UNEP-28

 அத்தியாயம்.28


   சென்னை விமான நிலையம்..


தான் எங்கு இருக்கிறோம், சுற்றி என்ன நடக்கிறது என்பது எதையும் கருத்தில் கொள்ளாது, நினைவு முழுவதும் ஆரவ் மட்டும் நினைந்திருக்க, மனம் முழுவதும் அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது என்ற வேண்டுதலோடு அந்த காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் ஆரவ்வின் அமிர்தாஸ்ரீ.


நிச்சயம் இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. இமை மூடினாலும், திறந்தாலும், அவனின் சிரித்த முகம் தான் அவளின் முன் நிழலாடியது.


“எங்கே போனீங்க? நீங்க தானே என் பிடிமானம், நீங்க இல்லாமல் நான் மட்டும் எப்படி?


 என மனதோடு மானசீகமாக அவனோடு பேசி கொண்டிருந்தவளுக்கு பதில் கூற தான் அவனில்லை. கண்களில் நீர் வழிய அதனை துடைக்க கூட தோன்றாது அவனை பற்றிய சிந்தனையில் உள்ளுக்குள் கதறி கொண்டு அமர்ந்திருந்தாள்.


ஆரவ்வுடனான இந்த ஒரு மாத கால வாழ்க்கை, அமிர்தாவிற்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். அத்தளவிற்கு மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தாள். கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு அவள் வாழ்க்கை அவனுடன் அத்தனை ஆனந்தமாக சென்றது.


 இந்த ஒரு மாத காலமும், ஆரவ் அவளுடன் தான் தன் நேரத்தை செலவிட்டான். வெளியே எங்கு சென்றாலும் கூட அவளை அழைத்து கொண்டு தான் சென்றான்.


அவளுடன் நிறைய பேசினான், நிறைய பேச வைத்தான், பொதுஅறிவு, உலகம், அரசியல், வரலாறு, அறிவியல், வாழ்க்கை என அவன் பேசாத தலைப்பே இல்லை. அவளும் ஆர்வமுடன் அதனை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாள்.


அவன் இயக்கிய திரைப்படங்களை வீட்டிலேயே திரையங்கம் போன்ற அமைப்பில் இருந்த அறையில், அவளுடன் அமர்ந்து, படப்பிடிப்பின் போது நடந்த விஷயங்களை ஆவலுடன் பகிர்ந்து கொண்டே இருவரும் பார்த்து பொழுதை கழித்தனர். அவளும் அதனை ஆர்வத்துடன் அமர்ந்து கேட்டு கொண்டிருப்பாள். 


சில சமயம் அவன் மீது அவள் சரிந்து தூங்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அவன் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க, அவன் தோள் மீதே சாய்ந்து உறங்கி கொண்டிருப்பாள் அமிர்தா. அவளிடமிருந்து எந்த சத்தமும் வராது இருந்த போது, அவளை குனிந்து பார்த்த பின்பு தான் அவனுக்கே தெரியும் அவள் உறங்கி கொண்டிருப்பது. சின்ன சிரிப்புடன் அவன் உறங்க ஏதுவாக அமர்ந்து கொண்டு அவளை உறங்க வைப்பான்.


மறுநாள் அவளை வம்புக்கு இழுக்கவென்றே, 

“நான் எடுத்த படம் அவ்வளவு மொக்கையாவா இருக்கு. நல்ல தூங்கிட்டு இருக்க!!!”

என கேட்டதும், அவளோ,


“அவ்வளவு மொக்கையா எல்லாம் இல்லை. ஆனால்.. “ என இழுத்து


“கொஞ்சம் மொக்கையா தான் இருந்தது”

என கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்து விடுவாள்.


“எதே!! நான் எடுத்த படம் மொக்கையா?”  என அவனும் அவளை துரத்தி கொண்டே ஓட, இருவரும் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருப்பர். அதனை கண்ட பெரியவர்களுக்கோ மனம் நிறைந்து போகும்.


ஒரு சமயம் அவளை அழைத்து கொண்டு காரில், ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டவன், அமிர்தாவிடம்,


“உனக்கு வேற ஏதாவது பண்ணனும் ஆசை இருக்கா அமிர்தா? லைக், மேலே படிக்கணும், இல்லை டான்ஸ், மியூசிக் இப்படி ஏதாவது கத்துக்கணும்னு ஆசை இருந்தா சொல்லு. நான் அரேஞ் பண்றேன். நீ பண்ணு”

என்று கூற, அவளோ வெகு நேர யோசனைக்கு பின்,


“எனக்கு அது போல எந்த ஆசையும் இல்லைங்க. இதுவரை எதுக்கும் நான் ஆசைப்பட்டதே இல்லையே” என்றாள்.


“நிச்சயம் ஏதாவது இருக்கும், யோசிச்சு சொல்லு” என்றவனை திரும்பி பார்த்தவள், அவன் காரை லாவகமாக ஓட்டும் அழகை கண்டு,


“எனக்கு கார் ஓட்ட கத்துக்கணும்னு ஆசையா இருக்குங்க. நீங்க சூப்பரா ஓட்டுறீங்க. உங்களை பார்த்து எனக்கும் ஆசை வந்துடுச்சு”

என்றவளை கண்டு, “என்ன?” என அதிர்ந்தவன், பின் சிரிப்புடன் 


“கார் தானே நான் ஓட்ட கத்து தரேன்” என அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு காரை ஓட்ட பயிற்று வித்தான்.


