UNEP-22

 அத்தியாயம்-22


        ஆரவ் மருத்துவமனை வந்து சேரும் பொழுது நன்கு விடிந்து விட்டிருந்தது. மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வர, அங்கே இருந்த இருக்கையில், கைகளை கொண்டு தலையை தாங்கியப்படி உறங்கி கொண்டிருந்தான் ஹரி.


அமிர்தாவின் அறையை திறந்து பார்க்க, அவளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஹரியின் அருகில் வந்த ஆரவ், “ஹரி”  என்று அழைக்க, அவனும் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழுந்து கொண்டான்.


“என்ன சார்? என்ன வேணும்? கொஞ்சம் கண் அசந்துட்டேன். அமிர்தாக்கு ஏதாவது வேணுமா?”

என மளமளவென்று கேட்க, ஆரவ்வோ,


“ஒன்னும் வேண்டாம் ஹரி. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் ஏதாவது தேவைன்னா கூப்பிறேன்” என்றான்.


“நான் மட்டுமா? நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார். ரெண்டு நாளா  நீங்களும் தூங்கலையே. கண்டிப்பா உங்களுக்கும் ரெஸ்ட் வேணும்”

என ஹரி அக்கறையாக கூற,


“இல்லை ஹரி, அமிர்தாவை பார்த்துக்கணும். நான் இங்கே இருக்கேன். நீ போ. என்னால் இப்போ வேறெந்த வேலையிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நீதான் எல்லாம் மேனேஜ் பண்ணனும்”

என்றதும் ஹரியும், 


“ஓகே சார். நான் எல்லாம் பார்த்துகிறேன். நீங்க அமிர்தாவை பார்த்துக்கோங்க”


 என விடைபெற்று கொண்டு சென்றுவிட, தளர்ந்து போய் அமிர்தா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆரவ்.


நேராக அவளருகில் சென்றவன், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, அவளது கைகளை பிடித்துக்கொண்டு அதிலே தலைசாய்த்து கொண்டான். இரண்டு நாளின் போராட்டம், அவனின் மனதையும், உடலையும் நன்றாக சோர்வடைய செய்ய, மெல்ல அப்படியே கணயர்ந்து விட்டான்.


“இல்ல.., நா.. ன் திருடல, அடிக்காதீங்க.., வலிக்குது…” என திடீரென்று கேட்க குரலில் நன்கு உறங்கி கொண்டிருந்தவன் அடித்து பிடித்து கொண்டு எழ, அங்கே அமிர்தா தான், தூக்கத்தில் அலறி கொண்டிருந்தாள்.


“அமிர்தா.., அமிர்தா.., இங்க பாரு டாமா. என்ன பண்ணுது?” என அவளை கன்னம் தொட்டு கேட்க, அப்பொழுதும் அவள் அப்படியே தான் அலறி கொண்டிருந்தாள்.


அதை கண்டவனுக்கு பயம் தொற்றி கொள்ள, “டாக்டர், டாக்டர்” என கத்தி குரல் கொடுக்க, மருத்துவரும், செவிலியரும் உடனே அறைக்குள் ஓடி வந்தனர்.


மருத்துவரும் அவளை பரிசோதனை செய்துவிட்டு உடனே அவளுக்கு சிகிச்சை மேற்கொள்ள, சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது அலறல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி போனது.


ஆரவ்வோ கலக்கத்துடன் மருத்துவரை பார்க்க, அவரோ,


“நான் தான் சொன்னேனே ஆரவ், அவங்க மனசளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்கனு. அதோட வெளிபாடு தான் இது. அவங்களுக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் ஆழ் மனசில் நல்ல பதிஞ்சு போச்சு. உடனே சரி பண்றது கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். பார்க்கலாம்”


என்று கூறிவிட்டு அவர் சென்று விட, ஆரவ்வோ தளர்ந்து போய் விட்டான்.

அமிர்தாவை எப்படி இயல்பு நிலைக்கு கொண்டு வருவது என்பதே அவனுக்கு தெரியவில்லை. இருந்தாலும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை மனதில் நிறுத்தியவன், எப்படியாவது அமிர்தாவை மீட்டு கொண்டு வர வேண்டும் என உறுதி கொண்டான்.


