை பார்த்தப்படி தவித்து நின்றாள் அஞ்சலி.


அடுத்து யாரிடம் சென்று உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. நடுநிசியில் எங்கே சென்று தேடுவதும் என்றும் புரியவில்லை. அழுதது, அழுத்தப்படியே வீட்டு வாசலிலே, தொடர்ந்து அவளுடைய அலைபேசிக்கு அழைத்தப்படியும் அமிர்தாவை எதிர்பார்த்தப்படியுமே  அமர்ந்திருந்தாள் அஞ்சலி.


விடியற்காலையில் அவள் அழைத்தபோது தான் அமிர்தாவின் அலைபேசிக்கு தொடர்பு கிடைத்தது. கண்ணில் ஒளி பெருக, அழைப்பு விடுத்தவள், இணைப்பில் ஹரி பேசியதும் குழம்பி போனாள். 


அவர்கள் யாரென்று இவளுக்கு தெரியவில்லை. இவளும் தான் யாரென்று சொல்ல கூடிய நிலையில் இல்லை. அமிர்தாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று அழ ஆரம்பித்து விட்டாள்.


இங்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட ஆரவ்வோ, எதிர்முனையில் எதுவும் பதில் வராமல் இருக்க தொடர்பை துண்டித்து இருந்தான்.


"யாரும் ஒன்னும் பேசல ஹரி. அழுத்துட்டே இருக்காங்க? இப்போ என்ன பண்றது?"

என அவன் யோசிக்க, ஹரியோ,


"சார், நாம வேணும்னா, லைனில் வந்தவங்க கிட்ட, இந்த போன் வச்சு இருந்தவளுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சுன்னு சொல்லிடுவோமா!!"

என யோசனை கூறினான்.


"இல்லை ஹரி, திடீர்ன்னு இப்படி சொன்னா, அவங்க பயப்பட வாய்ப்பிருக்கு. யாராவது பெரியவங்க பேசினா, கொஞ்சம் பொறுமையா  விஷயத்தை சொல்லலாம். வெயிட் பண்ணுவோம், இவங்க கண் முழிச்சத்தும் அவங்க கிட்டயே கேட்டு இன்போர்ம் பண்ணலாம்"


என ஆரவ் கூற, ஹரியும் சரியென்று அவன் கூற்றை ஆமோதித்தான்.


சிறிது நேரத்திற்கெல்லாம், இரவு வேலை முடிந்து சதாசிவம் இல்லம் வர, அவரை கண்டதும் அவரருகில் ஓடிவந்த அஞ்சலி குமுறி குமுறி அழுதாள். சதாசிவமோ,


"என்னமா? அஞ்சலி என்னாச்சு?  ஏன் இப்படி அழுற. கலா ஏதாவது சொன்னாளா?"

என பதற, அஞ்சலியோ,


"மாமா, அக்கா.., அக்கா, இன்னும் வீட்டுக்கு வரல"


என அவள் திக்கி திணறி செய்கையில் காட்ட, அவரோ புரியாமல் பார்த்தார்.


உடனே அமிர்தாவின் எண்ணிற்கு அழைத்து அவரிடம் கொடுக்க, அழைப்பு சென்றது.


"என்னமா அமிர்தாவுக்கு போன் போட்டு இருக்க? அவ வீட்டில் இல்லையா? எங்க போனா?"

என கேட்க, அஞ்சலியும் அவள் நேற்றைய இரவில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என்று கூறிக்கொண்டிருக்கும் போதே எதிர்முனையில் தொடர்பு இணைக்கப்பட்டது.


"ஹெலோ" என்று ஆரவ் கூறியதும், 


"ஹெலோ, யாருங்க பேசுறது? அமிர்தா.., அமிர்தா போனாச்சே இது?"

என சதாசிவம் கூறியதும் தான், ஆரவ் நிம்மதி பெருமூச்சு விட்டான்.


"அப்பாடா, இப்போவாவது யாராவது பேசினீங்களே!!"

என அவன் குரலில் உற்சாகம் தோன்ற,


"சார்.., நீங்க?"

என சதாசிவம் பதற்றதுடன் கேட்க,


"சார், பதற்றப்படாமல் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இப்போ சொன்னீங்களே"


என யோசித்தவனுக்கு சட்டென்று மின்னல் வெட்டியது அவளுடைய பெயர். 


"அமிர்தா.." என அவன் நா அவள் பெயரை உச்சரித்ததும், அமிர்தத்தை விழுங்கியது போல் இருந்தது அவனுக்கு.


