UNEP-25

 அத்தியாயம்..25


      ஆதவனின் கரங்களில் ஆதரவாக மெல்ல மெல்ல விழி மலர்ந்த விடியல், அன்றைய நாளை இன்னும் இன்னும் மகிழ்ச்சியை அள்ளி கொடுத்திருந்தது ஆரவ்விற்கும், அமிர்தாவிற்கு.


ஆரவ்வின் நீண்ட நாள் தவம் வரமாய் இன்று கை சேரும் நாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே!! அவன் காதல் திருமணத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறதே!! அதுவும், அவன் காதலுக்கு தான் எத்தனை எத்தனை சோதனைகள்!! அத்தனையையும் முறியடித்து, இதோ, அவன் காதலை கரை சேர்த்து இருக்கிறான். மகிழ்ச்சியின் அளவை சொல்லவும் வேண்டுமோ?


நகரத்தில் உள்ள அந்த பிரபலமான கோவிலில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அங்கே ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வந்திருந்தனர். மீதம் இருக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டை, காவல்துறை உதவியுடன் செய்திருந்தார் பாலகிருஷ்ணன். வந்திருந்த மற்ற அனைவருமே பாலகிருஷ்ணன் மற்றும் நிர்மலாவின் சொந்த பந்தங்கள்.


திடுமென ஆரவ்விற்கு திருமணம் என்றதுமே, ஊரில் இருந்து புறப்பட்டு வந்தவர்கள், அனைவரும் சலசலத்து கொண்டே இருந்தனர்.


“ஏன் பால கிருஷ்ணா, சொந்தம் பந்தம்னு நாங்க யாரும் வேண்டாமா உனக்கு? இந்த ஊரில் நீ பெரிய ஆளா இருக்கலாம், அதுக்காக நீ என் தம்பி பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா? 


உன் அப்பா இல்லைன்னா இருக்கிற சொந்த பந்தத்தை மறந்துடுவியா நீ? எங்களை கேட்காமல் நீயா பொண்ணை முடிவு பண்ணி இருக்க?


என வந்ததும், குடும்பத்தின் மூத்தவர் ஒருவர் கத்த, பாலகிருஷ்ணனோ, தன்மையாக,


“அது வந்து பெரியப்பா, நீங்க எல்லாரும் வேணும் தானே என் பையன் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன். உங்களை போய் எப்படி மறப்பேன்? 


பையன் ஆசைப்பட்டுட்டான், அதான் நாங்க எதையும் பார்க்கல. உடனே கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம். அவனோட விருப்பம் தானே முக்கியம்”

என்றார் பொறுமையாக.


“இருக்கட்டும் பா, பையன் விருப்பட்டுட்டான் என்பதற்காக யாரோ ஒருத்தரை புடிச்சு கல்யாணம் பண்ண முடியாதுல. என்ன சாதி? என்ன குலம்? பொண்ணு வீடு எப்படி? நல்ல குடும்பமா? என்ன சீர் சனத்தி செய்யுறாங்க?”

என பலதும் பார்த்து தானே முடிவு பண்ணனும்”


என்றதும், நிர்மாலவிற்கும், பாலகிருஷ்ணவிற்கும் பேச்சே வரவில்லை.


இது எதுவுமே அமிர்தாவிடம் இல்லையே!! ஆரவ்வின் விருப்பம் மட்டுமே முக்கியம் என்று தானே திருமணத்தை முடிவு செய்தனர். தற்பொழுது இதையெல்லாம் கேட்டால் எங்கனம் பதில் சொல்வது?


“அதெல்லாம் நாங்க பார்க்கல பெரியப்பா, ஆரவ் திட்டவட்டமா சொல்லிட்டான்,  வாழ போறது நான் எனக்கு பிடிச்சு இருந்தா போதும், வேற எதுவும் எதிர்பார்க்காதீங்கன்னு. எங்களால் அவன் விருப்பத்திற்கு எதிரா எதுவும் சொல்ல  முடியல"


என பாலகிருஷ்ணன் கூறிய விளக்கங்களை அவர்கள் ஏற்று கொண்டது போலவே தெரியவில்லை.


“என்னவோ போ பா, நல்லதுக்கு தான் சொல்றோம். நாள பின்னே பிரச்சனை எதுவும் வந்துர கூடாது தான் கவலைப்படுறோம். பார்த்து பண்ணுங்க"

என வந்த வேலையை சிறப்பாக செய்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர் சொந்த பந்தங்கள். 