“அமிர்தா மா, நான் உன் பக்கத்தில் தான் இருக்கேன். ஏன் பயப்படுற? உனக்கு ஏதாவது ஆக விடுவேனா நான். தைரியமா இருக்கனும்”


என ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் தைரியம் கொடுக்க, தன்னிச்சையாக, அவன் பிடித்திருந்த கைகளை இறுக பற்றி கொண்டாள் அமிர்தா.


அடுத்து வந்த இரண்டு நாட்களும், அவளின் நிலை இதுவாக தான் இருந்தது. தூக்கத்தில் அலறி கத்துவதும், பின் மருத்துவர் வந்து அவளை உறங்க செய்வதும், ஆரவ் அவளருகில் அமர்ந்து அவளுக்கு தைரியமூட்டுவதும் என்றே நாட்கள் கழிந்தது.


ஆரவ் அவளுடனே தான் இருந்தான். எங்கும் செல்லவில்லை. மருத்துவமனையிலே ஒரு அறையை எடுத்து கொண்டவன், அங்கேயே குளித்து முடிக்க, நிர்மலா, வேளை தவறாது கொடுக்கும் உணவை உண்டு இருந்தான்.


மூன்றாவது நாள், லேசாக விழி திறந்தவள், அருகில் ஆரவ் நின்றிருப்பதை கண்டு நிம்மதி அடைந்தாள். அவளின் கண்களில் தெரிந்த நிம்மதியில், லேசாக அவள் தலை கோதி புன்னகைத்தான் ஆரவ்.


“ஹெலோ அமிர்தா, இப்போ பெயின் எப்படி இருக்கு?”

என இந்தப்பக்கம் மருத்துவர் கேட்க, குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவள், அங்கு நின்றிருந்த மருத்துவரை கண்டதும் பயந்து போனாள்.


வேகமாக ஆரவ்வின் பக்கம் வந்து ஒடுங்கி கொண்டவள் அவன் கைகளை பிடித்து கொண்டு மலங்க மலங்க அவனை பார்த்தாள்.


“அமிர்தா ஒன்னுமில்ல மா. பயப்படாதே. அவர் டாக்டர் தான். உன்னை செக் பண்ண வந்து இருக்கார்”

எனக் கூற, அவளோ கண்கள் முழுவதும் பயத்தை அப்பிக்கொண்டு பார்த்தாளே தவிர, மருத்துவரின் பக்கம் திரும்பவே இல்லை.


“பய..மா இரு..க்கு” என அவள் திக்கி கூறியதும்,


"அதான் நான் கூடவே இருக்கேனே, எதுக்கு பயம்?"  என ஆறுதல் கூற,


"இங்கேயே இருங்க, என்னை தனியா விட்டுட்டு போய்டாதீங்க" என கெஞ்சினாள் அவனிடம்.


“நான் உன்னை விட்டுட்டு எங்க போக போறேன். இங்கே தான் இருப்பேன். பயப்பட கூடாது”

என்று அவளிடம் கூறியவன், மருத்துவரின் புறம் திரும்பி,


“நீங்க செக் பண்ணுங்க டாக்டர்” என்றான்.


மருத்துவர், அவளை பரிசோதனை செய்தாலும், அமிர்தாவோ ஆரவ்வின் கையை விடவே இல்லை.


சோதித்து முடித்த மருத்துவர், விடைபெற்று கொண்டு செல்ல, அப்பொழுதும் அவளது பயம் தணியவே இல்லை.


“எதுக்கு நீ இப்படி பயப்படுற அமிர்தா?” எல்லாத்தையும் தைரியமா பேஸ் பண்ணனும் சரியா!!”

என அவளுக்கு தைரியமூட்ட, அதுவெல்லாம் அவள் மூளைக்குள் உரைக்கவே இல்லை.


“பயமா இருக்கு. என்னை விட்டு எங்கும் போய்டாதீங்க” என்றாள் கண்களிருந்து நீர் வழிந்தப்படி.


“நான் போக மாட்டேன் மா. அழ கூடாது” என்றவன் அவள் கண்ணீரை துடைத்து விட, மருந்தின் வீரியத்தில் உறக்கத்தை தழுவியவள், அப்பொழுதும் அவனது கையை விடவே இல்லை.


