UNEP-7

 அத்தியாயம்..7


             கருமை நிற பூக்கள், வான்மகளை அலங்கரித்து கொண்டிருந்த நிசப்தமான காலநிலை நிலவிக் கொண்டிருக்க, அமிர்தாவோ, ஒளியிழந்த நிலவாய் அதனை வெறித்து கொண்டிருந்தாள். 


‘நித்தம் நித்தம், அவன் தான் தன் வாழ்வு, தன்னையும் தன் தங்கையையும் பார்த்து கொள்வான், தனக்கு எல்லாமுமாக இருப்பான் என சந்தோஷ் மீது அதீத நம்பிக்கை வைத்து, ஓட்டிய வாழ்க்கை, இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு தகர்ந்து எரிந்த அவனின் துரோகத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் துக்கத்தை சொல்லி அழ கூட அவளுக்கு துணை யாருமில்லை. இப்படி ஏமாந்து நிற்கிறேனே என அவளையே அவள் நொந்தபடி தான் இருந்தாள்.


ஒவ்வொரு குழந்தையும், தன் தாய் தந்தையை நம்பி தானே இந்த உலகத்தில் பிறக்கிறது. அப்படி தானே நானும் பிறந்தேன். ஆனால், பாசம் காட்டி பாதுகாப்பார் என்று நினைத்த தந்தை, அந்த பாசத்தை உணரும் முன்னே என்னை ஏமாற்றி இறைவனடி சேர்ந்து விட்டார். தந்தை போனால் என்ன? தாய் இருக்கிறாரே!! அவர் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, அன்பு காட்டி அரவணைத்து போவார் என்று நம்பிக்கை வைத்திருக்க, அவரும் என்னை ஏமாற்றிவிட்டு, தன் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்று வேறொருவருடன் சென்று விட்டார். 


இனி யாரையும் நம்பக்கூடாது, நானும் தங்கையும் என்று தானே தனித்து இருந்தேன். ஆனால் சந்தோஷ், மரித்து போன என் நம்பிக்கையை, உயிர்ப்பித்ததும், அதனை தடுக்காமல் போனது என் தவறு தான். அவனது போலியான அன்பை ஏக்கம் கொண்ட மனம் ஏற்றுக்கொண்டது. இந்த முறை நிச்சயம் ஏமாற்றப்பட மாட்டோம் என்று தான் இருந்தேன். ஆனால், என் பெற்றோர்கள் கொடுத்த ஏமாற்றத்தின் வலியை  விட, சந்தோஷ் கொடுத்த வலி உச்சகட்டமாக அல்லவா அமைந்து விட்டது. 


அவனை சொல்லி என்ன ப்ரோஜனம்? அவன் கூறியதை கேட்டு, நம்பி ஏமாந்து போன தன் புத்தி மீது தானே தவறு.. ஏதோ ஒரு பிடிமானத்தில் போய் கொண்டிருந்த வாழ்வை அப்படியே போக விடாமல், நன்றாக வாழலாம் என்ற தன்னுடைய பேராசை தானே தற்போதைய சூழலுக்கு காரணம்,’ என அவளையே அவள் குற்றவாளி ஆக்கி அதற்கு தண்டனையையும் கொடுக்க துணிந்து விட்டாள்.


அஞ்சலி இருக்கிறாள் தான்.  ஆனால், தன்னுடன் இருந்து அவள் கஷ்டப்படுவதை விட, தான் இல்லாமல் அவள் நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு மேலோங்கி இருந்தது. கலா என்ன சொன்னாலும், சதாசிவம் அவளை பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையும் இருக்க, இனி தான் வாழவேண்டாம் என்ற முடிவே அவளை இந்த ஒரு வார காலமும் ஆட்கொண்டது.


அதனாலே, தன்னிடம் இருந்த சொற்ப பணத்தை வைத்து, தூக்க மாத்திரைகளை வாங்கி கொண்டு வந்து விட்டாள்.


ஒருமனம் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், வாழவே தகுதி இல்லாதவளுக்கு எதுக்கு இந்த வாழ்வு? முடித்து கொள் என்கிறது. மற்றொரு மனம் இதுவும் ஒரு பாடம் கடந்து போ என்கிறது. இப்படியே அல்லாடி கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.


