UNEP-17

 அத்தியாயம்..17


           பட்டென்று சத்தத்தோடு, உடைந்து சில்லு சில்லாய் சிதறிய பூச்சாடியின் துகள்கள், சரியாய் அந்நேரம் உள்ளே நுழைந்த ராமமூர்த்தியின் காலுக்கடியில் வந்து விழ, அதனை அதிர்ந்து போய் பார்த்தார் அவர்.


அதனையும், அது வந்த திசையையும் ராமமூர்த்தி நிமிர்ந்து பார்க்க, அங்கே ஆவேசத்துடன் நின்றிருந்தாள் ஸ்ரேயா.


உள்ளே நுழைந்தவர் கண்ணில் பட்டது அவளால் உடைந்து சிதறிய  பொருட்களும், அதனால் அலங்கோலமான வீடும் தான். 


“வாங்க டாடி, வாங்க அப்புறம் ஏஜேவோட கல்யாணத்துக்கு நாள் பார்த்து குறிச்சுட்டு வந்துடீங்களா? என்னைக்கு கல்யாணம்? கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னமே, வேண்டாம் வேண்டாம் இப்பவே கிளம்பி போகலாமா?!!


ஏன்னா அங்க நிறைய வேலை இருக்கும்ல. அங்கே எச்சிலை எடுக்கும் வேலை இருந்தா நீங்க பாருங்க. மம்மி வேணும்னா அங்கே சமையல் வேலை பார்க்கட்டும். நான் வேணும்னா கல்யாண பொண்ணுக்கு மேக்அப் போட்டு பிரஸ்ட் நயிட் ரூமுக்கு அனுப்பி வைக்கிறேன். ஹ்ம்ம் வாங்க டாடி நேரம் ஆகுது சீக்கிரம் கிளம்பலாம்”

என அத்தனை கோபத்தையும் நக்கலில் காட்ட, ராமமூர்த்தியோ,


“ஸ்ரேயா, நானே பயங்கர டென்ஷனில் வந்து இருக்கேன். நீ வேற எரியுற நெருப்பில் எண்ணெய் ஊத்தாதே”

என்றார் கடும்சினத்துடன்.


“யார்? நானா? நானா உங்களை டென்ஷன் படுத்துறேன்? நீங்க தான், என்னை, என் லைப்பை குவஸ்டின் மார்க் ஆக்கி இருக்கீங்க.


 ஏஜே தான் உனக்கு மாப்பிள்ளைனு சொல்லி, சொல்லி என் மனசில் ஆசைய வளர்த்துட்டு, இப்போ அவன் வேற யாரையோ லவ் பண்றேன் கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் பண்ண போறேன்னு அறிக்கை விட்டுட்டு இருக்கான். அப்போ என் நிலைமையை நினைச்சு பாருங்க. அவனுக்கு போய் விழுந்து விழுந்து சேவகம் செஞ்சீங்களே!! இப்போ பார்த்தீங்களா எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கானு”

என்று கோபத்தில் கத்தியவளிடம்,


“ஸ்ரேயா எனக்கும் இது அதிர்ச்சியா தான் இருக்கு. என்னை கொஞ்சம் யோசிக்க விடு. இப்படி நீ கத்தி எல்லாத்தையும் போட்டு உடைச்சா, எல்லாம் சரியாகிடுமா? ஏஜேவை தான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?  முட்டாள் மாதிரி யோசிக்காதே!! இதுக்கு நான் ஒரு வழி பண்றேன். என்ன நடந்தாலும் உனக்கு ஏஜே கூட தான் கல்யாணம், நான் நடத்தி வைக்கிறேன்”

என மகளிடம் அத்தனை திடமாக வாக்கு கொடுத்தார் ராமமூர்த்தி.


