UNEP-20

 அத்தியாயம்..20


         மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனத்தில், நிலவின் ஒளியை பிடிமானமாக வைத்துக்கொண்டு, முன்னேறும் கால்கள், அமாவாசை இருட்டில் என்னவாகும்? மறைந்து தானே போகும்!! 

அந்த நிலையில் தான் இருந்தாள் அமிர்தா.


கடைசி நம்பிக்கையாய் அந்த மோதிரத்தை தான் அவள் பிடிமானமாய் நினைத்திருக்க, அதை கவனிக்காமல் ஆரவ் சென்றதும், அமாவாசை இருட்டு போல் தான் ஆகி விட்டது அவள் மனம்.


அவ்வளவு தான், வாழ்க்கை முடிந்து விட்டது. இனி என்ன இருக்கிறது? உங்களின் காதல் எனக்கு கிடைத்ததே இப்பிறவிக்கு போதும். அடுத்த ஜென்மத்திலாவது, கொடுப்பினை இருந்தால் ஒன்று சேருவோம் என மானசீகமாக நினைத்து கொண்டவள், மரணத்தின் வாசலுக்கு செல்ல தயாரானாள்.


“ஹரி, என்னை விடு, எதுக்கு இப்போ என்னை கூட்டிட்டு வந்த, நாம உள்ளே போய் பார்ப்போம், கண்டிப்பா அமிர்தா அங்க தான் இருக்கா. என் மனசு சொல்லுது ஹரி. நம்பு”

என கோபமாய் ஆரம்பித்தவன், உடைந்து கூற, ஹரியால் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.


“சார், நீங்க சொல்றது புரியுது. ஆனால் நம்மளால் இப்போ எதுவும் செய்ய முடியாது. அமிர்தாவை கண்டுபிடிக்கிறது தான் முதல் வேலை. நாம பேசினா வேலைக்காகது, பேசுறவங்க பேசினா தான், இவங்க கிட்ட வேலையாகும். நான் கமிஷனர் கிட்ட பேசுறேன். இருங்க”


என்றவன், அலைபேசியை எடுத்துக் கொண்டு தள்ளி போக, அங்கிருந்த தூணில் தளர்வாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் ஆரவ்.


‘அமிர்தா, எங்க இருக்க? என்னால் தான் உனக்கு இந்த நிலைமை. ஸாரி அமிர்தா, நான் உன்னை தனியா விட்டுட்டு போய் இருக்க கூடாது’

என மனதோடு மருகியவன், விழிகளை மூட, மூடிய விழிகளில், அவனின் கருவிழியானவள் தான் வந்து நின்றாள்.


‘எனக்கு பயமா இருக்கு, என்னை இங்கிருந்து கூட்டிட்டு போய்டுங்க’

என்ற அவளின் குரல் அசரீரியாய் அவன் காதுகளில் கேட்க, பட்டென்று விழிகளை திறந்தவன், காவல் நிலையத்தின் உள்ளே பார்த்தான்.


அவன் மனம் அடித்து கூறியது, அவள் அங்கு தான் இருக்கிறாள் என்று.

‘நீ இங்க தான் இருக்கியா அமிர்தா’ என்று மனதோடு அவளிடம் கேட்க, ஆமாம் என்ற அவளின் குரல், அந்த காவல் நிலையத்திலிருந்து கேட்பது போலவே இருந்தது.


வைத்த கண் இமைக்காது, உள்ளே தான் அவனது பார்வை இருந்தது. அங்கே ஒவ்வொரு இடத்திலும், அவள் அழுது கொண்டு இருப்பது போலவே அவனுக்கு காட்சி விரிந்தது.


‘நீ கவலைப்படாதே அமிர்தா, என் உயிரை கொடுத்தாவது, உன்னை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன்’

என்று தன்னை திடப்படுத்தி கொண்டவன், திரும்பி ஹரியை பார்க்க, அவனோ கமிஷ்னரிடம் பேச முயற்சி எடுத்து கொண்டிருப்பது தெரிந்தது.


மீண்டும் காவல்நிலையத்தின் உள்ளே அவன் பார்ப்பதற்கும், அவன் அமிர்தாவிற்கு அணிவித்த மோதிரம், தரையில் மினுமினுத்துக் கொண்டு அவனை அழைப்பதற்கும் சரியாய் இருந்தது.


