UNEP-14

  அத்தியாயம்..14


          “முதன் முதலா உன்னை நான் பார்த்த  நொடியிலே எனக்குள் நீ வந்துட்ட, அடிப்பட்டு இருந்த உன்னை ஹாஸ்பிடலில் சேர்த்ததும் மயக்க நிலையில் நீ இருக்கும் போது, உன்கிட்ட நான் பேசிட்டு இருந்தேன், அப்போ நான் உன்னை விட்டு எழுந்திரிக்கும் போது நீ என் கையை பிடிச்சுக்கிட்ட, அதுதான் முதன் முதலா உன்னோட காதலை உன் ஆழ் மனசு உணர்ந்த தருணம். அந்த சொல்லப்படாத நம்பிக்கையில் இருந்தது எனக்கான காதல்.


நீ உன் உயிரையே விட போன அன்னைக்கு யாருன்னே தெரியாத நான் சொன்னதும், எனக்காக அந்த முடிவை மாத்திக்கிட்ட, ஏன்னு யோசிச்சியா? அந்த மதிப்புல இருந்தது எனக்கான காதல்


அன்னைக்கு வேலை தேடிட்டு வரும் பொழுது, ஹரி உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான். அப்போ நான் உள்ளே இருக்கேன் தெரிஞ்சதும், சட்டுன்னு என்னை தேடி உன் கண்கள் அலைபாஞ்சதே அந்த தேடல்ல இருந்தது எனக்கான காதல்.


மறுநாள் நீ எனக்கு கால் பண்ண, நான் எடுக்கல, ஆனாலும், திரும்ப திரும்ப கால் பண்ண, அது என்ன என்னோட போனை எடுக்காம போறது? அப்படின்ற என் மேலே உனக்கு வந்த உரிமை உணர்வில் இருந்தது எனக்கான காதல். 


வேலைக்கு சேர்ந்ததும், நான் இன்னைக்கு வருவேனா, நாளைக்கு வருவேனானு, ஒவ்வொரு நாளும் வாசலை எட்டி எட்டி பார்த்துட்டு இருந்த அந்த எதிர்பார்ப்பில் இருந்தது எனக்கான காதல். சிசிடிவி கேமரா இருக்கு நம்ம ஆபீசில்.


ரெண்டு மாசம் கழிச்சு, நான் ஷூட்டிங் முடிச்சு இங்க வந்த போது, என்னை பார்த்ததும் ஒரு பிரைட்னஸ் உன் கண்ணில் வந்து போச்சே அந்த ஒளியில் இருந்தது எனக்கான காதல். எனக்கு அடிப்படும் போது நீ செய்த ஹெல்ப்பை வேணும்னா மனிதாபிமானம்னு வச்சுக்கலாம் ஆனால், ஹாஸ்பிடலில் நான் என் அம்மா கூட பேசும் போது உன் கண்ணில் ஒரு ஏக்கம் தெரிஞ்சுதே அதில் இருந்தது எனக்கான காதல்.


இந்த படம் ஷூட்டிங் அப்போ நிறைய தடவை உன்னை கூட்டிட்டு போய் இருக்கேன், அப்போ எப்போலாம் லவ் சீன்ஸ், இல்லை கொஞ்சம் எமோஷ்னலான சீன்ஸ் வரும் போதெல்லாம், நீ என்னை ஓரக்கண்ணால் பார்த்து இருக்க, அதை நானும் கவனிச்சு இருக்கேன். அந்த ஒரு தருணத்தை என் கூட நீ ஷேர் பண்ணிக்கணும் நினைச்ச பாரு, அந்த நினைப்பில் இருந்தது எனக்கான காதல்.


நேத்து நான் எனக்கு பிடிச்சு இருக்கு, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்டு ரிங் போட்டதுக்கு, உனக்கு பிடிக்கலையா, இல்லைனு சொல்லிட்டு அப்பவே அதை திருப்பி என்கிட்டயே கொடுத்து இருக்கலாம். அதை செய்ய உனக்கு விருப்பமில்லை. அந்த விருப்பத்தில் இருந்தது எனக்கான காதல்.


