UNEP-19

 அத்தியாயம்..19


           நேற்றைய பொழுது அமிர்தா அவனுக்கு அழைத்திலிருந்து அவன் அவனாகவே இல்லை. அவள் குரலில் தெரிந்த, உரிமை உணர்வு, எதிர்பார்ப்பு, ஏக்கம் என அனைத்தும் திரும்ப, திரும்ப எதையோ உணர்த்தி கொண்டே இருக்க, றெக்கை இல்லாமல் வானில் பறந்து கொண்டிருந்தான் ஆரவ்.


எப்பொழுது டா அவளை பார்ப்போம் என்ற பேராவல் நொடிக்கு நொடி அதிகமாகி கொண்டே இருக்க, கஷ்டப்பட்டு தான் அந்த இரவையே நெட்டி தள்ளினான். மறுநாள் விடிந்ததும், காலை ஒருவரை அங்கு சந்தித்து விட்டால் வந்த வேலை முடிந்து ஊர் திரும்பி விடலாம். அதன்படி வேக வேகமாக அந்த நபரை காண கிளம்பி சென்றான்.


அந்த நபரை சந்தித்து முடித்ததும், ஊர் கிளம்பலாம் என்று மதியம் போல விமான நிலையம் வர, அங்கு தான், கடைசியாக அமிர்தாவிடம் அவன் பேசியது.  விமானம் ஏற போகிறோம் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்து விட,  விமானம் ஏற காத்து கொண்டிருந்த சமயம், சரியாக அந்நேரம் பார்த்து, நகரத்தின் முக்கிய அமைச்சர், அவசரமாக வேறு எங்கோ செல்ல வேண்டி, விமான நிலையம் வர, அதனால் இவர்களது விமானம் எடுக்கப்பட தாமதம் ஆனது.


அமைச்சரின் வருகை என்பதால் பாதுகாப்பு காரணமாக, ஏகப்பட்ட காவலர்கள், கட்சி உறுப்பினர்கள் என விமான நிலையமே நிரம்பி வழிந்தது. இருந்த பரப்பரப்பில், ஆரவ்விற்கும், ஹரிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் கழித்தே அவர்களது விமானம் அங்கிருந்து புறப்பட்டது. சென்னை வந்து சேர்ந்த பொழுது மாலை ஆகிவிட, இங்கும் விமான நிலையத்திலிருந்து வெளிவர கால தாமதம் ஆனது.


விமான நிலையத்திலிருந்து வெளிவந்த நேரம், ஆரவ்விற்கு தெரிந்த நபர், அவனை பிடித்து கொள்ள, அவரிடம் பேசிக் கொண்டிருக்க, இன்னும் நேரம் ஆனது.  சரி அமிர்தாவிற்கு அழைத்து விவரம் சொல்லலாம் என்று பார்க்க, அந்நேரம் அவளுக்கு அழைப்பு போகவே இல்லை.


ஒரு வழியாக, எல்லாம் முடிந்து சென்னை சாலையில் ஸம்பித்து நின்ற வாகனங்களை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி இங்கு வந்து சேருவதற்குள் என்னென்னவோ நடந்து முடிந்து விட்டிருந்தது.


ஆரவ்வின் மனம் அவளுக்கு அழைப்பு போகவில்லை என்றதுமே ஒரு மாதிரியாக தான் ஆகிவிட்டது. நேற்றைய மகிழ்ச்சி, இன்று இல்லை அவனிடம். ஏதோ ஒரு சஞ்சலம் அவனை ஆட்கொண்டது. அமிர்தாவிற்கு ஏதோ தவறாக நடக்க போகிறது என்று அவன் காதல் மனம் அவனை எச்சரிக்கை செய்தது. அதற்காகவே அவளை காண வேகமாக வர எண்ணினான். ஆனால் விதியின் சதியில் இருவருமே சிக்கி கொண்டனர்.


ஹரி கூட அவனிடம், 

“சார், அல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு. கண்டிப்பா அமிர்தா கிளம்பி போய் இருப்பாங்க. நாம வீட்டுக்கு போகலாம் சார். காலையில் இருந்து ரொம்ப அலைச்சல் வேற. ரெஸ்ட் எடுக்கிறது நல்லது”

என அறிவுறுத்த, ஆரவ்வோ,


“இல்ல ஹரி, அமிர்தா கண்டிப்பா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. நேத்து அவ பேசியதில் இருந்தே, அவ ஏதோ என்கிட்ட சொல்ல காத்துக்கிட்டு இருக்கான்னு தோணுது. நான் எங்க வருவேன் வேற கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிட்டா. நான் ஆபீஸ் தான் வருவேனு சொல்லிட்டேன். நாம பர்ஸ்ட் ஆபீஸ் போய் பார்போம். இல்லைனா அப்புறம் என்ன பண்ணலாம் பார்க்கலாம்”

என உறுதியாக கூறிவிட, ஹரியும் வண்டியை நேராக அலுவலகத்தை நோக்கி செலுத்தினான்.