“எப்படி டாடி? இப்பவும் உங்களால் இப்படி பேச முடியுது. அதான் அவன் வேற ஒருத்தியை லவ் பண்றதா சொல்றானே?!! அவளை விட்டுட்டு என்ன எப்படி கல்யாணம் பண்ணுவான்? இன்னமும் அவனை நம்பி காத்துக்கிட்டு இருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை”

என்றவளுக்கு,


“அவனை நீ நம்ப வேண்டாம், இந்த டாடியை நம்பு. நான் தானே உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொன்னேன். இப்பவும் அதை தான் சொல்றேன். ஏஜே தான் உனக்கு மாப்பிள்ளை. நான் இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுறேன்”


என நம்பிக்கை கொடுக்க, அவளோ ஒன்றும் புரியாது தலையில் கைவைத்தபடி சோபாவில் தொப்பென்று அமர்ந்து விட்டாள். மகளின் அருகில் சென்று அவள் தலையை ஆதுரமாக தடவி கொடுத்தவர்,


“ஸ்ரேயா, அந்த பொண்ணு இருந்தா தானே அவன் கல்யாணம் பண்ணுவான். அந்த பொண்ணையே  இல்லாமல் பண்ணிட்டா?”

என குரூரமாய் யோசித்தவரை புரியாமல் ஸ்ரேயா பார்க்க,


“என்ன மா அப்படி பார்க்கிற?”


“இல்லை டாடி, அந்த பொண்ணை இல்லாமல் பண்ண போறேன் சொல்றீங்களே!! அந்த பொண்ணு யாருன்னே நமக்கு தெரியாதே!! அதான் அவன் சொல்லவே இல்லையே!! அப்புறம் எப்படி?

என குழம்பி தவிக்க,


“அந்த பொண்ணு யாருன்னு ஊருக்கு வேணும்னா தெரியாமல் இருக்கலாம். ஆனால் உன் அப்பனுக்கு தெரியாமல் இருக்குமா?!!

என மீசையை நீவி விட்டு கொண்டார் ராமமூர்த்தி.


“என்ன டாடி சொல்றீங்க? உங்களுக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா? யாரது?” என ஆர்வமாக ஸ்ரேயா கேட்க,


“எல்லாம் அந்த பிச்சைகாரி தான். இவன் கூட ஒருத்தி சுத்திக்கிட்டு இருப்பாளே அவ தான். நான் சந்தேகப்பட்டது சரியாய் போச்சு. அவன் அவளை ஓடி ஓடி கவனிக்கும் போதே நினைச்சேன், ஏதோ இருக்குனு. அன்னைக்கு பெர்த்டே அப்போ கூட நாம கொடுத்த கிப்ட்டை வேண்டாம் சொல்லிட்டு, அவ எடுத்து கொடுத்த ஷர்ட்டை போட்டுட்டு வந்து கேக் வெட்டினான். அப்பவே நான் தொண்ணூறு சதவீதம் கன்பார்ம் பண்ணிட்டேன். இன்னைக்கு  முழுசா தெரிஞ்சு போச்சு. இதுக்கு மேலே சும்மா இருக்க முடியாது.


இதுக்கு ஒரு வழி பண்ணி முதலில் அந்த அமிர்தாவை இல்லாமல் பண்ணணும். அவ இல்லைன்னா, இவனை ஆட்டோமேட்டிக்கா நம்ம வழிக்கு கொண்டு வந்துரலாம். எனக்கு ஒருவாரம் டைம் கொடு, எல்லாத்தையும் முடிச்சுட்டு உனக்கு ஹாப்பி நியூஸ் சொல்றேன்”


என மகளை பார்க்க, அவளும் கலங்கிய கண்களுடன் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவர் மனமோ அமிர்தாவை என்ன செய்வது என்று தான் தீவிரமாக யோசித்தது.


ஒருவாரம் கழிந்த நிலையில், சூரியனை கண்டதும் மலர்ந்து சிரிக்கும் சூரியகாந்தி பூ போல, அத்தனை பிரகாசமாக அந்த அதிகாலை வேளையில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தாள் அமிர்தா.