இன்னும் நிறைய இருக்கு, அதையெல்லாம் சொல்ல, எனக்கு இந்த ஒரு நாள் போதாது. என்ன சொன்ன? என்னை வேண்டாம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கா? எனக்கு நீ தான் வேணும்னு உறுதியா சொல்லறதுக்கு தினம் தினம் ஆயிரம் காரணத்தை உருவாக்கிட்டு இருக்க நீ. அப்புறம் எப்படி என்னை விட்டுட்டு போக சொல்ற? இதோ பார் அமிர்தா. அட் எனி காஸ்ட் நான் உன்னை லவ் பண்றேன். மேரேஜ் பண்ணிக்க போறேன். எல்லாமே உன் சம்மதத்தோடு தான் நடக்கும்.


  என்னை மறந்துடுங்க, பணம் இல்லை, வசதி இல்லை, தகுதி இல்லை, சும்மா அது இதுன்னு நொட்டு காரணங்களை தேடிட்டு இருக்காதே!! எல்லாமே வேஸ்ட் தான். நான் உன் மேலே வச்ச காதலையும், நீ என் மேல் வச்ச காதலையும் நினைச்சு பாரு, ஆட்டோமேட்டிக்கா, நம்ம மேரேஜ்க்கு ஓகே சொல்லுவ. அதுவரை காத்திருக்கிறேன்.


காதலோட இயல்பே காத்திருப்பு தானே!!


இப்போ போய் ரிலாக்ஸா வேலையை பாரு”


என அவள் மனதினை, எடுத்து அவளுக்கே அதை படிதது காட்டியவனை அதிர்ச்சி சூழ பார்த்தாள் அமிர்தா.


திருப்பி பேச ஒரு வார்த்தை வரவில்லை அவளுக்கு. அவன் கூறிய அத்தனையும் உண்மை, அவளே அறியாத அவள் மனதின் பக்கங்களை அவன் கரைத்து குடித்து இருக்கிறான் என்பது விந்தையிலும் விந்தையாக இருந்தது.


ஆரவ் மீதான நேசம் ஒவ்வொரு தருணத்திலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் வளர்ந்து வேர் விட்டு இருந்தது தான். ஆனால் அதை வெளியே கூறவோ, அவன் தன் வாழ்க்கைக்கு துணையாக வேண்டும் என்பதையோ அவள் நினைத்து கூட பார்த்ததில்லை.


இது தான் காதலா? அவன் மீது நான் கொண்ட காதலின் அர்த்தம் இவை தானா? ஒரே ஒரு பார்வையிலும், ஒரே ஒரு ஏக்கத்திலும், ஒரே ஒரு ஆர்வத்திலும் வெளிப்படுமா? வெளிப்பட்டு இருக்கிறதே!! அத்தனையையும் கவனித்து இருக்கிறானே!!


ஏற்க்கனவே ஒருவர் மீது காதல் வந்து அது தோல்வியில் முடிந்த போதும் இன்னொருவர் மேல் காதல் வருமா?  விடை தெரியாமல், அப்படி வரவே வராது என்று திரை போட்டு அடைத்து இருந்ததை, சுக்கு நூறாக உடைத்து விட்டானே!! அவன் மீது காதல் வந்து விட்டு இருக்கிறதே!! இது சரியா? தவறா? தெரியவில்லையே!!


எடுத்து சொல்ல யாருமே இல்லையே!! நாமளே முடிவு செய்தால் அது நல்லதா? அதுவும் குழப்பமாகவே இருந்தது.


அமைதியாக வந்து இருக்கையில் அமர்ந்தவளுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை.


ஆரவ்வும் அவளுக்கான நேரத்தை அவளுக்காகவே கொடுத்தான். யோசிக்கட்டும், குழம்பிய மனதை அவளே தெளிவாகிக்கட்டும் என அதன் பின் அவளை எதற்கும் தொந்தரவு செய்யவில்லை.


ஆனால் அவனின் காதலை ஒவ்வொரு அசைவிலும் காட்டி கொண்டே இருந்தான். நேரத்திற்கு சாப்பிட வைப்பது, நேரத்திற்கு தூங்க சொல்வது, யோசனையில் அமர்ந்திருந்தால், வேலைகள் கொடுத்து மனதை மாற்றுவது, வெளியே செல்லும் பொழுது அழைத்து செல்வது என அவனின் அக்கறை எப்பொழுதும், அவளை சுற்றியே தான் வலம் வந்தது.


அவனின் அக்கறையையும், அதனுள் இருந்த காதலையும் அமிர்தா நன்கு உணர்ந்தாலும், அவள் மௌனத்தை தான் பதிலாக கொடுத்தாள்.


*****************

அன்றைய நாள் ஆரவ்வின் இல்லம் ஆரவாரத்துடன் காணப்பட்டது.