அலுவலகத்தின் வாயில் நுழையும் போதே, ஆரவ்வின் மனமோ படப்படவென அடித்து கொண்டது. எதுவோ நடக்க போகிறது, என அவன் மனம் ஆபாய மணியை ஒலிக்க விட்டு கொண்டே இருக்க, அதனுடனே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவன் அதிர்ந்து விட்டான்.


அலுவலகமோ திறந்து இருக்க, அங்கே பொருட்கள் எல்லாம், சிதறி கிடந்தது.


“என்ன சார், ஆபீஸ் இப்படி இருக்கு. ஆபீஸை குளோஸ் கூட பண்ணாம போய் இருக்காங்க. இருங்க மாணிக்கத்துக்கு போன் பண்ணி பார்க்கிறேன்”

என்ற ஹரி உடனே மாணிக்கத்திற்கு அழைக்க, அவரோ,


“சார், நான் எப்பவோ கிளம்பிட்டேன். அமிர்தாமா தான் ஆரவ் சாரை பார்த்துட்டு தான் போவேனு, அங்கேயே இருந்தாங்க”

என கூறியதை கேட்டு ஹரியும், ஆரவ்வும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


“யோவ், கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? ஆபீஸில் எல்லாரும் போன பின்னாடி குளோஸ் பண்ணிட்டு போறது தானே உன் வேலை. அதை விட்டுட்டு அமிர்தாவை தனியா விட்டுட்டு போய் இருக்க. அவங்களை இங்க காணும். ஆபிஸே அலங்கோலமா இருக்கு”


என ஹரி அவரை கண்ட மேனிக்கு திட்ட, அவரும் அதிர்ந்து,


“என்ன சார் சொல்றீங்க? அமிர்தா மாவை காணுமா? சார் நான் எவ்வளவோ சொன்னேன், சீக்கிரம் கிளம்புங்கனு, அவங்க ஆரவ் சாரை பார்க்காமல் போக மாட்டேனு ஒரே பிடிவாதம். இன்னைக்குனு பார்த்து சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை. அதான் சார்”


என்றதும், “வையா போனை, எரிச்சலா கிளப்பிக்கிட்டு” என அலைபேசியை அணைத்த ஹரி, ஆரவ்வை பார்க்க, அவனால் என்ன நடந்து இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.


அலுவலகத்தை சுற்றி பார்த்த ஆரவ், அமிர்தாவின் பொருட்கள் எல்லாம் சிதறி கிடப்பதை பார்த்து, 


“ஹரி, இங்க பாரு, அமிர்தாவோட திங்ஸ். இங்கே சிதறி இருக்கு. போன் கூட இங்க தான் இருக்கு. யாரோ எடுத்து கீழே கொட்டி இருக்காங்க. யாரோ அவ தனியா இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு தான் வந்து இருக்காங்க. இங்கே காபி கப்ஸ் வேற இருக்கு,”


என அங்கு இருந்ததை எல்லாம் பார்த்தவனுக்கு நெஞ்செல்லாம் படப்படவென அடித்துக் கொண்டது.


“ஹரி.., அமிர்தாவிற்கு என்னமோ ஆகி இருக்கு. எனக்கு பயமா இருக்கு ஹரி”

என அவன் கலங்க, ஹரிக்கும் அதே சந்தேகம் தான், இருந்தாலும் அவனை தேற்ற வேண்டுமே!!


“சார், அது.. அதெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது. வாங்க சீக்கிரம் போய் தேடுவோம்”

என அவசரப்படுத்த, ஆரவ்வும் அலுவலகத்தை சுற்றி, 


“அமிர்தா,.. அமிர்தா..,” என அவளை தேட ஆரம்பித்தான்.


ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் யாரிடம் சென்று விசாரிப்பது என்று கூட தெரியவில்லை. அமிர்தா அங்கு இருந்து இருக்கிறாள் என்பது தெரிந்தது. ஆனால் எங்கு சென்றாள் என்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, எங்கு தான் அவளை போய் தேடுவது என இருவரும் சோர்ந்து போயினர்.


எவரேனும் வந்து அமிர்தாவை கடத்தி கொண்டு போய் இருந்தால், அவளிடம் ஏதாவது தவறாக நடந்து கொண்டிருந்தால், அதனால் அவள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து இருந்தால், நேரம் செல்ல செல்ல, அவனின் பயங்கள் விரிந்து, அவனின் ஒவ்வொரு அணுவையும் பயம்காட்டி அச்சுறுத்தியது.


சாலையில் இருந்த கும்மிருட்டை பொருட்படுத்தாது, இருவரும் அந்த இடத்தை சுற்றி சுற்றி தேடினர்.


