UNEP-26

 அத்தியாயம்-26


               ‘மாங்கல்யம் தந்துனானே 

             மமஜீவன ஹேதுநா 

             கண்டே பத்நாமி ஸுபகே 

             த்வம ஜீவ சரதஸ்சதம்’  


என புரோகிதர் மந்திரம் ஓத, ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என, ஒரு குரல் எழுந்து மங்கள நாதத்தை ஒலிக்க செய்ய கூற, சுற்றி இருந்த சுற்றத்தாரும், உறவினரும், அட்சதை தூவ தயாராக, மங்கள நாணை பெற்றுக் கொண்ட ஆரவ்ஜெயந்தன், புன்னகை முகமாக, அத்தனை புரிதலான காதலுடன், அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவின் கழுத்தில் அணிவிக்க எடுத்து சென்றவன், அவள் காதருகே,


“மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!!

என்று கூற, அவனை கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஏறிட்டாள் அமிர்தா.


“ஷூ.., என்ன இது அழுத்துட்டு இருக்க? எத்தனை தடவை சொல்றது, நான் இருக்கும் போது நீ அழவே கூடாதுன்னு. நம்ம மேரேஜ், நல்ல ஹாப்பியா நடக்கணும்”

என அவள் கண்ணீரை துடைத்து விட்டு கூற, 


“எனக்கு சந்தோஷத்தில் தான் கண்ணீர் வருது. நீங்க எனக்கு கிடைச்சு இருக்கீங்களே!!”

என்று அத்தனை காதலாக கூறியவளிடம்,


“உன் கண்ணில் சந்தோஷத்தில் கூட கண்ணீர் வரக்கூடாது. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும் போது., ஹுகும் வரவே கூடாது. சிரி”


என்றதும், அகமும் புறமும் பொங்கும் மகிழ்ச்சியில் அவள் புன்னகைக்க, 


“ஹ்ம்ம் இப்போ ஓகே. மிசஸ்.ஆரவ்ஜெயந்தன், ஐ ட்ருலி லவ் யூ. வாழ்நாள் முழுக்க, இந்த ஸ்மைல் அப்படியே இருக்க, நான் கியாரண்டி. என்னை கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. அதே போல நானும் பரத்துப்பேன்”


என அவள் கண்ணை நேர்க்கொண்டு பார்த்து கூறி, அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவனின் கண்ணோடு கண் கலக்க விட்டவளும், மனதோடு, உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம். அது என்னைக்கும் குறைய நான் விடவே மாட்டேன். ஐ லவ் யூ டூ’

என கூறிக் கொண்டாள். அந்த அழகிய தருணம், புகைப்படமாக, புகைப்பட கருவி கண் சிமிட்டி சேமித்து கொண்டது.


பாலகிருஷ்ணன், நிர்மலா, சதாசிவம், அஞ்சலி, ஹரி மற்றும் வந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவரும் இருவர் மீதும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, இருவர் மனமும் அத்தனை நிறைவாய் இருந்தது.


பாதையில் எத்தனை கரடு முரடு பள்ளம் வந்தாலும், அத்தனையையும் சமாளித்து, பயணித்து, கடலில் வந்து சங்கமிக்கும் கடலை போல, அமிர்தா என்னும் ஆறு, அத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி, ஆரவ் என்னும் கடலில் கலந்து சங்கமித்து இருந்தது.


இனி யார் இடையில் வந்தாலும், அவள் கணவன் இருக்கிறான். எந்த கவலையும் இல்லை அவளுக்கு.


அமிர்தாவின் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து விட புரோகிதர் கூற, ஆரவ் வைத்து விட்டான். எந்த சடங்கும் விட்டுவிட கூடாது என்பது அவன் விருப்பம். முன்னமே பாலகிருஷ்ணனிடம் கூறிவிட்டான், என் திருமணத்தில் எந்த சடங்கையும் விட்டு விட கூடாது. எல்லாமே இருக்க வேண்டும். குறை என்று எதுவுமே இருந்து விட கூடாதென்று.


நேரமானாலும் பரவாயில்லை, என்று எதுவும் விடாது ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. காலத்துக்கும் நினைவில் ஆடும் தருணங்கள் அல்லவா! எப்பொழுது நினைத்து பார்த்தாலும், உதட்டில் உதிக்க செய்யும் புன்னகையை யார் தான் விடுவர்?


இருவர் ஆடையையும் முடிச்சிட்டு, ஆரவ் தன் சுட்டுவிரலை, அமிர்தாவின் சுட்டு விரலோடு கோர்த்து அக்கினியை சுற்றி வலம் வந்தனர். அருந்ததி நட்சத்திரத்தை பார்த்தனர். அவள் பாதத்தை தன் உள்ளங்கையில்  தாங்கி கொண்டவுடன், அமிர்தவோ கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவனை பார்க்க, அவள் காலருகே அமர்த்திருந்தவன், நிமிர்ந்து பார்த்து, 


“தினமும் பிடிக்க தானே போறேன். அதான் இப்பவே ட்ரைனிங்" என கூறி கண் சிமிட்டி, அவளது காலை அம்மியில் வைத்து மெட்டி போட்டு விட்டான்.

குடத்தில் மோதிரம் போட்டு, யார் எடுப்பது என்று இருவரையும் குடத்தில் கைவிட கூற, 


“நீங்க தான் எடுக்கணும் சார்,” என்று ஹரி ஆரவ் பக்கமும், “அக்கா நீ தான் எடுக்கணும்” என்று அஞ்சலி அமிர்தாவின் பக்கமும், இருவரையும் உற்சாகப்படுத்த, மோதிரத்தை விட்டுவிட்டு அவள் கையை தான் பிடித்து, விளையாடி கொண்டிருந்தான் ஆரவ்.