தரையில் ஏதோ மினுமினுப்பாய் தெரிவதை கண்களை கூர்மையாக்கி, இன்னும் கூர்ந்து பார்க்க, என்னவென்று தெரியாவிட்டாலும், அதனை விட்டு அவன் விழிகளை விலக்க முடியவில்லை.  கிட்ட சென்று பார் என்று அவன் உள்மனம் தூண்ட, மெதுவாய் அடியெடுத்து வைத்தவன், உள்ளே நுழைய, அங்கிருந்த காவலாளியோ,


“சார், இப்போ தானே வெளியே போங்கனு அனுப்பி விட்டோம் மறுபடியும் வந்தா என்ன அர்த்தம்”

என காட்டமாக கேட்க, எதையும் உணரும் நிலையில் அவனில்லை.


அவனது முழு கவனமும், அந்த பொருளை நோக்கி தான் இருந்தது. முன்னேறி சென்று கொண்டே இருக்க,


“சார், உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன். மேடம் பார்த்தா திட்டுவாங்க. வெளியே போங்க”


என்பதையும் மீறி, அந்த பொருளின் அருகே சென்றவன், குனிந்து எடுத்து பார்க்க, அதிர்ந்து விட்டான். கைகள் எல்லாம் நடுங்கின. 


“அமிர்தா…” என மெல்ல உச்சரித்தவனின், உடலில் இருந்து ஒரு நொடி உயிரே போய்விட்டது போல் இருந்தது.


ஹரியும், அலைபேசியில் உரையாடி முடித்து விட்டு, அவனை தேட, உள்ளே இருந்தவனை நோக்கி ஓடி வந்தவன் அவன் கையில் இருந்ததை பார்த்து


“சார்,.. இ…து, இது  அமிர்தாவோட மோதிரம்”

என்றான் அதிர்ந்தப்படி. ஆமாம் என்று தலையாட்டிய ஆரவ்,


“ஹரி, அவ எந்த சூழ்நிலையிலும், இந்த மோதிரத்தை கழட்டினதே இல்லை. இது இங்கே இருக்குன்னா”

என்று அதை பார்த்தப்படி கூறியவனின்,  இதயமோ தன் துடிப்பை அதிகரித்தது.


“ஹரி, அமிர்தா இங்க தான் இருக்கா. அவளுக்கு என்னமோ நடந்து இருக்கு. யார் என்ன பண்ணாலும், நாம தேடலாம் வா"


என ஆக்ரோஷமாக கத்தியவன், ஒரு முடிவு எடுத்திருந்தான். ஹரிக்கும் அவன் கூறுவது தான் சரியென்று தோன்ற, சட்டென்று இருவரும், அந்த காவல்நிலையத்தில் தேட ஆரம்பித்தனர்.


அங்கிருந்த காவலர்கள் எல்லாம், 


“என்ன?  என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இது போலீஸ் ஸ்டேஷன். போங்க இங்கிருந்து”

என அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க, இருவரும் அவர்களை மதிக்கவே இல்லை.


குறுக்கே வந்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு ஒவ்வொரு இடமாக தேட, காவலர்களுக்கும், இவர்களுக்கும் இடையில் பெரிய தள்ளு முள்ளே ஏற்பட்டது.


இவர்களது சலசலப்பில், உள்ளே இருந்து வெளியே வந்த, அந்த பெண் காவலாளி,


“எதுக்கு மறுபடியும் வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க. கான்ஸ்டபிள், ரெண்டு பேரையும் பிடிச்சு லாக் அப்பில் தள்ளுங்க”

என கட்டளையிட, ஆரவ்வோ வேகமாக அந்த அதிகாரியை பிடித்து தள்ளி விட, அவரோ தூர போய் விழுந்தார்.


அந்த அதிகாரி, எழும் முன்பு, அவரருகில் குனிந்தவன், 

“என் அமிர்தா, எங்கே? ஒழுங்கா உண்மையை சொல்லிடு. அவளை என்ன பண்ண? இப்போ நீ உண்மையை சொல்லல, அப்புறம் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது”


என்ற அவனின் ஆக்ரோஷத்தில் அவரே சற்று பயந்து தான் போனார்.