“ஏங்க, அதை இங்க எடுத்து போடுங்க, ஹரி நான் சொன்னது எல்லாம் சரியான நேரத்திற்கு வந்துரும்ல. லக்ஷ்மி சாப்பாடு ரெடியா? முக்கியமா பால்மாவுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சுடு, நான் வந்து பண்றேன், அவனுக்கு அது தான் ரொம்ப பிடிக்கும்”


என அத்தனை பரபரப்பாய், அனைவரையும் வேலை வாங்கி கொண்டும், தானும் ஏற்பாடுகளை கவனித்து கொண்டும், பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் நிர்மலா.


“நீ கொஞ்ச நேரம் உட்கார்ந்து வேலை சொல்றீயா? சின்ன பிள்ளை மாதிரி ஓடி ஆட வேண்டியது, அப்புறம் நயிட் ஆனா, கால் வலிக்குது, முட்டி வலிக்குது சொல்ல வேண்டியது. நீ ஒரு இடமா உட்கார், நாங்க பார்த்துகிறோம்”

என பாலகிருஷ்ணன் கண்டிப்புடன் கூற, உடன் ஹரியும்,


“ஆமாம் மா, நாங்க பார்த்துகிறோம், நீங்க உட்காருங்க. ஏஜே சாருக்கு செய்ய தான் நாங்க இருக்கோமா!!”

என அவன் பங்குக்கும் கூற, நிர்மலாவோ அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை.


“என் பையனுக்கு நான் தான் செய்வேன். இதில் யாரும் தலையிட கூடாது. நான் சொல்றதை மட்டும் நீங்க செஞ்சா போதும். ஹ்ம்ம் சொல்றதையெல்லாம் செய்ங்க”


என அனைவருக்கும் கட்டளையிட்டவர், மகனின் வரவை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார்.


இவ்வளவு மகிழ்ச்சியாக அவர் விழாவை ஏற்பாடு செய்ய காரணம், அவர் மீண்டும் மறுபிறவி எடுத்து, தாய்மையின் பொக்கிஷத்தை பெற்று, அம்மா என்றழைக்க அவர் ஈன்ற செல்வத்தின் பிறந்த தினம் இன்று. ஆம், ஆரவ்ஜெயந்தனின் பிறந்த நாள் இன்று.


அவர் கொண்டாடத்திற்கு அளவுண்டோ?!!


மகனின் பிறந்த நாளை ஒட்டியே, அத்தனையையும் செய்து கொண்டிருந்தார் நிர்மலா, உடன் பாலகிருஷ்ணனும். அவனின் எல்லா பிறந்தநாளும் இப்படி தான். அவர்களுடன் கொண்டாடுவதை தான் அவனும் வழக்கமாக வைத்திருந்தான்.


வெளியில் யாருக்கும் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. அதுவும், சினிமா துறையில் நுழைந்ததிலிருந்து, ஒருவருக்கும் தன்னுடைய பிறந்த நாள் இன்று என்று அவன் கூறியதும் இல்லை, வெளியில் சென்று கொண்டாடடியதும் இல்லை.


வீட்டிலே தாய் தந்தை கூட நேரத்தை செலவழிப்பான். தாய் கையால் பிடித்த உணவை சமைத்து உண்டு, தந்தையிடம் பேசி சிரித்து, ஹரி மற்றும் உடன் இருக்கும் பணியாளர் கூட, அரட்டை அடித்து என்று அன்றைய நாளை மிக மிக அழகாய் மாற்றி கொள்வது தான் அவன் வழக்கம்.


இன்றைய நாளையும், அவ்வாறே செலவிட நினைத்து, வீட்டில் இருந்தவன், எழுந்ததும் குளித்து முடித்து, தாய் தந்தை எடுத்து கொடுத்த, புது துணி அணிந்து கொண்டு, கீழே வர அனைவரும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.


அனைவரது வாழ்த்தையும் வழக்கம் போல் இடது மார்பில் வலது கையை வைத்து ஏற்று கொண்டவன், தாய் தந்தை காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி கொண்டான்.


பின் சாமி கும்பிட்டுவிட்டு, அவனுக்கென்று வாங்கி வைத்த கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டவன், தானும் பெற்று கொண்டான்.


பாலகிருஷ்ணன், அவனை கட்டியணைத்து

“ஆரவ் அடுத்த பெர்த்டே உன் பொண்டாட்டி கூட கொண்டாட ஆசீர்வாதக்கிறேன்”

என வாழ்த்தி, 


“அப்பாவோட கிப்ட்,” என கார் சாவியை கொடுக்க, ஆரவ்விற்கோ ஆனந்த அதிர்ச்சி.