“ஹெலோ ஏஜே சார்” என எங்கிருந்தோ வந்த குரல் அவனை தடை போட, தூரத்தில் ஒருவர் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.


“சார், என்ன யாரை இவ்வளவு பரப்பரப்பா தேடிட்டு இருக்கீங்க”

என கேட்டார், அந்த நபர். அவரோ, அந்த சாலையின் கடைசியில்  இருக்கும் அலுவலகத்தின் காவலாளி. இரவு பணிக்காக அங்கே இருந்தார்.


“அண்ணே, உங்களுக்கு என் ஆபீஸ் தெரியும்ல. அங்கே ஒரு பொண்ணு இருப்பாங்க. அவங்களை காணும். நீங்க ஏதாவது பார்த்தீங்களா?”

என ஆரவ் படப்படக்க, 


“அமிர்தாவையா தேடுறீங்க?” என அவளது பெயரோடு அந்த நபர் கேட்டதும், ஆரவ்விற்கோ கண்ணில் ஒளி பெருகியது.


“ஆமாம், ஆமாம் உங்களுக்கு தெரியுமா?”

என எதிர்பார்ப்புடன் ஆரவ் கேட்க, அவரோ,


“அந்த பொண்ணை இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியுமே!! ரொம்ப நல்ல பொண்ணு ஆச்சே!! எத்தனையோ தடவை எவ்வளோ ஹெல்ப் பண்ணி இருக்கு. ரொம்ப பாசக்கார பொண்ணு கூட. அண்ணேனு அண்ணேனு உரிமையா கூப்பிடும். அந்த பொண்ணையா காணும். அச்சச்சோ!


“சார் நான் லேட்டா தான் ஆபீஸ்க்கே வந்தேன். அதனால் என்னால் இன்னைக்கு அமிர்தா கிட்ட பேச முடியல. நான் வந்த நேரம் ஏதோ போலீஸ் வண்டி மாதிரி நின்னுட்டு இருந்தது. அதில் வலுக்கட்டாயமா ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு போற மாதிரி இருந்துச்சு. அப்புறம் அது போய்டுச்சு. ஆனால் அது அமிர்தாவா தெரியல. தூரத்தில் இருந்து பார்த்ததால் தெரியல. ஏன்னா இவ்வளவு நேரம் அந்த பொண்ணு இருக்காதே!! சரி கிளம்பி போய் இருக்கும் தான் நினைச்சேன்”


என தனக்கு தெரிந்த தகவல்களை கூற, ஆரவ்விற்கு ஒன்றுமே புரியவில்லை.


“போலீஸ் வந்ததா? எதற்கு? அலுவலகத்தில் அமிர்தாவை தவிர யாருமில்லை. அப்போ அமிர்தாவை தான் கூட்டி கொண்டு போய் இருக்கிறார்கள். ஏன் அமிர்தாவை கூட்டிக் கொண்டு போக வேண்டும்? போலீஸ் வந்து கூப்பிட்டு போற அளவுக்கு என்ன நடந்தது? யார் வந்தது? இது போல் ஏகப்பட்ட கேள்விகள் அவன் மண்டையை குடைய, ஒன்றுமே புரியாது குழம்பி போனான் ஆரவ்ஜெயந்தன்.


“ஹரி… எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்ன நடக்குதுனு ஒன்னுமே புரியல. அமிர்தா.. அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்காதுல” என கலங்கி  போய் கேட்க, ஹரிக்குமே நடக்கும் எதுவும் விளங்கவில்லை.


எல்லாமே ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தது. 


“சார், கிடைச்ச குளு வச்சு முயற்சி பண்ணுவோம். அமிர்தாவிற்கு ஒன்னும் ஆகி இருக்காது, வாங்க போவோம்”

என ஆறுதல் கூறி அழைத்து வந்தான்.


மீண்டும் அலுவலகத்தின் உள்ளே சென்று இருவரும் அடுத்து என்ன என்ற யோசனையில் இறங்க, ஆரவ்வோ சுற்றி பார்த்து கொண்டிருக்கும் பொழுது தென்பட்டதோ சிசிடிவி கேமரா.


“ஹரி, சிசிடிவி கேமரால தெரியுமே யார் வந்ததுன்னு செக் பண்ணுவோம்”

என்றதும் ஹரியும் மளமளவென்று அலைபேசியில் கேமராவின் இணைப்பை எடுத்து பார்க்க, அதில் அலுவலகத்தின் வாசலில் கார் ஒன்று வந்து நிற்பது தான் தெரிந்தது, அதுவும் மங்கலாக. அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. கேமரா  பழுதடைந்தது போல காணப்பட்டது. 


