UNEP-16

 அத்தியாயம்..16


பிடித்ததும்

ரசித்ததும்

நினைத்ததும்

கிடைத்ததிங்கே உன்னால்


தனித்ததும்

தவித்ததும்

துடித்ததும்

வலித்ததெல்லாம் உன்னால்


அதிகாலை உன் விழியில்

அழகாக பூத்திருப்பேன்

இரவென்றால் உன் அருகே

மெழுகாக காத்திருப்பேன்

தடுமாறி போனேன் கொஞ்சமே….


நீ பார்க்கும் பார்வை கண்ணோடு

ஆஹா ஹா

நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு

ஆஹா ஹா


என சத்தியபிரகாஷ் குரலின் இனிமை அந்த காரை நிறைத்து கொண்டிருக்க, அதன் இனிமையை  தன்னவளுடன் அனுபவித்து, அந்த பயணத்தை ஆழ்ந்து ரசித்து கொண்டிருந்தான் ஆரவ்ஜெயந்தன். அதில் ஒலித்த ஒவ்வொரு வரியும், அவனே அவளுக்கு கூறுவது போலவே இருக்க, அடிக்கடி அவளை திரும்பி பார்த்து கொண்டே வர, அவளுக்கும் அது புரிந்தாலும், அவன் புறம் திரும்பாது வெளியே வேடிக்கை பார்த்தப்படி தான் அந்த பயணத்தை மேற்கொண்டாள் அமிர்தா.


அவளுடைய மௌனம் அவனை கோபப்படுத்துகிறது,

அந்த கோபம் அவனை காயப்படுத்துகிறது, ஆனால்,

அந்த காயம் அவனை காதலிக்க வைக்கிறதே!! அது போதுமே அவனுக்கு!! அந்த காதல் தானே அவளை அவனருகில் வைத்திருக்கிறது. அவள் அருகில் இருந்தாலே போதுமே, வேறென்ன வேண்டும் அவனுக்கு.


இதோ, அதோ என்று ஆரவ் அவன் காதலை அவளிடம் ஒப்படைத்து, ஒருமாதம் மின்னல் போல் கடந்து விட்டிருந்தது. அவளோ அவனை காத்திருக்க வைக்கிறாள், அவனும் அந்த காத்திருப்பில் காதலித்து கொண்டிருக்கிறான்.

இப்படி தான் முரண்பாடோடு சென்று கொண்டிருக்கிறது அவர்களது காதல் வாழ்க்கை.


இதன் முடிவு என்ன? இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என எதுவுமோ தெரியாது இருவருக்கும். ஆனாலும் சென்று கொண்டு தான் இருக்கிறது, அவர்கள் காதலை மட்டுமே மூலாதாரமாக வைத்து!!


ஒருநாள், ஹரி கூட அவனிடம்,


"ஏன் சார்? அமிர்தா கிட்ட உங்க லவ்வை சொல்லிடீங்க, அது சரிதான். ஆனால் அவங்க எதுவும் பதில் சொல்ற மாதிரியே தெரியலையே!! இப்படி இருந்தா எப்படி? ஏன்மா உனக்கு பிடிச்சு இருக்கா? இல்லையா? தெளிவா சொல்லுன்னு, ஸ்ட்ரிக்ட்டா கேட்க வேண்டியது தானே!!"

என கேட்க, ஆரவ்வோ,


“ஹரி, காதலன்னா என்ன நினைச்ச நீ? ஜஸ்ட் நான் உன்னை லவ் பண்றேன், நீயும் என்னை லவ் பண்ணுன்னு சொல்றதா? இல்லை என்னை லவ் பண்ண முடியுமா? முடியாதா?ன்னு மிரடுறதா? இவ்வளவு பிரஷர் போட்டு அந்த லவ்வை பிடுங்கி என்ன பண்ண போறோம்?