மனமோ அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு, இல்லை, இல்லை வெகு மாதங்களுக்கு பிறகு மனதின் மகிழ்ச்சி அவளை திக்கு முக்காட செய்தது.


சாமி சன்னதியில் கண்களை மூடி கை கூப்பி வேண்டி கொண்டவளின் மனம் முழுவதும் ஆரவ்வின் மீதான காதலே நிரம்பி வழிந்தது. இன்று எப்படியும் தன் காதலை அவனிடம் தெரிவித்து விட வேண்டும், அதற்கு போதிய தைரியத்தை நீதான் தர வேண்டும், என மனமார வேண்டி கொண்டாள்.


கடவுளுக்கு இன்னமும் அவள் மீது இரக்கம் வரவில்லை என்பது அந்த தெய்வத்திற்கு மட்டுமே தெரியும். வரப்போகும் விபரீதம் என்னவென்று அறிந்த அந்த தெய்வமே அவளுக்காக சிலை வழியாக இருந்தே கண்ணீர் சிந்தியது.


“அம்மா, தாயே!! என் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை நீ கொடுத்து இருக்க, அதையெல்லாம் தாங்கி வந்தது, அவர் கூட என்னை சேர்த்து வைக்க தான் என்பது எனக்கு இப்போ புரியுது. இனிமேலாவது அவர் கூட சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ, நீதான் அருள் புரியனும்”


என மனமுருகி வேண்டி கொண்டவள், பிரசாதத்தை இட்டுக் கொண்டு, பிரகாரத்தை வலம் வந்தவள், ஓரிடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.


கையில் அவன் அணிவித்த மோதிரத்தை, பார்த்து பார்த்து பூரித்து போனவள் ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைப்போட்டாள்.


ஆரவ் பத்திரிக்கையாளர்கள் முன்பு தன் காதலை பற்றி கூறியதும், அந்த காதலின் உன்னதத்தை தாங்க முடியாது அங்கிருந்து அழுது கொண்டே ஓடி வந்தவள், காரின் பின்னிருகையில் சென்று அமர்ந்து கொண்டு, வாய் விட்டு கதறி அழுதாள்.


அவள் மீதான அவன் காதலின் அழுத்தத்தை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. ஏன்? எதற்கு? எப்படி இப்படி காதல் செய்ய முடிகிறது? என நினைத்தவளுக்கு அழுகை மட்டும் நிற்கவே இல்லை.


ஆரவ் தன்னுடைய அலைபேசியை எடுத்து காட்டிய போதே, அதிலிருந்து எழுத்துகளை வைத்து ராமமூர்த்தி அந்த முதல் எழுத்து உரிய நபர் அமிர்தா என்பதை கண்டு கொண்டார். முன்பு நடந்த சம்பவங்களும், தற்பொழுது காட்டிய முதலெழுத்தும், எல்லாம் சேர்ந்து ஆரவ் நேசிக்கும் பெண் அமிர்தா தான் என்பதை அவருக்கு தெள்ள தெளிவாக காட்ட, அதற்கு மேல் அங்கு அவரால் இருக்க முடியவில்லை.


நொடி பொழுதும் தாமதிக்காது அங்கிருந்து விருட்டென்று கிளம்பி இருந்தார். செல்லும் அவரை கவனித்த ஹரி, ஆரவ் காதின் அருகில்,


“சார், ராமமூர்த்தி சார் கிளம்பிட்டார். ஏதோ கோவமா போற போல இருக்கு”

என கிசுகிசுத்ததும்,


“போட்டும் விடு ஹரி. என்னோட லவ் மேட்டர் முக்கியமா ரிவில் பண்ண காரணமே அவர் தான். சும்மா அவரும் எத்தனை நாளைக்கு தான் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பார். அவர் பொண்ணு மேலே எனக்கு எந்த இன்டர்ஸ்ட்ம் இல்லை தெரிஞ்சா நிச்சயம் விலகி போய்டுவார். அதான் எல்லாருக்கும் சொல்ற போல அவர் இருக்கும் போதே சொல்லிட்டேன். இனி என் வழியில் வரமாட்டார். அதுவரைக்கும் நமக்கு நல்லது தான்”

என தெளிவு படுத்தினான் ஆரவ்.