“ப்பா,” என உணர்ச்சி வசப்பட, அவரோ,


“மார்க்கெட்டில் வந்திருக்கிற நியூ மாடல் கார். என் பையனுக்கு வாங்கி தரணும் நினைச்சேன். உடனே வாங்கிட்டேன்”

என கூறியவரிடம், “தேங்க்ஸ் பா” என்றான்.


“அம்மா எதுவும் கிப்ட் தரலையே”

என அவன் நிர்மலாவிடம் சிரிப்புடன் கேட்க,  


“உங்கப்பாவை விட பெரிய கிப்ட் அம்மா வச்சு இருக்கேன் டா”


“என்ன ம்மா, ஏரோப்பிளேன்  வாங்கி வச்சு இருக்கீங்களா?”


என சிரிப்புடன் கேட்டவனை தன்னருகில் பிடித்து நிற்க வைத்தவர், அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து, 


“ஹாப்பி பெர்த்டே  கண்ணா. எப்பொழுதும் சந்தோஷமா இருக்கணும். அப்பா சொன்னது தான் நானும் சொல்றேன், அடுத்த வருஷம் நம்மளோட உன் பொண்டாட்டியும் இருந்து உன் பிறந்தநாளை கொண்டாடனும்”

என வாழ்த்தியவர்,


“அம்மா கிப்ட் எப்படி?”

என புன்னகை முகமாக கேட்க, அவனும்,


“கண்டிப்பா அப்பா கிப்டை விட பெரிசு தான் மா”

என நெகிழிச்சியில் கட்டி கொண்டான் அவரை.


அடுத்து ஹரி, மற்றும் அவனுக்கு கீழ் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் ஆரவ் கேக் எடுத்து ஊட்டி விட, அனைத்தும் புகைப்படமாக சேமிக்கப்பட்டது.


ஹரி, ஆரவ்விடம்,


“சார், நீங்க எப்போதும் இதே போல சந்தோஷமா இருக்கணும். உங்களை போல ஒருத்தர் இந்த உலகத்தில் யாருமே இல்லை. யாருமே அவங்க கிட்ட வேலை செய்யுறவங்களை இவ்வளவு அன்பா, சகமனுஷனை போல பார்க்க மாட்டாங்க. ஆனால், நீங்க எப்போதும் எங்களை உங்களுக்கு நிகரா, ஒரு பிரெண்டாஹா தான் பார்த்து இருக்கீங்க. இந்த உறவு இதே போல எப்போதும் தொடரனும். உங்களுக்காக நான் கோவில் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன். இந்தாங்க”


என உணர்ச்சிவசப்பட்டவன், அவனிடம் பிரசாதத்தை  நீட்ட, அவனோ, புன்னகையுடன்,


“ஹரி, நீ என்னை எப்படி பார்க்கிறேன்னு தெரியல. ஆனால்  எனக்கு நீ எப்போதும் நல்ல பிரெண்ட் தான். நீயே வச்சு விடு”


என்று கூறியவனை கண்டு அகமகிழ்ந்து போனான் ஹரி. அவன் கேட்டப்படியே அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட, அவனை அணைத்து கொண்டான் ஆரவ்.


பின் அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட, அனைவரும் அமர்ந்து பேசி சிரித்து உண்டு மகிழ்ந்தனர்.


வழக்கம் போல் ஆரவ்விற்கு நிர்மலா ஊட்டி விட, அவனின் பிறந்த நாளே அவனுக்கு அப்பொழுது தான் முழுமையடைந்தது.


உண்டு முடித்து, தாய் தந்தையிடம் வளவளத்து கொண்டிருக்க, ஹரி ஆரவ்வை தேடி அவ்விடம் வந்தான்.


“சார், நம்ம அஸோசியேஷன் சார்பா, உங்க பெர்த்டே செலேப்ரேட் பண்ண, பங்ஷன் அரேஞ் பண்ணி இருக்காங்களாம், உங்களை இன்வைட் பண்ணி இருக்காங்க சார். நாம ஈவினிங் ஏஞ்சல் ஹோட்டலுக்கு போற போல இருக்கும்”

என தகவல் கொடுக்க, ஆரவ்வோ


“ஒஹ்ஹ் நோ, யாரு இதெல்லாம் அரேஞ் பண்ணது? நம்மளை கேட்காமல் இவங்களே அரேஞ் பண்ணா எப்படி? இன்னைக்கு என்னோட பெர்த்டேன்னு நான் யார்கிட்டயும் இன்போர்ம் பண்ணவே இல்லையே!! அப்புறம் எப்படி?”