லவ்ன்றது ஒரு அழகான பீலிங் ஹரி. நினைக்கும் போதே, உள்ளுக்குள் ஒரு மாதிரி ஹாப்பினஸ் வந்து, அது நம்ம பேஸ்ல ரிஃப்லெக்ட் ஆகணும். எனக்கு வந்தது போல, அது அமிர்தாவுக்கும் வரணும்ல. அப்படியே வந்தாலும், அதை ஒத்துக்கொள்ள தனிமனசும் வேணும். அவ யோசிக்கிறா? பயப்படுறா? இதில் தப்பு என்ன இருக்கு? இதில் அவளோட வாழ்க்கையும் இருக்கு, அவ வாழ்க்கையை அவ தானே முடிவு பண்ணணும்.


 எனக்குள் வந்த காதலை சொல்லவே எனக்கு எத்தனை நாள் ஆச்சு? அதே போல தானே அவளும். அவளோட பீலிங்ஸை என்னால் புரிஞ்சுக்க முடியுது. என்ன அவசரம் பொறுமையா சொல்லட்டுமே!! அவளோட முடிவுக்காக காத்திருக்கும் இந்த காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஹரி. 


என் மேலே அவ வச்ச காதலை ஒத்துக்க வைக்க, நான் பண்ற ஒரு சில கிறுக்குதனம் எனக்கு இன்னும் ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. 


பிறந்த குழந்தையை முதன் முதலாய் தூக்கும் போது நமக்கு ஒரு தடுமாற்றம் வரும், படப்படப்பு வரும், பயமா இருக்கும். எத்தனை வந்தாலும், கையில் வச்சுக்கணும் தோணும். எப்படியோ வாங்கி வச்சுட்ட, அப்படியே பார்த்துட்டே இருப்போம். நிறைய பேசணும், கொஞ்சணும் தோணும், ஆனால் குழந்தைக்கு உடம்பு வலிக்குமோ, சரியா தூக்கலைன்னா அழுமோனு கையை கூட அசைக்காமல் அப்படியே குழந்தையை பார்த்து சிரிச்சுட்டே இருப்போம்.


முதல் தடவை மட்டுமில்ல, அடுத்தடுத்து, நமக்கு பழக்கம் வர வரை, குழந்தை நம்மகிட்ட பழகிற வரை, தூக்கும் போதெல்லாம் இப்படி தான் ஏதாவது செய்வோம். இப்போ என் காதலும் பிறந்த குழந்தை மாதிரி தான், கொஞ்சம், கொஞ்சமா தான் பழக்க முடியும். அதுவரை தள்ளி இருக்க முடியாது. கூடவே இருந்தா தான், என்கூட ஈஸியா பழகும். அதை தான் பண்ணிட்டு இருக்கேன்.


லவ் யூ என்ற இரண்டு வார்த்தைகாக, நம்மளோட அத்தனையையும் இழக்க தாயாரா இருக்கும் இந்த காதல் செமையா பிடிச்சு இருக்கு”


என விளக்கியவனை ஆச்சரியமாக பார்த்தான் ஹரி.


“சார், நீங்க சொல்ற அழக பார்த்தாலே, எனக்குமே லவ் பண்ணனும் தோணுது. ஆனால் பாருங்க, பொண்ணு தான் இல்லை. சரி விடுங்க, பியூச்சர்ல, யாரையாவது லவ் பண்ணா கண்டிப்பா உங்க கிட்டயிருந்து தான் ஐடியா வாங்குவேன். ஒழுங்கா சொல்லி தரணும் சரியா”

என கூறியவனை கண்டு சிரித்தவன்,


“நிச்சயம் ஹரி, உன் லவ்வுக்கு என்ன ஹெல்ப்னாலும் நான் செய்வேன்”

என்று வாக்கு கொடுத்தான் ஆரவ். 


அமிர்தாவை பற்றி அத்தனை புரிதலுடன் ஹரியிடம் கூறியவன், அதில் இன்றளவும் எந்த மாற்றமும் இல்லாமல் தான் நடந்து கொள்கிறான்.


இதோ இன்றும் கூட, அவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்க, அதன் பொருட்டு, படத்தின் குழுவினர் ஊடகவிலயார்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்க, அதற்கு தான் அழைத்து சென்று கொண்டிருக்கிறான். அதுவும் அவளிடம் சொல்லாமலே.


காலையில் அவளுக்கு அழைத்தவன், இன்று ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல போகிறோம். கிளம்பி வந்துடு என்று நேரத்தை கூறியவன், அவளின் பதிலை கூட எதிர்பார்க்காது, அழைப்பை துண்டிக்க, அவளுக்கோ ஐயோ என்றானது.