"சார் அமிர்தாவுக்கு என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுங்க. ஒன்னும் இல்லையே அவளுக்கு"


என அவன் விட்ட இடைவெளியில் சதாசிவதுக்கோ பதற்றம் அதிகமானது.


"சார், சார், இப்போ தானே சொன்னேன், பதற்றப்படாமல் இருங்கன்னு. அவங்களுக்கு ஒன்னும் இல்லை. நீங்க உடனே இசிஆர் கிட்ட இருக்க ஏ.எஸ் ஹாஸ்பிடலுக்கு வாங்க"


என அவன் பொறுமையாக கூற,  அவரோ,


"ஐயையோ, ஹாஸ்பிட்டலுக்கா? அவளுக்கு என்னாச்சு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார். ஒன்னும் இல்லையே அவளுக்கு"

என கதற, 


"சார், நீங்க நேரில் வாங்க, அவங்களுக்கு ஒன்னும் இல்லை. வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்"

என நிதானமாக கூறியவனிடம்,


"சரி சார், இதோ.., இதோ.. உடனே வரோம்"


எனக் கூறியவர் அழைப்பை துண்டித்து அஞ்சலியுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார் சதாசிவம்.


இருவரும் அதீத பதற்றத்துடன் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். அங்கு சென்று யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க, அஞ்சலியோ, அவரை தொட்டு, வரவேற்பில் கேட்க சொல்லி செய்கை செய்தாள்.


சதாசிவமும் அங்கு சென்று விசாரிக்க, அவர்களிடம் ஏற்கனவே ஹரி, அமிர்தாவின் பெயரை குறிப்பிட்டு, யாரேனும் வந்தார்கள் என்றால் தாங்கள் இருக்கும் தளத்திற்கு அனுப்பி வைக்க கூறியதன் பெயரில், அவர்களை, ஆரவ்விற்கு என்று ஒதுக்கப்பட்ட தளத்திற்கு செல்ல அறிவுறுத்தினர்..


இருவரும், வேக வேகமாக அத்தளத்திற்கு செல்ல, அங்கே நின்ற பாதுகாவலர்கள், அவர்களிடம் யார்? என்னவென்று விசாரித்ததும் அவர்களோ பயந்து போயினர்.


அதனை கவனித்த ஹரி, அவர்களை உள்ளே விட கூற, இருவரும் ஹரியின் அருகில் வந்தனர்.


"சார், நான் அமிர்தாவோட மாமா, சதாசிவம். போனில் பேசினேனே நான் தான். அமிர்தாவுக்கு என்னாச்சு? ஏதாவது பெரிய விஷயமா?  ரொம்ப பயமா இருக்கு. என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க சார்"

என அவர் கண்ணீருடன் கேட்க,


"சார், அவங்களுக்கு ஒன்னுமில்லை. சின்ன ஆக்சிடெண்ட் அவ்வளவு தான். உள்ளே தான் இருக்காங்க வாங்க"


என அவன் அழைத்ததும்,

"என்ன ஆக்சிடெண்ட் ஹா? என்ன சார் சொல்றீங்க? ஐயோ அமிர்தா மா!!"

என இருவரும் அழுது கொண்டே அறையினுள் நுழைந்தனர்.


ஆரவ் சத்தம் கேட்டு திரும்ப, தலையில் கட்டுடன் கிடந்த அமிர்த்தாவை கண்டதும், 


"ஐயோ அமிர்தாமா? என்னம்மா இது? எப்படி மா ஆச்சு? கண்ணை முழிச்சு பாரும்மா. மாமா வந்து இருக்கிறேன். இங்க பாரு அஞ்சலி உன்னை காணாம ரொம்ப தவிச்சு போயிட்டா. கண்ணை முழிச்சு பாருடா"


என அவர் அமிர்தாவின் அருகில் வந்து அழுது கரைய அஞ்சலியும் அமிர்தாவை கண்டு கதறி அழுதாள்.


அவர்கள் இருவரின் செய்கைகளையும் கண்டா ஆரவ், அவர்கள் அமிர்தாவின் சொந்தம் என்று கண்டு கொண்டான். 


"சார், அவங்களுக்கு சின்ன அடி தான். இப்போ கண் முழிச்சுடுவாங்க. நான் போனில் சொன்னது தான் பதற்றப்படாமல் இருங்க"


என அவன் ஆறுதல் கூறவும், மெல்ல அமிர்த்தாவிடம் அசைவு தெரியவும் சரியாய் இருந்தது.