இந்த ஒருவார காலமும் அஞ்சலியும் தமக்கையின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள். சதா கண்ணீரை விட்டு கொண்டு இருப்பவளை கண்டு அவளுக்கும் வேதனையாக தான் இருந்தது. 


என்னவாயிற்று? என்று பலமுறை கேட்டு பார்த்து விட்டாள். அவளிடமிருந்து வரும் பதில் மௌனமாக தான் இருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவள், ஒருநாள் பொங்கி விட்டாள். 


“என்ன நடந்தது என்று சொல்லி தான் ஆக வேண்டும். இல்லை சந்தோஷிற்கு தொடர்பு கொண்டு கேட்கவா?” என அஞ்சலி விடாப்பிடியாக நிற்க, சந்தோஷின் பெயரை கேட்டதும் அமிர்தாவோ நடுநடுங்கி விட்டாள்.


அதிர்வுடன் அவளை திரும்பி பார்த்தவள்,


“இனி சந்தோஷ் என் வாழ்க்கையில் இல்லை. அவன் பெயரை கூட நான் கேட்க விரும்பலை. இனி அவனை பத்தி நீயும் எதுவும் பேசாதே!!”

என திட்டவட்டமாக கூறியவளை கண்டு அதிர்ந்து போனாள் அஞ்சலி.


“ஏன் கா? என்னாச்சு? எதுக்கு இப்படி சொல்ற?” என சைகையில் கேட்க, அமிர்தாவோ,


“அதான் சொல்றேன்ல அஞ்சலி. அவன் பெயரை கூட எடுக்காதேன்னு!! நான் சொன்னா கேட்க மாட்டியா நீ”

என சற்று காட்டமாகவே கூறியதும், அஞ்சலி அதன் பின் அமைதியாகி விட்டாள். அமிர்தா எது சொன்னாலும், செய்தாலும் அது நல்லதாக தான் இருக்கும் என்பது அஞ்சலியின் நம்பிக்கை. 


அவன் பெயரை மீண்டும் கேட்டதில், கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த யோசனை, மீண்டும் அவளை இம்சித்தது. யோசித்து, யோசித்து கடைசியாக, இனி சந்தோஷ் போல மற்றவரிடம் ஏமாந்து போவதிற்கு பதிலாக, இறப்பதே மேல் என்று முடிவிற்கு வந்தவள், கண்ணீரை துடைத்துக் கொண்டு, மாத்திரைகளை விழுங்க தயாரான நேரம், அவளவனுக்கு, அவளின் நிலை உணர்த்தியதோ என்னவோ? அவளின் அந்த விபரீத முடிவை தடுப்பது போல, அவளின் அலைபேசி ஒலி எழுப்பியது.


இருளின் அமைதியில் சட்டென்று கேட்ட அலைபேசி சத்தத்தில், அமிர்தாவின் உடலும் மனமும் தூக்கி வாரி போட்டது.


அஞ்சலி எங்கே எழுந்து விடுவாளோ என்று அவசரமாக அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு, வெறும் எண்கள் மட்டும் அலைபேசியில் ஒளிர ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.


"யார், இந்த நேரத்தில்?" என தனக்கு தானே கேட்டு கொண்டவளுக்கு, அந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. தெரியாத எண்ணில் இருந்து இந்த நேரத்தில் அழைப்பு வந்ததும் பயந்து போனாள்.


சந்தோஷ் எண்ணை அன்றே நீக்கி, அழைப்பு வராதவாறு செய்திருக்க, வேறு யாருக்கும் இந்த எண் தெரியாது என்பதால், ஒருவேளை சந்தோஷ் தான் வேறு எண்ணில் அழைக்கிறானோ என்றெண்ணியவளுக்கு உள்ளுக்குள் வெடவெடத்தது.


ஒருதடவை முழுவதும் அடித்து ஓய்ந்த அலைபேசியை பார்த்த அமிர்தா, மீண்டும் அழைப்பு வருகிறதா? என்று பார்க்க, எதுவும் வரவில்லை.


யாரோ தவறாக அழைத்து இருக்கிறார்கள் என தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டவள், அலைபேசியை கீழே வைக்க போகும் சமயம், மீண்டும் அலைபேசி அடித்தது.