இப்படியே நாட்கள் நகர, அமிர்தாவிற்கு யாரை கண்டாலுமே பயமாக தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி இருக்க, தற்பொழுது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்திருந்தாள்.


இன்னும் சரியாக நடக்க முடியவில்லை அவளால். அவனின் துணையோடு தான் அவள்  நடந்தாள். ஆரவ்வும், அமிர்தாவை ஒரு நொடி கூட பிரியாது, கண்ணின் இமை போல அவளை கவனித்து கொண்டான்.


வெளி காயங்கள் ஓரளவிற்கு குணமாகி இருக்க, அவளது மன காயங்கள் மட்டும் இன்னுமே ஆறாமல் இருந்தது. ஆரவ் அதனை சரிப்படுத்த, எவ்வளவோ முயற்சி செய்ய, அவனுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.


ஒரு சின்ன குண்டூசி விழுந்தால் கூட, அவள் அலறி பயந்து போனாள். மருத்துவர், செவிலியர், அங்கு வேலை பார்ப்பவர், என எந்த புதிய நபரை கண்டாலுமே பயந்து ஆரவ்வுடன் ஒட்டி கொண்டாள்.


ஒருமுறை, அவள் நன்கு உறங்கி கொண்டிருக்க, அவளிருந்த அறையை சுத்தம் செய்ய வந்த நபர், சுத்தம் செய்யும் பொழுது, மேஜையில் இருந்த அவளின் மருந்தை தெரியாமல் தட்டி விட, அதுவோ கீழே விழுந்து விட்டது. அந்த சத்தத்தில், விழித்து கொண்டவள், அங்கிருந்த நபரை கண்டதும், கத்தி கூச்சலிட, அறைக்கு வெளியே இருந்த ஆரவ், அவளின் சத்தம் கேட்டு பதறி அடித்துக் கொண்டு உள்ளே வந்ததும், கால் வலியையும் பொருட்படுத்தாது பயந்து போய் அவனை ஓடி சென்று கட்டிக்கொண்டாள். அதீத பயத்தில் அவளுக்கு மயக்கமே வந்து விட, அவன் மீதே மயங்கி சரிந்தாள். 


“சார் நான் ஒன்னும் பண்ணல” என அங்கிருந்த நபர் அவளின் செய்கையில் கூற, ஆரவ்வோ,


“தெரியும், நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” என கூறிவிட அவரும் வெளியே வந்து விட்டார்.


அவளை அப்படியே தூக்கி கொண்டு வந்து படுக்கையில் கிடத்தியவனுக்கு, மனமே ஆறவில்லை.


பட்டாம்பூச்சி போல் துள்ளி திரிந்து கொண்டிருந்தவளை இப்படியாக்கி விட்டனரே என அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர்களுக்கான தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என அதற்கான வேலையிலும் மிக தீவிரமாக இறங்கினான்.


அன்று முதல், அவளின் அறையை அவனே துடைத்து சுத்தம் செய்ய, அமிர்தாவினால் அதை தாங்க கொள்ளவே முடியவில்லை. அவளால் இன்னும் கூட தரையில் கால்களை சரியாக ஊன்ற முடியவில்லை. அவளுக்கு ஏதேனும் இயற்கை அழைப்பு வந்தால், அவளின் முகம் பார்த்தே அதனை கண்டு கொள்பவன், 


“ரெஸ்ட்ரூம் போகணும்னு சொல்ல என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு? என அன்பாக கடிந்து கொள்பவன், அவளின் கால் தரையிலே படாதவாறு அப்படியே தூக்கி கொண்டு சென்று, அவளை அங்கு தான் விடுவான். திரும்ப அவளை அதே போல் தூக்கி வந்து கட்டிலில் அமர வைப்பான்.


காலின் பாதிப்புக்கு அவனே மருந்து தடவி, அவள் பாதத்தை பிடித்து விட , அவளோ சங்கடமாக நெளிவாள்.


“ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? நீங்க போய் என் காலை பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு”

என்றவளுக்கு, 


“ஏன் இதிலென்ன இருக்கு? நாளைக்கு எனக்கும் இது போல அடிப்பட்டா நீ செய்ய மாட்டியா?”