எத்தனையோ முறை கூறிவிட்டாள், இதெல்லாம் சரி வராது. உங்க நினைப்பை மாத்திக்கோங்க. நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது என்று, எதையுமே அவன் காதில் வாங்குவது போலவே தெரியவில்லை. இதுபோல் எங்கு சென்றாலும் உடன் அழைத்து கொண்டு சென்று, அவளுடன் அவன் நேரத்தை செலவிட்டு, அவன் காதலை காண்பித்து கொண்டே இருந்தான்.


அவன் அழைத்தால், அவளால் போகாமல் இருக்க முடியவில்லை. “நீயும் வரணும்னு ஆசைப்படுறேன். என்கூட வர விருப்பம் இருந்தா வா, இல்லைன்னா பரவாயில்லை”

என்று, ஏக்கத்துடன் கேட்பவனிடம் என்னவென்று மறுத்து சொல்ல!! ஒரு அளவிற்கு மேல் அவளால் அவனை எதிர்த்து பேச முடியவில்லை. என்ன பேசினாலும் கடைசியில் அவன் காதலில் வந்தல்லவா நிற்கிறான். எப்படி மறுத்து விட முடியும் அவளால்?!!


அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு வருபளிடம், 


“எங்க போறோம் கேட்க மாட்டியா அமிர்தா”

என ஆரவ்  பேச்சை ஆரம்பிக்க, அமிர்தாவோ,


“நான் கேட்டாலும் நீங்க சொல்ல போறதில்லை. அதான் எதுக்கு கேட்டுகிட்டுனு அமைதியா வரேன்”


என பதில் கூறியவள் அவன் புறம் திரும்பவே இல்லை.


“இன்னைக்கு பிரெஸ் மீட் இருக்கு. அதுக்கு தான் போறோம்”


“இதை காலையில் எனக்கு கால் பண்ணி சொல்லும் போதே சொல்லி இருக்கணும். இப்போ சொன்னா நான் என்ன சொல்றது. அங்கே நான் எதுக்கு? எனக்கு அங்கே என்ன வேலை இருக்கு?”


என வெடுக்கென்று கேட்டவளை சிரிப்புடன் பார்த்தவன்,


“எப்படியும் போய்ட்டு வர ஹால்ப் டே ஆகிடும், அதுவரை உன்னை பார்க்காமல், உன்கிட்ட பேசாமல் இருக்கணும். அந்த கஷ்டம் எதுக்கு?அதான் கூட்டிட்டு வந்துட்டேன். எப்படி?”


என பெருமையடித்து கொண்டவனை, எதை கொண்டு அடித்தால் தகும் என்று தான் யோசித்தாள் அமிர்தா.


அவள் முகம் அப்பட்டமாய் அதிருப்தியை காட்ட, அதை கவனித்த ஆரவ்வோ,


“எல்லாம் எதுக்காக பண்றேன் அமிர்தா? நீ உன் காதலை சொல்லவும், நம்ம மேரேஜ் சீக்கிரம் நடக்கவும் தானே!! நீ ஓகே மட்டும் சொல்லிடு.. அப்புறம்..,


என இடைவெளி விட்டவன், அவளை பார்க்க, அவளும் ஒருவேளை தொல்லை செய்ய மாட்டேன் என கூற போகிறானோ என்று எதிர்பார்க்க, ஆரவ்வோ,


“என்னுடைய நேரத்தை இன்னும் அதிகமா உன்கூட செலவழித்து காதலிப்பேன். நீ ஓகே சொல்லிட்டா, வேறென்ன வேலை எனக்கு? உன்கூடவே தானே இருப்பேன்”


என்று கூற, அவளோ வெறித்து பார்த்தாள் அவனை. இந்த கண்மூடிதனமான காதலை தான் அவள் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுகிறாளே!!  எத்தனை தூரம் தள்ளி விட்டாலும், நீரில் அமிழ்த்திய பந்து போல் மீண்டும் மீண்டும் அவளிடம் வந்து நிற்கிறானே!! என்று ஆயாசமாக இருந்தது.


அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாகிவிட்டாள். அவள் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் மௌனம் மட்டும் தானே!! அதை கொண்டு தான் அவனை வதைத்து கொண்டிருக்கிறாள்.


ஒரு குறிப்பிட்ட  ஹோட்டலில் உள்ள, கான்பிரன்ஸ் ஹாலில் தான் படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களை  சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதன் படி, அந்த ஹோட்டலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன், பின்னால் மற்றொரு காரில் வந்த ஹரியை தன்னருகில் அழைத்தான்.


“ஹரி, நான் முன்னே போறேன், நீ அமிர்தாவை கூட்டிட்டு வந்துடு, உள்ளே ஒரு சேப்பான இடத்தில் அவளை இருக்க வச்சுடு. கார்ட் ஒருத்தரை அவக்கூடவே இருக்க சொல்லு. லாஸ்ட் டைம் போல எதுவும் நடக்க கூடாது. பீ கேர்புல்”


என அறிவுறுத்திவிட்டு அந்த ஹாலை நோக்கி நடந்தான் ஆரவ்ஜெயந்தன்.


படக்குழுவில் ஏற்க்கனவே பலபேர் அங்கு வந்துவிட்டு இருந்தனர். அங்குள்ள மேடையில் அனைவரும் வீற்றிருக்க, ஏஜேவும் அதில் ஒருவராய் கம்பீரமாக சென்று கால்மீது கால் போட்டு அமர்ந்து கொண்டான்.


ஹரியும், அமிர்தாவை பத்திரிகையாளர்கள் அமர்த்திருந்த வரிசையின் கடைசியில் அமர்த்தி விட்டு, ஒரு பாதுகாவலரையும் நிறுத்தி விட்டு, ஆரவ்வின் அருகே வந்து நின்று கொண்டான்.


வந்திருந்த அனைவருக்கும் பூங்கொத்து வழங்கி கௌரப்படுத்த, அனைவரும் இன்முகத்துடன் அதனை ஏற்று கொண்டு அமர்ந்திருக்க, அங்கே ராமமூர்த்தி வருகை புரிந்தார்.


ஹரியை கண் ஜாடையில் அருகில் அழைத்த ஆரவ்,


“என்ன ஹரி? இவர் எங்க இங்க வந்தார்? படத்தில் ஒர்க் பண்ணவங்க மட்டும் தானே கூப்பிட்டு இருந்தாங்க”

எனக் கேட்க, ஹரியும்


“நீங்க எங்க போனாலும், நிழல் போல அவரும் உங்க பின்னாடியே வந்துறார் என்ன பண்ண சொல்றீங்க? அவர் பொண்ணை உங்களுக்கு கட்டுற வரை ஓய மாட்டார் போல. அவர் கிட்ட விஷயத்தை போட்டு உடைங்க. அப்பவாவது அமைதியா இருக்காரா பார்ப்போம்”


என அறிவுறுத்த, ஆரவ்விற்கும் அது தான் சரியென்று பட்டது. 


“விசாரிச்சுட்டேன், நீங்க வரீங்களா? இல்லையான்னு கன்பார்ம் பண்ணிட்டு தான் புரோடூயூசர் கிட்ட நானும் மீட்டிங் வரேன் சொல்லி இருக்கார் போல, வரேன்னு சொல்றவர் கிட்ட வராதீங்கன்னா சொல்ல முடியும். அவரும் வாங்க சொல்லிட்டார். அதான் வந்து இருக்கார்”


என சொல்லி முடிக்க, மனதில் மூண்ட எரிச்சலை வெளியே தெரியாதளவுக்கு முகத்தை வைத்து கொள்ள மிகவும் கடினப்பட்டு தான் போனான் ஆரவ்.


அருகில் வந்த ராமமூர்த்தி,


“ஹலோ ஏஜே, ஹவ் ஆர் யூ” என்று கேட்க, அவனோ


“பைன்” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான். 