தற்பொழுது அவசர அவசரமாக அதனை உயிர்பித்து, கை நடுக்கத்துடன், அலைபேசியை இறுக பிடித்தபடி காதுக்கு கொடுக்க, எதிர்முனையில் “ஹெலோ” என்றான் அவளின் வாழ்வாக மாறபோகிற ஆரவ்ஜெயந்தன்.


குரலில் அடையாளம் தெரியாததால், பயந்து போனவள், நடுங்கும் குரலில்,


"யாரு?" என கேட்க, அவனுக்கு அவளின் குரல் பேதம் புரிந்தது.


சட்டென்று "நான் தான் ஏஜே" என கூறியதும் கூட அவளுக்கு யாரென்று தெரியவில்லை.


"ஏஜேன்னா? யா..ர் நீ..ங்க?" என்றாள் அப்பொழுதும் பயந்த குரலில்.


"அமிர்தா, நான் தான் ஆரவ்ஜெயந்தன். என்னை நியாபகம் இல்லை. ஈஸிஆர் ரோடு, கார் மோதி, ஹாஸ்ப்பிடல் சேர்த்து… அந்த ஆரவ் ஜெயந்தன். நியாபகம் வந்ததா? இல்லை உண்மையில் என்னை மறந்து போய்டிங்களா?"


என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவனுக்கு சற்றே ஏமாற்றம் தெளித்தது அவள் அவனை மறந்து விட்டதை எண்ணி.


அவன் கூற, கூற தான், அவன் யாரென்ற அடையாளமே அவளுக்கு தெரிந்தது. சட்டென்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள்,


"அச்சோ சார் நீங்களா? எனக்கு போனில் உங்க குரல் சரியா தெரியல அதான்"

என இழுத்தவள்,


"சார், உங்களை போய் நான் மறப்பேனா?  என் உயிரை காப்பாத்தி மறுவாழ்வு கொடுத்து இருக்கீங்களே?!! உங்க பெயர் எனக்கு தெரியல. அதான் தெரியாமல் முழிச்சேன்,"

என அவள் கூறியதும் தான்,  


"பெயர் கூட சொல்லாமல் வந்துட்டியே ஆரவ்" என தன் தலையிலேயே அடி போட்டு கொண்டான் ஆரவ் ஜெயந்தன்.


"ஸாரி, இந்த நேரத்தில் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். அன்னைக்கு வீட்டுக்கு போனதும், நீங்க கூப்பிட்டு சேபா வந்துட்டேன் சொல்வீங்கனு பார்த்தேன். நீங்க கூப்பிடவே இல்லை. சரி அன்னைக்கு டயர்ட்டா இருப்பீங்க, அடுத்த நாளாவது தகவல் சொல்வீங்க பார்த்தேன். கூப்பிடவே இல்லை நீங்க. ஒன் வீக் ஆகிடுச்சு, நீங்க கூப்பிடாத்ததால் தான் நானே கூப்பிட்டேன். உங்களுக்கு ஏதும் டிஸ்டபன்ஸ் இல்லையே"


என அவன் கூறியதும் தான், அவளுக்கும் அப்பொழுது புத்தியில் உரைத்தது. இருந்த மனவருத்தத்தில் அவள் ஆரவ்வை மறந்தே போய் இருந்தாள். உதவி செய்தவரை போய் மறந்து விட்டாயே!! என அவள் மனசாட்சியே அவளை குத்த, ஏற்கனவே இருந்த மனசோர்வும் சேர்ந்து அடக்கி இருந்த அழுகையை வெளியிட செய்தது.


"சார்.. மன்னிச்சுடுங்க, நான் ஏதோ யோசனையில் உங்களுக்கு தகவல் சொல்ல மறந்துட்டேன். தப்பு தான், பெரிய தப்பு தான். மன்னிச்சுடுங்க,"


என விசும்பலுடன் கூறியவளின் அழுகை அவனுக்கு கேட்க, 


"அமிர்தா, அழறீங்களா?" என பதற்றமானவன், சட்டென்று அலைபேசியை அணைத்து விட்டு வீடியோ அழைப்பு விடுத்தான்.


எதை எதையோ யோசித்து கண்ணீர் சொரிந்தவளுக்கு, மீண்டும் அழைப்பு வந்ததும், அவன் தான் என்று உயிர்ப்பிக்க, அப்பொழுது தான் அவன் வீடியோ காலில் அழைத்திருப்பது புரிய பதற்றமாகி விட்டாள் அமிர்தா.