வெகு நேரம் இருவரும் மோதிரத்தை எடுப்பது போலவே தெரியாமல் இருக்க, ஹரியோ, குடத்தின் அருகில் உற்று பார்த்து விட்டு 


“சார், போதும், ரொம்ப நேரமாச்சு. மோதிரத்தை  எடுக்க சொன்னா அமிர்தா கையை பிடிச்சுட்டு இருக்கீங்க. மோதிரத்தை நீங்க எடுக்குறீங்களா இல்லை நான் எடுத்துக்கவா"


என குரல் கொடுத்ததும் தான் நனவுலகத்திற்கு வந்தவன், அசடு வழிய பார்த்தான் அமிர்தாவை. அவன் அவள், கையை விட்டதும் சட்டென்று மோதிரத்தை எடுத்து வெளியே நீட்டியவள், 


"நான் எடுத்துட்டேன்.., எடுத்துட்டேன்" என அளவில்லா மகிழ்ச்சியில் கூற, அகமகிழ்ந்து வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியை காண காண தெவிட்டவில்லை ஆரவ்விற்கு.


அனைத்து சடங்குகளும் இனிதே நிறைவடைய, மணமக்கள் இருவரும், பாலகிருஷ்ணன், நிர்மலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். கலா திருமணம் முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி விட்டிருக்க, சதாசிவம் மட்டும் அவர்களை ஆசீர்வதித்து கண் கலங்கினார்.


“அமிர்தா மா, இனியாவது நீ நல்ல இருக்கனும். புகுந்த வீட்டில், நல்ல பேர் எடுக்கணும். எல்லாரையும் பார்த்துக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு. நல்ல பார்த்துக்கோ மா. அங்க போனதும் மாமாவை மறந்துடுடாதே மா"

என கண் கலங்க,


“என்ன மாமா இப்படி சொல்றீங்க? நான் போய் உங்கள மறப்பேனா? அம்மா அப்பா இல்லாமல் நிற்கதியா நின்ன போது நீங்க தானே எங்களுக்கு ஆதரவு கொடுத்து அரவணைச்சீங்க. உங்களை மறந்தா, நான் நன்றி இல்லாதவளா ஆகிட மாட்டேனா?”


என அவளும் கண் கலங்க, அருகில் நின்ற அஞ்சலியும்  கண் கலங்க நின்றிருந்தாள். அஞ்சலியிடமும் சதாசிவம்,


“அஞ்சலி நல்ல படிக்கணும், அங்கே பார்த்து நடந்துகோ மா”

என அறிவுரை கூறியவர், கண்களை துடைத்து கொண்டார்.


“நீங்க கவலைப்படாதீங்க அங்கிள். என் வைப்பையும், என் தங்கச்சியையும் நல்ல பார்த்துப்பேன். சங்கடப்பட்டுட்டு வீட்டுக்கு வராமல் இருக்காதீங்க. அடிக்கடி வந்துட்டு போனா தான் அவங்களுக்கும் ஹாப்பியா இருகப்பாங்க”


என ஆரவ் கூற, 

“கண்டிப்பா தம்பி. நீங்க நல்ல பார்த்துப்பீங்கனு தெரியும். சந்தோஷமா தான் உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்”

என்றவர் அவர்களிடமிருந்து விடைபெற்று கொண்டார்.


அடுத்து ஆரவ்வும், அமிர்தாவும் உணவுண்ண அழைத்து செல்ல, அங்கேயும் ஹரியும் அஞ்சலியும் சேர்ந்து கலாட்டா செய்ய, ஆரவ்வும் அவர்களுக்கு இணையாக சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தான்.


அமிர்தாவிற்கு உணவூட்ட கூற, அவனோ,


“என் வைப்க்கு ஊட்ட எனக்கென்ன வெட்கம், தாராளமா ஊட்டுவேன்” என அமிர்தாவின் வாயருகே கொண்டு செல்ல, அமிர்தாவோ, 


“இல்ல வேண்டாம் எல்லாரும் பார்க்கிறாங்க. ஒரு மாதிரி இருக்கு” என்று கூற, ஆரவ்வோ,


“சும்மா ஒரு வாய் தானே, வாங்கிக்கோ” என்றதும், நிர்மலா இடையில்


“அதான் அவன் ஊட்டுறான்ல, நீ என்ன ரொம்ப பண்ற, வாங்கு”

என்று குரல் உயர்த்தியதும், அவளுக்கோ அது அதட்டுவது போல இருக்க, சட்டென்று வாயை திறந்து விட்டாள்.


ஆரவ் ஊட்டி விட, அதனை நிர்மலாவை பார்த்து கொண்டே விழுங்கி கொண்டாள்.


“ஹ்ம்ம் நீயும் ஊட்டு,” என மற்றவர்கள் கூற, மெல்ல எடுத்து அவனுக்கு ஊட்ட, அவனோ விரலை கடித்து விளையாட, “ஆ..” என கத்தி விட்டாள் அமிர்தா.


அனைவரும் அவனை கேலி செய்ய, அந்த தருணங்களை எல்லாம் அத்தனை ரசித்தான் ஆரவ். இதுவெல்லாம் சேர்ந்து அவனின் மகிழ்ச்சியை இன்னும் இன்னும் கூட்டி இருந்தது.