“புரோடுயூசர் எனக்கு கால் பண்ணி கண்டிப்பா நான் வரணும் சொல்லிட்டான். நான் வந்தா தான் அவனோட வெற்றி முழுமையடையும்னு ஒரே அன்பு தொல்லை. என்கிட்ட தொழில் கத்துகிட்டு இப்போ வளர்ந்து நிற்கிறான். நான் பாராட்டாமல் போனா ரொம்ப வருத்தப்படுவான், அதான் இருந்தா அப்போய்ண்ட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு வந்து இருக்கேன்”

என அடித்து விட,


“நாராயணனா இந்த கொசு தொல்லை தாங்க முடியல. மருந்தடிச்சு கொல்லுங்க டா”

என சரியாக ஹரியின் அலைபேசியில் இருந்து கவுண்டமணி கூறிய வசனம், அந்த நேரம் சரியாக ஒலிக்க, சத்தமாக சிரித்து விட்டான் ஆரவ்ஜெயந்தன்.


ராமமூர்த்தி பின்னால் திரும்பி பார்த்து ஹரியை முறைக்க, ஹரியோ,


“ரிங்டோன் சார்” என இளித்து வைக்க, ஆரவ்வால் சிரிப்பை அடக்க முடியவில்லை.


ராமமூர்த்தி முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து விட, ஆரவ்வும், ஹரியும் ஒருவரை ஒருவர் பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்து கொண்டனர்.


சிரிக்கும் அவன் அழகை தான், ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் அமிர்தா. கடிவாளம் போட்டு கட்டி வைப்பதற்கு மனம் ஒன்றும் பந்தய குதிரை இல்லையே!!


அவள் மனம் அவளையும் மீறி ரசிக்கிறதே!! என்ன செய்ய? அவள் ரசித்து பார்ப்பதை, ஆரவ்வும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.


யாரும் அறியா வண்ணம், அவளை நோக்கி என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்க, சட்டென்று அதில் நினைவு கலைந்தவள், ஒன்றுமில்லை என்று வேகமாக தலையாட்டினாள்.


“பொய் சொல்லாதே!! என்னை தானே சயிட் அடிச்சுட்டு இருந்த!!”

என உன் மனதை கண்டுகொண்டேன் நான் என்று குறுந்செய்தி அவளுக்கு அனுப்பி விட, அதை படித்தவள், நிமிர்ந்து பார்த்து அவனை முறைக்க, அவனின் புன்னகையோ மாறாமல் அப்படியே இருந்தது. 


அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிரூபர்கள் வந்துவிட்டிருக்க, நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.


பொதுவான கேள்விகளை தான் படக்குழுவினரை மாறி மாறி கேட்டு கொண்டிருந்தனர் பத்திரிக்கையாளர்கள். படம் உருவான விதம், என்னென்ன இடையூறுகள் வந்தது? எப்படி அதை எதிர்கொண்டு வந்தனர். நாயகன் நாயகியின் நடிப்பு, இயக்கிய விதம், இசையை பற்றி என எப்பொழுதும் கேட்கப்படும் வழக்கமான கேள்விகள் கேட்கப்பட, ஆரவ் அவனுக்கான கேள்விகளுக்கு மட்டும் தேவையான பதில்களை புன்னகை மாறாமல், எந்தவித எதிர்மறை பதிலும் தராது, எல்லாமே நல்லவிதமாகவே கூறினான்.


அவனின் தனித்தன்மையே அது தானே!!


“சார், படத்தை பத்தி நிறைய கேட்டுட்டோம். கொஞ்சம் பெர்சனல் பத்தி கேட்கலாமா”

என ஒரு பத்திரிக்கையாளர், ஆரவ்வை பார்த்து கேட்க, அவனோ,


“சொல்ல கூடிய பதிலாக இருக்கும் கேள்விகளை கேளுங்க”

என கூறியவனை கண்டு மெச்சி கொண்டனர் அனைவரும்.


“தொடர்ந்து காதல் படமாவே கொடுத்து, அதில் வெற்றியும் பெற்று இருக்கீங்க. அப்படின்னா உங்களுக்கும் காதல் இருக்கா?” என கேட்க,


“காதல் எல்லாருக்குள்ளேயும் தான் இருக்கு. சோ எனக்கும் இருக்கு”

என்றான் ஆரவ் தெளிவாக.


