UNEP-8

 அத்தியாயம்..8



          ஆதவனுக்கு இன்று விடுமுறை போலும், அவனின் சுவடே இல்லாது, பூமிமகள் கருமை வண்ணத்தை பூசி கொண்டு, காரிருள் வண்ணமாய் காட்சி அளித்து கொண்டிருக்க, வான்மகளும் அவளுக்கு இணையான கருமை வண்ணத்தோடு, உடன் மழை பூக்களை பூமி மீது உதிர்த்து கொண்டிருந்தாள்.


வானின் மழையும், மண்ணின் மணமும் கலந்த ரம்மியமான பொழுது நிலவிக் கொண்டிருந்த அந்த காலை வேளையில், அமிர்தா அதில் சுகமாக நனைந்தபடி, கவலைகள் அண்டாத பூந்தளிராய் துள்ளலுடன் அலுவலகம் சென்று கொண்டிருந்தாள். 


ஆம், அலுவலகம் தான் சென்று கொண்டிருக்கிறாள், அதுவும் ஏஜேவின் அலுவலகத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறாள். 


கடந்த இரண்டு மாதங்களாக அவன் அலுவலகத்தில் தான் அவள் வேலை செய்கிறாள். 


அன்று வாழ்வை முடித்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து, சாவின் விளிம்பு வரை சென்றவளை ஆரவ்ஜெயந்தன் கைப்பிடித்து அழைத்து வந்ததற்கு பிறகு, வாழ வேண்டாம் என்ற எண்ணத்தை அழித்துக் கொண்டாலும், வாழ்வதற்கான ஆதாரம் இல்லாமல் தான் இருந்தாள் அமிர்தா.


மீண்டும் சந்தோஷ் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை. பழைய விஷயங்களை தன் வாழ்வின் பக்கத்தில் இருந்து அழிக்க நினைக்கிறாள். அதனாலே சந்தோஷ் இருக்கும் திசை பக்கம் கூட செல்ல அவளுக்கு விரும்பவில்லை. 


வேலை இல்லை என்ற காரணத்தினால் வீட்டிலேயே இருக்க, இன்னொரு இடியாக, கலாவின் குத்தல் பேச்சு, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது.


"எத்தனை நாளைக்கு தான் இப்படி ஓசியிலேயே வாழறதா உத்தேசம்? உன் அப்பனும் ஆத்தாளும் இங்கே என்ன பணத்தை கொட்டி வச்சுட்டா போய் இருக்காங்கன்னு ரெண்டு பேரும், ஜம்முன்னு உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கீங்க. கொஞ்சம் கூட உங்களுக்கு உடம்பு கூசல. அதெப்படி இருக்கும், உங்க அம்மாவே, கூச்சம் நாச்சம் இல்லாமல் பெத்த புள்ளைங்களை அம்போன்னு  விட்டுட்டு எவன் கூடவோ ஓடி போனவ தானே!!

அந்த ரத்தம் தானே உங்க உடம்பிலும் ஓடுது. அதனால் தான் நீங்களும் இப்படி திரியுறீங்க"


என அனுதினமும் விஷ அம்புகளை எய்த அதில் செய்வதறியாது துவண்டு போயினர் அமிர்தாவும், அஞ்சலியும்.


வேறொரு வேலை தேடலாம், என்று அவள் போகாதா இடமில்லை, தேடாத வேலை இல்லை. எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தான் அலைந்து திரிந்தாள். அவளது துரதிஷ்டம் இதிலும் அவளோடு உடன் பயணித்தது.


செல்லும் இடங்களில் எல்லாம், குறைவான படிப்பு காரணமாக, ஒருவரும் வேலை தரமுன் வரவில்லை. இப்படியே இரண்டு மாதம் முடிய, ஒருநாள், இது போலவே வேலை தேடி சென்று அது கிடைக்காது, சோர்ந்து போய், வெட்ட வெயிலில், வியர்வை நனைத்தப்படி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சமயம், அவள் முன்னே வந்து நின்றது ஒரு விலையுயர்ந்த கார்.


சட்டென்று அவள் முன்னே வந்து கார் நின்றதும், முதலில் திடுக்கிட்டவள், பின் சுதாரித்து, காரை சுற்றி வந்து நடக்க ஆரம்பிக்க,


“அமிர்தா,” என்ற குரல் அவளின் நடையை தடைப்போட்டது. அதிர்ந்து  அவள் திரும்பி பார்க்க, அங்கே ஹரி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


“ஹாய் அமிர்தா, எப்படி இருக்கீங்க?” என நலம் விசாரிக்க,


“நான் நல்ல இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க”

என அவளும் பதில் நலம் விசாரித்தாள். 


“ஏஜே சார், இருக்கும் போது எனக்கென்ன கவலை. நல்ல இருக்கேன்”

என அவன் ஆரவ் பற்றி கூறியதும், அவன் இருக்கிறானா? என, சட்டென்று திரும்பி காரின் உள்ளே கூர்ந்து பார்க்க முயன்றாள் அமிர்தா.