ஏற்க்கனவே, அமிர்தாவின் தாயை பற்றி கேள்விப்பட்டதும், நிர்மலாவோ சற்று ஏற்று கொள்ளப்படாத நிலையில் தான் இருந்தார். தற்பொழுது சொந்த பந்தங்களுக்கு அமிர்தாவை பற்றி தெரிந்தால் என்ன சொல்வார்களோ? என்ற சிந்தனையும் சேர்ந்து கொள்ள, இத்தனை சிக்கல்கள் உள்ள பெண் தன் வீட்டிற்கு மருமகளாக வர தான் வேண்டுமா? என அவர் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது.


அன்றைய நாளில், கலா வந்து அமிர்தாவின் தாயை பற்றி கூறியதும் ஆரவ், தனக்கு எல்லாம் தெரியும் என்றதும், மகன் ஏன் இந்த விஷயத்தை முன்னமே தங்களிடம் கூறவில்லை என்று ஆற்றமையாய் இருந்தது நிர்மலாவிற்கு. இருந்தும் கணவனும் மகனுக்கு துணையாக பேச, சபையில் மறுத்து பேச முடியவில்லை அவரால்.


அதன் பின் பேச்சுகள், எங்கு எப்பொழுது திருமணம் வைக்கலாம். திருமணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்றதில் செல்லவே, அவரும் ஏதும் பேசாமல் இருந்தார். 


பாலகிருஷ்ணன்  அமிர்தா சொந்தங்களை பற்றி கேட்கையில், கலாவோ,


“எங்களுக்குன்னு ஏது சொந்தபந்தம்? அதான் இவ அம்மா பண்ண காரியத்தால் யாரும் எங்க கூட பேசுறது இல்லையே. என்னமோ நாங்க தான் அவ அம்மாவை ஓட வச்சது போல எங்க கிட்ட பேசாமல் இருந்துட்டாங்க. அதுவும் இவளுக்கு கல்யாணம் சொன்னா ஒருத்தரும் வரமாட்டாங்க. அதனால் எங்களுக்குனு தனியா கணக்கு வைக்க வேண்டாம்”


என மேலும் மேலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அந்த விஷயத்தை திரும்ப திரும்ப கூற, ஆரவ்விற்கோ சலிப்பு தட்டியது. இவர் வாயால் தான், எந்த சொந்தமும் அண்டவில்லை என்பதை அறிந்தவர் சாதாசிவம் மட்டுமே!!


“கொஞ்ச நேரம் பேசாமல் இரு கலா" என சதாசிவம் அடக்க, முகத்தை சுழித்து கொண்டார் கலா.


ஆரவ்வின் முகம் பார்த்தே, அவன் எண்ணவோட்டத்தை கண்டு கொண்ட பாலகிருஷ்ணன்,


“ஆரவ், நீ போய் உனக்கு தேவையானதை பர்சேஸ் பண்ணிக்கோ. டிசைனர் வர சொல்லிடு. நமக்கு டைம் இல்லை. அந்த வேலைய கவனி”


என அனுப்பி வைக்க, அவனும், தான் இங்கு இருந்தால் கலாவை ஏதாவது பேசி, இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்து கொள்வோம் என்று அங்கிருந்து புறப்பட்டான்.


லேசாக அமிர்தாவிடம் தலையை ஆட்டி விடைபெற்று கொள்ள நிர்மலாவோ,

அமிர்தாவையும், அஞ்சலியையும் உள்ளே செல்லுமாறு கூறிவிட, அவர்களும் சென்று விட்டனர். அனைத்தும் பேசி முடிவெடுத்த பின்பு, கலாவும் சதாசிவமும் விடைபெற்று கொண்டு செல்ல, கலாவோ, நிர்மாலாவிடம் தனிமையில்,


“ஏங்க, இவ்வளவு சொல்றேன், அப்போ கூட அந்த ஓடுகாலியோட பொண்ணை தான் மருமகளா ஆக்குவேன் இருக்கீங்க. சரி போங்க அது உங்க விருப்பம். எதுக்கும் ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுங்க. ஏன்னா அவளே ஒரு ராசி கெட்டவ, எது தொட்டாலும் விளங்காது. பார்த்துக்கோங்க”

என போற போக்கில் கொளுத்தி விட்டு போக, நிர்மலாவின் மனதிலோ சஞ்சலம் சூழ்ந்தது.


ஆரவ் காதலிக்க ஆரம்பத்தில் இருந்தே ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. அதற்கு முன்பு வரை அவன் யாரையும் கடிந்து கூட பேசியதில்லை.  ஆனால் அமிர்தா அவன் வாழ்நாளில் வந்த நாளிலிருந்து எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்பதே அவன் வேலையாகி போனது,  என அனைத்தையும் யோசித்து பார்த்தவர் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்.