அவனுக்கு பக்கவாட்டாக இருந்த அறையிலிருந்து, மெல்லிய முனகல் சத்தம் வெளிவர, சட்டென்று இருவரின் கவனமும் அங்கு திரும்பியது. ஆரவ்வோ வேகமாக, அந்த அறையின் வாசலுக்கு விரைந்தவன், கதவை திறக்க முயல, அதற்குள் அந்த பெண் காவலாளி, அவனை அங்கிருந்து இழுக்க முயன்றார். அதற்கெல்லாம் அவன் அசைந்து கொடுக்கவே இல்லை.


“இதோ பாரு, நீ என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரியுதா? இதோட பின் விளைவுகள் மோசமானதா இருக்கும்”

என அந்த அதிகாரி எச்சரிக்க, அவனும்


“அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. இப்போ நீ தள்ளி போல, நான் உன்னை கொலை பண்ணவும் தயங்க மாட்டேன். தள்ளி போ”


என அவரை மீண்டும் தள்ளி விட, அவர் தற்பொழுது கால்களை ஊன்றி, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, ஆரவ் அந்த அறையின் கதவை திறக்க விடாது தடுத்து கொண்டிருந்தார்.


இந்த பக்கம் இவன் இப்படி இருக்க, அந்தப்பக்கம் ஹரியும், காவலர்களுடன் சண்டை போட்டு கொண்டிருக்க, அந்த காவல் நிலையமே போர் களம் போல் காணப்பட்டது.


“என்ன நடக்குது இங்கே?” என்ற குரல் ஓங்கி ஒலித்ததும், அவரவர் இருந்த நிலையில் இருந்து திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்ததோ, நகரத்தின் கமிஷ்னர்.


அவரை கண்டதும், காவலாளியும், மற்ற காவலர்களும் மரியாதை செய்ய, ஆரவ்வும் ஹரியும் அவர் அருகில் வந்தனர்.


“ஹலோ சார்” என்ற ஆரவ், 


“சார், இவங்க என் அமிர்தாவை தேவையில்லாமல் ஏதேதோ பொய் காரணம் சொல்லி கூட்டிட்டு வந்து, என்னமோ பண்ணிட்டாங்க. இப்போ கேட்டா, சும்மா கூட்டிட்டு வந்தோம், அப்புறம் அனுப்பிட்டோம்னு பொய் சொல்றாங்க. எப்படியாவது என் அமிர்தாவை கண்டுபிடிச்சு தாங்க சார். அவ உயிரோடு இருக்காளா, இல்லையான்னு கூட தெரியல”


என ஆரவ் நடந்ததை விவரிக்க, அவரோ அந்த பெண் காவலாளியை கேள்வியாய் பார்த்தார்.  அவரை இந்த நேரத்தில் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அந்த பெண் காவலாளி. இருந்தும் சமாளிப்பாக,


“சார், அந்த பொண்ணு மோதிரத்தை திருடி, பேக்குள் வச்சு இருந்தா, நானே கண்ணால் பார்தேன், ஸ்டேஷன் கூட்டிட்டு வந்தோம். அந்த பொண்ணு ரொம்ப கெஞ்சினா, சரின்னு வார்ன் பண்ணி அனுப்பிட்டோம். ஆனால் இவர் அதை புரிஞ்சுக்காம இப்படி பண்ணிட்டு இருக்கார். போலீஸ் ஸ்டேஷன் கூட பார்க்காம, ரெண்டு பேரும் ஒருவழி ஆகிட்டாங்க. இவங்க மேல் கேஸ் பைல் பண்ணனும் சார்”


என அவர் ஒரு பக்கம் தன் நியாயத்தை கூறினார்.


“சார், இவங்க பொய் சொல்றாங்க. இது அமிர்தாவோட மோதிரம். அவ இதை எப்பொழுதும் கழட்டினதே இல்லை. இது இங்கே இருக்குன்னா அவளுக்கு என்னமோ ஆகி இருக்கு. எனக்கு சொல்றதுக்காக தான் கழட்டி இருக்கா, எனக்கு தெரியாது என் அமிர்தா வேணும் சார். எப்படியாவது மீட்டு கொடுத்துடுங்க”


என்ற ஆரவ் அவரிடம் கெஞ்ச, அவரும்,


“இருங்க மிஸ்டர். ஆரவ், என்னன்னு விசாரிப்போம். அதுக்காக தானே வந்து இருக்கேன்” என்று கூறியவர்,  அந்த பெண் காவலாளியை விட்டு, அவருடன் வேலை பார்க்கும் மற்ற காவலாளிகளிடம், 


“நீங்களாம் உண்மையை சொல்வீங்கனு நம்புறேன். என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. அந்த பொண்ணு எங்க?”