அன்று அலைபேசியில் நீண்ட நேரம் பேசியதை தவிர, இந்த இரண்டு மாதங்களில் ஓரிரண்டு முறை மட்டுமே அவன் அழைத்து இருக்கிறான். அதுவும் பொதுவான நல விசாரிப்புகள் மட்டுமே!!


ஒவ்வொரு தடவை அவன் அழைக்கும் போதும், அவனிடம் நன்றி கூற வேண்டும் என அவள் நினைப்பதுண்டு, ஆனால் செயல்படுத்த தான் முடியவில்லை. 


ஹரி, அவளிடம் கேட்கும் பொழுதே, அவளின் பார்வை அடிக்கடி காரை தொட்டு தழுவுவதை  புரிந்து கொண்டவன்,


“வாங்க, ஏஜே சார் காரில் தான் இருக்கார். அங்கே உட்கார்ந்து பேசலாம்”

என்று அழைக்க, அமிர்தாவோ தயங்கி நின்றாள்.


“ஏன் தயங்குறீங்க? வாங்க. சார் காரை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை. அவர் வெளியே வந்தா, க்ரௌட் சேர்ந்துருவாங்க, தேவையில்லாத பிரோப்ளேம் வரும், அதான் காரை விட்டு இறங்காம இருக்கார்”

என அவன் விளக்கம் கூறியதும் தான் சற்று தெளிந்தாள் அமிர்தா.


பின்பக்க காரின் கதவை அவளுக்காக ஹரி திறந்து விட, அதிலிருந்த ஆரவ்வோ,


“ஹாய் அமிர்தா, எப்படி இருக்கீங்க? வாங்க, உட்காருங்க”

என அவளுக்கு போதிய இடம் விட்டு அமர்ந்தப்படியே விசாரிக்க, அமிர்தாவும் உள்ளே அமர்ந்தப்படி,


“நான் நல்ல இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?”

என நலம் விசாரித்தாள்.


எப்பொழுதும் போல இடது இதயத்தின் மேல் தன் வலது கையை வைத்து, அவனின் வழக்கமான வசீகர புன்னகையுடன்,


“அம் குட். அப்புறம், உங்க தலையில் இருந்த காயம் ஆறிடுச்சா?” என காயம் பட்ட இடத்தை ஆராய்ந்தப்படி கேட்க,


“சார் அதெல்லாம் அப்பவே சரியாகிடுச்சு” என கூறியவள், சற்றே இடைவெளி விட்டு

“தேங்க்ஸ் சார்” என்றாள்.


“எதுக்கு தேங்க்ஸ்?” என்று ஆரவ் கேட்க, 


“அது…அன்னைக்கு.., நீங்க போன் பண்ணதால் தான், அந்த தப்பான முடிவை மாத்திக்கிட்டேன். இப்போ நான் உயிரோட இருக்கிறேன்னா அதுக்கு நீங்க தான் காரணம். ரெண்டு தடவை என் உயிரை மீட்டு, வாழ வச்சு இருக்கீங்க.. அதுக்கு தான் தேங்க்ஸ்”

என அவள் கூறிய விளக்கத்தை கேட்டு புன்னகைத்தவன், 


“திரும்பவும் அந்த மாதிரி விஷயத்தை எதுவும் நீங்க பண்ணாமல் இருக்கிறது தான், நீங்க கொடுக்க நினைக்கிற தேங்க்ஸ்குகான உண்மையான அர்த்தம். அந்த தேங்க்ஸை கண்டிப்பா ஏத்துப்பேன்”

என்றவன், 


“என்ன இந்தப்பக்கம்?” என அவள் கையில் வைத்திருந்த காகிதங்களை பார்த்தப்படி கேட்டான்.


“அது.. அது..” என்று தயங்கியவள், அவனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என யோசனை கொள்ள, அவளின் யோசனையை கண்டவன்,


“சொல்ல வேண்டாம்னா வேண்டாம். பரவாயில்லை”

என சாதரணமாக கூற, அவளோ தவறாக எடுத்து கொள்வானோ என்று நினைத்து,


“வேலை தேடிட்டு இருக்கேன் சார். பழைய வேலைக்கு போக விருப்பம் இல்லை. அதான் வேற வேலை ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு இருக்கேன். இப்போ கூட ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூ தான் போய்ட்டு வரேன்”

என அவள் கூறியதும், அவனுக்கோ மின்னல் வெட்டியது.


“ஹரி,” என குரல் கொடுக்க, அவனும், அவர்கள் புறம் குனிய,


“ஆஃபீஸ் கார்ட் கொடு” என்றதும், ஹரியும் அவனிடம் இருந்த  கார்ட் ஒன்றை நீட்டினான். அதனை அமிர்தாவிடம் கொடுத்தவன்,


“இது என்னோட ஆபீஸ் அட்ரஸ், உங்களுக்கு விருப்பம் இருந்தா, என் கம்பெனியில் வந்து நீங்க ஜாய்ண்ட் பண்ணிக்கலாம்”

என கூறியதும், அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்து பார்த்தாள் அமிர்தா.