அவசரமாக கண்ணீரை துடைத்து கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. 


"அமிர்தா, அழறீங்களா என்ன? எதுக்கு? உங்க முகமே சரியில்லையே!! நான் சொன்னத்துக்காக இருக்காது. நான் கூப்பிடும் முன்னே அழுதுட்டு தான் இருந்து இருக்கீங்க போல. முகமெல்லாம் வீங்கி போய் இருக்கே!! என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க. என்னால் ஆன உதவி செய்றேன்"


என அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும், அவனுக்கோ நெஞ்சில் ரத்தம் வடிந்தது.


அவளோ குனிந்த தலை நிமிராது, ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்ட, 


"ஓஹ் காட், என்னன்னு சொன்னா தானே தெரியும்! சரி நீங்க சொல்ல வேண்டாம், அஞ்சலி கிட்ட கொடுங்க. அவங்க கிட்ட கேட்டுகிறேன்"

என்றதும், அமிர்தாவோ சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து,


"அவ தூங்குறா, அவ கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். அவளுக்கு எதுவும் தெரியாது. நான் அழுதேன் தெரிஞ்சாலே, மனசு உடைஞ்சு போய்டுவா. அதனால் எதுவும் சொல்லிடாதீங்க"

என்றாள் வேக வேகமாக.


"நான் சாதரணமா தானே கேட்டேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு பதற்றப்படுறீங்க அமிர்தா,"

அவள் நடவடிக்கையில் சந்தேகம் உதிக்க,


அதில் சற்றே திணறியவள், 


"அது.. அது.. வந்து ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை" என்று கண்களை அழுந்த துடைத்து கொண்ட கூற, அவள் உள்ளங்கையில் ஏதோ  மறைத்து வைத்திருப்பது அவனுக்கு தெரிந்தது.


"அதென்ன உங்க கையில் வெள்ளையா? ஏதோ இருக்கு"

என அவன் கேட்டதும், பகீர் என்றானது அவளுக்கு. இன்னும் கைகளை இறுக மூடி மறைத்து கொண்டவள், அதிர்ந்த முகத்துடன்,


"ஒன்னுமில்லையே" என்றாள். உள்ளுக்குள் உறைந்து உணர்வாய் கலந்து விட்டவளின் உணர்வுகளை அவன் அறியாமல் போவானா?


"இல்லை, நீங்க பொய் சொல்றீங்க?"

என்றான் ஆரவ் உறுதியாக.


"இல்லை உண்மை தான், என்கிட்ட எதுவும் இல்லை"

என்றாள், படப்படக்கும் மனதை கட்டுப்படுத்தியப்படி.


 "இப்போ நீ காட்ட போறீயா? இல்ல கிளம்பி உன் வீட்டுக்கு வந்து பார்க்கவா?" என இவ்வளவு நேரம் அழைத்த மரியாதை எல்லாம் காற்றில் பறக்கும் அளவுக்கு இருந்தது அவனின் கோபம்.


 இந்த ஒரு வார காலமாக அவன் பட்ட தவிப்பு அவனுக்கு தானே தெரியும்.  அவளை வழி அனுப்பி வைத்தவன், அவளே அழைத்து பேசுவாள் என்று தான் காத்திருந்தான். எங்கே அவள் தான் துரோகத்தின் வலியில் தன்னையே மறந்து போய் கிடந்தாளே!!


அவனுக்கு ஒன்றும் அவளுடைய அலைபேசி எண்ணை கண்டுபிடிப்பது என்பது அத்தனை கடினம் இல்லை. இருந்தாலும், அவளே அழைத்து பேசினால் நன்றாக இருக்கும் என்று தான் அமைதி காத்தான். இதற்கு முன் தனிப்பட்ட முறையில் யாருடனும் அதுவும் பெண்களிடம் அவனாக சென்று பேசியதே இல்லை. படத்தில் நடிக்கும் பெண்களிடம் கூட முதலில் ஹரியை விட்டு தான் பேச வைப்பான். பின் அவர்கள் நேரில் வந்ததும் தான் அவர்களுக்கான  கதாபாத்திரத்தை பற்றியும்,  நடிப்பை பற்றியும் கூறுவான்.