“இதனால் எதுவும் பிரச்சனை வராதுல சார்”

என ராமமூர்த்தி நினைத்து ஹரி பயப்பட,


“வரதை பார்த்துப்போம் ஹரி. அமிர்தாவுக்கு எதுவும் பிரோப்ளேம் வந்துற கூடாது தான், அவளை இன்டரடூஸ் பண்ணல”

என ஆரவ் கூற ஹரிக்கும் ஆரவ் செய்தது சரியென்று புரிந்தது.


அனைத்தும் முடிய, அமிர்தா, அவனை பார்த்து அழுது கொண்டே வெளியேறிய காட்சி, அவன் கண்ணில் பட, அவனுக்கோ அத்தனை வேதனையாக இருந்தது. உடனே ஓடி சென்று அவள் அழுகையை நிறுத்த வேண்டும் என மனம் பதைப்பதைத்தது.


ஆனால் உடனே வெளியேற முடியாத சூழ்நிலை. வந்திருந்த, சக படக்குழுவினர் அவனது காதலுக்கு வாழ்த்து கூற, அவனால் அவர்களை தவிர்த்து வர முடியவில்லை.


முகம் புன்னகையை காட்டிலும், உள்ளம் நெருப்பில் மேல் நிற்பது போல் தான் உணர்ந்தான்.


ஒருவழியாக அனைவரின் வாழ்த்தையும் ஏற்று முடித்தவன் ஹரியிடம்,


“ஹரி, அமிர்தா அழுத்துட்டே போனா, நான் போய் பார்க்கிறேன். நீ இங்கே பார்த்துக்கோ. என்னை கேட்டா ஏதாவது சொல்லி சமாளி”

என்று கூறிவிட்டு அமிர்தாவை தேடி வெளியே வந்தான்.


சுற்றும் முற்றும் பார்த்தவன், அங்கு எங்கும் அமிர்தா இல்லாமல் இருக்க, அப்படியானால் கண்டிப்பா காரில் சென்று தான் அமர்ந்திருப்பாள் என்று அதனருகில் சென்று காரை திறந்தவன் கண்ணில் பட்டது என்னவோ, கதறி கதறி அழுது கொண்டிருந்த அமிர்தா தான்.


“அமிர்தா, எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?”


என வேகமாக காரின் உள்ளே சென்று அமர்ந்தவன், அவள் அழுகையில் பதற, அவளோ ஒன்றும் பேசாது அழுது கொண்டே தான் இருந்தாள்.


“அமிர்தா, அமிர்தா, இங்கே பாரு. எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? இப்போ என்ன நடந்து போச்சு? அழுதுட்டே இருந்தா நான் என்ன பண்றது? என்னன்னு சொன்னா தானே தெரியும். இப்போ அழுறதை நிறுத்துதல, அப்புறம் எனக்கு ரொம்ப கோபம் வரும் பார்த்துக்கோ”” என அவளை மிரட்ட,  அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கண்களை நேர்கொண்டு சந்தித்தாள்.


நிச்சயம் அவள் மீதான காதல் உண்மை தான் என்று அடித்து கூறியது, அவனது கருவிழி. என்ன நினைத்தாலோ, சட்டென்று அவன் மார்பு மீது சாய்ந்து கொண்டு கதற, பதறிவிட்டான் ஆரவ்.


முதலில் சுற்றத்தை தான் கவனித்தான். யாராவது பார்த்து, எதையாவது செய்திகளாக பரப்பி விட்டால், அமிர்தாவை பற்றி தானே அனைவரும் தவறாக எண்ணுவார்கள் என்று அவளுக்காக வருத்தப்பட்டவன், அவசரமாக, கார் கதவை மூடிவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிட்டு, அவளை ஒரு கை கொண்டு லேசாக அணைத்து கொண்டவன்,


“அமிர்தா, இப்போ என்னாச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்க?