அவளின் அதிர்வை புன்னகையை அடக்கி கொண்டு பார்த்தவன், 


“என்ன?” என்க,


“அது.., சார்… நான்.., போய், எப்படி? உங்க கிட்ட வேலை,”

என திக்கி திணற, 


“ஏன் என்னாச்சு? என்கிட்ட வேலை பார்க்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?”

என கேட்டதும்,


“ஐயோ அப்படி சொல்லலை சார், நீங்க ரொம்ப பெரிய ஆள், நான் அவ்வளவா படிக்கல. உங்க கம்பெனியில் வேலை பார்க்கிற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை சார். நான் எனக்கேத்த போல சின்ன வேலையா பார்க்கிறேன். அதனால் தான்”


என தயங்கி தயங்கி பேசியவளை அவனை மீறி ரசித்து கொண்டிருந்தான் ஆரவ்.


“இதுவும் சின்ன வேலை தான். ஜஸ்ட் என் கம்பெனிக்கு வரவங்களோட டீடெயில்ஸ் நீங்க நோட் பண்ணணும். அவ்வளவு தான். அதுக்கு ஏத்த போல உங்க சேலரி இருக்கும்”

என்றதும், 

‘இந்த வேலையை ஏற்கலாமா வேண்டாமா’ என்ற யோசனைக்கு சென்று விட்டாள் அமிர்தா. அவனாகவே வலிய வந்து தருவதால் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. 


அவளின் யோசனையை அவதானித்தவன்,


“இது கம்பல்க்ஷன் இல்லை. நல்ல யோசிங்க. இன்டர்ஸ்ட் இருந்தா ஜாயின் பண்ணிக்கோங்க. இல்லைனா லீவ் இட்”

என அவளின் நிலையில் இருந்து அவளுக்காக கூற, அமிர்தாவும் சரியென்று தலையாட்டி,


“நான் கிளம்புறேன் சார்” என கூறி காரை விட்டு இறங்கி கொண்டாள்.


“ஓகே டேக் கேர்” என்று கூறி அவளுக்கு விடைகொடுத்தான் ஆரவ் ஜெயந்தன்.


விடைபெறுதல் என்பது, விடைபெறாத, விடைபெற்றவர்களின்

நினைவுகளை விட்டு செல்வது தானே!!


அதே போல தான் அமிர்தாவும் விட்டு சென்ற நியாபகங்களை விடைபெறாது பிடித்து வைத்து கொண்டான் ஆரவ் ஜெயந்தன்.

அவளின் நினைவோடு பயணித்தவனின் சித்தனையை, "சார்", என குரல் கொடுத்து கலைத்தான் ஹரி.


"எஸ் ஹரி" என பதில் கொடுத்தவனின் குரலில் மிதமிஞ்சிய உற்சாகமே காணப்பட்டது. அதனையும் குறித்து கொண்ட ஹரி,


“எனக்கு தெரியாமல் நம்ம ஆபிசில் எப்போ சார் இந்த போஸ்டிங்லாம் ஆரம்பிச்சீங்க"

என வேண்டுமென்றே சீண்ட, அதனை புரிந்து கொண்ட ஆரவ்வோ,


“இப்போ தான் ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ் முன்னே ஆரம்பிச்சேன் ஹரி. இதில் உனக்கு ஏதாவது பிரோப்ளேம் இருக்கா?”


என்று அதே கிண்டலுடன் பதிலளித்தவனிடம்,

“சரி சரி புரிஞ்சுடுச்சு” என்றான் ஹரி நமட்டு சிரிப்புடன்.


“என்ன? இப்போ என்ன புரிஞ்சுடுச்சு உனக்கு?” என ஆரவ் கேட்க, 


“அதை என் வாயால் வேற சொல்லணும் எதிர்பார்க்கிறீங்களா? நீங்க தான் சார் எனக்கு சொல்லணும் கூடவே ட்ரீட்ம் வைக்கணும்”


என அவன் மனதை புரிந்து கொண்டவனாக கூறியவனை மெச்சிய பார்வை பார்த்தான் ஆரவ்.


“நான் சொல்ற நேரம் வரும் போது நானே சொல்றேன் ஹரி. அப்போ சிங்கிள் இல்லை டபுள் ட்ரீட்டே தரேன்”


என்று கூறியவனின் முகம் முழுவதும் பூரிப்பு பூவனாமாய் பூத்து பூதூவியது. வீட்டிற்கு வந்த அமிர்த்தவோ, கையில் ஆரவ் கொடுத்த கார்டை வைத்து யோசித்து கொண்டிருந்தாள். தற்பொழுதைய நிலைக்கு அவசியம் வேலை தேவை தான். ஆனால் ஆரவ்விடம் வேலைக்கு செல்லலாமா? வேண்டாமா? என பெருத்த யோசனையாக இருந்தது. 