பாலகிருஷ்ணனிடம் தனிமையில்,


“ஏங்க, இந்த பொண்ணை நிச்சயமா நம்ம பிள்ளைக்கு கட்டணுமா?”

என கேட்டதும் அதிர்ந்து போய் பார்த்தார் அவர்.


“என்ன இப்போ வந்து இப்படி சொல்ற? நாம கல்யாணத்தை முடிவு பண்ணி அதுக்கான வேலைய பார்த்துட்டு இருக்கோம். என்னாச்சு உனக்கு?

என கேட்க,


“இல்லை, அந்தம்மா சொல்லிட்டு போன விஷயம் மனசில் உறுத்திட்டே இருக்கு. நாளைக்கு இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா நமக்கு தானே சங்கடம்"


“என்ன பேசுற நீ? அவங்க அம்மா பண்ண தப்புக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும். நாமளே இப்படி பேசுறது சரியில்லை நிர்மலா"

என கண்டித்ததும், நிர்மலாவோ,


“நானும் ஒரு சராசரி அம்மா தானேங்க. என் பிள்ளைக்கு ஒரு நல்ல பொண்ணை கட்டி வைக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே!! அவன் எனக்கு ஒரே பிள்ளை. அப்படி நான் யோசிக்கிறது தப்பா சொல்லுங்க"

என அவரின் நியாத்தை எடுத்து வைத்தார்.


“சராசரி அம்மாவா யோசிக்காதே! ஆரவ்விற்கு அம்மாவா யோசி போதும். அவன் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம். அதுக்கு முன்னாடி வேற எதுவும் பெரிசா தோணாது. நீ இப்படி யோசிக்கிறேன்னு தெரிஞ்சாலே அவன் ரொம்ப வருத்தப்படுவான். உனக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்ய போறோமோன்னு என்ற சங்கடத்தை அவனுக்கு கொடுக்காதே! அது நம்ம பையன் மனசுல தீராத வடுவா இருக்கும். அவ்வளவு தான் சொல்லுவேன்”


என திடமாக கூறிவிட, அதன் பின் அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மகனின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியமானதாக பட, மனதின் சஞ்சலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.


கோவிலில், மணமக்களுக்கென கொடுக்கப்பட்ட, அறையில் இருவரும்  திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, திருமண உடைகளை, இருவருக்கும் தனி தனியாக கொடுக்கப்பட, அதனை வாங்கிக் கொண்டு அவரவர் அறைக்குள் வந்தவர்கள், உடைமாற்றி கொண்டிருந்தனர்.


ஆரவ், பட்டு வேட்டி சட்டையில், எப்பொழுதும் வசீகரிக்கும் புன்னகையுடன், கூடுதலாக பொங்கும் பொலிவுடன் தயாராகி வெளிவந்தான். அத்தனை பிரகாசித்தது அவன் அகமும் புறமும்.


தயாராகி வந்தவனை எதிர்க்கொண்ட நிர்மலா, அவன் கன்னம் வழித்து, 


“என் கண்ணே பட்டுடும் போல இருக்கே கண்ணா. கல்யாண களை தாண்டவம் ஆடுது. வீட்டுக்கு போனதும் சுத்தி போடணும்”


என கூறியவரை கண்டு லேசாக வெட்கப்பட்டு சிரித்தான் ஆரவ். அரிதாக வெளிப்படும் ஆண்களின் வெட்கமும் அழகு தானே!! உடன் வந்த ஹரியோ, 


“சார், செமையா வெட்கப்படுறீங்க. அதுவும் வெட்கப்படும் போது இன்னும் அழகா வேற தெரியுறீங்க!! நான் மட்டும் பொண்ணா பொறந்து இருந்தேன், நிச்சயம் உங்களை கரெக்ட் பண்ணியிருப்பேன்”


என அவன் பங்கிற்கு, ஆரவ்வை கலாய்க்க, அவனை முறைத்து பார்த்த ஆரவ்வோ,


“ஏன் டா, ஏன் இப்படி? போ போய் வந்தவங்களை கவனி”

என அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.


வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க, ஆரவ்வின் அலைபேசிக்கு, அமிர்தாவை தயார் செய்து கொண்டிருக்கும் அழகுக்கலை நிபுணரிடம் இருந்து அழைப்பு வந்தது.


“சார், இங்க கொஞ்சம் வர முடியுமா?” என அந்த பெண் கூற, என்னவா இருக்கும் என யோசித்தப்படியே அமிர்தா இருக்கும் அறையை நோக்கி சென்றான் ஆரவ்.