அவர்களை போல அமிர்தாவை எண்ண முடியவில்லை அவனால். அவனுக்கே சொந்தமானவள் போல தான் உணர்ந்தான். அவன் உணர்ந்தால் போதுமா?!! அவளும் உணர வேண்டுமே!! வலிய சென்று பேசினால் எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று தான் இந்த ஒரு வாரகாலமும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தான். திடீரென்று பேசினால் எங்கே அவளும் பயந்து விடுவாளோ என்றும் அவன் மனம் அவளுக்காய் யோசித்து அமைதி காத்தது.


ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்க முடியவில்லை. மனம் என்னவோ செய்தது அவனுக்கு. வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது அவனின் சிந்தனையை முழுவதையும் அமிர்தா தான் ஆக்கிரமித்து இருந்தாள். மனம் இந்தளவிற்கு எதற்கு அவளை தேடுகிறது என்பது புரியாமல் முழித்தவனுக்கு தூக்கம் கூட தூரம் தான் போனது.


அவளிடம் இரண்டு வார்த்தை பேசினால் தான் நிம்மதியாக இருக்கும் என்று உணர்ந்தவன், ஹரிக்கு அழைப்பு விடுத்தான். அவனின் அழைப்பு கிடைத்ததும், 


"ஹரி, எனக்கு அமிர்தா நம்பர் வேணும்"

என்று மொட்டையாக கேட்க, ஹரியோ தூக்க கலக்கத்தில்,


"சார், எந்த அமிர்தா? புது ஹீரோயினா? எனக்கு தெரியாமல் யாரது? அப்போ கூட நான் தானே பேசுவேன். என்ன? நீங்க நம்பர் கேட்கிறீங்க?"

என்றான் ஹரி குழப்பத்துடன்.


"ஹரி.. ரி.. ரி, தூக்கத்தில் உளராதே!! ஹீரோயின் இல்லை. அமிர்தா ஹரி. அதான் என் காரில் வந்து மோதி, ஹாஸ்பிடலில் சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்த்தோமே. அவங்க நம்பர் வேணும்"

என்று பல்லை கடித்தவனிடம், 


"நீங்க கூட விடிய விடிய அவங்க பக்கத்தில் உட்கார்ந்திருந்தீங்க, அவங்க கூட உங்க கையை அந்த மயக்கத்திலும் பிடிச்சு இருந்தாங்க, அப்புறம் நீங்க போகும் போது கூட கார்ட் கொடுத்து பேச சொன்னீங்களே, அந்த அமிர்தா நம்பரையா  கேட்கிறீங்க சார்?" 

என ஏற்ற இறக்கத்துடன் கூறி அவனை கிண்டல் செய்ய, ஆரவ் முகமோ வெட்கத்தில் ஜொலித்தது.


"என்ன ஹரி கிண்டலா?" என ஆரவ் வெட்கத்தை மறைத்தபடி கேட்க, 


"ஐயோ சார், நான் ஏன்  கிண்டல் பண்ண போறேன். பார்த்ததை தானே சொன்னேன். எங்கே நான் சொன்னது நடக்கவே இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்?"

என ஆரவ்வை மேலும் வம்புக்கு இழுக்க,


"ஹரி.., இப்போ நம்பர் கிடைக்குமா? கிடைக்காதா?"

என ஆரவ் அவனின் வம்புக்கு தடைபோட,


"கிடைக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே சார். இருந்தாலும், இந்த நேரத்தில் பேசியே ஆகணுமான்னு யோசிக்கிறேன்”

எனஅவனை மேலும் மேலும் வம்பிழுத்து கொண்டிருந்தான்.


“ஹரி….” என ஆரவ் பல்லை கடிக்க,”


“சரி சரி, டென்ஷன் ஆகாதீங்க. இதோ ஒன் மினிட்ல அமிர்தா நம்பர் அனுப்புறேன். பிரஸ்ட் டைம் பேச போறீங்க. அப்படியே ரெகார்ட் பட்டன் போட்டு பேசுங்க. அப்பப்ப கேட்டுக்கலாம்”

என அவன் ஐடியா கொடுக்க, 


“அப்படிங்களா சார்? எல்லாம் நான் பார்த்துகிறேன் சார். இப்போ நீங்க போனை வச்சுட்டு நம்பர் அனுப்புறீங்களா சார்”

என ஆரவ் கூறியதும், சிரித்தப்படியே அழைப்பை துண்டித்தவன் சொன்னது போலவே ஒரே நிமிடத்தில் அவளின் எண்ணை கண்டுபிடித்து அனுப்பி வைத்திருந்தான்.