“ஹ்ம்ம் செய்யவேனே,”


“அப்புறம் என்ன? அதே உரிமை எனக்கும் இருக்கு தானே!! இதில் நீ சங்கடப்பட ஒன்னுமே இல்லை”


என்று கூறி சலிக்காமல் பணிவிடை செய்பவனை என்ன சொல்லி தடுப்பது என்றே அமிர்தாவிற்கு தெரியவில்லை. யாரை பார்த்தாலும் பயமும், சந்தேகமும் அவளை ஆட்டிப்படைக்க,  அவளின் ஒரே நம்பிக்கையாகவும், ஆறுதலாகவும் அவன் மட்டுமே தான் இருந்தான்.


அவனின் அண்மை இல்லாமல் அவளால் நிச்சயம் இருக்க முடியவில்லை. அதே போல் அவனின் வேலைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, அவளுடனே அவன் இருப்பதும் அவளுக்கு சங்கடத்தை தான் தந்தது. எப்பேர்ப்பட்ட இயக்குனர், தனக்காக வேலைக்காரன் போல அனைத்தையும் செய்வதை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.


“நான் உங்களை தொந்தரவு பண்றேன் தெரியுது. இருந்தாலும் உங்களை விட்டு தனியா இருக்கவும் பயமா இருக்கு. தப்பு தான். மன்னிடுச்சுங்க. நீங்க என்கூடவே இருக்கீங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். என்னால் தான் உங்க வேலைகளை பார்க்காமல் இருக்கீங்கனு புரியுது. என்னை  வீட்டுக்கு அனுப்பி வச்சுடுங்க. 


அஞ்சலி இருப்பா, அவ கூட நான் இருந்துகிறேன். எனக்காக நீங்க இப்படி எல்லா வேலையும் பார்த்து, என்னையும் பார்த்துகிறது ரொம்ப சங்கடமா இருக்கு”

என பொருக்கமாட்டாமல் கூறிவிட, ஆரவ்வோ,


“எனக்கு சுத்தமா புரியல அமிர்தா. இப்போ உனக்கு எல்லாம் செய்யுறதுனால நான் என்ன குறைஞ்சு போயிட போறேன்? எனக்கு நிறைய வேலை இருக்கு, நான் பெரிய டைரக்டர், இதெல்லாம் சரிதான். அதுக்காக உனக்கு ஒன்னுன்னா நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்க கூடாதா? இதுவே நம்ம கல்யாணத்துக்கு பின்னே இப்படி ஆகி இருந்தா, என் வைப்பை நான் தானே பார்த்துக்கணும். அப்ப மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்து இருப்பல அதுபோல இப்பவும் இரு.


நான் நீ தான், நீ நான் தான். அப்படி நினைச்சாலே நான் உனக்காக செய்யுற எதுவும் சங்கடத்தை தராது, சந்தோஷத்தை தான் தரும்!! 

என்றான் அத்தனை காதலாக.


அமிர்தாவிற்கு மீண்டும் மீண்டும் அவனது காதல் கண்டு பிரம்மிப்பாக தான் இருந்தது. தன் மீது ஏன் இத்தனை காதல் என்று ஆயாசமாகவும் இருந்தது. அவன் மீதான அவளின் காதல் அவளது கூட்டிலிருந்து வெளிவர செய்தது என்னவோ உண்மை தான். ஆனால் நடந்து முடிந்த சம்பவம் அவளை பெருமளவு தாக்கி இருக்க, அவளோ மீண்டும் தன் கூட்டிற்குள் சென்று தன்னை ஒடுக்கி கொண்டாள்.