அங்கு வாயிலில் கைகளை பிசைந்தபடி நின்ற அழகுக்கலை நிபுணரிடம்,


“என்ன? என்னாச்சு? அமிர்தாவை ரெடி பண்ணலையா?”

என்று கேட்க,


“சார், நீங்களே உள்ள வந்து பாருங்க, எல்லாமே ரெடி பண்ணிட்டேன், ஆனா.. ஆனா..,”

என இழுத்தார் அவர்.


“என்ன? ஆனா.., ஆனா..,!! என்றபடி அறையின் உள்ளே நுழைய, அங்கே அமிர்தாவோ, கட்ட வேண்டிய புடவையை கையில், வைத்துக்கொண்டு முழித்து கொண்டிருந்தாள்.


புடவைக்கு ஏற்ற ஜாக்கெட்டையும், பாவாடையையும் அணிந்து கொண்டு, மேலே தாவணி ஒன்றை கட்டி கொண்டு, சேலையை எந்தப்பக்கம் சொருக்குவது என வைத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்க,


“என்ன அமிர்தா? இன்னும் ரெடி ஆகலையா?”


என கேட்டு கொண்டே அவளருகில் வந்தான் ஆரவ். திடுமென அவனை அங்கு கண்டதும் விழி விரித்தவள், அவனை காண முடியாது வெட்கத்தில் திரும்பி கொண்டாள்.


என்றைக்கு அவளை இழுத்து அணைத்து இதழ் முத்தம் கொடுத்தானோ?! அன்று முதல் அவனை நிமிர்ந்து அவள் பார்ப்பதே இல்லை. அவனை நேர்கொண்டு பார்க்கவே, அவளால் முடியவில்லை.


அன்று அவள் தன்னுடைய விளக்கத்தை கூற, பொருக்க முடியாது, அவளது இதழை தன் இதழ் கொண்டு மூடி பேச விடாது செய்ய, அதில் அதிர்ந்து போனாள் அமிர்தா. அவள் ஸ்ம்பித்து அப்படியே நிற்க, இருவருக்குமான முதல் இதழ் முத்தம் இது என்பதால், அவளை விட அவனுக்கு மனமே இல்லை.


வெகு நேரம் தொடர்ந்த முத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, அவளை மெல்ல விடுவிக்க, அவளுக்கோ கை கால்கள் எல்லாம் நடுங்கின. அவனுக்கு முகம் காட்டாது திரும்பி நின்று கொள்ள ஆரவ்வோ,


“இனி ஒரு வார்த்தை, நம்ம கல்யாணம் வேண்டாம்னு உன் வாயில் இருந்து வந்தது, இதான் பனிஷ்மெண்ட் பார்த்துக்கோ” என திட்டவட்டமாக கூற, அவளோ மௌனமாகி போனாள். தன் தாயை பற்றி எப்படி தெரியும் என கேட்க நினைத்தவள், நடந்த விஷயத்தில் கேட்க முடியாது போனது.


அதற்கு பின் அவனை ஏறெடுத்து கூட அவளால் பார்க்க முடியவில்லை. திருமணத்திற்கு என்று, புடவை, நகை என அவள் தேர்ந்தெடுக்கும் பொழுது எல்லாம், அவன் இயல்பாக தான் அவளுடன் சேர்ந்து தேர்ந்தெடுத்தான். அவளுக்கு தான் அவன் நெருக்கம் புது அவஸ்தையை தந்தது. அது அவனுக்கும் புரிய, அதனை எல்லாம் பொருட்ப்படுத்தாது தான், கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம், அவளுடனே இருந்தான். இப்படியே தான் திருமண நாளும் வந்து விட்டிருந்தது.



“நீ…ங்…க எங்..க இங்…கே?  என திக்கி திணறியவளிடம்,


“ஏன் நான் வரக்கூடாதா? என்றான் இருகைகளையும் கட்டிக்கொண்டு. இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை அவளுக்கு. 


“யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க” என்று மெல்லிய குரலில் கூறியவளை, புன்னகையுடன் பார்த்தவன்,


“இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு? என் பொண்டாட்டி ரூமில் நான் இருக்கேன். அடுத்தவன் பொண்டாட்டி ரூமுக்கா நான் போனேன். தப்பா நினைக்க?


என எடக்கு மடக்காக பேசுபவனிடம் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் அமிர்தா.


“சரி நீ ஏன் இன்னும் ரெடி ஆகாம இருக்க? முகூர்த்தத்திற்கு நேரம் ஆச்சுல”


“நான் ரெடி தான். புடவை மட்டும் தான் கட்டணும்”


“சரி சீக்கிரம்  கட்டிட்டு வர வேண்டியது தானே!!”