“சார், இதுபோல  பொத்தாம் பொதுவா பதில் சொல்லி எஸ்கேப் ஆகலாம் பார்க்காதீங்க. நான் தெளிவாவே கேட்கிறேன், நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? ஏன் இந்த கேள்வின்னா, லவ் பத்தி நல்ல தெரிஞ்ச ஒருத்தரால் தான், இவ்வளவு சூப்பரா லவ் பிலிம் எடுக்க முடியும். சோ உங்களுக்கு கண்டிப்பா லவ் இருக்கும் என்பது எங்களோட கெஸ். நீங்க என்ன சொல்றீங்க?”

என்று பத்திரிக்கையாளர் கேட்டதும், அங்கே ஒரே நிசப்தம். ஆரவ்வை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது.


அதுவும் ராமமூர்த்தி, படப்படக்கும் நெஞ்சோடு அமர்ந்திருந்தார். ஆமாம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று மட்டும் அவன் கூறிவிட்டால்,  அவன் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. ஆரவ்வை பற்றி நன்கு அறிந்தவர்கள், அவன் இல்லை என்று சொல்லுவான் தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரை அவனின் சொந்த விஷயங்களை பற்றி பொது வெளியில் எதுவும் கூறியதில்லையே!! அமிர்தாவுமே என்ன சொல்ல போகிறான் என்ற ஆர்வத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தாள். வேறென்ன நினைக்க போகிறாள், அப்படி எதுவும் இல்லை என்று சொல்ல வேண்டும் என்பதை தவிர.


சில வினாடி நேர அமைதிக்கு பின், அமிர்தாவை நேர்கொண்டு பார்த்தவன்,


“உங்க கெஸ் கரெக்ட் தான், ஐ ஃபால் இன் லவ்”


என்று தன் காதலை உலகுக்கு தெரிவித்து விட, அனைவருக்கும் அத்தனை ஆச்சர்யம். ராமமூர்த்தி சிலையாய் சமைந்து விட்டார். அவர் கட்டி வைத்த கனவு மாளிகை சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. ஆரவ் சொன்ன விஷயத்தை கிரகிக்கவே முடியவில்லை. 


அமிர்தாவும் ஸ்ம்பித்து போய் விட்டாள். அவன் அப்படி கூறுவான் என்று எதிர்பார்க்காதவர்கள், சட்டென்று இப்படி கூறியதும், தங்களுக்குள்ளே விவாதித்து கொண்டனர். அரங்கமே  சலசலப்பால் சூழப்பட்டது.


“என்ன சார் சொல்றீங்க? நீங்க லவ் பண்றீங்களா? எங்களால் நம்பவே முடியல”

என கேள்வி கேட்டவர் ஆச்சரியப்பட, 


“ஏன் நான் லவ் பண்ண கூடாதா?  நானும் ஹுயூமன் தானே?!!

என்றான் சாதரணமாக.


“சே..,சே அப்படி சொல்லல சார். நீங்க ஒருத்தரை லவ் பண்றீங்கனு நீங்களா சொல்ற வரை எங்களுக்கு தெரியவே இல்லை பாருங்க. அதை தான் சொன்னேன். ஒரு சின்ன க்குளு கூட கொடுக்காம ரகசியமா மெயின்டையின் பண்ணி இருக்கீங்களே, பாராட்ட படவேண்டிய விஷயம் சார்”

என அவர் சிலாகித்து கூற,  அவனோ கூட்டத்தை பார்த்து பேசுவது போல, நேராக அமிர்தாவை பார்த்தவன்,


“ரசனையான காதல், பெரும்பாலும் ரகசியமாக தான் இருக்கும், ராவணனின் காதல் போல!!. என் காதலும் அந்த வகை தான்”

என உள்ளார்ந்து உணர்ந்து கூறுகையில், தவித்து போனாள் அமிர்தா. அவளால் இருக்கையில் அமரவே முடியவில்லை. எழுந்து சென்று ஓரமாக நின்று கொண்டாள்.


“வாவ், சூப்பர் சார், கவிதையாவே சொல்லிடீங்களே!! அடுத்து வேறென்ன கேட்க போறோம்? ஆள் யாரு? எங்க இருக்காங்க? உள்நாடா? வெளிநாடா?  என்ன பண்றாங்க? உங்க இண்டஸ்ட்ரி தானா? இல்லை வேற ஏதாவது புரபஷனா?