கால்களின் இடுக்கில் தலைவைத்து யோசித்து கொண்டிருந்தவளின் அருகில் வந்து அமர்ந்த அஞ்சலி அவளின் தோள் தொட, அதில் அவளை அவளை பார்த்தாள் அமிர்தா.


“என்னாச்சு கா? இன்னைக்கும் வேலை கிடைக்கலையா?” என செய்கையில் கேட்டவளிடம், ஆரவ் கொடுத்த கார்டை கொடுத்தவள்,


“வேலை தேடி போன இடத்தில் வேலை கிடைக்கல அஞ்சலி. ஆனால் எதிர்பாராமல் ஆரவ் சார் வேலை தரேன்னு சொல்லி கார்ட் கொடுத்தார். அதான் போலாமா? வேண்டாமா? ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்”

என்றாள் சோர்வாக.


“இதில் யோசிக்க என்ன இருக்கு? அவரை பார்த்தா நல்லவர் போல தான் தெரியுது. அவரே வேலை தரேன்னு சொல்றார். போலாமே கா!!”


என கைகளை ஆட்டி செய்கை செய்தவளை வாஞ்சையுடன் பார்த்தவள்,


“நீ இன்னும் உலகம் தெரியாமல் இருக்க அஞ்சலி. அதான் எல்லாரும் நல்லவங்களா தெரியுறாங்க. யாரையும் உடனே நம்பிட கூடாது. என்னால் நம்பவும் முடியல. ஏன்னா நான் பட்ட வலி அப்படி”

என பழையதை நினைத்து அமிர்தா கலங்க, அவளை புரியாமல் பார்த்தாள் அமிர்தா.


தன் வேதனை தன்னோடு போகட்டும் என்று தன்னை நிதானாப்படுத்தி கொண்டவள்,


“ஒன்னுமில்லை அஞ்சலி. நீ போய் படி. நான் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கிறேன்”

என்று கூறியவள், மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.


சிறிது நேரத்திற்கெல்லாம் கலாவின் குரல் அவளின் சிந்தனையை சிதைக்க, என்னவென்று அவள் திரும்பி பார்த்த பொழுது, வழக்கமான கலாவின் கூர்வாள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.


“ஏய், அஞ்சலி, அங்கே என்ன பண்ணிட்டு இருக்க? உன்னை அப்பவே சாமான் தேய்க்க வர சொன்னேன்ல”

என வாசலில் நின்று அவர் கத்த, அஞ்சலியோ படிப்பதை விட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.


“அஞ்சலி, நீ போய் படி, நான் பார்த்துகிறேன்,” என அமிர்தா, அஞ்சலியை அங்கேயே இருக்க செய்து விட்டு கலாவை நோக்கி வர, அங்கே அமிர்தாவை கண்டதும் கலாவோ,


“நீயும் வீட்டில் தான் இருக்கியா? நல்லதா போச்சு, அவளை வந்து சாமான் தேய்க்க சொல்லு, நீவந்து மாவு அரைச்சு கொடு. அப்படியே ரெண்டும் பேரும் சேர்ந்து துணியை துவைச்சு எடுங்க”

என்று வேலையை ஏவிவிட்டு செல்ல எத்தனித்தார்.


“அத்தை, அஞ்சலி படிச்சுட்டு இருக்கா,எத்தனை தடவை தான் சொல்றது, அவளை வேலை வாங்காதீங்கன்னு. காலையில் தானே நான் அவ்வளவு வேலை முடிச்சு கொடுத்துட்டு போனேன். இப்போ மறுபடியும் வேலை சொன்னா எப்படி? இனி அஞ்சலிக்கு எந்த வேலையும் சொல்லாதீங்க. எதுவா இருந்தாலும், நானே பண்ணி தரேன்”

என கறாராக கூறியதும், கலாவிற்கோ கோபம் பொத்து கொண்டு வந்தது.


“ஏண்டி, அனாதை நாய்களா, சாப்பிறது, தூங்குறது எல்லாம் ஓசியில், இதில் வேலை சொன்னா செய்ய கசக்குதோ?!! அவ்வளவு கஷ்டமா இருந்தா எதுக்கு இங்க இருக்கணும்? உங்க அம்மா மாதிரி எவன் கூடவாவது ஓடி போக வேண்டியது தானே!! 


தண்டசோறு திங்கும் போதே இவ்வளவு திமிர் இருக்கு. இன்னும் சம்பாத்தியம் வந்துச்சு, அவ்வளவு தான் போலையே”

என வழக்கமாக அவர்களை கரித்து கொட்ட,


“அத்தை, தண்டசோறு, ஓசின்னு இன்னொரு தடவை சொன்னீங்க. அப்புறம் நல்ல இருக்காது பார்த்துக்கோங்க”

என அமிர்தாவும் கலாவுக்கு இணையாக பேசினாள்.