எண்ணை வைத்து கொண்டு, அமிர்தாவிற்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று போனை பார்ப்பதும் யோசிப்பதுமாகவே அரைமணி நேரத்தை செலவிட்டு இருந்தான் ஆரவ்ஜெயந்தன். யோசித்தபடியே  இருந்தவனுக்கு, அவளுக்கு என்னவோ ஆக போகிறது என்று தோன்றி கொண்டே இருக்க,


அடுத்த நிமிடம் யோசிக்கவே இல்லை. உடனே அழைத்து விட்டான். முதலில் அழைப்பை அமிர்தா எடுக்காது இருக்க, உறங்கி விட்டாளோ என்று தான் நினைத்தான்.


இருந்தாலும் அவள் குரலை கேட்டால் போதும் என்று இரண்டாவது முறை அழைக்க, அவன் உள்ளுணர்வு கூறியது போலவே அமிர்தாவிடம் ஏதோ விபரீத நிலை தான் தெரிந்தது. அவளும் அவனிடமிருந்து மறைக்க எவ்வளவோ முயற்சி தான் செய்தாள், ஆனால் அவன் கண்ணில் இருந்து தப்பவில்லை.


"அமிர்தா, ஒழுங்கா இப்போ சொல்ல போறீயா? இல்லையா?"


என சற்றே அழுத்தமாக கேட்டவனின் குரலில் பயந்து போனவள், அலைபேசி முன்பு கையை விரித்து காட்ட, அவன் முன், அவள் தற்கொலை செய்வதற்காக வைத்திருந்த மாத்திரைகள் பளபளத்தது. அதனை கண்டு அதிர்ந்தவன், 


"எதுக்கு இவ்வளவு மாத்திரை வச்சு இருக்க? என்ன செய்ய போற?"

என கேட்டவனின் குரலில் அத்தனை நடுக்கம். அவனுக்கே பயத்தை காட்டி இருந்தாள் அமிர்தா.


அவளின் கண்ணீர், கையில் வைத்திருக்கும் மாத்திரைகள் என அனைத்தையும் வைத்து ஓரளவிற்கு அமிர்தாவின் எண்ணத்தை கண்டு கொண்டவனுக்கு மனம் அடித்து கொண்டது. அவனுக்கு மாத்திரைகளை காட்டியப்படி தலையை குனிந்து கண்ணீரை உதிர்த்தவளிடம்,


"சூசைட் பண்ண போனீயா அமிர்தா?"

என அந்த வார்த்தைகளை கூறுவதற்குள், அவன் இதயமே நின்றுவிடும் போலிருந்தது.


இல்லை என்று அவள் சொல்லி விட வேண்டும் என மனம் வேண்டிக் கொண்டது.


உண்மையை மறைக்க முடியாது, குனிந்த தலையுடனே, ஆமாம் என்று அமிர்தா தலையாட்ட,


"லூசாடி நீ? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? இப்போ என்ன நடந்து போச்சுன்னு இந்த முடிவெடுத்த நீ? இடியட், இடியட்.., ஆளு வளர்ந்த அளவுக்கு உனக்கு புத்தி கொஞ்சம் கூட வளரல"

என சரமாரியாக திட்டியவனை கண்டு மலங்க மலங்க பார்த்தாள் அமிர்தா.


"என்ன பார்க்கிற? இப்படி திட்டுறாறேன்னா? நீ செய்யுற வேலைக்கு, நேரில் மட்டும் இருந்து இருந்த, நானே கழுத்தை நெறிச்சு கொன்னு இருப்பேன்,"

என அவனது கோபம் கொஞ்சம் கூட குறையாது கத்த, வாயடைத்து போனாள் அமிர்தா.


"கையில் இருக்கிற மாத்திரையை தூக்கி போடு"

என அவன் கட்டளையிட, அமிர்தாவோ, அவனையே வெறித்து பார்த்தாள்.


"தூக்கி போடுன்னு சொன்னேன்"

என அவன் கர்ஜித்ததும், அதில் பயந்து போனவள், தானாக மாத்திரைகளை தவற விட்டு இருந்தாள்.