என்று, இன்று அவனை விடுவதில்லை என்ற முடிவுடன் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க, அவனோ,


“எல்லாமே சொல்றேன், அவங்க என் காதலுக்கு ஓகே சொன்னதும்”

என்ற ஒற்றை வரியில் பதில் கூறினான், அவளின் விழிகளை பார்த்தவாறே. அமிர்தாவிற்கோ அத்தனை படப்படபாக இருந்தது. இதையெல்லாம் இப்போ சொல்ல சொல்லி யார் கேட்டா? என தவித்து போனாள்.


“எதே!! உங்களுக்கு இன்னும் அவங்க ஓகே சொல்லலையா?”

என வாயை பிளந்தார் பத்திரிக்கையாளர்.


“என்ன சார் சொல்றீங்க? நீங்க எவ்வளவு பெரிய ஆளு. பேர், புகழ், வசதின்னு எல்லாமே இருக்கு. இதுக்கு மேலே என்ன வேணும்? உங்க காதலை ஏத்துக்க என்ன தயக்கம் அவங்களுக்கு?”

என விடாப்பிடியாக கேட்க,


“இது எல்லாம் இருக்கிறதால தான், அவங்க என் காதலை ஏத்துகல. நான் ஒரு சாதரண மனிதரா இருந்து இருந்தா, நிச்சயம் என்னோட காதலை  ஏத்துக்கிட்டு இருப்பாங்க நினைக்கிறேன்”  என கூறியவனின் கூற்று அமிர்த்தாவை சுட்டது. அவள் சொன்ன அத்தனை காரணங்களை தானே அவனும் கூறிக்கொண்டிருகிறான்.


 “இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க போறீங்க”


“அவங்க எனக்கு ஓகே சொல்ற வரைக்கும்”

என்றான் அத்தனை நம்பிக்கையாக.


“வாவ் சூப்பர் சார். இருந்தாலும், அவங்க கொஞ்சம் அன்லக்கி தான். உங்களை போய் காக்க வச்சுட்டு இருக்காங்க பாருங்களேன்”


“நிச்சயமா இல்லை. நான் தான் ரொம்ப ரொம்ப அன்லக்கி. அவங்க காதல் இன்னும் கூட எனக்கு கிடைக்காமல் இருக்கே!! 


என்றதும், அமிர்தாவின் கண்களோ கலங்க ஆரம்பித்தது. எப்பொழுதும் தன்னை மிகைப்படுத்தி, அவனை தாழ்த்தி கூறி, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்கும் அவன் காதலை என்னவென்று சொல்வது? அவன் காதலின் முன்னே முழு முற்றாய் தோற்று போய் நின்றாள்.


“இவ்வளவு சொல்றீங்கன்னா, அவங்க ரொம்ப அழகோ?!! எப்படி இருப்பாங்க” என ஆர்வமாக கேட்க, 


“பேரழகி அவங்க, என் கண்களால் பார்த்தா மட்டுமே!! அந்த அழகுக்கு முன்னே யாரும் நிக்க முடியாது. ஒருத்தரால் எப்படி, எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் எல்லா விஷயத்திலும் நல்லது மட்டுமே நினைக்க முடியுது என என்னை அவ்வளவு ஆச்சரியப்படுத்தி இருக்காங்க. முகத்தில் என்ன இருக்கு? மனசால் எந்தவித களங்கமும் இல்லாமல் இருக்கிறவங்க பேரழகு இல்லையா?!! எனக்கும் அவங்க அப்படித்தான்”

என விளக்கம் கொடுத்தவனின் காதலின் ஆழம், அங்கிருந்த அனைவருக்கும்  புரிந்தது. அமிர்தாவிற்கும் புரிந்தது.


“நீங்க இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம், அவங்களை பார்க்கணும் போல இருக்கு. அவங்களை நாங்க பார்க்கலாமா? எங்களுக்கு காட்டுவீங்களா?”

என ஆர்வமாக பத்திரிக்கையாளர் கேட்க, 


“காட்டிட்டா போச்சு, அவங்க இங்க தான் இருக்காங்க”


என்று ஆரவ் கூறியதும், தூக்கி வாரிப்போட்டது அமிர்தாவிற்கு. தன்னை காட்டி விடுவானோ என வெடவெடத்து போனவள், லேசாக கைகளை ஆட்டி வேண்டாம், என கண்களாலையே கெஞ்ச, அத்தனையையும் சுவாரஸ்யமாக ரசித்தான் ஆரவ்.