அனைவரும் சுற்றி நின்று கேலியும் கிண்டலுமாய் இருக்க, அமிர்தாவிற்கு உணவே இறங்கவில்லை. கொஞ்சமாய் உண்டவள் போதுமென்று எழுந்து கொண்டாள்.


திருமண வைபோகம் எந்தவித தங்கு தடங்கலுமின்றி நடைபெற்றத்தில் இருவருக்கும் அத்தனை நிறைவு.


ஆரவ்வின் வீட்டிற்கு செல்ல, காரின் பயணிக்க, அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டே,  வந்தவளின் கைகளை பற்றியவன், 


“ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க, அவளோ புரியாமல் அவனை பார்த்தாள்.


“அதான் சாப்பாடு ஊட்டும் போது, கடிச்சேன்ல, அதை கேட்கிறேன்”

என்றவனுக்கு, 

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று கூற, அவள் கையை தன் கைகளுக்குள் பொத்தி கொண்டான். அவளுக்குமே அந்த சிறு செய்கை கூட அத்தனை நிறைவை தந்தது. அவன் தோள் சாய்ந்து கொண்டே அந்த பயணத்தை மேற்கொண்டவளின் அகமும் புறமும் பூரித்து போனது.


வீட்டின் முன் கார் வந்து நின்றதும், இருவரும் இறங்கி, வந்து நிற்க, வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்ததும் அவளோ சட்டென்று அவன் முழங்கையை பிடித்து கொண்டாள்.


அவன் வசதி உள்ளவன் என்பது தெரியும். ஆனால் இத்தனை வசதியை அவள் எதிர்பார்க்கவில்லை. இதென்ன வீடா? இல்லை அரண்மணையா? என்று தான் தோன்றியது அமிர்தாவிற்கு.


கொஞ்சமும் குறையாத மிரட்சியுடன், 


“இதான் உங்க வீடா?” என மெல்ல அவனிடம் கிசுகிசுக்க, அவனும் அதே மெல்லிய குரலில்,


“நம்ம வீடு” என்று திருத்தினான். திரும்பி அவனை பார்க்க, அவனும் ஆமாம் என்று கண் சிமிட்டினான்.


இருவருக்கும் ஆரத்தி சுற்றி பொட்டு வைத்து உள்ளே அழைக்க, வலது காலை ஒருசேர இருவரும் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தனர். இனி இது தான் தன் வீடு, வீட்டில் உள்ள அனைவரையும் நான் தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என மனதில் நிறுத்து கொண்டே உள்ளே நுழைந்தாள் அமிர்தா.


“வா, மா” என அவளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற வைக்க, விளக்கேற்றியவள் மனம் முழுவதும் ஆரவ் மட்டுமே இருந்தான்.


அவள் பிராத்தனையும் அவனை சுற்றி தான் இருந்தது. “அவருக்கு ஒரு நல்ல மனைவியாய் எப்பொழுதும் இருக்க நீங்க தான் அருள் புரியனும்”


என்று வேண்டி கொண்டாள். இருவருக்கும்  பாலும் பழமும் கொடுக்கப்பட்டு, நிர்மலாவோ அருகில் இருக்கும் அறையை காண்பித்து, அமிர்தாவிடம்,


“நீ ரெஸ்ட் எடு மா, ஈவினிங் ரிசெப்ஷனுக்கு ரெடியாகனும். அது முடிய லேட் ஆகும். இப்பவே ரெஸ்ட் எடுத்தா தா உண்டு”

என்று கூற, அவளும் சரியென்று தலையாட்டினாள்.


“உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது. பளிச்சுன்னு என்கிட்ட பேசுன்னு. கேட்டதுக்கு வாயை திறந்து பதில் சொல்லு”


என்று கறாராக கூற, 

“சரிங்க அத்தம்மா” என்றாள் பயந்த குரலில்.


“ஹ்ம்ம் சரி போய் ரெஸ்ட் எடு” என்று அனுப்பி வைக்க, உடன் அஞ்சலியையும் துணைக்கு அனுப்பி வைத்தார்.


ஆரவ்வையும் அவன் அறைக்கு சென்று ஓய்வெடுக்க கூற, நான் அமிர்தா கூட தான் போவேன் என்று அடம்பிடித்தான் அவன்.


“டேய் கண்ணா, அது முறை இல்லை டா. போய் உன் ரூமில் ரெஸ்ட் எடு. இன்னைக்கு ஒரு நாள் தான்” என்று அவனை சமாதானப்படுத்த, அவனும் சரியென்று சென்று விட்டான்.


அறைக்குள் வந்தவள், வெறும் மாலையை மட்டும் கழற்றி வைத்துவிட்டு, திருமண புடவையில் அப்படியே தான் இருந்தாள்.

அஞ்சலி தனக்கு சோர்வாக இருக்கிறது என் அறையில் சென்று ஓய்வெடுக்கிறேன் என்று செய்கை காட்ட, அமிர்தாவும்,


“சரி அஞ்சலி நீ போய் ரெஸ்ட் எடு" என்று அனுப்பி வைத்தாள்.


கண்ணாடி முன்னாடி வந்து நின்றவளுக்கு, தற்பொழுது தான் அவள் எத்தனை அழகு என்பது அவளுக்கே தெரிந்தது. இதுவரை தன்னை தானே அவள்  ஒருநாளும் உற்று கவனித்தது இல்லை. இன்று கவனிக்கிறாள். 


“உனக்கு இந்த புளுயிஷ் க்ரீன் வித் இங்க் புளு கலர் ஸாரி அட்டகாசமா இருக்கு” என ஆரவ் கூறிய வார்த்தைகள் தற்பொழுதும் அவள் காதுக்குள் ஒலித்து கொண்டிருந்தது.