“அது.. அது .. என…க்கு என..க்கு புடவையே கட்ட தெரியாது!!”


என, தவறு செய்துவிட்ட குழந்தையை போல் உதட்டை பிதுக்கி, மெல்லிய குரலில் கூறியவளின் பாவம் அவனை சுண்டி இழுத்தது.  அவளிடம் அவ்வப்பொழுது எட்டி பார்க்கும் இந்த குழந்தைத்தனம் தானே இன்னும் இன்னும் அவளிடம் அவனை பித்தனாக்கி கொண்டிருக்கிறது. அவளை இழுத்தணைத்து, இதழணைக்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தை லேசாக தலை கோதி கட்டுப்படுத்தி கொண்டவன், புன்னகையுடன்,


“சரி, அதான் பியூட்டிஷியன் இருக்காங்களே, அவங்க கட்டி விடுவாங்க” என்றான்.


“சார், அதான் பிரச்சனையே, அவங்க என்னை கட்டவே விட மாட்டேன்கிறாங்க. ரொம்ப கூச்சப்படுறாங்க. என்கிட்டவே இப்டின்னா. நீங்க ரொம்ப பாவம் சார்”


என கூறிவிட, வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள் அமிர்தா. ஆரவ்விற்குமே, அவர் கூறியதன் அர்த்தம் புரிய, அவனுக்குமே வெட்கம் தலை தூக்கியது.


“சரி நீங்க வெளியே இருங்க. நான் பேசிட்டு வரேன்”

என அந்த பெண்ணை வெளியே அனுப்பிவிட, அமிர்தா குனிந்த தலையை நிமிர்தவே இல்லை.


“அவங்க சொல்லிட்டு போனதை கேட்டியா? எப்படி உன்னை சமாளிக்க போறேன்னோ தெரியல. கஷ்டம் தான் போல. சரி, அவங்க கட்டிவிட கூச்சமா இருக்குன்னா. நான் கட்டி விடவா?

என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அமிர்தா.


“எதே!! நீங்களா? அதெல்லாம் வேண்டாம். நீங்க போங்க, நானே கட்டிட்டு வரேன்”

என்றவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.


“நீ கட்டிட்டு வரத்துக்குள் நாம அறுபதாம் கல்யாணம் தான் பண்ண முடியும். நான் நல்ல கட்டுவேன். என்னை நம்பு டா மா, எத்தனை ஹீரோயின்க்கு கட்டி விட்டு இருப்பேன்”


என அவளை வெறுப்பேற்ற, அமிர்தாவோ அவனை முறைத்து பார்த்தாள். கோப மூச்சுகள் வாங்க, அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவளை கண்டு சிரிப்பு தான் வந்தது ஆரவ்விற்கு.


“எப்பா, என் அமிர்தாவிற்கு ஏகப்பட்ட பொஸஸிவ்னெஸ் இருக்கு போலையே!! இன்னைக்கு தான் தெரியுது எனக்கு. இதில் வார்த்தைக்கு வார்த்தை, நான் வேண்டாம் உங்களுக்கு, வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க வேற சொல்லிட்டு திரிஞ்ச”

என்றான் சிரிப்புடன்,


“போதும் போதும் பார்த்தது. அன்னைக்கே சொன்னேன், இந்த முட்டை கண்ணை வச்சு உருட்டி உருட்டி பார்த்து என்னை சுருட்டி வச்சுகிட்டது போதும்னு. இன்னும் என்ன இருக்கு என்கிட்ட? ஹ்ம்ம்,”

என்றவன் மேலும்,


“நான் சும்மா சொன்னேன், நான் யாருக்கும் கட்டி விட்டதில்லை. இருந்தாலும், நீ கூச்சப்படுறியேனு தான் சொன்னேன். யூடூயூப் பார்த்து கட்டுறேன். என்ன நான் கட்டிவிடவா?”

என்று அவள் முகம் பார்க்க, முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டாள்.


“அச்சோ, நீங்க முதலில் வெளியே போங்க. சும்மா அதையே சொல்லாதீங்க. கேட்கும் போதே ஒரு மாதிரி கூச்சமா இருக்கு”

என வெட்கப்பட்டு பேசியளை கண்டு,


“பேசினத்துக்கே கூச்சமா? கிழிஞ்சது போ. இன்னும் நிறைய செயல்ல காட்ட வேண்டி இருக்கே!! அப்போ என்ன பண்ணுவ? ரொம்ப கஷ்டம் போலையே!! எப்படி சமாளிக்க போறேன் தெரியலையே!! ஆண்டவா!!