என்று அதிருப்தியுடன் கேட்க, 


“அது தெரியல சார். ஆனால் மே பீ ராமமூர்த்தி சாரா இருக்க வாய்ப்பிருக்கும்னு நினைக்கிறேன். என்ன சார் சொல்லட்டும். கேன்சல் பண்ண சொல்லட்டுமா?”

என்றவனுக்கு


“இந்த ராமமூர்த்தி சாரை”, என பல்லை கடித்தவன்,


“இட்ஸ் ஓகே ஹரி. போய்ட்டு வந்துடலாம். கேன்சல் பண்ண சொன்னா அவ்வளவு மரியாதையா இருக்காது. வரேன்னு இன்பார்ம் பண்ணிடு”

என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டான்.


மனம் ஏனோ அமிர்தாவின் வாழ்த்தை எதிர்பார்த்தது. 

‘அவளுக்கு என்னுடைய பிறந்த நாள் இன்று என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் இருந்தாலும், அவளை பார்த்த பின்பு வரும் என்னுடைய முதல் பிறந்த நாள் அவள் வாழ்த்து சொல்லாமல் எப்படி நிறைவடையும்?’

என அவன் மனம் ஏங்கி கொண்டிருந்தது.


“ஈவினிங் பார்ட்டிக்கு வர சொன்னால் நிச்சயம் அவகிட்ட இருந்து விஷசஸ் வாங்கிகலாம். எப்படி பார்ட்டிக்கு இன்வைட் பண்றது?”


என தனக்கு தானே பேசியப்படியே யோசனையில் ஆழ்ந்தான் ஆரவ்.


உடனே ஹரிக்கு அழைப்பு விடுத்தவன், அவன் ஏற்றதும்,


“ஹரி, ஈவினிங் பார்ட்டிக்கு அமிர்தாவை இன்வைட் பண்ணிடு. நான் சொன்னதா சொல்லாதே!! நீயே பண்ற மாதிரி பண்ணிடு”

என கூற, ஹரியோ,


“சார், என்னை கோர்த்து விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகலாம் பார்கிறீங்களா? உங்க போதைக்கு நான் ஊறுகாயா?”


என கிண்டடிலிக்க, 

“ஐ அம் யூர் பெஸ்ட் பிரெண்ட் ஹரி. இது ஒரு கூடபண்ண மாட்டியா?”

என செல்லம் கொஞ்ச,


“சரி சரி கூப்பிறேன். வரமாட்டேன் சொல்லிட்டா என்ன பண்றது?”


“அதெல்லாம் சொல்ல மாட்டா, கண்டிப்பா வருவா. நீ ஜஸ்ட் கூப்பிட்டு பாரு”


என்றவனிடம், சரியென்று கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான் ஹரி.


பின் அமிர்தாவிற்கு அழைக்க, அன்றைய நாள் அலுவலகம் விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தால் அவள் வீட்டிலிருக்க, இவன் அழைத்ததும் அலைபேசியை உயிர்பித்தவள்,


“சொல்லுங்க ஹரி சார்” என்றாள்.


“அமிர்தா, ஈவினிங் ஏதாவது ஒர்க் இருக்கா? இல்லை நீங்க பிரீயா?”


என்று கேட்க, ஏன் கேட்கிறான் என்பது புரியாது,


“எதுவும் ஒர்க் இல்லை சார். ஏன் சார், என்ன விஷயம்?”

என்று திருப்பி கேட்டாள்.


“அமிர்தா, உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா? இன்னைக்கு ஆரவ் சார்க்கு பெர்த்டே”

என்றதும், அவள் கண்கள் விரிந்து கொண்டன. 


“பொதுவா, ஆரவ் சார் எப்போதும் அவரோட பெர்த்டேவை யாருக்கும் சொல்ல மாட்டார். வீட்டிலே செலெப்ரெட் பண்ணிட்டு விட்டுடுவார். ஆனால் இந்த வருஷம், அவர் பெர்த்டேவை கிராண்டா சேலெப்ரெட் பண்ண அஸோசியேஷன் டிசைட் பண்ணி, ஈவினிங் பார்ட்டி அரேஜ் பண்ணி இருக்காங்க. நீங்களும் வரணும்”

என அவன் விஷயத்தை கூற அவளோ,


“நானா? நான் எதுக்கு?” என அவள் தயங்கினாள்.