என மீண்டும் கேட்க, அவளோ அழுகையை நிறுத்தியப்படில்லை. 


“அமிர்தா..,” என அதட்டியவன், அவளை நிமிர்த்தி, அவள் முகத்தினை நேர்கொண்டு பார்க்க,


“எதுக்கு அழுறன்னு கேட்டேன்? நீ பாட்டுக்கு நிறுத்தாம, அழுதுட்டே இருந்தா, நான் என்னனு யோசிக்கிறது. எதுக்கு அழுற?”

என கண்டிப்புடன் கேட்க, அவளோ திருத்திருன்னு விழித்தவாறே,


“தெரியல. ஆனால் அழ வருது” என குழந்தை போல் கூறியவளை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


“ஏன் அழுறேன்னு தெரியாமலே அழையா?!! சரியா போச்சு போ,” என சிரிப்புடன் கூறியவன், அவள் கண்களை துடைத்து விட்டு,


“சரி அழக்கூடாது. எத்தனை தடவை சொல்றேன். நான் இருக்கும் போது நீ அழவே கூடாதுன்னு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்”


என ஆறுதல் கூற, அவளோ, அவனை தான் இமை வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள். இத்தனைக்கும், அவளும் அவனை விட்டு விலகவில்லை. அவனும் அவளை விலக்கவில்லை.


“என்னடா மா?” என அவள் பார்வைக்கு அர்த்தம் புரியாது ஆரவ் கேட்க, அமிர்தாவோ தயங்கி தயங்கி,


“உண்மைக்கே என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?!!

என கேட்க,


“சே சே, ஏதோ கொஞ்சமா தான் பிடிக்கும். என்றதும் அவளோ லேசாக முறைக்க, இவனோ வாய்விட்டு சிரித்தான்.


“பின்னே, இது என்ன கேள்வி? உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியாதா?!! என் அம்மா, அப்பா, என்னோட டைரெக்ஷன்கு இணையா உன்னை தான் பிடிக்கும்”

என கூறியவனிடம், 


“என்னை பத்தி என்ன தெரியும்னு  இவ்வளவு அன்பு என்மேலே வச்சு இருக்கீங்க? எல்லார் முன்னாடி வேற சொல்லி இருக்கீங்களே, நாளைக்கு என்னை பத்தி ஏதாவது தப்பா கேள்விப்பட்ட, என்ன பண்ணுவீங்க?”

என கேட்க,


“எனக்கு உன்னைப்பத்தி எதுவுமே தெரிய வேண்டாமே அமிர்தா. நீ இப்போ எப்படி இருக்கியோ இப்படியே லவ் பண்றது தான் எனக்கு பிடிச்சு இருக்கு. எல்லார் முன்னாடியும் சொன்னது உண்மை தானே!! நான் லவ் பண்றேன் தான். நான் லவ் பண்றவங்க இன்னும் என் காதலை ஏத்துகல தான். இதெல்லாம் உண்மையா நடந்தது தானே!! அதை தான் எல்லார் முன்னாடியும் சொன்னேன். அப்புறம் என்ன கேட்ட, உன்னைப்பத்தி ஏதாவது தப்பா கேள்விப்பட்டா என்ன பண்ணுவேன் தானே!! என்ன பண்ணுவேன்?,”

என அவள் முகத்தையே பார்க்க, அவள் கண்களிலிலோ ஆர்வம் நிறைந்து இருந்தது.


“என்ன பண்ணுவேன்னா….,” என சிறிது இடைவெளி விட்டவன்,


“கல்யாணம் பண்ணிப்பேன்” என அவளை பார்த்து கண் சிமிட்ட, அவள் மீதான அவனின் காதல் இன்னும் இன்னும் பிரமிப்பை தான் தந்தது அமிர்தாவிற்கு.