சிறிது நேரம் அவளையே பார்த்தபடி ஆரவ் இருக்க, அமிர்தாவோ அழுதது அழுதப்படியே இருந்தாள். இன்னும் கூட அவனுக்கு மனம் ஆறவில்லை. ஒருவேளை தான் அழைக்காமல் போய் இருந்தால், இந்நேரம் மாத்திரைகளை விழுங்கி, உயிரை மாய்த்து கொண்டிருப்பாளே!! நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறியது அவனுக்கு. அப்படி என்ன கஷ்டம்? என்னிடம் கூறி இருந்தால், நான் சரிசெய்து இருக்க மாட்டேனா? அவளில்லாமல், நான் மட்டும் எப்படி? என பலவற்றை நினைக்க, நினைக்க மனம் ஆறவில்லை அவனுக்கு. உக்கிரமாய் அவளை முறைத்து கொண்டே இருந்தான்.


அவனின் கோபம் அமிர்தாவிற்கு புரியாமல் இல்லை. இருந்தாலும், தன் நிலை சரியில்லையே!! எத்தனை வேதனை அனுபவித்து இருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன்? மனதின் ரணத்தை போக்க, வழி தெரியவில்லை எனக்கு. அதனால் தான் இந்த முடிவு என வேதனையோடு அவனை நிமிர்ந்து பார்க்க,  அவளின் இந்த சோகமும் ஆரவ்வை நிலைகுலையவே செய்தது.


 தன்னுடைய கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தி, இயல்பு நிலைக்கு வந்தவன்,


"அமிர்தா" என்று அவளின் பெயரை அத்தனை மென்னையாக அழைக்க, அந்த மென்மை அவளை ஏதோ செய்தது. மெதுவாக  ஆரவ்வை நிமிர்ந்து பார்க்க,


"ரிலாக்ஸ் ஆகு அமிர்தா. பக்கத்தில் தண்ணி இருந்தா எடுத்து குடி"


என்றவனின் சொல்லில் மந்திரம் போட்டது போல்  கடைப்பிடித்தாள் அமிர்தா. சிறிது நேரம் அமைதியிலேயே கழிந்தது இருவரது உரையாடலும்.  அவள் அதீத மனக்கவலையில் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்பது ஆரவ்வால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கென்று நல்லது கெட்டது கூற ஆள் இல்லை என்பதும் அவனுக்கு புரிந்தது.


“இதோ பார் அமிர்தா, எதுக்காக இப்போ இந்த முடிவு எடுத்தேனு நான் கேட்க மாட்டேன். என்ன நடந்ததுன்னு நீயா சொல்ற வரை நானா தெரிஞ்சுக்க விரும்பலை.


ஆனால் நீ எடுத்த முடிவு தப்பு. பிரச்சினைகளுக்கு தீர்வு இறப்பு கிடையாது. எல்லாருமே அவங்களோட பிரச்சனைக்கு இறப்பை தேடி போனா யாருமே இங்க வாழவே முடியாது.


சூசைட் பண்றதுன்றது பக்கா சுயநலமான முடிவு. நீ பாட்டுக்கு போய் சேர்ந்துடுவ, அதுக்கு பின்னே உன்னையே நினைச்சு வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுறது யாரு? உன் மேலே உண்மையான அன்பு வச்சவங்க தான் காலம் முழுக்க துக்கத்தை அனுபவிக்கனும்”


என்னும் போதே அவன் கண்களும் சிறிது கலங்கியதோ!!


"அஞ்சலியை நினைச்சு பார்த்தியா? வாய் பேச முடியாத பொண்ணு இந்த உலகத்தில் எப்படி வாழுவா? எல்லாம் இருக்கிற நீயே ஏதோ பிராப்ளம் வர அதை பேஸ் பண்ண முடியாம தானே சாக பார்த்து இருக்க? சின்ன பொண்ணு அவ, எப்படி இருப்பா? எப்படி இந்த பொல்லாத உலகத்தை சமாளிப்பா? கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா?" 


என்றதும் அமிர்தாவிற்கோ கண்ணில் நீர் பெருகியது.


"அழாதே அமிர்தா, பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றவனுக்கு அவளின் அழுகையை தாங்கி கொள்ள முடியவில்லை. 


"எதுவா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ண பாரு. யாருமே இல்லைன்னு  நினைக்காதே, நான் இருக்கேன், எதுவா இருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ, உனக்கு சொல்ல விருப்பம் இருந்தா.