“எப்படி நடந்தது?” என அவர் ஆரவ்விடம் கேட்க அவன்புறம் திரும்பியதும்,


பிரிக்க முடியா இமைகளை கடினப்பட்டு திறந்தவளுக்கு முதலில் மங்கலாக தெரிந்தது என்னவோ ஆரவ்வின் முகமே!!  இமைகளை நன்கு இமைத்து பார்த்தபொழுது அவனின் முழு முகம் தற்பொழுது தெளிவாக தெரிந்தது.


அந்நேரம் சரியாக அவனும் அவளை பார்த்துவிட, அவனுடன்  பேசிக்கொண்டிருந்த சதாசிவத்திடம்,


"இதோ பாருங்க, அவங்க கண் விழிச்சுட்டாங்க"


என அவன் கூறியதும், சதாசிவமும் அஞ்சலியும் அமிர்தாவின் புறம் திரும்பினர்.


முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாது, மலங்க மலங்க விழிந்தவள், பின் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்து கண்ணில் நீர் கோர்க்க, அவர்களை பார்த்தாள். நொறுங்கி போன இதயத்தின் வலி அவள் கண்களில் அப்பட்டமாக தெரிய, அதனை ஆரவ் குறித்து கொண்டான்.


"அமிர்தா, எப்படி மா இருக்கே? என்னாச்சு? பெரிய அடியாமா? வலிக்குதா?"

என சதாசிவம் பதற, அவளோ


"ஒன்னுமில்லை மாமா, லேசான அடி தான். தப்பு என்மேலே தான், வேலை முடிஞ்சு வரும் பொழுது, வண்டி வரதை சரியா கவனிக்காம ரோடு கிராஸ் பண்ணிட்டேன். அதான் வண்டி மோதி கீழே விழுந்துட்டேன்"


என நடந்ததை மாற்றி கூற, அவளை யோசனையுடன் பார்த்தான் ஆரவ்ஜெயந்தன். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் எண்ணத்தில் ஓடுவதை புரிந்து கொண்டவள், அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என லேசாக தலையாட்ட, அவளின் எண்ணம் அவனுக்கும் புரிந்தது. சரி என்னும் விதமாக, அவனும் கண்களை மூடித்திறக்க, அவள் கண்ணிலோ நிம்மதி ஒளி பரவியது.


"என்னம்மா நீ, பார்த்து வரதில்லை. ஏதோ நல்ல நேரம் சின்ன காயத்தோடு போச்சு. பெரிசா அடிபட்டு இருந்தா என்ன பண்றது? ராத்திரி எல்லாம் உன்னை காணாம அஞ்சலி தான் தவிச்சு போயிட்டா. காலையில் நான் வேலை முடிச்சு வந்ததும் தான் விஷயமே தெரிஞ்சது.  தம்பி தகவல் சொன்னதும் என்னமோ ஏதோன்னு பயந்து ஓடிவந்தோம். தம்பிக்கு தான் நன்றி சொல்லணும்"


என அமிர்த்தாவிடம் கூறியவர் ஆரவ்விடம்,


"ரொம்ப நன்றி சார். அடிப்பட்டதும் அப்படியே விட்டுட்டு போகாமல், ஹாஸ்பிடல் வரை கொண்டு சேர்த்து, வைத்தியம் பார்த்து, நாங்க வர வரைக்கும் கூடவே இருந்து இருக்கீங்க. ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு. ரொம்ப நன்றி சார்"


என அவர் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவிக்க, அவனோ


"ஐயோ சார், வயசில் பெரியவங்க நீங்க. என்னை போய் கையெடுத்து கும்பிட்டுகிட்டு. இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் செய்யுற சின்ன உதவி தானே!! அடிபட்டு விழுந்தவங்களை அப்படியே விட்டுட்டு போக முடியுமா சொல்லுங்க. அவங்களுக்கு பெரிசா எதுவும் இல்லை என்பதே எனக்கு சந்தோஷம். வாங்க வெளியில் கொஞ்சம் நேரம் உட்காருங்க. ரொம்ப பதற்றதுடன் வந்து இருப்பீங்க. ஏதாவது குடிங்க. ரிலாக்ஸ் ஆகும்"

என அவரை அழைத்து வந்து வெளியில் அமர வைத்தவன், ஹரியிடம்,


"ஹரி, அவங்களுக்கு ஜூஸ் ஏதாவது வாங்கி கொடு” என கூற, ஹரியும் அதனை வாங்க சென்று விட்டான்.