“ஒருவேளை, என்னோட முன்னால் வாழ்க்கை, இப்போ இருக்கிற போல் இல்லாமல் வேற மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க?”


என மனதில் சந்தோஷை பற்றி தெரிய வந்தால் என்ன சொல்வானோ என்ற அச்சத்துடன் கேட்க,


“இதுக்கு நான் என்ன சொல்லணும் எதிர்பார்கிற அமிர்தா. என்னை விலக்க வைக்கணும்னு நினைச்சு இதையெல்லாம் கேட்டுட்டு இருக்கீன்னா, ஸாரி, டைம் தான் வேஸ்ட்.


நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே, உன்னோட பிறப்பு, வளர்ப்பு, உன் அப்பா அம்மா, முன்னால் வாழ்க்கை இப்படி எதுவும் எனக்கு தேவையில்லை. அது எப்படி இருந்தாலும் எனக்கு கவலையும் இல்லை. இதோ இந்த நொடி, கண்ணு முழுக்க என் மீதான காதலை எப்படி சொல்லனு தெரியாமல், மனம் முழுக்க என் மேல வச்சு இருக்கிற அன்பை எப்படி காட்டனு புரியாமல், வாய் மூலமா எதையும் நேரடியா சொல்லவும் முடியாமல், ஆனால் முழு உரிமையோடு என் மேலே சாய்ஞ்சு அழுற இந்த அமிர்தா எப்படி இருக்காளோ, அந்த அமிர்தா தான் எனக்கு வேணும். இந்த அமிர்தாவே போதும் என் வாழ்க்கை முழுக்க. இந்த அமிர்தாவை தான் நான் காதலிக்கிறேன். இதே அமிர்தாவை தான் வாழ்நாள் முழுவதும் காதலிக்க போறேன்”


என்றதும் தான் அவளுக்கு புத்தியில் உரைத்ததே, தான் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருப்பதும், அவன் தன்னை அணைத்து ஆறுதல் படுத்தி கொண்டிருப்பதும், அவசரமாக அவனை விட்டு விலகி அமர்ந்தவள், அவனிடம் மேலே பேச முடியாது தலையை குனிந்து கொண்டாள்.


“இப்போ சொல்லி இருக்க கூடாதோ?!!” என கள்ளசிரிப்புடன் கூறியவனை நிமிர்ந்து பார்க்க அவளால் முடியவே இல்லை. வெட்கம் வந்து அவளை சீண்டி பார்க்க, அதனை வெளிக்காட்டாது அடக்கியப்படி  அமர்திருந்தாள்.


“இதுக்கும் மேலேயும் என்கிட்ட இருந்து உனக்கு என்ன கிலாரிபிகேஷன் வேணும்னாலும் கேளு, சொல்றேன். ஆனால் லவ் இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதே, அதை நான் நம்ப மாட்டேன்”


என்றவனை திரும்பி பார்க்க, அவனும் அவளை தான் காதலாக பார்த்து கொண்டிருந்தான். அந்த நொடி, முழுமையாக எந்தவித தயக்கமும், தடங்கலும் இன்றி அமிர்தாவின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ஆரவ் ஜெயந்தன். கடந்த கால கசப்புகள் எல்லாம் அவனின் காதலால் எல்லாமே மறைந்து காணாமல் போனது. அந்த நொடி முடிவு செய்து விட்டாள், ஆரவ் தான் அவள் வாழ்வு என்று!!  அவன் காதலை ஏற்று கொள்ள அவன் காதல் மட்டும் இல்லாமல், அந்த காதலே அவனை தானே காதலிக்கிறது, யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். அதிகம் மெனக்கெடல்கள் எல்லாம் காதலே காதலிப்பவர்களுக்கு தேவைப்படுவதில்லை தானே!!