என்று கேட்க, அந்த பெண் காவலாளியோ,


“சார், அதான் நான் நடந்ததை சொன்னேனே” என முந்தி கொண்டு கூற, 


“நான் உங்களை கேட்கல. பிளீஸ் கீப் குயைட்”

என்றவர், மற்றவர்களை கண்டு, 


“இப்போ சொல்ல போறீங்களா? இல்லை எல்லார் மேலையும் அலிகேஷன் வச்சு, வேலையை விட்டு தூக்கட்டுமா?”

என்று சற்று காட்டமாகவே கேட்க, அங்கிருந்த, மற்ற பெண் காவலாளியில் ஒருவர், 


“அந்த பொண்ணு இங்க தான் இருக்கு சார்”  என்றதும், மூவருக்கும் அதிர்ச்சி.


பெண் அதிகாரியை முறைத்து பார்த்தவர், இவர் புறம் திரும்பி,


“அந்த பொண்ணை கூட்டிட்டு வாங்க” என்று கட்டளையிட்டார்.


அமிர்தாவை இருந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்ற அந்த காவலாளி, அவளை எழுப்ப, மயக்க நிலையில் இருந்தவளுக்கு, லேசான விழிப்பு தட்டியது.


“எந்திரி மா,” என அவர் தூக்கி நிறுத்தி, அவளை வெளியே கூட்டி வர, அடுத்த அடி கூட வைக்க முடியாது, தள்ளாடி தடுமாறி வெளியே வந்து நின்றவளை கண்டதும், ஆரவ்விற்கு உயிரே போய் விட்டது.


முகமெல்லாம் வீங்கி, கன்றி போய், வாடி, வதங்கி, மடிய தொடங்கிய மலர் போல் இருந்தவளை காண காண, அவனோ உள்ளுக்குள் மடிய தொடங்கினான்.


“அமிர்தா…” என பெருங்குரலெடுத்து கத்தியவன், ஓடி வந்து அவளை தாங்கி கொள்ள, அந்த குரலே அவளை சுயநினைவிற்கு கொண்டு வர போதுமானதாக இருந்தது.


அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், அவனை விட்டு பிரிய முடியாது, என்பதை போல அவனது சட்டையை இறுக பற்றி கொண்டாள். 


“அமிர்தா.., அமிர்தா.., என்னை பாரு மா”

என அவனது கண்ணீர் அவள் கன்னம் தொட்டு எழுப்ப, லேசாக விழி மலர்ந்து பார்த்தாள் அவனை.


பேச வரவில்லை, ஆனால் அழுகை மட்டும் குறையாமல் வந்தது. அவன் நெஞ்சத்தில் தஞ்சம் இருப்பதே இப்பிறவிக்கு போதும் என தன்னைத் தானே தேற்றி கொண்டவள், வழியும் அவன் கண்ணீரை நடுங்கும் கைகளால் துடைத்து விட பார்த்தாள்.


அவனே அவள் கைகளை பிடித்து கொண்டு, அதை எடுத்து கண்ணில் ஒத்தி கொண்டவனுக்கு கண்ணீர் உடைப்பெடுத்து அவள் கைகளை நனைத்தது.



அவளால் நிற்கவே முடியவில்லை. அதைவிட, உடம்பின் வலி உயிர் போனது.  குறிப்பிட்ட சில இடங்கள் அதிகமான வலியை தர, அவள் தோளைச் சுற்றி போட்டிருந்த, அவனது கையை மெதுவாக கீழிறக்கி கொண்டு வந்தவள், அவள் மார்பு பகுதியில் உள்ள, அந்தரங்க இடத்தின் மீது அவனது கையை வைத்தாள். அவனோ ஒன்றும் புரியாது அவளை பார்க்க, அமிர்தாவோ


“ரொ..ம்..ப வ..லி.. க்கு.. து” என்று மட்டும் தான் கூறினாள், “அமிர்தா..” என அவளை மார்போடு இறுக அணைத்து கொண்டு கதறிவிட்டான் ஆரவ்.


உள்ளத்து வலிகளின் வடிகாலே இந்த கண்ணீர் தானே!!