ராமமூர்த்தி தான் அவளது அலைபேசி, கேமரா என எதுவும் வேலை செய்யாதப்படி வரும் பொழுதே செய்து விட்டாரே!!. கடைசியாக அந்த கேமிராவில் விழுந்தது, ராமமூர்த்தி வந்த கார் மட்டுமே!!


எதையுமே தெளிவாக பார்க்க முடியாதப்படி இருந்தது, அதில் தெரிந்த காட்சிகள். 


“என்ன சார்? ஒன்னும் தெரியல. கார் கூட சரியா தெரியல”

என்ற ஹரியிடம், 


“எனக்கும் எதுவும் புரியல ஹரி. எல்லாம் பிளான் போட்டு பண்ண போல இருக்கு. யார் பண்ணி இருப்பாங்க எதுவும் தோணல. அமிர்தாவுக்கு யாரு எதிரி இருக்க போறா. பேசாம நாம கமிஷனர் கிட்ட பேசலாம். நேரம் போக போக ஒருமாதிரி இருக்கு. மனசு என்னவோ போட்டு பிசையுது”

என அமிர்தாவை நினைத்து வருந்தி கொண்டிருந்தான் ஆரவ்.


“சார், மங்கலா தெரிஞ்சாலும் இந்த காரை நான் எங்கேயோ பார்த்த போல இருக்கு. அதிலிருந்து யாரோ இறங்கி வர போல கொஞ்சம் மங்கலா தெரியுது. அந்த ஆளையும் பாருங்க. யாரோ நாம கிட்ட ரொம்ப க்ளோஸா பழகின ஆள் போல இல்ல”


என ஹரி, அதில் மங்கலாக தெரிந்த, விஷயத்தை வைத்து ஓரளவிற்கு ஊகித்து கூற, ஆரவ்வும் தற்பொழுது தான் அதனை உற்று கவனித்தான். மீண்டும் மீண்டும் அதனை, பார்த்தவன், 


“ஹரி, இது.. இந்த.. கார்…, என மூளையை கசக்கியவனுக்கு சட்டென்று மின்னல் வெட்டியது.


“ஹரி.. இது ராமமூர்த்தி சாரோட கார். அதிலிருந்து வரது அவரே தான்”

என கூறியவனுக்கு தற்பொழுது அனைத்தும் விளங்கியது.


“ஹரி, நாம முதலில் பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் போலாம் அமிர்தா அங்க தான் இருப்பா, காமன் குயிக்”

என்றவன், வேகமாக காரை நோக்கி ஓடி வர, உடன் ஹரியும் வந்தான். 


இருவரும் காவல்நிலையத்தை நோக்கி பயணம் மேற்கொள்ள, ஆரவ்விற்கோ நிலைக்கொள்ள முடியவில்லை.


“டாமிட், இந்த ராமமூர்த்திக்கு எவ்வளவு திமிர் இருக்கனும்.  இருக்கு அவனுக்கு. என் அமிர்தாவுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருக்கட்டும். அவனை கொல்லாமல் விட மாட்டேன்”

என அத்தனை கோபமாய் இரைந்து கொண்டே வந்தான் ஆரவ். அவன் இந்தளவிற்கு கோபம் கொண்டு இதுவரை ஹரி பார்த்ததே இல்லையே!!


“சார், ரிலாக்ஸ், ஒன்னும் ஆகி இருக்காது. இப்போ போய்டலாம்”

என அவனை ஹரி தேற்ற,


“எப்படி ரிலாக்ஸா இருக்க சொல்ற ஹரி. இந்த ராமமூர்த்தி, நான் அமிர்தாவை தான் விரும்புறேன் கண்டுபிடிச்சு, அவளை ஏதோ சூழ்ச்சி பண்ணி போலீஸில் மாட்டும்படி பண்ணி இருக்கான். அவ எவ்வளவு துடிச்சு இருப்பா. அவளுக்கு அங்கே என்னாச்சோ?!! நினைக்க நினைக்க என்னால் டென்ஷன் ஆகாமல் இருக்க முடியல. சீக்கிரம் போ ஹரி”

என அவனை துரித்தப்படுத்தினான் ஆரவ்.


இங்கு, காவல்நிலையத்தில் சற்று முன் கொடுத்த அறையில் சுருண்டு விழுந்த அமிர்தா, கன்னத்தை பொத்தியப்படி தட்டு தடுமாறி எழுந்து நின்று, பயத்துடன் அந்த அதிகாரியை பார்க்க, அவரோ உக்கிரத்துடன் அவளை பார்த்து கொண்டிருந்தார்.


அவர் அடித்த அடியில் அவளின் கன்னம் வீங்கி, உதடு கிழிந்து ரத்தம் வர, தள்ளாடி கொண்டு நின்றிருந்தவளின் அருகில் வந்தவர்,


“அந்த மோதிரத்தை திருடினது நீதான்னு எழுதி இருக்கு.. ஆமாம் சொல்லி கையெழுத்து போடு”

என அவளை மிரட்ட, அமிர்தாவோ,


“இல்.. லை.. நா.. ன் திருடல” என்று கூற, சிறிதும் தயங்காது மற்றொரு கன்னத்திலும் அந்த காவலாளி ஓங்கி அறைய, மீண்டும் சுருண்டு விழுந்தாள் அமிர்தா.