திருமணத்திற்கென்று அவளுக்கு சேலை எடுக்கும் பொழுது, அவளுக்கு அதை பற்றி எதுவுமே தெரியவில்லை.


“உனக்கு பிடிச்சதை எடு அமிர்தா” என்று ஆரவ் கூறும் பொழுது, அவனிடம் மெல்லிய குரலில்,


“நான் புடவையே கட்டினது இல்லைங்க. இதில்.எங்கே நான் எடுக்க? நீங்களே பார்த்து எடுத்து கொடுத்துங்க”

என்ற கண்களை சுருக்கி கேட்டவளின் அழகில் சொக்கி தான் போனான் ஆரவ்.


“சரி, இரு உனக்கு பெர்பெக்ட்டா ஒரு சாரி செலக்ட் பண்றேன்”

என்றவன், வந்திருந்த அத்தனை சேலைகளையும் கலைத்து போட்டு, விற்பனையாளரை ஒருவழியாக்கி புதையல் போல் தேர்ந்தெடுத்த சேலை தான் தற்பொழுது அவள் அணிந்திருப்பது. அதற்கு ஏற்ற நகைகளையும் அவன் தான் தேர்ந்தெடுத்தான்.


புதிய மாடல்களில் வைரம் பதித்த நகைகளை அவளுக்கேற்றார் போல தெரிவு செய்து கொடுக்க, அவளோ,


“இவ்வளவு கல் வச்சு இருக்கே, திடீர்னு கல் விழுந்துட்டா என்ன பண்ண?”

என அறியாமையில் பேச அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


“இந்த கல் எல்லாம் என்னன்னு நினைச்ச?


“இது நாம போடுற சாதா நகையில் உள்ள கல் தானே!!,


“சுத்தம், இது எல்லாம் ஒரிஜினல் டைமண்ட். அத்தனை சீக்கிரம் கீழேலாம் விழாது. எல்லாமே டைமண்ட்ல பண்ணது” என்றதும் 


“ஆத்தி” என வாயை பிளந்தவள் தான், மூடவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.


“அச்சோ இதெல்லாம் எனக்கு வேண்டாம். நீங்க சாதாவா இருக்குமே, அதையே வாங்கி கொடுங்க. எங்க பக்கத்து வீட்டு அக்கா, அவங்க கல்யாணத்துக்கு போட்டு இருந்தாங்க, தங்கம் மாதிரி இருந்தது, ஆனால் தங்கம் இல்லை. அது போல வாங்கிக்கலாம்.


இதை போட்டுட்டு, இதையே பாதுகாத்துட்டு என்னால் இருக்க முடியாது. நான் எங்கயாச்சும் தொலைச்சுட்டேனே. அதனால் வேண்டாம்”


என திட்டவட்டமாக மறுத்தவளை, பேசி பேசியே, தனக்கு இது தான் பிடித்து இருக்கிறது. இது தான் இந்த புடவைக்கு சரியாக இருக்கும் என்று ஆயிரம் சமாதனங்களை சொல்லியே அவளை சம்மதிக்க வைத்தான்.


கையில் மருதாணி இடும்பொழுது கூட, பாதியில் அப்படியே அமர்ந்தவாக்கிலே உறங்கி விட்டாள் அமிர்தா. ஆரவ் தான், அவளை தன் தோளிலே சாய்த்து கொண்டு, அது முடியும் வரை, அப்படியே அவளை தாங்கி இருந்தான்.


நிர்மலா கூட கேட்டு இருந்தார், “ஏன் டா கண்ணா, அவளை எழுப்பி விட்டுட்டு நீ போக வேண்டியது தானே, எதுக்கு, இவ்வளவு நேரம் அவளுக்காக அசையாமல் உட்கார்ந்துட்டு இருக்க?”

என்றதும்,


“இருக்கட்டும் மா, அமிர்தாவிற்கு டையார்டா இருக்கு போல, அவ இது போல தூங்குறவ கிடையாது. இன்னைக்கு தான் இப்படி தூங்குறா. தூங்கட்டும் நான் பார்த்துகிறேன்”


என்று அவரை அனுப்பி வைத்து விட்டு, அவள் தன் மேல் வாகாக தூங்கும் அழகை புகைப்படமெடுத்து சேமித்து வைத்து கொண்டான்.


மருதாணியை அவள் கழுவிய பின்னர் தான், என்ன வடிவமைப்பு போட்டனர் என்பதே அவளுக்கு தெரியும். ஒருப்பக்கம் அவளின் உருவமும், மறுபக்கம் அவனின் உருவமும் தத்துரூபமாக வரைந்து இருக்க, பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.


“எப்படி சூப்பரா இருக்குல, நான் இங்க இல்லைன்னா கூட, என்னை பார்க்கணும் தோணுச்சுன்னா கையை பார்த்தாலே போதும். அப்படியே என்னை கிஸ் பண்ணனும் தோணுச்சுன்னா கூட கையிலே கொடுக்கலாம். எனக்கு வந்து சேர்ந்துடும்” என கண்சிமிட்டி கூறியதும், அவளோ நாணத்தினால் தலைகவிழ்ந்து கொண்டாள்.


தற்பொழுது, இரு கைகளையும் உயர்த்தி பார்க்க, உள்ளங்கையில் அவனது முகம் தெரிய, தற்பொழுது அவனது வதனத்தை ஆர தழுவி முத்தம் கொடுக்க வேண்டும் போல தோன்றியது அமிர்தாவிற்கு.