உயிரானவளின் வலி உணர்ந்து  சிந்தும் கண்ணீரின் மதிப்பு விலைமதிப்பில்லாதது அல்லவா!!  


உரிமை இல்லாத எவரையும், எந்த பெண்ணும் அவளது அந்தரங்க பகுதியின் மீது பார்வை படவே அனுமதிக்க மாட்டாள். ஆனால் ஆரவ்வை அந்த பகுதியின் மீது கை வைக்க வைத்து தன் நிலையை எடுத்து காட்டினாள் அமிர்தா. அவன் மீது அவளுக்கு இருக்கும் எத்தனை நம்பிக்கையையும் காதலையையும் வைத்திருக்கிறாள் என்பது அவளின் செயலே அவனுக்கு உணர்த்தியது.


அவன் கை வைத்த இடத்தில் ஏதோ மாற்றம் தெரிய, கையை உயர்த்தி என்னவென்று பார்த்தான் ஆரவ். அவன் கைகள் முழுவதும் ரத்தம் தெரிய, அவனால் நடந்து கொண்டிருப்பதை எதையும் ஜீரணிக்கவே முடியவில்லை.

ரத்தத்தை பார்த்து அதிர்ந்தவன், அவளை பார்க்க, அமிர்தாவோ அப்படியே அவன் மேலேயே மயங்கி சரிந்தாள்.


மயங்கிவளை அப்படியே அள்ளிக் கொண்டவன், 


“ஹரி.., சீக்கிரம் காரை எடு.., ஹாஸ்பிடல் போகணும்”


என துரித்தப்படுத்தியவன், வெளியேறும் முன், அங்கிருந்த அந்த பெண் காவலாளியை பார்த்து,


“என் அமிர்தா மேலேயே கை வச்சுடீங்களா. இனி ஒருத்தரையும் நான் சும்மா விட மாட்டேன். இதுக்கான பலனை நீங்க ரெண்டு மடங்காக அனுபவிப்பீங்க”


என சூளுரைத்தவன், ஹரி கொண்டு வந்து நிறுத்திய காரில் ஏறி கொள்ள, வாகனமோ, காற்றை கிழித்து கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டது.


அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு வந்தவன், 


“அமிர்தா, உனக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விட மாட்டேன். நான் இருக்கேன், தைரியமா இருக்கணும். நான் கூடவே தான் இருப்பேன்”

என அவளுக்கு தைரியம் சொல்வது போல தனக்கு தானே சொல்லி கொள்ள, மயக்கத்தில் இருந்தவளுக்கு அவன் சொன்னது எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் தன்னிச்சையாக அவளோ, அவன் சட்டையை இறுக பற்றி கொண்டே தான் வந்தாள். அந்த மயக்கத்திலும், அவனை விட்டு விலகவே இல்லை.


“ஹரி, டாக்டர் கிட்ட பேசிடு, உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும். டிலே ஆக போது”


என ஹரியிடம் கூறியவனின் பார்வை, அமிர்தாவை விட்டு விலகவே இல்லை.


ஹரியும் வேகமாக மருத்துவமனை வந்து சேர, அவர்கள் வரும் முன்னே, அனைத்தையும் தயார்ப்படுத்தி வைத்திருந்தது மருத்துவமனை.


சுற்றி யாரைப்பற்றியும் கவலை கொள்ளவே இல்லை ஆரவ். அவனை பொறுத்தவரை தற்பொழுது யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. கவனம் முழுவதும் அமிர்தா மீது தான் இருந்தது.


அவளை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேர்ச்சரில் கிடத்தியவன், அவளுடனே சிகிச்சை மேற்கொள்ளும் அறை வரை உடன் வந்தான். அப்பொழுதும் அவள் அவன் சட்டையில் இருந்து கையை விலக்கவே இல்லை.


“சார், நீங்க இங்கேயே இருங்க. அப்ப தான் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்”

என மருத்துவர் அறிவுறுத்த, அவனும் பின் தங்க, அவளது கை அவன் சட்டையை இறுக பற்றி இருப்பதை பார்த்தான். மெல்ல அவளது கைகளை விடுவிடுத்தவன், அவள் காதோரம் குனிந்து,


“நீ எனக்கு வேணும் அமிர்தா, என் வாழ்க்கை முழுவதுக்கும். நானும் உனக்கு வேணும்னு நினைச்சா, நிச்சயம் என்கிட்ட திரும்ப வந்துடு”


என்றவன், தள்ளி நின்று கொள்ள, அவளை சிகிச்சை அறையின் உள்ளே கொண்டு சென்றனர்.