அவளால் தற்பொழுது எழ கூட முடியவில்லை. உடலில் உள்ள சக்தி அனைத்தும் வடிந்து போயிற்று. 


அவளருகில் குனிந்த காவலாளி, அவளது முடியை கொத்தாக பிடித்து நிமிர்த்த, வலியில் “அம்மா…”  என்று அலறினாள் அமிர்தா. அவள் கதறலில், அங்கிருந்தவர்களே அமிர்தாவிற்காக இரக்கப்பட்டனர்.


“இப்பவாவது ஒழுங்கா ஒத்துக்கோ. இல்லை, அடிபட்டே செதுருவ பார்த்துக்கோ”

என்று கடுமையாக அவளை மிரட்ட, அவளோ,

“நா…ன் தி.. ரு.. ட.. ல,” என்றாள் மீண்டும்.


அவளை உதறி தள்ளிய காவல்துறை அதிகாரியோ, 


“ஏய், இவளை உள்ளே கொண்டு வாங்க. நம்ம ட்ரீட்மெண்ட் கொடுத்தா தான் சரிப்பட்டு வருவா” என தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட, அவர்களும், அவளை இருபுறமும், பிடித்து கொண்டு வந்து, அங்கிருந்த அறையில் விட்டனர்.


அந்த அறையின் மூலையில் நடுக்கத்துடன், ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள் அமிர்தா. அவளால் சுத்தமாக முடியவில்லை. கண்கள் மங்கலாக தெரிய, மயக்க நிலைக்கு செல்வது போல உணர்ந்தாள். வலி உயிர் போனது. பயம் ஒருபக்கம், என்ன ஆக போகுதோ என்ற நடுக்கம் ஒருபக்கம், அனைத்தும் சேர்ந்து கண்ணீரை உற்படுத்தி செய்ய, அழுகை மட்டும் நிற்கவே இல்லை அவளுக்கு. மனமோ ஆரவ்வின் அண்மையை நினைத்து ஏங்கியது.


கையில் இருந்த மோதிரத்தை அந்த நிலையிலும் தன் கன்னதோடு இறுக பதித்து கொண்டாள். அவளின் நடுக்கத்தை மேலும் கூட்டும் வகையில், அங்கே பிரவேசமானார் அந்த பெண் காவலாளி. கையில் அவளை அடிப்பதற்கு ஏந்திய குச்சியுடன்.


“ஏய், எந்திரி” என குச்சியை அவள் முன்னே நீட்டி எழுந்திரிக்க கூற, அவளோ பயத்துடன், சுவற்றை பிடிமானமாக பிடித்து கொண்டு தட்டு தடுமாறி எழுந்து நின்றாள்.


“ஏய், உன் பேக்கில், மோதிரம் இருந்ததை நானே பார்த்தேன். அப்பவும், நான் திருடல, திருடலனு ஒரே பாட்டை பாடிட்டு இருக்க? ஒழுங்கா ஒத்துக்கோ, இல்லை பெண்டிங் இருக்கிற கேஸை எல்லாம் உன் பேரில் எழுதி நிரந்தரமா ஜெயிலேயே இருக்க வச்சுடுவேன்” என்றதும், அமிர்தாவோ,


“உண்மையாவே, நான் திருடல. அது எப்படி என் பேக்குள்ள வந்ததுனு தெரியல. நான் திருடல.., நம்புங்க” என கதறியவளை, பார்த்து எரிச்சலடைந்தவர்,


“ஏய்.., ஏய் நிறுத்து, நானும் பார்த்துட்டே இருக்கேன். ஒரே ஒப்பாரி வச்சுட்டு இருக்க. இப்படியெல்லாம் கேட்டா நீ ஒழுங்கா சொல்ல மாட்ட, நாலு போட்டா தான் உண்மைய ஒத்துப்ப”


என்றவர், அவளை லத்தி கொண்டு சரமாரியாக அடிக்க, 


“அம்மா.., வலிக்குது.., அடிங்காதீங்க.. நான்.. திருடல.,” 


என்ற அமிர்தாவின் நடுங்கும் குரல் அந்த அறை மட்டுமில்லாது அந்த காவல் நிலையத்தின் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. அவள் மேல் அங்கிருந்த உயிரற்ற பொருள்கள் கூட இரக்கம் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவள் நிலை.