“பின்னே, காசு கொடுக்காம தண்டமா சாப்பிட்டு இருக்கிறவங்களை தண்டசோறு சொல்லாமல், வேற என்ன சொல்வாங்களாம்”

என கலா நக்கலடிக்க,


“இப்போ என்ன உங்களுக்கு நாங்க இங்க இருக்க காசு வேணும் அவ்வளவு தானே!! அடுத்த மாசத்தில் இருந்து உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் சரியா வந்து சேரும். அதுவரைக்கும் அஞ்சலியை வேலை சொல்லாமல் இருங்க”

என்றவள் வேகமாக உள்ளே வந்து விட, கலாவோ,


“காசு மட்டும் வராமல் இருக்கட்டும், அப்புறம் பேசிக்கிறேன். என்னமோ வேலையை கையிலேயே வச்சுக்கிட்டு இருக்கிற போல பேசிட்டு போறா. எல்லாம் எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேன்”


என சத்தமாக கூறிவிட்டு செல்ல, உள்ளே வந்த அமிர்தாவை  கண்ணீருடன் அணைத்து கொண்டாள் அஞ்சலி.


“ஒன்னுமில்லை மா, நீ வருத்தப்படாதே!! அவங்களை பத்தி தான் நமக்கு தெரியுமே!! நம்மளை அசிங்கப்படுதலைன்னா அவங்களுக்கு தூக்கமே வராது. இதெல்லாம் நீ காதில் வாங்காதே!! எல்லாம் நான் பார்த்துகிறேன்”


என அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவள், அப்படியே  கையில் இருந்த ஆரவ் கார்டை பார்த்தாள்.


வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. வேலைக்கு சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம். பணம் தரவில்லை என்றால், இன்னும் கலா என்னென்ன பேசுவாரோ?!! நினைக்கவே உள்ளம் பதறி போனது. எதுவா இருந்தாலும் வரது வரட்டும். இவரிடம் அஞ்சலியும் சேர்ந்து பேச்சு வாங்குவதற்கு பதில், வெளியில் வரும் கஷ்டங்களை தான் மட்டுமே, அனுபவித்து செல்லலாம், என்று யோசித்தவள், ஆரவ்வின் அலுவலகத்தில் வேலைக்கு செல்லலாம் என்று தீர்மானமாக முடிவெடுத்தாள்.


அதன்படி மறுநாள் அவன் கொடுத்த எண்ணிற்கு அழைக்க, அவனோ அன்று அடுத்த படப்பிடிப்பு பற்றிய முக்கியமான கூட்டத்தில் பங்கேற்று இருந்தான்.


அதனால் அவனின் அலைபேசியை ஹரியிடம் கொடுத்து விட்டு சென்றிருந்தான். அந்நேரம் சரியாக அமிர்தா அழைக்க, ஆரவ்வின் அலைபேசியின் திரையில் ஏஏ என்ற ஆங்கில எழுத்துக்கு இடையில் இதய வடிவ குறியீடு வைத்த பெயர் ஒளிர, ஹரியோ அதனை புரியாமல் பார்த்தான்.


‘யார் இது? எனக்கு தெரியாமல் புது பேரா இருக்கு. சார் வேற மீட்டிங்ல் இருக்கார், கொண்டு போய் தருவோமா? வேண்டாமா?’ என அவன் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே, அலைபேசி அடித்து ஓய்ந்திருந்தது.


மீண்டும் அதே பெயரில் அழைப்பு வர, ஏதோ அவசரம் போல, அதனால் தான் திரும்ப திரும்ப அழைக்கிறார்கள், என்றெண்ணி கூட்டம் நடக்கும் இடத்திற்கு கதவை தட்டி விட்டு நேராக ஆரவ்விடம் சென்றவன்,


“சார், உங்களுக்கு போன்” என்று கூற, அவனை முறைத்து பார்த்த ஆரவ்வோ,


“ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? நான் தான் சொல்லிட்டு வந்தேன்ல, முக்கியமான மீட்டிங், டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு”

என குரலை உயர்த்தாமல் அவனை திட்டினான்.


“இல்ல சார், திரும்ப, திரும்ப கால் வந்துட்டே இருந்தது. அதனால் தான்…”

என ஹரி கூற, 


“யாரது? திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்கிறது. யாரா இருந்தாலும் இப்போ பேச முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடு”

என்றவன், மீண்டும் கூட்டத்தில் கவனம் செலுத்த முனைய, அந்நேரம் திரும்ப அவனின் அலைபேசி ஒலியெழுப்பி அவனை எரிச்சலூட்டியது.