"பரவாயில்லை சார். இருக்கட்டும் வேண்டாம்" என சதாசிவம் கூறிய மறுப்புகள் எதையும் ஆரவ் காதில் வாங்கவில்லை.


“இருக்கட்டும் சார். குடிங்க. உங்க கூட வந்தவங்களை வர சொல்றேன்”

என அவன் அறையினுள் நுழைய,


உள்ளே அஞ்சலியோ, அமிர்தாவை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவளின் தலையை கோதி கொடுத்த அமிர்தா,


"எனக்கு ஒன்னுமில்லை அஞ்சலி. நல்ல இருக்கேன் பாரு. அழ கூடாது"

என அவள் கண்ணீரை துடைத்து கொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்தான் ஆரவ்.


"அவங்களுக்கும் ஜூஸ் ஆர்டர் பண்ணி இருக்கு. வந்துடும். குடிக்க சொல்லுங்க"


என கூற, அமிர்தாவும் அஞ்சலியிடம் போ என்று கூறினாள்.


கண்களை துடைத்து கொண்டு, அஞ்சலி அவனை தாண்டி செல்கையில் தான், அவனுக்கு ஒரு விஷயமே நியாபகத்திற்கு வந்தது.


"அஞ்சலி நில்லு, நீதானே மார்னிங் கால் பண்ணது? கால் பண்ணிட்டு  ஏன் பேசாமல் இருந்த? எவ்வளவு நேரம் நாங்க உன்கிட்ட டீடெயில்ஸ் வாங்க கேட்டுட்டு இருந்தோம். ஒண்ணுக்கும் பதில் சொல்லல ஏன்? அப்பவே சொல்லி இருந்தா, எனக்கு கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சு இருக்கும்ல"


என அவன் சற்று கடுமையாகவே அஞ்சலியிடம் கேட்க, அவளோ பயந்து போய் அமிர்தாவை பார்த்தாள்.


"சார், அவளை திட்டாதீங்க. அவளால் பேச முடியாது. அதான் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இருந்து இருப்பா"


என அமிர்தா கூறியதும் அதிர்ந்து விட்டான் ஆரவ்.


"என்ன?" என அவன் அதிர்ச்சியாய் கேட்க, 


"ஆமாம் சார், அவளுக்கு பேச்சு வராது. பிறந்ததிலிருந்தே இப்படி தான் இருக்கு"

என கூறியதும், அவனுக்கோ ஒருமாதிரி ஆகிவிட்டது.


"ஒஹ் ஐ அம் ஸாரி" என அவன் மனதார மன்னிப்பு கேட்க, அஞ்சலியும் தலையசைப்புடன்  அமைதியாக வெளியில் வந்து விட்டாள்.


செல்லும் அவளுக்காக இரக்கப்பட்டவன், அமிர்தாவின் புறம் திரும்பி,


“ஸாரிங்க. நான் வேற அவங்ககிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன்”

என மீண்டும் மன்னிப்பு கேட்க, அமிர்தாவோ,


"அச்சோ, அதெல்லாம் வேண்டாம் சார். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். என் மேலே தான் தப்பு, அந்த நேரத்தில், உங்க வண்டியில் வந்து மோதியது நான் தான். இருந்தாலும், எனக்கென்னன்னு விட்டுட்டு போகாமா, என்னை காப்பாத்தி, வீட்டுக்கும் தகவல் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி சார்"


என அமிர்தா கண்ணீருடன் நன்றி தெரிவிக்க,


"பரவாயில்லை, இருக்கட்டும் நன்றிலாம் வேண்டாம்"


என சினேகமாக கூற, அவளும் லேசாக புன்னகைத்து கொண்டாள். 


“அப்புறம், மாமா கிட்ட நீங்க நடந்ததை அப்படியே சொல்லாமல் இருந்ததுக்கும் நன்றி. முழு விவரமும் தெரிஞ்சா, ரொம்ப வருத்தப்படுவாங்க. அதான் சொல்லல” என்னும் போதே நடந்த சம்பவங்கள் எண்ணி அவள் மனம் குமுறியது. கண்கள் கலங்கி கண்ணீர் வருவது போல இருக்க, அதனை, அடக்கி கொள்ள பெரும் பாடுதான்பட்டாள் அமிர்தா. 