“பேசி முடிசாச்சுன்னா கிளம்பலாம்” என ஹரி வந்து கூறும் வரை, அவளின் பார்வை அவனிடம் மட்டுமே இருந்தது. ஹரி வந்து நிலையை கலைக்க, அதில் துணுக்குற்றவள், வெளியே வேடிக்கை பார்க்க திரும்பி கொள்ள, ஆரவ்வும் 


“கிளம்பலாம் ஹரி” என்றான். உடனே ஹரியும் காரை இயக்கி அங்கிருந்து புறப்பட்டான்.


இவ்வளவு நேரம், ஆரவ் காரில் ஏறியலிருந்து, நடந்த அத்தனையையும் காரின் பக்கவாட்டில் நின்றபடி கேட்டு கொண்டிருந்த ராமமூர்த்திக்கு அனைத்தும் தெள்ள தெளிவாக தெரிந்தது. தெரிந்த விஷயம் அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்க, அவருக்கோ ஆத்திரம் தலைக்கேறியது. விருட்டென்று அங்கிருந்து கிளம்பியவர், நேராக வந்து சேர்ந்தது தன் இல்லத்திற்கு  தான்.


ஆரவ்வின் மீதான காதல், பழையதை எல்லாம் மறக்க செய்து, புத்தம் புதிய அமிர்தாவாக மாற்றி இருந்தது அவளை.


இத்தனை தூரம் தன்னை காதலிப்பவனா, தன்னை ஏமாற்ற போகிறான், என அவளது காதல் மனம் அவனுக்காய் பரிந்துரை செய்து கொண்டு வந்தது. அந்த காதல் போதும் இனி வாழ்நாள் முழுவதும் என்று, முடிவெடுத்தவள் அதனை அவனிடம் சொல்ல முடியாமல் தான் தவித்து போனாள்.


அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆரவ்வை பார்க்க முடியாமல் தான் போனது. அடுத்த நாளே இந்திய அளவில் பிரசித்தி பெற்ற, தயாரிப்பு நிறுவனம் அவனை மும்பைக்கு அழைப்பு விடுக்க, அதனால் அவன் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. 


மறுநாள் அவனை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தளுக்கு அவன் மும்பை சென்று விட்டான் என்ற செய்தி தான் கிடைத்தது. சோர்ந்து போனவளை புத்துணர்ச்சியாக்கவே அவனிடமிருந்து  அழைப்பு வர அவளுக்குள்ளோ ஒரே படப்படப்பு. அவனோ பொதுவாக அவளிடம் பேசிவிட்டு, வர ஒருவாரம் ஆகும் என்று தகவல் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தான். அதன் பின் வந்த நாட்களிலும் எப்பொழுதும் போல் அவளுக்கு அழைப்பு விடுத்து, ஓரிரு வார்த்தைகள் பேசி வைத்து விடுவான்.


அவன் இயல்பாக தான் இருந்தான், ஆனால் அமிர்தா தான் அவனையே நினைத்து கொண்டிருந்தாள். எப்படியும் தன் காதலை சொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் தான் நாட்களை ஓட்டினாள். ஒரு வாரம் கடந்த நிலையில், நாளை அவன் ஊருக்கு வரவிருக்கும் என்ற நிலையில், நிச்சயம் அவன் வருவானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டி, முதன் முதலில் அவனுக்கு அவளே அழைத்தாள்.


அப்பொழுதும் ஆரவ், அங்கு முக்கியமான கூட்டத்தில் இருக்க, சரியாக அமிர்தாவின் அழைப்பு வர, ஹரியோ அலைபேசியை வைத்து கொண்டு யோசித்தான்.


ஆரவ்விடம் கொடுக்கலாமா?  வேண்டாமா? என்ற யோசனைக்கு பிறகு, மெல்ல அவனருகே சென்று, அவன் காதில்,.