அதுவும் இன்றைய நாளின் இனிமையும், தன் மேல் அவன் வைத்த காதலின் ஆழமும், கண் கூடாக பார்த்த பின்பு அவளுக்கு அவன் மீதான பிடித்தம் எல்லை தாண்டியது.


காலை நடந்த விஷயங்கள் மனதில் படம் போல் ஓடின. இருவரும் போட்டோ எடுக்க வேண்டி ஆரவ் அவளிடம் கேட்பதும், அதற்கு அவள் மறுப்பதுமாக, மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை கலைப்பது போலவே வந்து சேர்ந்தது சந்தோஷின் அழைப்பு.


அவனது பெயரை கேட்டதும், உறைந்து போனவள் அலைபேசியை தவற விட, சரியாக ஆரவ் அதனை பிடித்து இருந்தான்.


சட்டென்று முகம் முழுக்க பயம் வியாபித்து வேர்க்க, விறுவிறுக்க அவனை பார்த்தவளுக்கு அத்தனை பதற்றமாக இருந்தது.


“என்ன அமிர்தா? என்னாச்சு? போனில் யாரு? ” என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அமிர்தாவிற்கு.


அன்று நடந்த நிகழ்வை அன்றோடு மறந்து போயிருந்தாள். இனி சந்தோஷ் என்ற ஒருத்தன் தன் வாழ்வில் இல்லவே இல்லை என்று தான் அவனை அடியோடு மறக்க நினைத்தாள்.


அவ்வப்பொழுது நியாபகம் வந்தாலும், ஆரவ் அவளின் மனதிற்குள் வந்ததிலிருந்து அவளுக்கு சந்தோஷ் என்ற பெயரே நியாபகம் இல்லை.


அத்தனை தடைகளையும் மீறி, தற்பொழுது தான் மனம் முழுக்க நிறைந்த மகிழ்ச்சியுடன், ஆரவ் உடனான அவள் பிணைப்பை உருவாக்கி கொள்ள, நல்ல தருணம் அமைந்தது. ஆனால் அதனை குலைப்பது போல் வந்த சந்தோஷின் அழைப்பில் நிலைகுலைந்து போய்விட்டாள் அவள்.


தெளிந்த நீரோடையில் கல் எறிவது போல வந்த சந்தோஷின் அழைப்பில், கலங்கி போய் நின்றிருந்தாள் அமிர்தா.


கலங்கிய விழிகளுடனும், பயம் அப்பிய முகத்துடனும் அவனை பார்த்தவள், ஆரவ்விற்கு தான் துரோகம் செய்கிறோமோ என்று தோன்றி, இம்சித்தது.


சந்தோஷ் விஷயத்தை சொல்லி இருக்க வேண்டுமோ?!! சொல்லாமல் மறைத்து விட்டு தற்பொழுது தெரிய வந்தால், அவன் என்னை என்ன நினைப்பான்? இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது? ஏற்க்கனவே ஒருவனை காதலித்து விட்டு, எப்படி என்னை காதலிக்கலாம் கேட்டால்?..


என்னென்னவோ எண்ண அலைகள் ஓட, தவித்து போனாள். கீழே விழுந்ததில் கை பட்டு சந்தோஷின் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட, தற்பொழுது மீண்டும் அவன் அழைத்தான்.


அலைபேசி ஆரவ் கையில் இருக்க, அலைபேசி அடித்ததும் திக்என்றானது அமிர்தாவிற்கு. அலைபேசியையும், அவனையும் அவள் மாறி மாறி பார்க்க, ஆரவ்விற்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.


அலைபேசியை உயிர்ப்பித்து அதனை ஸ்பீக்கரில் போட,


“என்ன அமிர்தா? என் குரலை கேட்டதும், சந்தோஷம் தாங்க முடியல போல. சந்தோஷை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா உன்னால்? நீயும் நானும் எவ்வளவு காதலிச்சோம். என்ன கொஞ்சம் நிதானமா இல்லாமல் போயிட்டேன். அப்போ கொஞ்சம் பொறுமையா போய் இருந்தா, இந்நேரம் நீ என் பக்கத்தில் இருந்து இருப்ப. நாம ரெண்டு பேரும் என்னென்னமோ பண்ணி இருக்கலாம்”


என்று அவன் கொச்சையாக பேச, அவன் பேச்சை ஸ்பீக்கரில் கேட்டு கொண்டிருந்த அமிர்தாவோ கண்ணீருடன் காதை பொத்திக் கொண்டாள். அவன் பேச்சை கேட்டதும், ஆரவ்விற்கோ கோபம் தலைக்கேறியது.


கண்ணில் அனல் தெறிக்க அமிர்தாவை திரும்பிப் பார்க்க, அவளோ அவன் பார்வையில் விக்கித்து போனாள்.


“சரி இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. ஒரே ஒரு தடவை உன்கூட இருக்கணும். அது போதும். அதுக்கப்புறம் நீ உன் புருஷன் கூட சந்தோஷமா வாழலாம். சந்தோஷ் உன் சந்தோஷத்தை கெடுக்கவே மாட்டான்.


ஒருவேளை, நீ வரமாட்டேன், நான் பத்தினி, இதெல்லாம் தப்பு அப்படி இப்படி ஏதாச்சும் சொன்னேனு வை, நீயும் நானும் எடுத்த போட்டோ இருக்கு. அதை வெளியே விட்டேன், நீ கல்யாண பண்ணிக்க போறவனே உன்னை அடிச்சு துரத்திடுவான். அப்புறம் என்கிட்ட தான் வந்தாகனும். எங்கே? எப்போனு திரும்ப கூப்பிறேன் ஹாப்பியா கல்யாண மேடைக்கு போ”

என்றவன் அலைபேசியை துண்டிக்க, வெடவெடத்து போய் நின்றிருந்தாள் அமிர்தா.