 விழுந்த அடிகளின் தடயங்கள் அவள் உடம்பில் தாராளமாக பதிய, அவளின் அந்தரங்க உறுப்புக்களில் எல்லாம் அவர்களது அடிகள் விழுந்ததன் காரணமாக, ரத்தக்கசிவும் ஏற்பட்டது. வலி தாங்காது ஒரு கட்டத்தில், அமிர்தாவோ அங்கேயே மயங்கி சரிந்தாள். அடித்து ஓய்ந்து போன காவளாலோயோ, தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம், 


“இவளை ஒரு ஓரமா போட்டு வைங்க. மயக்கம் தெளிஞ்சதும் கையெழுத்து வாங்கி ஜெயிலில் போடணும்”

என்றவர், அடித்து களைத்ததில் வந்து இருக்கையில்  அமர்ந்து இளைப்பாற, அப்பொழுது அங்கே வேகமாக உள்ளே நுழைந்தன் ஆரவ். 


வேகமாக வந்தவன், அங்கு அமர்ந்திருந்த, அந்த பெண் காவலாளியிடம்,


“எதுக்கு அமிர்தாவை கூட்டிட்டு வந்தீங்க? யாரை கேட்டு கூட்டிட்டு வந்தீங்க? எங்கே அமிர்தா?”

என கத்த, அவரோ தெனாவட்டாக,,


“ஹெலோ சார், யார் நீங்க? யார் அமிர்தா? இது போலீஸ் ஸ்டேஷன், நியாபகம் இருக்கா? என்னமோ உங்க வீடு போல, நீங்க பாட்டுக்கு வந்து கத்திக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? பார்க்க டீசென்டா இருக்கீங்க. இன்டீசெண்டா பிகேவ் பண்றீங்க”

என்றார் சற்று குரலை உயர்த்தி.


“சார் இருங்க நான் பேசுறேன்” என்ற ஹரி, காவலாளியின் புறம் திரும்பி,


“மேடம், இவர் டைரக்டர் ஏஜே. ஆரவ் ஜெயந்தன். நீங்க இப்போ கொஞ்ச நேரம் முன்னே, எங்க ஆபீஸ் ஸ்டாஃப் அமிர்தாவை கூட்டிட்டு வந்து இருக்கீங்க. ஏன்? எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? எங்க கிட்ட இன்போர்ம் கூட பண்ணல. அவங்களை காணும்னு நாங்க தேடிட்டு இருக்கோம்”

என விளக்க, 


“ஒஹ்ஹ், அந்த திருட்டு பொண்ணை பத்தி கேட்கிறீங்களா?”

என அலட்சியமாக அவர் கூறியதும், ஆரவ்விற்கோ கோபம் தளாவில்லை.


“யாரை பார்த்து திருடி சொல்றீங்க?” என அவன், அவர் முன் இருந்த  மேஜையை ஓங்கி தட்ட, அந்த காவலாளியும், அங்கிருந்த மற்ற காவலர்களும் அவனை நோக்கி வந்தனர்.


“என்ன? என்ன சார்? போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து, அராஜகம் பண்ணிட்டு இருக்கீங்க. தூக்கி உள்ள வச்சுடுவேன் பார்த்துக்கோங்க”

என அந்த காவலாளி மிரட்ட, 


“எங்கே, உள்ளே வைங்க பார்ப்போம். என் அமிர்தாவை, திருடி சொன்னா,  பார்த்துட்டு  சும்மா இருக்க முடியாது. அவளைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”

என சண்டைக்கு நின்றான் அவரிடம்.


“ஹெலோ சார், நாங்க ஒன்னும் சும்மா சொல்லல. கண்ணால் பார்த்ததை தான் சொல்றோம். அந்த பொண்ணு பையில் இருந்து, மோதிரத்தை எடுத்ததே நான் தான்”


“நீங்க கண்ணால் பார்த்ததை மட்டும் வச்சு குற்றவாளினு எப்படி சொல்வீங்க? திருடி வச்சுக்கிட்டவ எடுத்து பேக்கிலா வச்சுப்பா. அவளுக்கு தெரியாது, முதலில் பேக்கில் தான் தேடுவாங்கனு. இதிலே தெரியுது, வேணும்னே அவ மேலே பழி போட்டு இருக்கீங்கனு. சொல்லுங்க, அந்த ராமமூர்த்தி கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க”


என நேரடியாக கேட்டு விட, ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் விட்டார் அந்த பெண் அதிகாரி. 


“என்..ன? நா .ன், நான் யார்கிட்ட பணம் வாங்குனேன்? என்ன சார்? என்ன பேசுறீங்க? யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு தெரியுதா?

என உரக்க கத்த, 


“அதான் தெரியுதே காசுக்காக, கடமையை வித்த அதிகாரி கிட்ட பேசிட்டு இருக்கேன்னு” 


என நக்கலாக கூறியவன், “அமிர்தா எங்கே?, இப்போ நான் அவளை பார்த்தாகணும்” என்றான் திடமாக.