“என்ன அமிர்தா? நமக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி. நாம தானே அவருக்கு முன்னே இருந்து செய்யணும். உங்களை கூப்பிறது அவருக்கே தெரியாது. உங்களுக்கு அவரை வாழத்தணும்னு இஷ்டம் இருந்தா வாங்க. இல்லைனா பரவாயில்லை. என்ன நாமளே போகாமல் இருந்தால், அவருக்கு அவ்வளவா மரியாதையா இருக்காது. அதுக்கு தான் சொன்னேன்”


என அவன் கூறிய அனைத்தையும் அசைபோட்டவள், தாம் போகாமல் இருந்து அது அவனுக்கு மரியாதை குறைவாக ஆகி விட்டால் என்ன செய்வது? என யோசித்தவள், அவனுக்கு பிறந்தநாள் ஒரு வாழ்த்து சொல்வதில் என்ன குறைந்து விட போகிறோம் என்று அவனுக்காக பரிந்துரை செய்த மனதின் சொல் பேச்சு கேட்டாள். கூடவே அவனுக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற ஆசையும் வரத்தான் செய்தது.


“ஓகே சார், நான் வரேன். எனக்கு அட்ரஸ் அனுப்பி விடுங்க”

என கூறியதும், ஹரியோ,


“ரொம்ப சந்தோஷம் அமிர்தா. அனுப்பி வைக்கிறேன் ஈவினிங் வந்துருங்க”


எனக் கூறி அலைபேசியை அணைத்தான். உடனே விஷயத்தை ஆரவ்விற்கு பகிர்ந்து கொள்ள, அவனோ சந்தோஷ மிகுதியில்,


“ஒஹ்ஹ் எஸ்.. எஸ்..” என அறைக்குள் துள்ளி குதித்தவன், 


“தேங்க்ஸ் ஹரி, தேங்க் யூ சோ மச்” என அவனுக்கு நன்றி தெரிவிக்க, அவனும்,


“சரி சரி, சந்தோஷமா இருங்க. உங்க தேங்க்ஸ் வேண்டாம். சம்பளத்தில் ஐந்நூறு ரூபாய் ஏத்தி கொடுங்க போதும்”


என கிண்டலை ஆரம்பிக்க, ஆரவ்வோ,


“ஐந்நூறு ரூபாய் என்ன? ஆயிரம் ரூபாயா ஏத்தி தரேன்”

என்றான்.


“ஆத்தி தெரிஞ்சு இருந்தா, இன்னும் எஸ்ட்ரா கேட்டு இருப்பேனே”


என ஹரி கூறியதும், “ஹரி…” என ராகம் இழுக்க,


“சும்மா கிண்டல் பண்ணேன் சார். சரி ஈவினிங் ரெடியா இருங்க”


என்று கூறி அலைபேசியை அணைக்க போக, ஆரவ்வோ


“ஹரி அமிர்தாவுக்கு கரெட்டா அட்ட்ரஸ் அனுப்பிடு. அவளை நீ தான் பார்த்துக்கணும். அங்கே எப்படி இருக்குமோ, எனக்கு கவனிக்க நேரம் இருக்காது”

என்றவனுக்கு 


“எல்லாம் நான் பார்த்துகிறேன் சார். நீங்க வொரி பண்ணாமல் இருங்க”

என்று கூறி அலைபேசியை அணைத்தான்.


அமிர்தா அஞ்சலியிடம்,


“அஞ்சலி, இன்னைக்கு ஆரவ் சார்க்கு பெர்த்டேவாம். ஈவினிங் ஏதோ பார்டி அரேஞ் பண்ணி இருக்கிறதா ஹரி சார் சொல்றார். நான் போய்ட்டு வந்துடட்டுமா?”

என அனுமதி கேட்க, அஞ்சலியோ,


“தாராளமா போய்ட்டு வா கா” என்றாள்.


“வெறும் கையோடு எப்படி போறது, ஏதாச்சும் கிப்ட் வாங்கணுமே!! என்ன வாங்குறது”

என அமிர்தா யோசனைக்குள்ளாக, அஞ்சலியோ,


“கடைக்கு போய் பாரு, அங்கே போனதும் ஐடியா கிடைக்கும் அப்போ வாங்கிட்டு போ”


என அறிவுரை கூற, அவளுக்கும் அது சரியென்று பட்டது.