தன் ஏழ்மை நிலை, தனக்கென்று யாருமில்லை, என்பதால் தானே  தன்மேல் வீண்பழி சுமத்தி கஷ்டப்படுத்தினர். ஆரவ் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் தான் உயிரோடு இருந்திருப்போமா என்பதே சந்தேகம் தான் அல்லவா. அவனுடைய செல்வாக்கு தானே தன்னை மீட்டு கொண்டு வந்தது. அப்படிபட்டவனுக்கு ஒன்றுமில்லாத தான் பொருத்தமானவள் தானா? என்பது தான் அவளின் எண்ணமாக இருந்தது. திருடி விட்டதாக தான், தன்னை காவல் நிலையம் கொண்டு சென்றனர், தான் இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்புவாரா? என்பது தெரியாது. தன்னை திருமணம் செய்தால், ஒரு திருடியை போய் திருமணம் செய்திருக்கிறான், என்ற அவபெயர் அவனுக்கு வராதா? அத்தகைய தலைகுனிவிற்கு தான் போய் காரணமாக இருக்கலாமா?  என என்னென்னமோ யோசித்து கடைசியில் தான் ஆரவ்விற்கு பொருத்தமில்லை. தன்னோட காதல் தன்னுடனே போகட்டும் என்று தான் சிந்தித்தாள். 


இவையெல்லாம் ராமமூர்த்தியின் சதி என்பது அவளுக்கு தெரியாது அல்லவா. அமிர்தாவை பொறுத்தவரை, ஆரவ் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். தன்னை கரம் பிடித்து, அவனுக்கு எதுவும் அவப்பெயர் வந்துவிட கூடாது என்ற எண்ணம் மட்டுமே!!


“இன்னுமா? நீங்க என்னை இவ்வளவு காதலிச்சுட்டு இருக்கீங்க?”

என விழிகள் கலங்க அமிர்தா கேட்க,


“இன்னுமா இல்லை, இன்னும் இன்னும் காதலிச்சுட்டே இருப்பேன்”

என்றான் ஆரவ் திடமாக.

அவன் அப்படி கூறியதும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. சட்டென்று முகத்தை மூடி அமிர்தா அழ, ஆரவ்வோ புரியாமல் பார்த்தான் அவளை.


“அமிர்தா..என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி அழுற?

என கேட்க,


“தெரியல, அழ தான் வருது. இவ்வளவு காதல் என் மேலே வைக்காதீங்க. அதை என்னால் தாங்கிக்கவே முடியல. என்னால் திருப்பி காட்ட முடியாது. என்கிட்ட குறைகள் நிறைய இருக்கு. அது எல்லாம் என்னால் மாத்தவே முடியாது குறைகள். உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எனக்கு தெரியல. உங்கிட்ட சொல்லவும் எனக்கு முடியல. இத்தனைக்கும் நான் தான் உங்களுக்கு வேணுமா?


வேண்டாமே!! நீங்க நான் நல்ல இருக்கணும் நினைக்கும் போது, அதே தானே நானும் நினைப்பேன். எனக்கும் நீங்க நல்ல இருக்கணும். நான் உங்க வாழ்க்கையில் வேண்டாம். அது நல்ல இருக்காது”


என வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே கூற, அவனோ அவளை இமைக்காமல் கன்னத்தில் கைவைத்தப்படி அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.


அவள் பேசி முடித்து, நேரம் கடந்த பின்பும் அவனிடமிருந்து எந்த பேச்சும் வரவில்லை. அமிர்தாவோ அவன் ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்க்க, அவனோ மௌனத்தை தான் தந்தான்.


அத்தனை காதல் வழிய அவன் பார்த்துக்கொண்டிருக்க, அதில் தடுமாறியவள்,


“எ.. ன்.ன” என்று கேட்க, பெருமூச்சு ஒன்றை விட்டவன்,


“ஒன்னுமில்லை. நேரமாச்சு. சாப்பாடு ஊட்டி விடுறேன். டேப்லெட் போடணும்,”

என்றவன்,

அவளுக்கு உணவை எடுத்து வந்து ஊட்டி விட, அவளோ அவனின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.


அவள் சாப்பிடாது, அவனும் சாப்பிட மாட்டான் என்பது அவளுக்கு தெரியும். அதனால் மறுக்காது அவன் கொடுத்த உணவினை உண்டாள். அடுத்து மருந்துகளை கொடுக்க, அதனையும் மறுக்காது விழுங்கினாள்.


அவள் படுத்து கொள்ள, மெத்தையை சரிசெய்து, அவளை படுக்க வைக்க, அவளும் படுத்து கொண்டாள்.


“தூங்கு,” என அவளின் தலைகோதி கொடுத்தவனிடம்,


“நான் சொன்னதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே?”