கண்ணில் நீர் வழிய, ஆரவ்வின் முகத்தை காண கூட திராணி இல்லாது தலை கவிழ்ந்து நின்றவளுக்கு, ஆரவ்வை எதிர்கொள்ளவே முடியவில்லை.


“அமிர்தா..” என மெல்ல ஆரவ் குரல் கொடுக்க, அதற்கு மேல் பொறுக்க மாட்டாது, ஒரு கேவலுடன் வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், 


“தப்பு.. தப்பு தான்.., பெரிய தப்பு தான், உங்க கிட்ட சொல்லாமல் மறைச்சது தப்பு தான். ஆனால் நிஜமா, சொல்ல கூடாதுன்னு மறைகல. நான் மறக்கணும் நினைச்ச விஷயம், உங்க அன்பு கிடைச்சத்தும் மறந்துட்டேன்.


அது.., அன்னைக்கு முதன் முதலா உங்க காரில் விழுந்து அடிப்பட்டேனே, அது இவன் கிட்டயிருந்து தப்பி வரும் பொழுது நடந்தது தான்”


என மளமளவென்று கூறியவள், சந்தோஷை சந்தித்தது முதல், அவன் காதல் சொன்னது, இவள் மறுத்தது. பின் அவன் கரைத்தது. இவளும் காதலித்தது. அவன் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தது. இவள் தனியாக சென்றது. அங்கே அவன் தவறாக நடக்க முயற்சி செய்தது, அவனிடமிருந்து தப்பித்து வந்த பொழுது தான் விபத்து ஏற்பட்டது என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.


“நான்.., நான்…அவன் விரும்புறேன் சொன்னதும், இதெல்லாம் சரிவராதுனு  சொல்லிட்டேன். ஆனால் அவன் அன்பா, ஆதரவா ஒரு வார்த்தை பேசியதும், ஏங்கி இருந்த மனசு அவன் மேலே அன்பு வச்சுடுச்சு.


சத்தியமா, அவன் சொன்ன எல்லாத்தையும் நம்பினேன். அஞ்சலியை பார்த்துகிறேன் சொன்னான், என்னையும் நல்ல பார்த்துப்பேன் சொன்னான். ஆனால் அது எல்லாம், என்னை.. என்னை”


என்றவள் அதற்கு மேலே பேச வார்த்தை வராமல் தடுமாறினாள்.


“நீங்க மட்டும் என்னை தப்பா நினைச்சுடாதீங்க. அது என்னால் தாங்கிகவே முடியாது. நான் சொல்றதை நம்புறீங்க தானே”


அவன் மார்பில் இருந்து விழியுயர்த்தி மலங்க மலங்க கேட்டவளை, மெல்லய அணைப்புடன் பார்த்தவள்,


“உன்னை நம்பாமல் இந்த உலகத்தில் வேற யாரை நம்ப போறேன் நான்”

என்றவனை இமை வெட்டாமல் பார்த்தாள் அமிர்தா.


இத்தனை நேரம் நின்று போயிருந்த அவள் உலகம் தற்பொழுது தான் சுழலவே ஆரம்பித்தது போல இருந்தது.


மீண்டும் ஒரு கேவலுடன் அவனை இறுக அணைத்து கொண்டாள்.


பேசி பேசி தீராத பெருங்காதலின் மொழி, மௌனமாய் தொடரும் இறுகிய அணைப்பில் தானே வாழும்!!


அவளை போலவே அவனும் அவளை இறுக அணைத்து கொண்டவன், மெல்ல அவளை ஆசுவாசப்படுத்த, அவளின் அழுகையும் மட்டுப்பட்டது.


தன்னில் இருந்து அவளை பிரித்து எடுத்தவன், அவளது கண்ணீரை துடைத்து விட்டு, 


“போட்ட மேக்அப்லாம் கலைஞ்சு போயிருச்சு. முகூர்த்ததுக்கு வேற நேரமாச்சு. இரு நானே சரி பண்றேன்”


என்று கூறியதும், மட்டுபட்டிருந்த அழுகை மீண்டும் பெருகியது அமிர்தாவிற்கு.


“இப்போ எதுக்கு மா அழுற?” என மீண்டும் உள்ளங்கையால் அவள் முகத்தை தாங்கியவன் பெருவிரல் கொண்டு அதனை துடைத்து விட்டு கொண்டே கேட்க, மெல்ல விசும்பலுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,


“உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையா?” என்று கேட்க


“எதுக்கு மா கோபம்?” என அவளையே திருப்பி கேட்டான் ஆரவ்.


“நான், வேற ஒருத்தரை விரும்பி.., இப்போ அவங்களால் பிரச்சனை வந்து நிற்குதே!! நாளைக்கு அந்த போட்டோ வெளியே விட்டா, உங்களுக்கு அவமானமா போயிடும். என்னால் எப்பவும் உங்களுக்கு பிரச்சனை தான். நான் இருக்கிறதை விட செத்தே..”


என அவள் முடிக்க விடாமல், கைகளால் அவள் வாய் பொத்தி இருந்தான் ஆரவ். 