மாலை சூரியன் மேற்கில், தலைகவிழ்ந்த தருணம், அமிர்தா ஆரவ்வின் பிறந்தநாள் விழாவிற்கு கிளம்பி, அவனுக்கு பரிசு பொருள் வாங்க கடை வீதிக்கு செல்ல, என்ன வாங்கலாம் என யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு, அங்கிருந்த ஒரு சட்டை மீது கவனம் சென்றது.


ஏனோ அந்த சட்டை ஆரவ்விற்கு போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, அதையே வாங்கலாம் என்று முடிவு செய்து, தன்னிடம் இருந்த ஐந்நூறு ரூபாய்க்கு அந்த சட்டையை வாங்கி கொண்டு அங்கு புறப்பட்டாள்.


விழா நடக்கும் இடத்திற்கு, ஆரவ் வருவதற்கு முன்னே அங்கே பல பிரபலங்கள் குவிந்து இருந்தது. ராமமூர்த்தி, தன் குடும்பத்துடன் அங்கு முன்னமே வந்து அனைத்து வேலைகளையும் முன்னே நின்று செய்து கொண்டிருந்தார்.


அவர் தான், அந்த விழாவை ஏற்பாடு செய்தது என அங்கு ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பாதி பேருக்கு மேல் தெரியாததால், வந்தவர்கள் அனைவரும் ராமமூர்த்தியை பாராட்டி தள்ளினர்.


‘இதெல்லாம் ஆரவ் வந்த பின்னாடி நீங்க சொல்லணும் தான் இவ்வளவும் பண்றேன். சொல்லிடுங்க டா’ என மனதோடு கூறி கொண்டவர், வெளியில் இளித்து வைத்தார்.


விழா நடக்கும் இடமே வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்க, மேலும் ஒளியூட்டும் வகையில் தன்னுடைய பிரதியோகமான காரில் வந்து இறங்கினான் ஆரவ்ஜெயந்தன்.


அவனின் பிறந்தநாளை ஒட்டி, விழா ஏற்பாடு செய்திருக்கிறது என்பதை அறிந்த ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து இருக்க, அங்கிருக்கும் காவலர்கள் அவர்களை அடக்கியப்படி இருக்க, ஆரவ்விற்கு தான் அது சங்கடமாக இருந்தது. இது போல நடக்க கூடாது என்று தான், அவன் இதையெல்லாம் ஆதரிப்பது இல்லை.


இந்த முறை தப்ப முடியவில்லை. அவனது குழுமத்தில் இருந்து அழைப்பு விடுக்கும் போது அதனை தவிர்க்க இயலாது வந்து விட்டான்.


அவன் உள்ளே நுழைந்ததும், வந்திருந்த அனைவரும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்று அவர்களுக்கான மரியாதையை கொடுத்தான். அதற்குள் அவனருகே  ஓடி வந்த ராமமூர்த்தி, 


“ஹலோ ஏஜே, ஹாப்பி பெர்த்டே” எனக் கூறி அவனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்த, அவர் செய்கையை கண்டு உள்ளுக்குள் எரிச்சல் உண்டானலும் வெளியில் இளித்து வைத்தான்.


அவர் கொடுத்த அனைத்தையும் ஹரியிடம் கொடுத்து விட்டு உள்ளே நடக்க, அங்கே ஸ்ரேயா, கஸ்தூரி என அவர்கள் வேறு அங்கு இருந்தனர்.


“ஏன் டா இந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு எல்லா இடத்துக்கும் குடும்பத்தோடு வந்துறாரு”

என ஆரவ், ஹரி காதில் முணுமுணுக்க, 


“என்ன பண்றது, கொஞ்ச நேரம் தான் சாமளிச்சு விடுங்க”

என்றான் அவனும் மெல்லமாக.


“சரி அமிர்தா வராங்களா பாரு. ஒரே கூட்டமா இருக்கு, பத்திரமா கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு”

என ஆரவ் கூறியதும், ஹரியும் சரியென்று கூறினான்.


உள்ளே சென்றதும், ஸ்ரேயா அவனிடம்,


“ஹாப்பி பெர்த்டே ஏஜே, என்று கூறி கைகுலுக்க வர, அவனோ அவளது கைக்குலுக்கலை அலட்சியப்படுத்தி, எப்பொழுதும் போல இடது மார்பில் வலது கையை வைத்து தனது நன்றியை கூறினான்.