அவனிடமிருந்து அவள் மறைக்க நினைத்தாலும், எல்லாவற்றையும் குறித்து கொண்டு தான் இருந்தான் ஆரவ்.


அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது இருவரும் இருக்க, அவனே,


"தலை ரொம்ப வலிக்குதா?" என ஆரம்பிக்க, அவளோ, என்ன பதில் சொல்வது என்று புரியாது திருத்திருவென விழித்தாள்.

அவளின் பாவனையில்,


"தலையில் அடிபட்டு இருக்கு, வலிக்கத்தானே செய்யும். லூசு போல கேட்கிறேன்ல"

என அவன் அசடு வழிய, லேசாக புன்னகைத்து கொண்டாள் அமிர்தா. அந்நேரம் சரியாக இருவருக்கும் இடையில் கரடி போல் வந்து சேர்ந்தான் ஹரி. 


"சார், பாலகிருஷ்ணன் சார் கிட்டயிருந்து போன்"


என அவன் அலைபேசியை கொண்டு வந்து கொடுக்க, அதனை வாங்கி பேச ஆரம்பித்தான். எதிர்முனையில் இருந்த பாலகிருஷ்ணனோ,


"ஆரவ், எனித்திங் சீரியஸ்? எல்லாம் நார்மல் ஆகிடுச்சா? அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்லையே!!"


என அவர் ஹரியிடம் கேட்ட விவரங்களை வைத்து கேட்க, 


"பயப்பட ஒன்னுமில்லை ப்பா. எல்லாம் நார்மல் தான். அவங்க கூட கண் விழிச்சுட்டாங்க. அவங்க வீட்டில் இருந்து கூட வந்தாச்சு ப்பா. டிஸ்சார்ஜ் பண்ணதும் கிளம்பிடுவேன்"

என கூறியதும், 


"சரிப்பா பார்த்துட்டு வா. உங்க அம்மா தான் விஷயம் கேள்வி பட்டத்திலிருந்து கொஞ்சம் பயந்துட்டா. நான் அவ கிட்ட பேசிக்கிறேன். நீ அந்த பொண்ணுக்கு என்ன தேவையோ கூடவே இருந்து பார்த்துக்கோ. பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வை"


எனக்கூற, அவனும் சரியென்று கூறி  அழைப்பை துண்டித்தான்.


ஹரியிடம் அலைபேசியை கொடுத்தவன் மீண்டும் அமிர்தாவின் அருகில் வந்து,


"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"  எனக் கேட்க, அவளோ வேண்டாம் என்னும் ரீதியில் தலையாட்டினாள். அதற்குள் மருத்துவர் உள்ளே வர இருவரின் கவனமும் அவர்மேல் திரும்பியது.


அவளை பரிசோதித்தவர், இன்னும் சில விஷயங்களையும் அவளிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டு,


"மிஸ்டர்.ஏஜே, நத்திங், ஒரி. எல்லாம் நார்மலா தான் இருக்கு.  பெயின் குறைய மெடிசன் எழுதி தரேன், ரெகுலரா எடுத்துக்க சொல்லுங்க. ஒருவேளை பெயின் அதிகமாக இருந்த இமிடியட்டா கூட்டிட்டு வாங்க. இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்"

என அவர் கூற, ஆரவ்வும்


"தேங்க்யூ டாக்டர்" என நன்றி தெரிவித்தான். அவர் வெளியேறியதும், மீண்டும் அமிர்தாவிடம், பேச ஆரம்பிக்கும் சமயம், மீண்டும் ஹரி கரடி போல் உள்ளே நுழைய , ஆரவ்விற்கோ ஐயோ என்றிருந்தது.


"சார், ராமமூர்த்தி சார் லைனில் இருக்கார்"

என அவனிடம் கொடுக்க, அவனோ,


"ஐயோ, அவரா?" என சலித்து கொண்டப்படியே அலைபேசியை காதுக்கு கொடுத்தவன், “ஹெலோ” என்று மட்டும் தான் கூறினான், எதிர்முனையில் இருந்த ராமமூர்த்தியோ,


"என்ன ஆரவ்? ஹாஸ்பிடலில் இருக்கிறதா ஹரி சொன்னான்!! என்னாச்சு? உடம்புக்கு ஏதாவது முடியலையா?"


என படப்படக்க, ஹரியை திரும்பி முறைத்தவன், "உன்னை யாரு டா சொல்ல சொன்னா?"