“தேவையிலாததை பேசி, எதுக்கு உன்னை நீயே வருத்திக்கிற? உன் கிட்ட ஒண்ணே ஒன்னு தான் கேட்கணும். சரியா பதில் சொல்லு”


என்றவனை கேள்வியாய் நோக்கியவளிடம்,


“என்னோட, ஹாப்பியா ஒரு லைப் வாழ உனக்கு பிடிச்சு இருக்கா? இல்லையா?  என கேட்டவனிடம்,


“என்ன இப்படியெல்லாம் கேட்குறீங்க?” என்று பதறினாள் அமிர்தா.


“கேட்டதுக்கு பதில் சொல்லு அமிர்தா. என்னை மேரேஜ் பண்ணிட்டு, நாம ரெண்டும் பேரும், ஊரே பொறமைப்படுற பேர்ரா இருக்க உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா?”

என மீண்டும் கேட்டவனிடம்,


“உங்க கூட நூறு வருஷத்துக்கு மேலே சந்தோஷமா வாழ  ஆசைப்படுறேன். அது மட்டும் தான் என் ஆசையா இருக்கு, வேறேதுவும் இல்லை”


என தெளிவாக கூறியவளை புன்னகையுடன் பார்த்தவன்,


“அப்புறம் எதுக்கு கண்டதையும் யோசிச்சுட்டு இருக்க? அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொன்னதுக்கு போய் பயப்படுற. அவனை நான் பார்த்துகிறேன். உனக்கு, எனக்குனு எதுவுமே தனி தனி இல்லை. அது பிரச்சனையா இருந்தாலும் சரி, சந்தோஷமா இருந்தாலும் சரி. அதனால் இப்போ நடக்க போற நம்ம மேரேஜை பத்தி மட்டும் நியாபகத்தில் வச்சுக்கோ. மீதி எல்லாம் மறந்து போயிடனும்”


என கூறியவன், அவளை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு அலைபேசியை எடுத்து, அழகுகலை நிபுணருக்கு அழைத்தான்.


சற்று நேரத்தில் உள்ளே நுழைந்தவரிடம்,


“அவங்க மேக்அப் கொஞ்சம் கலைஞ்சு போச்சு. சரி பண்ணி விடுங்க”

என்று கூற, அவரும் அதனை செய்து கொண்டிருந்தார்.


அதற்கிடைகில் ஹரியின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அவன் வந்ததும், இருவரும் தனியாக பேச சென்றனர்.


“ஹரி, இந்த நம்பர் எங்க இருந்து வந்து இருக்குனு ட்ரேஸ் பண்ண சொல்லு. அவன் பேர் சந்தோஷ். அவன் கிட்ட அமிர்தாவோட போட்டோஸ் இருக்கு. அதை வச்சு பிளாக் மெயில் பண்ணி போன் பண்றான்.


நீ கமிஷ்னர் கிட்ட பேசி இம்மிடியட்டா ஆக்ஷன் எடுக்க சொல்லு. ஹாப்ஹவர்ல எல்லாமே நடந்து இருக்கணும்”


என கட்டளையிட, ஹரியும் நிலைமையின் தீவிரம் உணர்ந்து, துரிதமாக செயல்பட்டான்.


உடனே காவல்துறை அதிகாரிக்கு அழைத்து பேச, சந்தோஷ் இருக்கும் இடம் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. அவனை சூழ்ந்து பிடித்த காவல்துறை அதிகாரி, அவனிடமிருந்த அமிர்தாவின் போட்டோகளை எடுத்து அழித்து விட்டிருந்தனர். அவனிடமிருந்து போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்து, அவனை கைது செய்து அழைத்து செல்ல, அவனோ, 


“நான் எதுவும் பண்ணல சார். நான் போதை பொருள்லாம் எதுவும் விக்கலை" என அழுது கரைய,


“போதை பொருள் விக்கிறதை விட பெரிய கிரைம் ஒரு பொண்ணோட போட்டோஸ் வச்சு அவளை பிளாக் மெயில் பண்றது. அதுக்கு தண்டனை இன்னும் அதிகம். போனா போதுன்னு உன்னை இதந்த கேசில் போடு இருக்கேன்"

என அந்த காவல்துறை அதிகாரி  அவனிடம் கூற, சந்தோஷோ,


“ஒஹ்ஹ, அந்த அமிர்தா, சொல்லி தான் இதெல்லாம் செய்யுறீங்களா? இதெல்லாம் சட்டத்துக்கு விரோதமானது. இபப்டியெல்லாம் பண்ணா, நான் மீடியா கிட்ட போய் உங்களை பத்தின உண்மையெல்லாம் சொல்லி, வேலையை விட்டே தூக்க சொல்லிடுவேன். பார்த்துக்கோங்க"


என அவன் அந்த காவல்துறை அதிகாரியையே மிரட்ட, ஓங்கி அவன் கன்னத்திலே அறைவிட்டார் அந்த அதிகாரி.


“ஏன் டா, என்னையே மிரட்டுறியா நீ? யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுதா உனக்கு. ஒழுங்கா வாயை மூடிட்டு வர, இல்லை அரெஸ்ட் பண்ணும் போது, தப்பிச்சு ஓட பார்த்தேன்னு சுட்டு கொன்னுட்டு போயிட்டே இருப்பேன். எப்படி வசதி? அமைதியா வரியா, இல்லை சாகுறியா?”


என மிரட்ட, உண்மையில் பயந்து போனான் சந்தோஷ். அவர்கொடுத்த அடியில் வேறு அவன் பல்லெல்லாம் உடைந்து விழுந்து ரத்தம் கொட்ட திரும்ப அவனால் எதுவும் பேச கூட முடியவில்லை.