என கிண்டலாக பேச, அவன் பேசியதன் அர்த்தம் புரிந்ததும், அவளுக்கோ உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போல இருந்தது. முகம் செவ்வானமாய் சிவந்து போனது. அவனை நிமிர்ந்து பார்க்க சுத்தமாக முடியவில்லை.


“நீங்க வெளியே போங்களேன் பிளீஸ்” என மன்றாடுபவளின் பேச்சை தட்டாமல் கேட்டவன்,


“சரி, போறேன். ஆனால் பியூட்டிஷன் சாரி கட்டி விட்டா கட்டிக்கணும். இப்போ அவங்க நாளையிலிருந்து நான். ஓகே வா. பைவ் மினிட்ஸ் தான் டைம், சீக்கிரம் ரெடியாகி வா”


என்றவன் வெளியேற, அப்பொழுது தான் அவளுக்கு சீரான மூச்சே வந்தது. ஆரவ்வை நினைத்து அத்தனை காதல் பெருகியது அவளுக்கு. நாணத்தால், அவள் அழகு மேலும் கூடியது.


அதன் பின் அழகுக்கலை நிபுணர் வரவும், அவரோ அவள் மேல் கைப்படாது புடவையை லாவகமாக கட்டி முடித்து, அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் போதும் போதும் ஆகிவிட்டது. 


முழு அலங்காரமும் முடித்துவிட்டு வெளியே வந்தவர், ஆரவ்வை தேடி பிடித்து, மணமகள் தயார் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


திருமணத்திற்கென்று ஆரவ் வாங்கி கொடுத்த பட்டு பாவாடை தாவணியில் சுற்றி வந்து கொண்டிருந்த அஞ்சலியை அருகே அழைத்தவன், 


“அஞ்சலி, நீ அமிர்தா கூட இரு. கூப்பிடும் போது கூட்டிட்டு வா,” என ஆரவ் அனுப்பி வைக்க, அவளும் துள்ளலுடன் அமிர்தா இருந்த அறைக்கு சென்றாள். வரும் வழியில் கல் தடுக்கி கீழே விழ போனவளை தாங்கி பிடித்தார், அங்கு வருகை புரிந்த ஒரு காவல்துறை அதிகாரி.


“பார்த்து, பார்த்து,” என அவர் தாங்கி பிடித்து, நேராக நிற்க வைக்க, அதற்குள் அவ்விடம் வந்து சேர்ந்தான் ஹரி.


“என்னாச்சு அஞ்சலி? பார்த்து வரவேண்டியது தானே!! ஏதாவது அடிப்பட்டு இருக்கா, என அவளை ஆராய, 


“அதெல்லாம் ஒன்னுமில்லை” என தலையாட்டியவள் அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். 


அதன் பின் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டு, திருமணத்தில் கலந்து கொண்டனர்.


கனவுகள் கைசேரும் நேரம் வாழ்வின் தருணங்களை பொன்னான பொக்கிஷங்களா சேமிக்க வேண்டியவை அல்லவா?!! அமிர்தாவும் அதை தான், செய்து கொண்டிருந்தாள். இந்த பொக்கிஷ தருணத்தை மொத்தமாக சேமித்து வைத்து கொண்டாள் தன் மனதில்.


அஞ்சலி, அலைபேசியில் அவளை விதவிதமாகவும், தன்னுடன் சேர்த்தும் என புகைப்படங்களை எடுத்து அவளிடம் காட்ட, இருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.


இதுவரை இத்தனை சந்தோஷமான தருணங்கள் என்று ஒன்று கூட  அமையவில்லையே இருவர் வாழ்விலும். தமக்கையின் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்று அஞ்சலியும், தங்கையின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என அமிர்தாவும் மாறி மாறி இறைவனை வேண்டி கொண்டனர்.


அமிர்தாவின் அறைக்குள் நுழைந்த, நிர்மலா,


"அமிர்தா ரெடி ஆகிட்டியா மா," என கேட்டப்படி வர, அவரை கண்டதும் சட்டென எழுந்து கொண்டவள்,


"ரெடி ஆகிட்டேன்  அத்தம்மா" என்றாள் வேகமாக. ஆரவ்வை தவிர, இன்னும் கூட யாரை பார்த்தாலும், அவளுக்கு பயம் தான். அதுவும் ஆரவ்வின் தாய் தந்தையரை கண்டதும் ஒரு படப்படபப்பு அவளை மீறி வந்து விடுவதை அவளாலே தடுக்க முடியவில்லை. 