என சத்தம் வராமல் வாயசைத்தான் ஆரவ்.


"சொல்லுங்க ஆரவ், உடம்புக்கு என்னாச்சு? நான் வேணும்னா கிளம்பி வரட்டா"

என ராமமூர்த்தி பதற்றத்திலே இருக்க,


"சார், சார் அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துகிறேன். எனக்கு ஒன்னுமில்லை. தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லை அதான் பார்க்க வந்தேன்"


என எங்கே கிளம்பி வந்து விடுவாரோ!! என அவசரமாக கூறியவன், அமிர்தாவை பார்த்தப்படியே தெரிஞ்சவங்க என்று கூறினான்.


"தெரிஞ்சவங்கன்னா யாரு ஆரவ்?" என அவர் தெரிஞ்சுக்க வேண்டி கேட்க, அவனுக்கோ எரிச்சலாக இருந்தது.


"சார், எனக்கு தெரிஞ்சவங்க சொன்னேன்,  உங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை. இப்யூடோன்ட் மைண்ட், நான் அப்புறமா பேசுறேன். ஹாஸ்பிடலில் போன் பேசுறது மத்தவங்களுக்கு டிஸ்டபன்ஸா இருக்கும்"

என அவர் தொடர்பை துண்டிக்க முனைய,


"ஒஹ் சூர், நீங்க சொல்றது சரிதான். படிச்ச நாமளே ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாமல் நடந்துக்க கூடாது. பொறுப்பா இருக்கணும்"

என அவர் அதற்கும் பேசிக்கொண்டே போக, எப்பொழுதுடா அலைப்பேசியை வைப்பார் என்றிருந்தது அவனுக்கு. தற்போதைக்கு அவர் நிறுத்துவது போல் தெரியவில்லை என்றதும்,


"சார் டாக்டர் வரார். அப்புறம் பேசுறேன்"


என அவனே அணைப்பை துண்டித்தவன் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டான்.


அமிர்தாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியதால் தேவையானவற்றை எல்லாம் செய்து முடித்து, அவளுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளையும் வாங்கி கொடுத்தான் ஆரவ்.


அறையை விட்டு அவளை அஞ்சலி மெதுவாக அழைத்து வர, அமிர்தாவோ சதாசிவத்திடம்,


"மாமா, இது பார்க்கவே பெரிய ஹாஸ்பிடல் போல இருக்கு. எப்படியும் நிறைய செலவாகி இருக்கும். என்கிட்ட காசு எதுவும் இல்லை. உங்க கிட்ட இருக்கிறதை கொடுங்க, கொடுக்கலாம்"


என கேட்க, அவரோ என்கிட்ட  "ரெண்டாயிரம் தான் மா இருக்கு. வேற இல்லை"


என்று இருந்த பணத்தை அவளிடம் கொடுத்தார். அதனை வாங்கி கொண்டு ஆரவ்வின் அருகில் சென்றவள், 

“சார்,” 

என குரல் கொடுக்க, ஹரியிடம் பேசி கொண்டிருந்தவன், அவளின் அழைப்பில் திரும்பி என்னவென்று பார்த்தான். அவளோ, 


"நீங்க செஞ்சது ரொம்ப பெரிய உதவி, நன்றின்னு ஒரு சின்ன வார்த்தையில் இந்த உதவியை என்னால் அடைக்க முடியாது. காலம் முழுக்க நான் நன்றி கடன் பட்டிருக்கேன்”

என்றதும்,

“ஏன் பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க. இது ரொம்ப சின்ன உதவி தான்.

என்றான் புன்னகையாக.


“அது உங்களோட பெருந்தன்மை சார். உதவி வாங்கின எனக்கு தான் தெரியும் அதோட மதிப்பு. செயல் உதவி மட்டுமில்ல, பொருள் உதவியும் பண்ணி இருக்கீங்க. இது பார்க்கவே பெரிய ஹாஸ்பிடல் போல இருக்கு, கண்டிப்பா நிறைய காசு செலவாகி இருக்கும். நீங்க அந்த பணத்தை ஏதாவது முக்கியமான செலவுக்காக வச்சு இருப்பீங்க. எல்லாத்தையும் திருப்பி கொடுக்க தான் ஆசைப்படுறேன். ஆனால்....?!! என இழுத்தவள், கையில் வைத்திருந்த பணத்தை அவனிடம் நீட்டி,


“எங்க கிட்ட இதான் இருக்கு. இப்போதைக்கு இதை வச்சுக்குங்க. மீதி என்னால் எப்போ முடியுமோ அப்போ கொடுத்துறேன்”

என பொறுமையாக கூறிய அமிர்தாவை, ஆதுரமாய் பார்த்தவன்,


"மனிதாபிமானத்துக்கு யாராவது பணம் கொடுப்பாங்களா?" என ஒரே வரியில் அவனின் குணத்தை கூற, நெகிழ்ந்து போனாள் அமிர்தா.