அறைக்கு நுழைந்த மருத்துவரை,


“டாக்டர்,” என அவன் அழைக்க, அவரும்,


“சொல்லுங்க, மிஸ்டர் ஆரவ்” என்று அவனருகில் வந்தார்.


“டாக்டர், அவளுக்கு நிறைய இடத்தில் காயம் ஏற்பட்டு இருக்கு. எல்லா இடத்திலும் செக் பண்ணுங்க. அப்புறம்… என, அமிர்தா, அவனிடம் குறிப்பிட்ட இடத்தை அவரிடம் எப்படி கூறுவது என்று தயங்கி நின்றான். 


“அது.., அவளோட, செஸ்ட்ல, பிளீட்டிங்கா இருந்தது. அதாவது.. அவளோட..”


என்று மீண்டும் தயங்கி நிற்க, மருத்துவருக்கு அவன் கூற வருவது புரிந்தது.


“நான் பார்த்துகிறேன் மிஸ்டர். ஆரவ்

நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஐ வில் டேக் கேர்”

என மருத்துவர் கூற,


“நீங்க அவளை நல்ல செக் பண்ணி பாருங்க டாக்டர். எங்க காயங்கள் இருக்குனு தெரியல. அவ சின்ன வலி கூட தாங்க மாட்ட, அவளை போய்…,”


என்றவனுக்கு, வார்த்தை வராமல் துயரம் தொண்டை அடைத்தது. அவனது தோள் தட்டி ஆறுதல் கூறிய மருத்துவர் சிகிச்சை அறையின் உள்ளே சென்றார்.


தளர்ந்து போய் இருக்கையில் வந்தமர்ந்தவனுக்கு சுற்றம் எதுவும் உரைக்கவில்லை. சிகிச்சை அறையில் இருக்கும் அமிர்தாவின் எண்ணம் மட்டுமே அவனை சூழ்ந்து இருந்தது. அவள் நல்லபடியாக பிழைத்து வரவேண்டும் என்ற பிராத்தனையை தவிர, அவன் சிந்தையில் தற்பொழுது எதுவும் இல்லை.


அதற்குள், யாரோ சமூக வலைதள நல்லுள்ளம், லைக்ஸ்கும், கமெண்டுக்கும் ஆசைப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் அமிர்தாவை தூக்கி வந்த ஆரவ்வை புகைப்படமெடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு விட, அன்றைய நிசப்தமான இரவின் சப்தம் ஆனார்கள்  ஆரவ்வும், அமிர்தாவும்.


ஹரிக்கு இதுப்பற்றி தொடர்ந்து அழைப்புகள் வர, அதனை எப்படி ஆரவ்விடம் கூறுவது என்று தெரியாமல் அவனோ விழி பிதுங்கி நின்றான்.


கொஞ்ச நேரத்தில் மருத்துவமனையை சூழ்ந்தது ஊடகங்கள். உள்ளே எவரையும் விடாது, தடுத்து நிறுத்திய மருத்துவமனை, அவர்களை அங்கிருந்து போக சொல்லி வற்புறுத்த, எவரும் நகர்ந்த பாடியில்லை.


வாய்க்கு அவல் கிடைத்தது போல, ஆளாளுக்கு அவர்களே அந்த விஷயத்தை கதை, கற்பனை கொண்டு விதவிதமாக திரைக்கதை வைத்து படமே தயாரித்து இருந்தனர். அதுவும் சமுக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.


நிலைமை தீவிரமாவதை உணர்ந்து ஹரியோ, ஆரவ்வின் அருகில் வந்து அமர்ந்தவன்,


“சார்” என்று அழைக்க, ஆரவ்வும் அவனை நிமிர்ந்து பார்த்தான்.