அதில் முகம் சுருங்க ஸ்ரேயா அருகில் இருந்த ராமமூர்த்தியை பார்க்க, அவரோ அவளிடம்,


“ஸ்ரேயா, ஆரவ்கு கிப்ட் வாங்கிட்டு வந்தோமே அதை கொடு மா”

என சாமளித்தார். அவளும் அவனுக்கு தான் வாங்கி வந்ததை கொடுக்க, அதுவோ பெரிய பார்சலாக இருந்தது. அதனை பார்த்தவன், 


“சார், எனக்கு இது போல பங்ஷன் பண்றதுலையே விருப்பம் இல்லை. இதில் கிப்ட்லாம் வேண்டாமே!! நானே யார் என் பெர்த்டேவை இங்க சொன்னதுன்னு பார்த்துட்டு இருக்கேன். ஆள் யாருன்னு மட்டும் தெரியட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு. தேவையில்லாத வேலைய பார்த்து வச்சு இருக்காங்க, கொஞ்சம் கூட அறிவில்லாமல்!!


என்னை கேட்காமல் என்னோட பெர்சனல் விஷயத்தை சொல்ல அவங்க யாரு? பேசிக் மேனர்ஸ் கூட தெரியல. அன்எஜுகேட்டேட் பெல்லோஸ்”


என சரமாரியாக திட்ட, ராம்மூர்த்திக்கோ திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவஸ்தையில் நெளிந்தார்.


அதன் பின் ஆரவ் நாசூக்காக அவர்களது பரிசுபொருளை தவிர்த்து விட்டு வேறொருவரிடம்பேச ஆரம்பிக்க, ராமமூர்த்திக்கு தான் முள்ளின் மேல் இருப்பது போல் அத்தனை அவமானமாக இருந்தது.


“பார்த்தீங்களா டாடி, எப்படி இன்சல்ட் பண்ணிட்டு போறான்னு? இதுக்கு தான் சொன்னேன், இவனுக்கு போய் பார்ட்டி அரேஞ் பண்ணி எல்லா வேலையும் செஞ்சோம் பாருங்க நம்மளை தான் சொல்லணும். சீக்கிரம் கிளம்புவோம் டாடி”


என ஸ்ரேயா கோபப்பட, ராமமூர்த்தியோ, 


“விடு ஸ்ரேயா, பார்த்துக்கலாம்” என அவளை சமாதனப்படுத்தியவர் ஆரவ்வை தான் கவனித்து கொண்டிருந்தார்.


ஆரவ் அங்கிருப்பவர்களிடம் பேசினாலும், அடிக்கடி அவன் கண்கள் வாசலை தொட்டு தொட்டு மீள்வதை கண்டு, ராமமூர்த்திகோ புருவங்கள் முடிச்சிட்டன. 


யாரையோ அவன் எதிர்பார்கிறான் என அவருக்கு புரிந்தது. கேக் வெட்ட அழைத்த போது கூட, கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று வேறு கூறிவிட, அவரின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.


இடத்தை கண்டுபிடித்து, அமிர்தா, அந்த இடத்திற்கு வர, அங்கே பார்த்தால் அந்த இடத்தின் வாயிலில் அத்தனை கூட்டம். பார்த்தவள் மலைத்து போய் விட்டாள், இவ்வளவு பேரை மீறி எப்படி உள்ளே செல்வது என்று புரியாது, ஹரிக்கு அழைக்க, அவனது அலைபேசியோ ரிங் போய் கொண்டே இருந்ததே தவிர அழைப்பை ஏற்கவில்லை. ஆரவ்விற்கு அழைக்க, அவனது அலைபேசியும் அதே நிலை தான்.


ராமமூர்த்தி, எதேர்ச்சையாக விழா நடக்கும் இடத்தை விட்டு வெளியே வர,  கூட்டத்தில் ஒருவராக, உள்ளே வர பார்த்து கொண்டிருந்த அமிர்தாவை கண்டதும் அவரின் அத்தனை சந்தேகமும் ஊர்ஜிதம் ஆனது. சட்டென்று திட்டத்தை போட்டவர், அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.



அதிசயம் நிறைந்த 

இந்த உலக புத்தகத்தில்

ரகசியமாய்

எனக்கே எனக்கான

பக்கம்

அவளும்…,

அவள் என் மீது வைத்திருக்கும்

காதல் தானே!!


பிடிக்கும்…














Comments