இந்த காலத்தில், இப்படி ஒருவனா? என அவனை நினைத்து வியந்து போனாள் அமிர்தா. அவள் சந்தித்த நபர்களில் பெரும்பான்மையோர் சுயநலத்தின் மொத்த உருவமாக தானே இருந்து இருக்கிறார்கள்.


“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார். இருந்தாலும், இந்த பணம் உங்களுக்கு வேற எதுக்காவது தேவைப்படும் வாங்கிக்கோங்க சார்”


என மீண்டும் அவள் அவனிடம் நீட்ட, ஆரவ்வோ,


“இல்லைங்க, எனக்கு வேண்டாம். உதவிக்கு பணம் வாங்குறது, அந்த உதவியை அவமானப்படுத்துவது போல, இந்த பணம் என்னை விட உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். உங்க கிட்டவே இருக்கட்டும்”

என பெருந்தன்மையாக கூறினான்.


அவனுக்கு தான் தெரிந்ததே அவளுடைய கைப்பையில், பணமே இல்லை என்பது. இருந்தும் இருக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்க நினைக்கும் அவளின் நல்லுள்ளம் அவனுக்கு புரிந்தே இருந்தது. அதன்பின் அமிர்தா எவ்வளவு கெஞ்சியும் அவன் அந்த பணத்தை வாங்கவே இல்லை. 


"சார், நாம பேக் கேட் வழியா போலாம். அங்கே பிரீ பண்ணி இருக்காங்க" என்று ஹரி கூற, அனைவரையும் அழைத்து கொண்டு பின் வாசல் நோக்கி நடந்தான் ஆரவ். சுற்றி பாதுகாவலர்கள் சூழ வருபவனை கண்டு அமிர்தாவிற்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. 


“இவர் ரொம்ப பிரபலம் போல அதான் இவருக்கு பாதுகாப்புலாம்  பலமா இருக்கு” என மனதோடு நினைத்து கொண்டவள், அவர்களை சுற்றி சுற்றி பார்த்து கொண்டே வர, அதனை கவனித்த ஆரவ்,


“என்னாச்சு?” என கேட்க, அமிர்தாவோ, தயங்கி தயங்கி,


"நீங்க ரொம்ப பெரிய இடம் போல இருக்கே சார்"

என்றாள். அதற்கு ஹரியோ,


"சாரை யாருன்னு நினைச்சீங்க? தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் மட்டுமில்ல, டோட்டல் இந்தியவுக்கே தெரியும்,  அவ்வளவு பேமஸ்"

என பெருமையாக கூற, அமிர்தாவோ,


"அப்படியா!!  யார் இவர்? ஸாரிங்க எனக்கு தெரியாதே!! என்றாளே பார்க்கலாம் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த ஆரவ்விற்கு சப்பென்று ஆகிவிட்டது. திரும்பி ஹரியை அவன் முறைக்க, அதில் கலக்கம் அடைந்த ஹரியோ, மீண்டும் அமிர்தாவிடம்,,


"என்னங்க இப்படி சொல்றீங்க இவரை தெரியாதா?!! டிவியில்லாம் வருவாரே!!

என அவசரமாக கூற, அவளோ,


"எங்க வீட்டில் டீவியே இல்லைங்க" என்றதும், தற்பொழுது ஹரியை கொலை வெறியுடன் பார்த்தான் ஆரவ்.

அதில் அசடு வழிந்தவாறே, 


"டிவி இல்லைன்னா என்ன? நீங்க தியேட்டர் போய் சினிமா பார்த்திருப்பீங்களே!! அதில் சார் தானே பேமஸ்"

என்று ஹரி மீண்டும் பெருமையாக கூற, அவளோ,


"நான் தியேட்டர் போய் சினிமாலாம் பார்த்ததில்லை சார்"


என சாதாரணமாக அவள் கூறியதும்,  திரும்பி ஹரியை முறைத்தான் ஆரவ்,


"போதும் டா, எத்தனை நாள் ஆசைடா உனக்கு என்னை இவ்வளவு டேமேஜ் பண்ண?"