அதற்கே அவன் சோர்ந்து போக, அவனை அப்படியே காவல்துறை வாகனத்தில் ஏற்றி கூட்டி சென்று விட்டனர். அனைத்தும் முடிந்து,  ஹரிக்கு தொடர்பு கொண்டு பேசிய காவல்துறை அதிகாரி, எல்லாம் நல்லப்படியாக 

முடிந்தது என்று கூற, ஹரியும் அவருக்கு நன்றி கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான்.


நேராக ஆரவ்வின் அருகில் வந்து விஷயத்தை கூற,


“தேங்க்ஸ் ஹரி. பிரச்சனை சீக்கிரமே முடிஞ்சுடுச்சு. அமிர்தா தான் ரொம்ப பயந்து போய் இருப்பா, நான் பார்த்துகிறேன்"


என அத்தனை, நேரம் இருந்த பரப்பரப்பு நீங்கியதில், நிம்மதி பெருமூச்சு விட்டான்.


“சார், உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே முடியும். சரி நீங்க அமிர்தாவை அழைச்சுட்டு வாங்க. நான் போய் கல்யாண வேலை பார்க்கிறேன்" என ஹரி அங்கிருந்து நகர்ந்து கொண்டான். 


சற்று நேரத்தில் மீண்டும் தயாராகி அமிர்தா வெளியே வர, அவளை பார்த்து புன்னகைத்த ஆரவ்,


“போலாமா”  என்று கேட்டான்.


அவளோ, கலக்கமாக அவனை பார்த்தாள். அவள் அசைவிற்கே அர்த்தம் அறிந்தவன் அவன், அவள் விழி மொழியா அவனுக்கு புரியாது. 


“அமிர்தா, இப்போ நமக்கு மேரேஜ் ஆக போது, எவ்வளவு ஒரு ப்ளசண்டான மொமெண்ட். இந்த நாளுக்காக நாம எவ்வளவு ஸ்டகுல்ஸ் கடந்து வந்து இருக்கோம். சோ இந்த தருணத்தை நாம சந்தோஷமா வரவேற்கணும்.


இனி சந்தோஷ் என்ற ஒரு பெர்சன் உன் லைபில் இல்லை. அவன் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டான். நான் எல்லாம் பண்ணிட்டேன்”


என கண்களை அமர்த்தி கூறியவனாய் அதிர்ந்து பார்த்தாள்.


“இதுக்கு முன்னே எப்படி நீ அவனை மறந்து போனியோ, அப்படியே மறந்து போய்டு. நீ, நான், நம்ம ஹாப்பி லைப் இது மட்டும்தான் உன் நியாபகத்தில் இருக்கனும். ஓகே வா. ஒரு ஹால்ப் ஹவர் முன்னே எப்படி இருந்தியோ அந்த அமிர்தா தான் எனக்கு வேணும்.


எங்க வெட்கப்படுட்டே சிரி பார்ப்போம். இல்லை போட்டோ சூட் எடுக்க ஆளை கூப்பிடுவோமா?"

என்றதும் அவளுக்குள் கலவையான உணர்வுகள். 


சந்தோஷ் தொல்லை இனி இல்லை என்ற நிம்மதி, தனக்காக எல்லாம் செய்கிறான் என்ற மகிழ்ச்சி,  இவன் காதல் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற பூரிப்பு,  இன்னும் சற்று நேரத்தில், தனக்கே தனக்கான உறவு அவனுடன் பிணைய போகிற என்ற ஆசுவாசம் எல்லாமே வந்து வந்து போயின அவள் மனதில்.


உணர்வு குவியலாய் இருந்தாள் அவள். அவள் உணர்வின் மொத்த பூரணமாய் இருந்தான் அவன்.


நெருஞ்சி முள்ளாய் குத்திய அத்தனை கசடுகளையும் களைந்து விட்டு, மனம் முழுவதும் அவன் மீதான காதல் மட்டுமே நிறைந்து வழிந்த நிறைவோடு அவன் கரம் பற்றி மணமேடை ஏறினாள்.


வாழ்வில் இதைவிட உன்னதனமான தருணம் வேறு என்ன இருந்து விட போகிறது?!!


அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. கையில் இருந்த ஆரவ்வின் படத்தை எடுத்து உதடு அருகே எடுத்து கொண்டு சென்றவள் ஆழ்ந்து முத்தத்தை அதில் பதிக்க, சட்டென்று அவளது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழந்தான் ஆரவ்.


அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்காதவள், வேகமாக கைகளை இறக்கி கொண்டு அவனை பார்த்து திருத்திருத்தாள்.


அவளருகே வந்து நெருங்கி நின்றவன்,


“எனக்கு இப்போ கிஸ் கொடுத்த தானே” என்று கேட்க, அவளோ, நாணத்தில் தலைகவிழ்ந்தாள்.


“நேரிலே வந்து இருக்கேன், இப்போ கொடுக்கலாமே!!”


என்று இன்னும் நெருங்கி நிற்க, அவளோ அவஸ்தையாக அவனை நிமிர்ந்து பார்க்க, மூச்சுக்காற்று சத்தத்தின் முன்னிலையில், இருவர் கண்களும் அத்தனை காதல் பேசியது.


எந்தவொரு பெண்ணிடமும் தோன்றாத

சபலத்தையும் மீறி ஈர்க்கும்

ஈர்ப்பு

உன்னிடம் மட்டுமே 

தோன்றுவதை என்னவென்று 

சொல்வது நான்

இது தானே காதல்!!


பிடிக்கும்…















 




















Comments