என கேட்டாள் அமிர்தா எதிர்பார்ப்புடன்.


“நாளைக்கு சொல்றேன்” என ஒற்றை வரியில் பதில் கூறியவனை புரியாமல் அமிர்தா பார்க்க, ஆரவ்வோ, புன்னகை முகமாக அவளின் தலை கோதி விட்டான். ஆனால் அவன் மனத்திலோ, நாளைக்கு நடக்கவிருக்கும் நிகழ்வினை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது.


மருந்தின் வீரியத்தால், அவள் உறக்கத்தை தழுவ, ஆரவ்வோ, அவள் உறங்கியதை  உறுதி செய்துவிட்டு, அலைபேசியை எடுத்தவன், நாளை செய்ய வேண்டிய வேலைகளின் நிலவரத்தை தெரிந்து கொண்டான். அடுத்தடுத்த நடக்க வேண்டியவை அனைத்தையும் திட்டமிட்டு அதனை செயல்ப்படுத்த வேண்டிய ஏற்பாடுகளை அங்கிருந்தே செய்தான்.


அடுத்த நாள் காலை அமிர்தா கண் விழிக்க, அவளை பார்த்து 

“வெரி குட் மார்னிங்” என உற்சாகமாக கூறியவன்,


“சீக்கிரம் ரெடியாகு, கிளம்பணும்” என அவளை கைப்பிடித்து அழைத்து செல்ல, அவளோ, புரியாமல் அவனை பார்த்தாள்.


“எங்கே போகணும்?” என அமிர்தா கேட்க, 


“நீதானே உன்னை வீட்டில் விட சொன்ன. நான் உனக்கு எல்லாம் செய்யும் போது சங்கடமா இருக்கு. அஞ்சலி என்னை பார்த்துப்பானு சொன்ன, அதான் கூட்டிட்டு போய் விடுறேன்.ஹ்ம்ம் சீக்கிரம் கிளம்பு”


என அவளை குளியலறையில் விட்டவன் வெளியே காத்திருக்க, அமிர்தாவோ மனம் சுணங்கி போனாள்.


அவள் தான் அவன் எதுவும் செய்ய வேண்டாம்  என்று கூறினாள். இனி அவனில்லாமல் எப்படி இருக்க போகிறோம் என்பதை நினைக்கவே அவளுக்கு அடைத்து கொண்டு வந்தது.


இருந்தும் அவனுக்கு நல்லது என்றால், அதனை ஏற்று கொள்ள தான் வேண்டும், என தனது வேதனையை தனக்குள்ளே, புதைத்து கொண்டவள், சீக்கிரமே கிளம்பி வெளியே வந்தாள்.


அதற்குள் எல்லாவற்றையும் எடுத்து தயார் நிலையில் வைத்திருந்தான் ஆரவ்.


அவள் வந்ததும், “கிளம்பலாமா?” என்று கேட்க, அவளும் சரியென்று தலையாட்டினாள்.


அமிர்தாவின் அனைத்து பொருட்களையும் பாதுகாவலர்களிடம் கொடுத்தவன், அவளின் ஒரு கையை கையோடு பிணைத்து கொண்டு, மறுகையை தோளோடு அணைத்து கொண்டு, மருத்துவ வளாகத்தின் வெளியே வர, அங்கிருந்த அனைவரும் அவர்களையே பார்க்க, அமிர்தாவோ சங்கடமாக நிமிர்ந்து பார்த்தாள்.


அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போலும், அவளின் பார்வையில் என்னவென்று புருவத்தை உயர்த்தி கேட்க, 


“எல்லாரும் நம்மள தான் பார்க்கிறாங்க” என்று சுற்றுப்புறத்தை காட்ட, ஆரவ்வோ,


“பார்த்தா, பார்க்கட்டும். இன்னைக்கு தான் நான் உன்னை கூட்டிட்டு போக முடியும். நாளைக்கு அஞ்சலி தானே பார்த்துக்க போறா. நீதானே சொன்ன, நான் என் இனிமேல் உன்னை பார்த்துக்க வேண்டாம், சங்கடமாக இருக்குனு. இது தான் லாஸ்ட், அப்புறம் மிஸ்.அமிர்தாஸ்ரீயை நான் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்”


என அவன் கூறியதும், சுருக்கென்று இருந்தது அவளுக்கு. மனதுடன் சேர்ந்து விழிகளும் கலங்க, அதனை அவனுக்கு காட்டாது உள்ளிழுத்து கொண்டு நடந்தாள்.