“இதோ பாருங்க, பெரிய இடத்து ஆள்னு தான் இவ்வளவு நேரம் சும்மா இருக்கேன். சும்மா, தேவையில்லாமல் பேசிட்டு இருந்தீங்க. அப்புறம் நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டி வரும்” என்றவர், 


“அந்த பொண்ணை சும்மா பயம்காட்ட தான் கூட்டிட்டு வந்தோம். அப்புறம் கையெழுத்து வாங்கிட்டு அனுப்பி வச்சுட்டோம். இது ஒரு சின்ன கேஸ், இதுக்குலாம் நாங்க முக்கியத்துவம் கொடுக்க முடியாது. அதுவும் இல்லாமல் பொருளும் கிடைச்சுடுச்சு. இனிமேல் இப்படி செய்ய கூடாதுனு வார்ன் பண்ணி அனுப்பிட்டேன். நீங்க வேறெங்கயாவது  விசாரிச்சு பாருங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு”


என அலட்சியமாக கூறியவர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு, ஒரு கோப்பையை எடுத்து புரட்டினார்.


அப்படியே கோப்பையில் தன்னை மறைத்து கொண்டு, அமிர்தாவை வைத்திருந்த அறையை பார்க்க, அவள் தெரியவில்லை என்றாலும், எங்கே மயக்கம் தெளிந்து வந்து விடுவாளோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது.


“என்ன? வீட்டுக்கு அனுப்பிடீங்களா? அவ இன்னும் வீட்டுக்கு வரல. எப்படி நீங்க அவளை தனியா அனுப்பலாம். அட்லீஸ்ட் எங்க கிட்டயாவது சொல்லி இருக்கலாம். நீங்களா கூட்டிட்டு வந்துட்டு, இப்போ நீங்களா போக சொல்லிட்டேன் சொன்னா என்ன அர்த்தம். வாட்ஸ் தி ரப்பிஷ் திஸ்? கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசிகிட்டு இருக்கீங்க.  நீங்க பப்லிக் செர்வ்ன்ட். அந்த ரெஸ்பான்சிபிலிட்டியோட நடந்துக்கோங்க"

என ஆரவ் அந்த இடத்தையே ஒரு வழி ஆக்கி கொண்டு இருந்தான். அவன் கத்தலில் அந்த காவல்நிலையமே அதிர்ந்தது.


“சார், இவரை இப்போ கூட்டிட்டு போகலை அப்புறம் இங்க நடக்கிறதே வேறையா இருக்கும். ஒழுங்கா கூட்டிட்டு போய்டுங்க"

என ஹரியும் புறம் திரும்பி கூறிய, அந்த அதிகாரி, இவர்களை இங்கிருந்து சீக்கிரம் கிளப்பி விட வேண்டும் என நினைத்து கொண்டார்.


“சார், வாங்க சார் போலாம். நாம வெளியில் போய் என்ன பண்ணலாம் பார்ப்போம். வாங்க" என ஹரி அவனை வெளியே அழைக்க, அதற்கெல்லாம் ஆரவ் அசைந்து கொடுக்கவே இல்லை.


“நீ சும்மா இரு ஹரி, என்ன போலீஸ்னா பயந்துடுவோமா?!! இவங்க வெறும் இன்ஸ்பெக்டர் தான். நீ கமிஷனருக்கு போன் போடு நாம அங்கே பேசிக்கலாம்”

என கொஞ்சமும் அசராது ஆரவ் அங்கேயே நிற்க, 


“யார் கிட்ட வேணும்னாலும் பேசுங்க. அதை பத்தி எனக்கு கவலை இல்லை. இப்போ வெளியே போங்க. கான்ஸ்டபிள், இவங்களை வெளியே அனுப்புங்க”

என அலட்சியமாக கூறிய அந்த அதிகாரி, அமிர்தா இருந்த அறையை தான் நோட்டம் விட்டார். இன்னமும் மயக்கம் தெளியவில்லை என்பதே அவருக்கு அத்தனை நிம்மதி.


“சார், வெளியே போங்க, எதுவா இருந்தாலும், வெளியே போய் பேசிக்குங்க”


“நான்.., நான் ஏன் போகணும்? முடியாது, என் அமிர்தா எங்கே? அவ இல்லாமல் என்னால் போக முடியாது.


“சார், நாம வெளியே போய் ஹையர் அபிஷியல்ஸ் கிட்ட பேசிப்போம். வாங்க”


“ஹரி நீ கூட புரிஞ்சுக்காம பேசுற பார். அமிர்தா இல்லாமல் எப்படி? அவ எங்கே எப்படி இருக்கான்னு தெரியாமல், நான் வர மாட்டேன் ஹரி. எனக்கு என் அமிர்தா, இப்போ இங்கே வந்தாகனும்”.