“போனை கொடு ஹரி. யார் தான் பண்றது? கொஞ்சம் கூட மேனர்ஸே தெரியல. திரும்ப திரும்ப பண்ணிட்டு”


என கோபமாக உரைத்தவன், அலைபேசியை வாங்க, அதில் ஒளிர்ந்த பெயரை கண்டதும், சூரியனை கண்டதும் மலரும் தாமரை போல கோப முகம் தற்பொழுது பூவாய் மாறி புன்னைகை சிந்தியது.


உடனே கூட்டத்தில் உள்ள அனைவர் முன்பும்,

“எக்ஸ்குயூஸ் மீ, ஒன் இம்போர்ட்டெண்ட் கால். ஐ வில் பீ அ பேக்”

என்று கூறியவன், அவசரமாக அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.


அலைபேசியை உயிர்ப்பித்து அதனை காதுக்கு கொடுக்க, மறுமுனையில் இருந்த அமிர்தாவோ,


“ஹலோ சார், நான் அமி..” என ஆரம்பிக்கும் முன்பே, ஆரவ்வோ,


“சொல்லுங்க அமிர்தா” என்றான் முந்திக்கொண்டு.


அவ்வளவு முக்கியமான ஆள் யாரா இருக்கும்? என அவன் பின்னாலே வந்த ஹரியோ, அவனின் வார்த்தைகளை கேட்டதும் “என்னது அமிர்தாவா?!! என அதிர்ச்சியில் வாயை பிளந்தப்படி நின்று விட்டான். 


“சொல்லுங்க அமிர்தா, ஏதாவது முக்கியமான விஷயமா?!!”

என உற்சாகத்துடன் ஆரவ் கேட்க, எதிர்முனையில் இருந்த அமிர்தாவோ,


“ஆமாம் சார், முக்கியமான விஷயம் தான். நான் ஒன்னும் உங்களை தொந்தரவு பண்ணலையே”

என கேட்டதும், 


“சே..சே.., அதெல்லாம் இல்லை. நான் இப்போ பிரீ தான். சும்மா தான் இருக்கேன் சொல்லுங்க”

என்றான் சிரித்தப்படி.


பின்னால் இருந்த ஹரியோ, “ஏதே!!” என கத்தியே விட்டான். ஹரியின் குரல் காதில் விழுந்தாலும் அதையெல்லாம் அலட்சியப்படுத்தியவன், அலைபேசியில் கவனத்தை செலுத்த, அமிர்தாவோ,


“சார், வேலைக்கு வர சொல்லி  இருந்தீங்களே. அதான்…நான் வரலாம்னு”

என அவள் தயங்கி தயங்கி கூற, ஆரவ்வின் முகமோ இன்னும் பிரகாசமாகியது.


காதலில் தூரங்களை ரசிப்பது ஒருவித அழகு என்றால், 

அருகில் வைத்து பார்ப்பதும் தனி அழகு தானே!! 

அவளை அருகில் வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்டான் ஆரவ்ஜெயந்தன்!!


“ஒஹ்ஹ் சூர், வார்ம் வெல்கம். நான் ஆஃபீஸ் அட்ரஸ், டீடெயில்ஸ் எல்லாம் ஹரியை அனுப்ப சொல்றேன். நாளைக்கே வந்து ஜாயின் பண்ணிக்கோங்க”


என மனம் குதுக்கலிக்க ஆரவ் கூற, அமிர்தாவும் 

“ரொம்ப தேங்க்ஸ் சார். மீண்டும் மீண்டும் என் வாழ்க்கையை மீட்டு கொடுத்துட்டே இருக்கீங்க. நான் உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டு இருக்கேன். இந்த உதவியையும் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்”

என மனதார நன்றி தெரிவித்தாள்.


“இட்ஸ் ஓகே அமிர்தா. எதுக்கு நன்றிலாம் சொல்லிட்டு. இது ஒரு சின்ன விஷயம். நாளைக்கு வந்துருங்க. டேக் கேர்”


என அவன் விடைபெற, அமிர்தாவும் அவனுக்கு மீண்டும் நன்றி கூறி அலைபேசியை துண்டித்தாள்.


ஆரவ்வின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாது போனது. அலைபேசியையே பார்த்து பார்த்து சிரித்து கொண்டிருக்க, அவனை பார்த்த ஹரியோ அவனை கண்டு பல்லை கடித்தான். அவனருகில் சென்றவன்,


“சார்.., சார்…,’ என்று அவனை சீண்ட, அதில் அவன் புறம் திரும்பிய ஆரவ்,


“எஸ் ஹரி” என்றான் விரிந்த புன்னகையுடன்.


“போதும் சார், போனை பார்த்து சிரிச்சது. உள்ளே எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்றாங்க. அதையும் கொஞ்சம் 

கவனிக்கலாம்ல!!”

என ஹரி கூறியதும் தான் அவனுக்கு நியாபகமே வந்தது.