ஆரம்பத்தில், நிர்மலா எது கேட்டாலும், ஒன்றிண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி கொண்டிருந்தாள் அமிர்தா. நிர்மலாவோ,


“என்ன நீ எது கேட்டாலும், பேசவே மாட்டேன்கிற? டான் டான்னு பதில் சொல்லணும் புரியுதா?” என்றதும் பயந்து போனவள், அங்கே ஆரவ்வை தான் எதிர்பார்த்தாள்.


“என்ன மா? என் பொண்டாட்டியை என்ன சொல்லிட்டு இருக்கீங்க?” என்று அவன் அங்கு வந்ததும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.


“உன் பொண்டாட்டி கிட்ட நான் எதுவும் சொல்லல கண்ணா. ஆனால் என் மருமக கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லுவேன். அதிலெல்லாம் நீ தலையிடக் கூடாது. கிளம்பு இங்க இருந்து"


என விரட்டிவிட, சின்ன சிரிப்புடன், அங்கிருந்து ஆரவ் நகர்ந்து விட, அமிர்தா திருதிருவென விழித்து கொண்டிருந்தாள். 


“இதோ பாரு அமிர்தா, நான் உனக்கு அத்தை, அம்மா மாதிரி. இனி இந்த வீட்டில் நீயும் நானும் தான் நிறைய நேரம் இருக்க போறோம். அதனால் எதுவா இருந்தாலும் என்கிட்ட மனசு விட்டு பேசலாம். சரியா"


என அவளுக்கு ஆதரவாக பேச, அவளும் சரி என்றாள்.


“என்ன மொட்டையா சரினு சொல்ற? சரிங்க அத்தைனு சொல்லு, உரிமையாய். இல்லை, வேண்டாம் அத்தம்மா கூப்பிட்டு. மாமியாரை கூப்பிடமாதிரியும் ஆச்சு. அம்மாவை கூப்பிட மாதிரியும் ஆச்சு. இனி உனக்கு அம்மா, மாமியார் ரெண்டும் நான் தான். எங்க சொல்லு பார்ப்போம்"


என்றவருக்கு, “சரிங்க அத்தம்மா” என்றாள் உரிமையாக. ஹ்ம்ம் இப்போ தான் நல்ல இருக்கு"

என்று மகிழ்வுடன் சென்றுவிட, அன்றிலிருந்து அவள் அவரை அப்படி  தான் அழைக்கிறாள். அவள் அழைக்காமல் விட்டாலும் அவர் விடுவதில்லை. அவளின் அழைப்பை கேட்டு வாங்கி கொண்டு தான் செல்வார்.


“அப்பா என்ன அழகா இருக்க? சரி இங்கேயே இரு. ஐயர் கூப்பிட்டதும், வந்து கூப்பிடுகிறேன்" என்று அவளிடம் கூறியவர், அஞ்சலியும் புறம் திரும்பி,


“அஞ்சலி நீ போய் மணமேடையில் இரு. ஐயர் எதாவது கேட்டா எடுத்து கொடு” என்று அவளை அனுப்பி வைக்க, அவளும் அங்கிருந்து வெளியேறினாள். நிர்மலாவும் அவள் பின்னே வேறு வேலை பார்க்க வெளியேற, அமிர்தா அங்கு தனியே இருந்தாள்.  அலைபேசியை எடுத்து சற்று முன்பு எடுத்த புகைப்படங்களை  பார்த்து கொண்டிருந்தவள், சட்டென்று அதனை ஆரவ்விற்கு அனுப்பி வைக்க, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன், அலைபேசி சத்தத்தில் எடுத்து பார்க்க, அதில் அமிர்தாவின் புகைப்படங்களை பார்த்தான்.


“ஆழகி”  என அவளுக்கு பதில் அனுப்ப, அமிர்தாவோ, வெட்கத்தில் தலைகவிழ்ந்து கொண்டாள். அவன் எடுத்த புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைக்க, அவளோ பேரழகன் என பதில் அனுப்பி வைத்தாள்.


அவளது குறுந்செய்தியை படித்தவன், 


“அழகியும் அழகனும்  சேர்ந்து எடுத்தா நல்ல இருக்குமே”

என அவளுக்கு பதில் அனுப்ப, இப்பவா என அதர்ந்து போனாள் அமிர்தா.


“இப்பவே தான்,” என்றவன் அடுத்த நிமிடம் அவளிருக்கும் அறையின் கதவை தட்டினான்.


“அதுக்குள் வந்தாச்சா?!! என உள்ளுக்குள் அலறியவள், வந்து கதவை திறக்க, கண் சிமிட்டியப்படியே உள்ளே வந்தவன், அறை கதவை சாற்றி தாளிட்டான்.