அவளை காரில் அமர வைத்தவன், அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட, அவளும் அமைதியாக அவனுடன் பயணித்தாள்.


அவனுடனான கடைசி பயணம் இது தான் என்பதை மனதில் பதிய வைத்து கொண்டவள், அந்த பயணத்தின் இனிமையை தனக்குள் பொத்திக் கொண்டாள்.


காரை செலுத்தியவனுக்கு ஹரி அழைத்து,


“சார், எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க அமிர்தாவை கூட்டிட்டு வந்துருங்க”

என்றதும்,


“ஆன் தி வே ஹரி. இன்னும் டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவேன்”


என்று கூறியவன், நேராக அவளை கூட்டி சென்ற இடமோ, நகரத்தின் உயர்நீதிமன்றம்.


ஆரவ் காரை கொண்டு நிறுத்தியதும், சுற்றி பார்த்தவள், அங்கு நிரம்பி வழிந்த கூட்டத்தை பார்த்து


“இங்கே எதுக்கு வந்துருக்கோம்?” என்று கேட்க,


“உள்ளே போனதும் உனக்கே தெரிஞ்சுடும்” என்றவன், மறுப்பக்கம் வந்து, அவளை தாங்கி கொண்டான்.


அமிர்தாவோ புரியாமல் அவனை பார்க்க, அதற்குள் ஹரி அவர்களின் அருகில் வந்து விட்டிருந்தான்.


“எல்லாம் ரெடி சார். உள்ளே போனதும் ஆரம்பிச்சுடுவாங்க” என ஹரி கூறியதும், தலை அசைத்தான் ஆரவ்.


அவன் வரவை கண்டதும் அங்கே குழுமி இருந்த, ஊடகங்களும், பத்திரிக்கை நிரூபர்களும் அவனை சூழ்ந்துக் கொண்டு,


“சார் உங்களுக்கும், புரோடுயூசர் ராமமூர்த்தி சார்க்கும் ஏதாவது முன் விரோதமா? நீங்க கம்பளைன்ட் கொடுத்து அவரை அரேஸ்ட் பண்ணி இருக்கிறதா நியூஸ் வந்து இருக்கு. கூடவே, ஒரு லேடி போலீஸ்யையும் அரேஸ்ட் பண்ணி இருக்காங்க.

ஸ்பெஷல் கேஸ்ஸா உங்க கேஸை விசாரிகிறதா சொல்லி இருக்காங்க.


என்னாச்சு? என்ன நடத்ததுன்னு எதனால் இந்த கேஸ் பைல் பண்ணி இருக்கீங்க? மக்களுக்கு சொல்லலாம்ல.


இவங்க நீங்க அன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனவங்க தானே!! இவங்க யாரு?  அன்னைக்கே கேட்டோம், நீங்க அப்புறம் சொல்றதா சொல்லிடீங்க. இப்போ இவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னா, இவங்களுக்கும், இந்த கேஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”


என சரமாரியான கேள்விகள் அவன் முன் வைக்கப்பட, அமிர்தாவோ அவர்களது கேள்விகளில் திகைத்து போனாள். எதுவோ அவளுக்கு புரிய, சட்டென்று ஆரவ்வை திரும்பி பார்க்க, அவளது பார்வையை உணர்ந்து அவளை அணைத்திருந்த கைகளின் அழுத்தத்தை கூட்டி இருந்தான் ஆரவ்.


நீ என்னவள், உனக்காக எப்பொழுதும் நான் இருப்பேன்  என்று சொல்லாமல் சொல்லியது அவனது பிடித்திருந்த அந்த அழுத்தம்.



நொறுங்கிய பொழுதெல்லாம்

நெருங்கி வந்து அணைக்கும்

அவன் கரங்களில்

அடங்கி போகும் எனக்கு

என் மனம் உணர்த்தியது

என் சகலமும்

அவனுள் அடக்கம் என்று!!!






















Comments