“ஆமாம்ல, சரி வா, போவோம். இந்தா போன், யார் போன் பண்ணாலும் நான் பிஸின்னு சொல்லிடு”

என்றவன் அலைபேசியை அவன் கையில் கொடுக்க, ஹரியோ,


“ஏஹார்ட்ஏ பண்ணா கூடவா சார்” என்று கேட்டான். அவனை ஆரவ் முறைத்து பார்க்க, 


“ஓகே ஓகே கூல் கூல் சார், ஏஹார்ட்ஏ பண்ணா மட்டும் உடனே கொடுத்துறேன், மத்தவங்க பண்ணா நீங்க பிஸினு சொல்லிறேன் ஓகே”

என கிண்டல் செய்ய, அதில் சிரிப்புடன் அறைக்குள் நுழைந்தான் ஆரவ்.


ஆரவ்வின் அலுவலகம் சிறியது தான். அவனின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்வதற்காக மூன்று பேர் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள். அவனை சந்திக்க வேண்டி, அலுவலகம் வருபவர்களை, அவர்களே குறித்துக்கொண்டு அவனிடம் கூறி விடுவர். தற்பொழுது அதற்கென தனியாக அமிர்தாவை நியமிக்க இருந்தான்.


படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அலுவலகத்தில் இருப்பது தான் அவன் வழக்கம். யார் வந்தாலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் தேவையை கேட்டறிந்து, அதற்கேற்றார் போல் வேலைகளை செய்வான்.


அமிர்தா, அன்று முதன் முதலாக அலுவலகம் வருகிறாள் என்றதும், அன்றைய காலை நேர அத்தனை வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, அலுவலகம் வந்து விட்டான் ஆரவ் ஜெயந்தன்.


அவனை மார்க்கமாக பார்த்த ஹரியோ, 


“ஹம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்” என்க, ஆரவ்வோ


“என்ன நடக்கட்டும்? நடக்கட்டும்? நான் உட்கார்ந்து தானே இருக்கேன்”

என சிரிக்காமல் கூறியவனை முறைத்து பார்த்தவன், 


“காமெடி….,சிரிப்பே வரல சார்” என்றான்.


“நானும் இது காமெடினு சொல்லல. சிரிப்பு வர, போ போய் அமிர்தா வந்துட்டாங்களா பாரு. அட்ரஸ் தெரியாமல் கஷ்டப்பட போறாங்க. ரூட் கரெக்ட்டா சொன்னியா? என்ன டைமக்கு வர சொன்ன? இன்னும் காணும்”

என அவன் அடுக்கிக் கொண்டே போக, ஹரியோ,


“போதும், போதும் லிஸ்ட் பெரிசா போய்ட்டே இருக்கு. எல்லாம் சரியா தான் சொல்லி இருக்கேன். நீங்க விடிய முன்னே வந்து உட்கார்ந்திருந்தா, நான் என்ன பண்றது?”

என்றான் நக்கலாக.


“வர வர வாய் கூடி போச்சு உனக்கு.ரொம்ப பேசற ஹரி நீ ” என்று ஆரவ் கூற, 


“உண்மைய சொன்னா வாய் கூடி போச்சாம்? இன்னைக்கு எவ்வளவு முக்கியமான வேலை இருக்கு. அதைவிட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கார். இருந்தாலும், இந்த லவ் பண்றவங்க தொல்லை நிஜமா தாங்க முடியலடா சாமி”

என மெல்ல முணுமுணுத்தவனிடம்,


“என்ன அங்கே முணுமுணுக்கிற? எல்லாம் எனக்கு கேட்டுச்சு”

என ஆரவ் சொல்ல,


“கேட்கணும் தானே சொன்னதே” என்று ஹரியின் வார்த்தைகளில்


“ஹரி..” என ஆரவ் அடுத்து பேசும் முன்பே, வெளியே ஓடிவந்து விட்டான். ஆரவ்வோ ஹரியின் செய்கையில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.


அதன் பின் அமிர்தா வந்த செய்தி அறிந்து, வாசலுக்கு விரைந்தவன்,


“ஹலோ அமிர்தா, வெல்கம்”

என தன் வலது கையை எடுத்து, இடது மார்பில் வைத்து அவளை வரவேற்க, அவளும்


“ஹெலோ சார்” என புன்னகைத்தாள். அதன் பின் அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அவளின் வேலையை பற்றியும் விளக்கி கூறினான்.


புதிதில் ஒன்றும் புரியாமல் இருந்தாலும், போக போக வேலையை பற்றி நன்கு தெரிந்து கொண்டாள். ஆரவ் தினமும் அங்கு வரவில்லை என்றாலும், நாளுக்கு ஒருமுறையாவது அவளிடம் அன்றைய வேலையை  பற்றி கேட்டு தெரிந்து கொள்வான்.


நாளாக நாளாக, முதலில் இருந்த பயம் அவளுக்கு தற்பொழுது இல்லை. சகஜமாக அந்த வேலையில் பொருந்தி போனாள். கூடவே ஆரவ் எவ்வளவு உயரத்தில் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.