அவன் இங்கு தான் இருக்கிறாங்க என்று கூறியதும், அனைவரும் சுற்றும் முற்றும் பார்க்க, அமிர்தாவோ துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடி கொண்டாள்.


உள்ளங்கை சில்லிட்டது, அமிர்தாவிற்கு. படப்படக்கும் மனதுடன் என்ன சொல்ல போகிறானோ, என அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அமிர்தா.


தன்னுடைய அலைபேசியை எடுத்தவன், அதில் அவளுடைய எண்ணை எவ்வாறு சேமித்து இருக்கிறான் என்று காட்ட, அனைவரும் அதனை கூர்ந்து பார்த்தனர். அமிர்தாவும் தற்பொழுது தான் அதனை கவனிக்கிறாள். ஏ இதய குறியீடு மீண்டும் ஏ என்ற எழுத்துகள் தெரிய, 


“இப்போதைக்கு  இதை தான் என்னால் காட்ட முடியும். கூடிய சீக்கிரம், அவங்களுக்கும் எனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்குனு இன்விடேஷன் காட்டுறேன்”


என்று கூறிவிட, அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் அமிர்தா, தன்னை இப்போதைக்கு காட்டாமல் விட்டதற்கு. பின்பு தான் யோசித்தாள், கூடிய விரைவில் திருமணம் அறிவிப்பு என்று கூறுகிறானே என திகைத்து போய் அவனை பார்க்க, அவனும் ஆமாம் என்று தலையாட்டினான்.


“உங்களோட காதல் ரொம்பவே பிரமிக்க வைக்கிறது சார். அந்த காதலே உங்களை காதலிக்கிற அளவுக்கு இருக்கு உங்க காதல். இப்போ தான் புரியுது உங்களால் மட்டும் இந்த காதல் படங்களை எப்படி இவ்வளவு சக்ஸஸ்புள்ள கொடுக்க முடியுதுனு”

என அவனை மிகைப்படுத்தி பாராட்ட, அதனை இடது மார்பில் வலது கை வைத்து ஏற்று கொண்டான் ஆரவ்ஜெயந்தன்.


“கடைசியா ஒண்ணே ஒன்னு சார், அவங்களுக்காக ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்” என இன்னமும் அவனை விடாது பத்திரிக்கையாளர்கள் கேட்க, அவனோ, சிறிது நேரம் யோசித்து பின், அமிர்தாவை நேர்கொண்டு பார்வையை பதித்து, 


பரந்து விரிந்த இந்த பாரினில், 

நானே உன் வீடு, 

நீயே என் உலகம்

அவ்வளவு தான் நம் காதல்!!


என்று நான்கே வரிகளில் அவனின் ஒட்டுமொத்த காதலையும் கூறிவிட, அரங்கமே சிறிது நேர அமைதிக்கு பின், கைதட்டி, ஆரவாரம் செய்து அவனையும் அவன் காதலையும் கௌரப்படுத்தியது.


அமிர்தாவிற்கு நிலைக்கொள்ள முடியவில்லை. கண்களை தாண்டி கண்ணீர் கன்னங்களை தீண்ட, அவளால் அங்கு நிற்க கூட முடியவில்லை. கதறல் சத்தம் கேட்டு விடக்கூடாதென, வாயை பொத்தி கொண்டு அழுதவள், அங்கிருந்து வேகமாக வெளியே ஓடிவந்து விட்டாள்.


அவளையே கவனித்து கொண்டிருந்த ஆரவ்விற்கு, அவளின் அழுகை அவனையும் அத்தனை வலிக்க செய்தது.




அப்படி என்ன தான் செய்து விட்டேன்

என்னை இத்தனை காதலிக்கிறாய்

என்று கேட்கிறாள்…


உணர்வால் பரவசப்படும் இந்த

காதல் அபரிமிதமானது தான்

இல்லையா!!


என் உணர்வின் உயிர் அவள் தானே!!



























Comments