என்ன பண்றீங்க? யாராவது வர போறாங்க?

என்றவளிடம், 


“வந்தா வரட்டும், இதிலென்ன இருக்கு? கல்யாணத்துக்கு முன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை. நாளைக்கு நம்ம பிள்ளைங்க, என்னத்த லவ் பண்ணீங்க கேட்டா என்ன பதில் சொல்றது? இதெல்லாம் கிரைம் தெரியுமா? வரலாறு பேசணும்”

என அவளை தோளோடு அணைத்து கொண்டவன், 


“ஹ்ம்ம் சிரி” என செல்பி எடுக்க, அவளும் புன்னகை ததும்ப நிற்க, இருவரையும் அழகாய் உள்வாங்கி கொண்டது கேமெராவின் கண்கள்.


அதன் பின் வித விதமாக நின்று புகைப்படம் எடுத்து தள்ள, அமிர்தாவோ நெளிந்து கொண்டே இருந்தாள்.


“சும்மா இரு அமிர்தா. ஒரு போட்டோ தானே!! சும்மா தோளில் கை போட்டதுக்கே இப்படி சங்கடப்படுற. இன்னும் போட்டோ ஷூட் பண்ணும் போது, லிப் டூ லிப் போஸ் கொடுக்க சொல்வாங்க அப்போ என்ன பண்ண போறீயோ!!


என்றவனை விழிவிரித்து பார்க்க, அதனையும் புகைப்படமாய் சேமித்து கொண்டான் ஆரவ்.


 “அந்த மாதிரி போட்டோலாம் வேண்டாம் சொல்லிடுங்க. பிளீஸ். பிளீஸ்.. எப்படி எல்லார் முன்னாடியும் இப்படியெல்லாம் எடுகிறாங்க. அய்யோ நினைக்கவே முடியல”


என பதற்றத்துடன் பேசியவளிடம்,


“சரி அப்போ எல்லார் முன்னாடியும் வேண்டாம். நாமளே லிப் டூ லிப் பண்ணி நாமளே போட்டோ எடுத்துப்போம்”

என்றவனை முறைத்து பார்த்தாள் அமிர்தா. 


“என்ன பேசறீங்க நீங்க.எதுவும் சரியில்லை. ஒழுங்கா இங்கிருந்து கிளம்புங்க”

என அவனை அங்கிருந்து கிளப்ப, ஆரவ்வோ,


“ஒண்ணே ஒன்னு தானே!! அதுவும் போட்டோவுக்கு தானே!!”


என அவன் தன்னருகில் இழுப்பதும், அவள் மறுப்பதும் என அங்கே கொஞ்ச நேரம் காதல் கிளிகளின் கொஞ்சல் மொழிகளின் ரீங்காரம் அரங்கேறியது.


அந்த சமயம் சரியாக அமிர்தாவின் அலைபேசி அடிக்க, இருவரின் கவனமும் அதில் சென்றது. 


அமிர்தா சென்று அலைபேசியை எடுத்து பார்க்க, அதுவோ புதிய எண்ணாக இருந்தது.


ஹெலோ, என்று அவள் அழைப்பை  ஏற்க, எதிர்முனையிலோ,


“என்ன அமிர்தா? எப்படி இருக்க? ரொம்ப சந்தோஷமா தான் இருப்ப!! அதான் பெரிய இடத்திற்கு மருமகளா போக போறீயே?!!


என்று கேட்ட ஆண் குரலில், யோசனையானவள்,


“யாரு நீங்க?” என்று கேட்டாள்.


எதிர்முனையில் இருந்த ஆணின் குரலோ,


“என்னை மறந்துடியா? நான் தான் உன் முன்னாள் காதலன் சந்தோஷ்”


என்றதும் அவளது சர்வமும் அடங்கி போனது. அவன் பெயரை கேட்டதும், அவளது மூச்சே நின்று போனது போலாக, லேசாக தள்ளாடியவள், அலைபேசியை கையில் இருந்து  நழுவ, அதனை லாவகமாக பிடித்தான் ஆரவ் ஜெயந்தன்.



காற்றுக்கும் இலைக்கும்

உள்ள காதலை போல தான்

நம் காதலும்,

எந்த இலையும் காற்றை தனக்கு மட்டுமே என்று வைத்து கொள்ளவில்லை!!


அதே போல் காற்றும் இலையின் மீதே வீழ்ந்திருப்பத்தும்  இல்லை!!


ஆனாலும் உன்னதமான உணர்வோடு காதல் செய்கிறதே!!


நாமளும் அதே போல் காதலிப்போம்


பிடிக்கும்..























Comments