"நீங்க அமிர்தாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்ததை யாரோ போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு இருக்காங்க. அது கொஞ்சம் தேவையில்லாமல் ப்ரோப்ளம் கிரியேட் பண்ணுது. ஹாஸ்பிடல் வாசலில் மீடியா குவிஞ்சு இருக்காங்க. உங்களையும் அமிர்தாவையும் வச்சு ஏதேதோ பேசுறாங்க. நீங்க வந்து பேசினீங்கன்னா நல்ல இருக்கும்"


என்று ஹரி கூற, அப்பொழுது தான் மருத்துவமனை வளாகத்தை எட்டில் பார்த்தான் ஆரவ். தன்னால் மற்றவர்களுக்கு சங்கடம் எதுவும் நேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன். எழுந்து வெளியே வந்தான்.


அவன் வந்ததும் அந்த இடமே பரப்பரப்பானது. 


"சார், யாரோ ஒரு பொண்ணை நீங்க தூக்கிட்டு  வந்தது போல ஒரு போட்டோ சோசியல் மீடியாவில் வந்து இருக்கு. அது உண்மையா?. உண்மையா இருந்தால் யார் அந்த பொண்ணு? அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்னாச்சு அவங்களுக்கு? எனிதிங்  சீரியஸ்?  ஆக்சிடெண்ட்டா? யார் பண்ணது? நீங்களா? இல்லை வேற யாராவதா?"


என சரமாரியான கேள்விகள் அவனை பிச்சி பிடுங்க, அவனால் ஒரு நிலையில் இருக்கவே முடியவில்லை. இருந்தும், மனதின் அழுத்தத்தை போதுமான அளவு உள்ளுக்குள் அமிழ்த்தி கொண்டு, முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டான்.


“ஹெலோ, ஆல்,” என வழக்கமான தன் பாணியில், இடது மார்பில் வலது கை வைத்து முயன்று புன்னகைத்து கூறியவன்,


“உங்க கேள்விகளுக்கு எல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன். பிளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ.


உங்களுக்கே என்னை பத்தி தெரியும். கண்டிப்பா, கொஞ்சம் நார்மல் ஆகிட்டு உங்க கிட்ட பேசுறேன். இது ஹாஸ்பிடல், ஏகப்பட்ட பேஷண்ட்ஸ் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. அவங்களுக்கு டிஸ்டபன்ஸ் பண்ற மாதிரி நாம நடந்துக்க கூடாது இல்லையா?!!


அதனால், இப்போ நீங்க எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க. ஒருநாள் நானே பிரெஸ் மீட் வச்சு பேசுறேன். 


தென், இது லைவ்வா எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க. அதேபோல் நான் எதிர்பார்கிற நபரும் பார்த்துட்டு இருப்பீங்க. அவங்க எதுக்காக சில விஷயங்கள் பண்ணி இருக்காங்கனு எனக்கு புரியுது. நாம ஒரு விஷயம் பண்ணா, அது ரெண்டு மடங்கா நம்ம கிட்ட வந்து சேரும் சொல்வாங்க. அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. அதுக்கான பலனை நிச்சயம் அனுபவிச்சு தான் ஆகணும். அனுபவிக்கணும், அனுபவிக்க வைப்பேன்”


என முழுக்க முழுக்க நேரில் ராமமூர்த்தி இருப்பது போல கூறியவனின் உள்ளம் எரிமலை போல வெடித்து சிதறியது.


மற்றவர்களுக்கு அவன் சாதரணமாக கூறுவது போல தான் இருந்தது. ஆனால் அவனது கண்ணில் வந்து போன தீர்க்கம், வீட்டில் அமர்ந்து திரையை வெறித்து கொண்டு அமர்ந்திருந்த ராமமூர்த்திக்கு அவனது சினம் நன்கு விளங்கியது.


“போய்ட்டு வாங்க” என இருகரம் கூப்பி அவர்களை வழியனுப்பி வைக்க, அவர்களும் அவன் சொல்லுக்கு மரியாதை செலுத்தி அங்கிருந்து கலைந்து சென்றனர். 


சிறிது நேரத்திற்கெல்லாம், பளார் என்ற சத்தத்துடன், இடியாய் விழுந்த அறையில் தள்ளாடி ராமமூர்த்தி கீழே விழ, அவர் முன்னே ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் ஆரவ்ஜெயந்தன்.


நிபந்தனையில்லா

உன் நினைவுகளிலே சிக்கி

பரிதவிக்கும்

என்னை மீட்டெடுத்து

உயிர்ப்பிக்க நீ வேண்டும் 

அந்த காலம் எப்பொழுது?!!



பிடிக்கும்…




























Comments