என்ற கலவையான குரல்கள், எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போல அமிர்தாவிற்கு கேட்க, சரியாக ஆரவ்வின் குரலை அவள் இனம் கண்டு கொண்டாள்.


“இங்க தான் அவர் இருக்கார். என்னை தேடிட்டு வந்துட்டார். எனக்கு தெரியும் அவரால் என்னை விட்டுட்டு இருக்க முடியாது. அவர் கிட்ட போகணும். என்னை விட்டுடுங்க. அட்லிஸ்ட் அவர் முகத்தையாவது ஒரே ஒரு முறை பார்த்துகிறன்” என அமிர்தாவின் ஆழ் மனது அரற்றிக்கொண்டு இருக்க, அதற்கு உடலோ, சுத்தமாக கைகொடுக்கவில்லை.


இமைகளை, கடினப்பட்டு திறக்க முயற்சிக்க, அரை கண்கள் மட்டுமே அவளால் திறக்க முடிந்தது. அதிலும் ஆரவ்வை காண, மங்கலாக அவன் உருவம் அவள் கருவிழியில் தெரிந்தது. 


அவனை அழைக்கலாம் என்று பார்த்தால், பேச்சே வரவில்லை. வாங்கிய அடிகள், அவளை நிலைகுலைய, செய்து இருந்தது. கையை உயர்த்தி அவனை அழைக்க முயற்சிக்க, கைகளையும் தூக்க முடியவில்லை. எழுந்திரிக்க உடம்பிலும் தெம்பு இல்லை.


இத்தனை நேரம் இருந்த வேதனையை விட, தற்பொழுது அவனை பார்க்க பார்க்க இன்னும் அதிகமாக இருந்தது.


“என்னை பாருங்க, நான் மனசால் பேசினாலே உங்களுக்கு கேட்கும். எனக்கு தெரியும் உங்களை பத்தி, நான் இங்க தான் இருக்கேனு உங்களால் கண்டு பிடிக்க முடியும். திரும்பி பாருங்க”


என மானசீகமாக மனதோடு அவனிடம் பேச, அது சரியாய் அவனுக்கும் கேட்டது.


“ஹரி, அமிர்தா, இங்க தான் இருக்கா. இவங்க பொய் சொல்றாங்க. என் காதல் பொய் சொல்லாது ஹரி. என் உள் மனசு சொல்லுது, அவ இங்க தான்,  என்னை தான் பார்த்துட்டு இருக்கா. என்னை எப்படியாச்சும் காப்பாத்தி கூட்டிட்டு போங்கனு என்கிட்ட பேசிட்டு இருக்கா. என்னால் அவளை உணர முடியுது. நம்பு ஹரி. அவ இல்லாமல் இந்த இடத்தை விட்டு என்னால் வர முடியாது”


என அத்தனை உறுதியாக கூறியவனை கண்டு, அத்தனை வலியிலும், பாலைவனத்தில் கால் கெடுக்க, நடந்த பின் கிடைக்கும் ஊற்று போல, உள்ளுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது அமிர்தாவிற்கு.


மனதில் தற்பொழுது புது உத்வேகம் பிறந்தது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. அவனிடம் தன் இருப்பை எப்படி கூறுவது என்பது புரியாமல் கலங்கியவள் கண்ணில் பட்டது அவன் அணிவித்த மோதிரம்.


முயன்று, கையில் அவன் அணிந்து இருந்த மோதிரத்தை உருவியவள், அறையின் கதவில் இருந்த துவாரத்தின் வழியில், அதனை அவனை நோக்கி உருட்டி விட, சரியாய் அது அவன் பாதையில் போய் விழுந்தது.


அதனை அவன் பார்ப்பானா, தன்னை மீட்பானா என்ற ஆவல் பெருக, அவனையே பார்க்க, ஹரி அவனை அழைத்து கொண்டு வெளியேறும் நேரம், ஆரவ்வோ அந்த மோதிரத்தை தாண்டி பாதங்களை பதித்து வெளியே செல்ல, உடைந்தே போய் விட்டாள் அமிர்தா.


அவளது கடைசி நம்பிக்கையும் அவளுக்கு கை கொடுக்காமல் போக, செல்லும் ஆரவ்வின் உருவத்தை, கண்கள் நிறைய நிரப்பி கொண்டு, கொண்டு, கண்ணீரில் அதனை குளிப்பாட்டியப்படி கண் மூடினாள் ஆரவ்வின் அமிர்தா.



முடிவெடுத்த பின்னாடியும்

முடித்து வைக்க நினைக்கிறது விதி

முடிந்து விட கூடாதென்கிறது நினைக்கிறது காதல்

முடிவிலியாய் உன்னோடு

சேர்வேனோ என்ற

எதிர்ப்பார்போடு நிற்கிறேன் நான்!!


பிடிக்கும்….














Comments