இனி இதுபோல் முட்டாள்தனமான முடிவு எதையும் எடுக்க மாட்டேன்னு எனக்கு ப்ரோமிஸ் பண்ணு" என பொறுமையாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,


"சத்தியமா இனி இப்படி முடிவெடுக்க மாட்டேன். நான் பண்ண பார்த்தது பெரிய தப்பு தான். அஞ்சலி நான் இல்லாமல் இருக்க மாட்டா, அவளுக்காக நான் கண்டிப்பா வாழுவேன்"


என கூறியதும் அவன் முகத்திலோ நிம்மதி புன்னகை மலர்ந்தது.


"என் மேலே ப்ராமிஸ் பண்ணி இருக்க  நியாபகம் இருக்கட்டும். ஏதாவது நீ தப்பா யோசிச்சாலே எனக்கு ஏதாவது ஆகிடும். வீட்டுக்கு ஒரே பையன்மா நான். எதுவா இருந்தாலும் பார்த்து செய்"


என புன்னகையுடன் கூறியவன்,


"எதையும் யோசிக்காமல் போய் தூங்கு," என்றதும் அமிர்தாவும் சரியென்று தலையாட்டினாள்.


" ப்ளீஸ் அமிர்தா இனி இதுபோல் பண்ண யோசிக்காதே!! என்னால் தாங்க முடியல. ஒருமாதிரி இருக்கு. குட்நைட் டாமா"


என்றவன் அழைப்பை துண்டிக்க, கடைசி வாக்கியத்தை அவள் உள்வாங்கிய பொழுது சற்றே குழம்பி தான் போனாள்.


எத்தனை தவறான முடிவு எடுத்து இருக்கிறோம் என்பது தற்பொழுது தான் அவளுக்கு புரிந்தது.


தன்னையே ஒருவன் ஏமாற்றி இருக்கும் பொழுது, அஞ்சலி எல்லாம் எம்மாத்திரம்? இந்த பொல்லாத உலகத்தில் அவளை தனியாக விட்டு செல்ல பார்த்து இருக்கிறேனே!! என தன்னையே நொந்தபடி நின்று கொண்டிருந்தவளை, சீண்டினாள் அஞ்சலி.


திடுக்கிட்டு அமிர்தா திரும்பி பார்க்க, தூக்கம் வழியும் முகத்தோடு அஞ்சலி,


"இங்கே என்ன பண்ற?" என சைகை செய்ய, அமிர்தாவோ, ஒன்றுமில்லை என கூறி அவளை அழைத்து வந்து படுக்க வைத்து தானும் அருகிலே படுத்து கொண்டாள்.


அஞ்சலி உறங்கி விட, உறக்கம் வராமல் அஞ்சலியையே பார்த்தப்படி விழித்திருந்தாள் அமிர்தா.


சிறிது நேரத்திற்கெல்லாம், அஞ்சலி உறக்கத்தில், அருகில் இருந்த அமிர்தாவின் கழுத்தை கட்டிக் கொண்டு உறங்க, அந்த சிறு செயல் உணர்த்தியது அஞ்சலிக்கு அமிர்தா எத்தனை முக்கியம் என்று. தான் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்பதும்.


தான் எடுத்த விபரீத முடிவை தடுத்த ஆரவ்ஜெயந்தன் மீது மதிப்பு கூடியது அமிர்தாவிற்கு.


அலைபேசியை எடுத்தவள் அவனின் எண்ணுக்கு தேங்க்ஸ் என்று குறுந்செய்தியை அனுப்பி வைக்க, அதனை பார்த்தவனும் புன்னகையுடன், 


"நமக்குள் தேங்க்ஸ், ஸாரி லாம் வேண்டாம். கீப் ஸ்மைலிங் ஆல்வேய்ஸ்"


என கூடவே சில சிரிப்பு இமோஜிகளையும் சேர்த்து பதில் அனுப்ப, அதை கண்டதும் அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. அவளின் புன்னகை அவனையும் எட்டியது போல, அவன் இதழ்களும் புன்னகைத்து கொண்டது.


நித்தமும் நிந்திக்கிறேன்

நினைவுகளை

நீ மட்டுமே நினைவாய்

வரவேண்டும் 

என்று!!


























Comments