என மெல்லிய குரலில் கேட்க, ஹரியோ,


" ஐயோ சார், நான் போய் உங்களை அப்படி பண்ணுவேனா?" என அதே குரலில் பதில் கூற,


"இப்போ பண்றியே  என்ன இது?" என்றான் ஆரவ் அமிர்தாவை சுட்டி காட்டி. 


"இல்லை சார்.. பெருமையா தான்.."

என்ற ஹரியை,


"எந்த ஆமையையும் நீ கூட்டிட்டு வரவேண்டாம் அமைதியா வா"

என் அடக்க, அவனும்  சரியென்று தலையாட்டினான்.


அவர்களுக்கென யாருடைய இடையூறும் இல்லாத வகையில் மருத்துவமனை அமைத்து கொடுத்த தனி வழியாக வெளியே வந்தவர்கள் இல்லம் திரும்ப காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.


அமிர்தாவையும் அவள் குடும்பத்தாரையும் அழைத்து செல்ல அவனே கார் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஏற்றிவிட்டு,


"அமிர்தா, உடம்பை பார்த்துக்கோங்க. டேக் கேர்"


என கூறியவன், 

"ஹரி" என குரல் கொடுக்க அவனோ அவனுடைய கார்டை கொடுத்தான். அதனை வாங்கி அமிர்த்தாவிடம் கொடுத்து,


"இது என்னோட பெர்ஸ்னல் நம்பர் இருக்கு. எப்போ எது தேவைனாலும் கூப்பிடுங்க"


எனக்கூற அமிர்தாவும் அதனை  வாங்கி கொண்டு மீண்டும் நன்றி கூறிவிட்டு விடைபெற்று கொண்டாள்.


இவனும் தன் வண்டியில் ஏறிக்கொள்ள, இரு கார்களும் வெவ்வேறு திசையை நோக்கி பயணித்தன, இனி இணைக்கும் போகும்  அவர்களது வாழ்க்கையை எதிர்நோக்கி.!!


ஒருவாரம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாது, வெறுமையாய் கழிந்தது அவரவர் நாட்கள்.


அமிர்தாவோ ஒளியிழந்த நிலவு போல் வலம் வந்து கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துளிர்க்கும் கண்ணீரை யாருக்கும் காட்டாது மனம் வெதும்பி போய் அமர்ந்திருந்தவளுக்கு வாழவே பிடிக்கவில்லை. சாபமாய் மாறி போன இந்த வாழ்க்கையை இனியும் வாழ தான் வேண்டுமா? என நாளும் பொழுதும் தோன்றிக்கொண்டே  இருக்க, ஒருகட்டத்தில் இந்த வாழ்வை முடித்து  கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். அதனை செயல்படுத்தும் வகையில் அஞ்சலி உறங்கிய பின் தனிமையில் வந்து நின்றவள், கையோடு கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளை விழுங்க தயாரானாள்.



நீ இமை சிமிட்டும் 

தித்தித்திப்பில் 

இமைக்க மறக்கும் 

என் விழி 

தித்திப்பை ருசிக்க 

நீ வரும் காலம் 

எப்பொழுது?!!


பிடிக்கும்….

































Comments

  1. உறங்கி கொண்டிருக்கும் என் உயிரே
    விலக நினைத்தேன் விரல் கோர்த்தாய்
    விழி மூடியே வென்று விட்டாய்
    விழி திறந்ததும் வீழ்த்தி விட்டாய்
    உன் விழி பேசும் கண்ணீர் மொழி என்னடி
    காதோடு கதைப்பாயடி
    உன் கண்ணீர் துடைக்க
    என் கரம் ஏங்குதடி
    என்னுயிரே........

    ARAVAKA NAAN KEEP ROCKING AKKA MY FAVORITE EPI ARAVAI HARI SAMBAVAM

    ReplyDelete
  2. kavithai super azhga ezhuhi iruka. enjoy

    ReplyDelete
    Replies
    1. kasta pattu tamil la ezhuthuna akka keybord illama waiting for 9 epi

      Delete
    2. en aapadi ezhtuhura summa notela ezhuthi vachuko phone vankianthum podu

      Delete
    3. epi epi pottatha nalla iukkum unakku oru bootah irukkum la

      Delete
    4. amam iunthalum fbyil pota niraiya per padipanga

      Delete

Post a Comment