“சார், உங்க ஏஹார்ட்ஏ கால் பண்றாங்க”

என முணுமுணுக்க, அதில் திகைத்தவன், உடனே கூட்டத்தின் முன்பு,


“எஸ்குயூஸ் மீ. ஒரு முக்கியமான கால், பைவ் மினிட்ஸ்ல வந்துருவேன்”


என கேட்டு கொண்டு வெளியே வந்தவன், அவள் அழைப்பை துண்டிக்கும் நேரம், அவனோ அழைப்பை ஏற்றான்.


“சொல்லு அமிர்தா” என்ற அவனது குரலில், அவளோ படப்படக்கும் மனதை அடக்கியப்படி,


“அது.. அது..” என இழுத்தவள், “நீ..ங்..க எப்.. போ வரீ..ங்க”  என தயங்கி தயங்கி கேட்க, அலைபேசியை புரியாமல் பார்த்தான் ஆரவ். இதுபோல் அவள் ஒருபொழுதும் கேட்டதில்லையே!!


இதுவரை அவன் தான் அவனை பற்றி எல்லாத்தையும் அவளிடம் பேசுவான். அவள் வெறுமனே காதில் வாங்கி கொள்ளுவாள். முதன் முதலாக அவளாக கேட்க, அவனுக்கோ ஆச்சரியம்.


“ஏதாவது முக்கியமான விஷயமா அமிர்தா”

என ஆரவ் கேட்க,


“அது…” என மீண்டும் தயங்க, அவனோ அவளது நிலைமையை புரிந்து கொண்டான்.


“நாளைக்கு ஈவினிங் போல வந்துருவேன். ஏதாவது சொல்லனுமா? இல்லை ஏதாவது வேணுமா? வாங்கிட்டு வரவா?”

என கேட்க, அவளோ


“இல்லை, இல்லை, அதெல்லாம் எதுவும் வேண்டாம். சும்மா நீங்க எப்போ வரீங்க கேட்கலாம் தான் போன் பண்ணேன்” 

என்றவள் மேலும்,


“ஊருக்கு வந்துட்டு, வீட்டுக்கு போய்டுவீங்களா? இல்லை ஆபீஸ் வருவீங்களா?”


என எங்கே நேரே வீட்டுக்கு சென்று விடுவானோ என்ற அச்சத்தில்  கேட்க, அவனோ புன்னகைத்து கொண்டான்.


“ஆபீஸ் வரணுமா?” என வசீகரமாக கேட்க, அவளுக்கோ இங்கு பேச்சு நின்று போனது. வேண்டும் என்று சொல்லவும் தயக்கமாக இருந்தது, வேண்டாம் என்று சொல்லவும் மனம் வரவில்லை.


அவளின் தயக்கமும், பயமும் அவளை பார்க்காமலே அவனுக்கு தெரிந்தது.


“ஏர்போர்ட்ல இருந்து நேரா ஆபீஸ் தான் வருவேன்” என்றதும் அவளின் மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை.


சரியென்று அவள் அழைப்பை அணைக்க, அவனும் சிரிப்புடன் அலைபேசியை தான் பார்த்து கொண்டிருந்தான்.


அனைத்தையும் நினைத்து பார்த்தவள் கோவிலில் இருந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கிளம்பி அலுவலகம் சென்றாள்.

நாள் முழுவதும் அவன் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க, இதோ மாலை முடிந்து இரவு கூட வந்துவிட்டு இருந்தது. ஆரவ் இன்னும் வந்த பாடில்லை. அவனுக்கு அழைக்கவும் தயக்கமாக இருந்தது.


அவனை எதிர்பார்த்து காத்திருந்தவகளுக்கு, எதிர்பாராத விதமாக  நடந்தது அந்த நிகழ்வு, அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்த அந்த மூவரால்!!


என் வாழ்வின் இருள் 

இருளாகவே இருந்துவிட்டு போகட்டுமே!!

ஒளியாக நீ இருக்கும் போது 

இருள் கூட அழகாக தான் தெரிகிறது


பிடிக்கும்……










.












Comments