இப்படியே இரண்டு மாதம் கடந்திருந்தது அவள் அங்கு வேலைக்கு சேர்ந்து. இடையில் ஒரு மாதம் ஆரவ் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டும் வந்திருந்தான்.


அங்கு சென்ற பொழுதும் கூட கிடைத்த நேரங்களில் அவளின் நலனை பற்றி அவன் அறிய தவறவில்லை. கிடைக்கும் நேரங்களில், வேலையை பற்றியும், அவளை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான்.


அவள் மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டு விட்டாலும் இன்னும் முழுதாக மலர விடவில்லை. எடுத்த எடுப்பிலே அவளிடம் காதல் என்று கூறி அவளை பயப்பட வைக்க விரும்பவில்லை.


அவள் மீதான காதலை சொட்டு சொட்டாக தன்னுள் நிரப்பி, பூரணமாக நிரப்பிய பின் தான் அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி சென்று கொண்டிருக்கிறான்.


வெளிநாடும் சென்று விட்டு வந்து விட்டான். தற்பொழுது இங்கே உள்ளூரிலே படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டு கொண்டிருக்கிறான்.


ஆனால் அமிர்தாவை கண்டு கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்ட காரணத்தினால், முதலில் அவளை பார்த்துவிட்டு பின் படப்பிடிப்பு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அலுவலகத்திற்கு வந்து காத்து கொண்டிருந்தான் ஆரவ்ஜெயந்தன்.


மழை வேறு திடீரென்று வந்து விட்டு இருக்க, எப்படி படப்பிடிப்பு நடத்துவது என்ற யோசனையுடன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தவனுக்கு வேறொரு யோசனை வந்தது.


“ஹரி, நாம ஏன் ரெயின் சீன்ஸ்ஸ் எல்லாம் இப்பவே எடுத்துட கூடாது. ஒரிஜினல் மழையே வருதே!! இந்த சீன்ஸ்ஸ் இப்போ எடுத்தா நல்ல வரும்”

என கூறியவனுக்கு ஹரியோ,


“அதுக்கு முதலில் நாம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகணும். இங்கேயே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி படம் எடுக்கிறது”

என கிண்டல் செய்ய,


“ஹரி…” என அழுந்த குரல் கொடுத்தான் ஆரவ்.


“சரி ஓகே ஓகே.., டென்ஷன் ஆகாதீங்க. உங்க பீலிங்ஸ் புரியது. உங்க ஏஹார்ட்ஏ வரவரைக்கும் வெயிட் பண்ணுவோம்”


என அவன் முறைத்ததில் உடனே சமாதான கொடியை பறக்க விட்டான் ஹரி.


அவர்களை நெடு நேரம் காக்க வைத்த பின்னாடியே  அலுவலகம் வந்து சேர்ந்தாள் அமிர்தா. அதுவும் முழுதாக நனைத்தப்படி, ஈரம் சொட்ட சொட்ட என வந்து நின்றவளை கண்டு, இவளை என்ன சொல்வது? என கடுகடுத்தப்படியே பார்த்தான் ஆரவ்.


“என்ன அமிர்தா? இப்படி நனைஞ்சுட்டு வந்து இருக்கீங்க”

என ஹரி கேட்க,


“வரும் போது போது திடீர்னு மழை வந்துடுச்சு அதான். என்ன பண்ண தெரியல நனைச்சுட்டே வந்துட்டேன் சார்”


என கூறியவளை கண்டு ஆரவ்விற்கோ ரெண்டு அடி கொடுத்தால் என்ன என்று தோன்றியது.


“ஹெலோ சார், எப்படி இருக்கீங்க?”

என அமைதியாக நின்றிருந்த ஆரவ்வை பார்த்து அமிர்தா கேட்க, அவனோ


“இதுதான் ஆபீஸ் வர டைம்மா?” என்று கோபமாக கூற, அவளோ திருத்திருத்து நின்றாள்.


“இல்லை சார், இன்னைக்கு தான் லேட் ஆகிடுச்சு. தினமும் கரெட் டைம்க்கு தான் வருவேன். நீங்க வேணும்னா மாணிக்கம் அண்ணா கிட்ட கேளுங்க. ஸாரி சார் மழையினால் தான் லேட் ஆகிடுச்சு”


என மழலை போல மன்னிப்பு வேண்டுபவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. உள்ளுக்குள் அவளை அத்தனை ரசித்தான். ஒருமாதமாக நினைவில் ஆடிய அவளின் வதனத்தை நிஜத்தில் கண்டு பூரித்து போனான் உள்ளுக்குள்.


உன் மீது நான் கொண்ட காதலானது

நீ என்னை காண ஓடி வரவேண்டும்

என்று எதிர்பார்க்கவில்லை!!

என்றோ ஒரு நாள் எதேர்ச்சையாக காண நேரும் ஒரு நொடி

இன்பத்திற்காக மட்டுமே காத்திருக்கிறது!!



பிடிக்கும்…

































Comments