முதன் முதலில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த போது, அமிர்தாவிற்கோ அத்தனை பூரிப்பு. சாவி போட்டு, அவன் சொல்படி, வண்டியை இயக்கி, அது கொஞ்சம் நகர்ந்ததும் எதையோ சாதித்தது போல் இருந்தது அவளுக்கு.


அவளின் அந்த சின்ன சின்ன மகிழ்ச்சியில், ஆரவ்வோ பேருவகை கொண்டான். இன்னமும் அவள் முழுமையாக கற்று கொள்ளவில்லை என்றாலும், அவளின் ஆர்வம் கண்டு விடாமல் அவளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறான்.


***********************


“அமிர்தா..,என பாலகிருஷ்ணனின் குரலில், ஆரவ்வின் நினைவில் இருந்து கலைந்து, அவரை நிமிர்ந்துபார்த்தாள் அமிர்தா. தன்  வீட்டில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து கலகலவென இருந்த மருமகள் இப்படிடி மொத்தமாக ஓய்ந்து போய் இருப்பதை  கண்டு அவருக்கோ அத்தனை வேதனை. 


'இந்த பொண்ணுகாகவாவது நீ சீக்கிரம் வந்துடனும் ஆரவ்' என மனதோடு வேண்டி கொண்டார் அவனை.


“வா மா” என அவளை அழைத்து கொண்டு விமானத்திற்கு செல்ல வேண்டிய சரிபார்ப்பு இடத்திற்கு அழைத்து சென்று வரிசையில் நிற்க வைக்க, அவளும் இயந்திரகதியில் அங்கு சென்று நின்றாள்.


அவளுக்கு முன்னே, நின்ற பெண்மணி, பக்கத்து வரிசையில் நின்றிருந்த அவரது கணவரை பார்த்து,


“சாம், லக்கேஜ் எல்லாம் சரியா இருக்கா பாரு. அப்புறம் நான் விட்டுட்டு வந்துட்டேனு என்னை கேட்டுட்டு இருக்க கூடாது” என உரிமையாய் கூற, அவர் கணவரும்,


“நான் எடுத்துட்டு வந்த லக்கேஜ் எல்லாம் சரியா தான் இருக்கு. நீ எடுத்துட்டு வந்ததை நீயே செக் பண்ணு” என கூறியதும், 


“ஏன் நான் எடுத்துட்டு வந்தா, நான் தான் பார்க்கணுமா? நீ பார்க்க மாட்டியோ? ஒழுங்கா எல்லாம் கரெக்ட்டா இருக்கானு பாரு சாம். என்னை தேவையில்லாமல் டென்ஷன் பண்ணாதே நீ”

என அவரது கணவரை ஒருமையிலும், பேர் சொல்லியும் கூப்பிட, சட்டென்று ஒருநாள் ஆரவ்வுடன் நடந்த சம்பவம் மீண்டும் அவள் நிழலாடியது.


“ஏங்க, சாப்பிட வாங்க, அத்தம்மா உங்களை கூப்பிறாங்க” என ஆரவ்வை உணவுண்ண அழைக்க, அவனோ,


“சரிங்க, நீங்க போங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துறேனு உங்க அத்தம்மா கிட்ட சொல்லிடுங்க”

என வார்த்தைக்கு வார்த்தை அவளை போலவே மரியாதையுடன் பதிலளித்தான். அவனது வித்தியாசமான அழைப்பில் திகைத்தவள்,


“என்ன நீங்க? என்னை போய் ங்கனு போட்டு கூப்பிறீங்க?” என கேட்க,


“நீங்க எனக்கு மரியாதை கொடுத்து பேசுறீங்க. அதேப்போல் நானும் மரியாதை கொடுத்து பேசுறேன். இதில் என்ன இருக்கு?

என்றவனை வித்தியாசமாக பார்த்தாள் அமிர்தா.


“நான் எப்பவும் அப்படி தானே உங்களை கூப்பிறது. நீங்க என்னை பேர் சொல்லி தானே கூப்பிடுவீங்க. திடீர்னு என்னாச்சு?

என்றவளுக்கு,


“ஹ்ம்ம், திடீர்னு ஞானோதயம் வந்துடுச்சு. அதான் இனி மரியாதையாய் கூப்பிடலாம் இருக்கேன்”

என அவளை போலவே சொல்லி காட்டினான் ஆரவ்.


“சும்மா விளையாடாதீங்க. இப்படி மரியாதையாய் ஒன்னும் என்னை கூப்பிட வேண்டாம். என்னவோ மாதிரி இருக்கு. யாரோ கூப்பிற போல இருக்கு. எப்பவும் போலவே கூப்பிடுங்க. எனக்கு இந்த மரியாதைலாம் வேண்டாம்”

என்று கூறியவளிடம்,


“அதே தான் உங்களுக்கும், நீங்க என்னை எப்ப பாரு ஓவர் மரியாதையாய் கூப்பிடும் போது, எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு. என்னவோ யாரையோ கூப்பிற போல இருக்கு. நீங்களும், என்னை உரிமையாய் நீ, வா, போ, கூட பேர் சொல்லி கூப்பிட்டா எவ்வளவு நல்ல இருக்கும். எனக்கும் இந்த மரியாதைலாம் வேண்டாம்” என்றான் திட்டவட்டமாக..


“என்னங்க நீங்க சின்ன பிள்ளை போல அடம் பிடிக்கிறீங்க. நான் எப்படி, அப்படி கூப்பிட முடியும்? வெளியே யாராவது கேட்டால்? அதுவும் அத்தம்மா கேட்டாங்க அவ்வளவு தான் என்னை, நான் மாட்டேன் போங்க”


என்று முடிவாக மறுப்பு தெரிவித்தாள். மாமியார் மீது கொஞ்சம் பயம் தான் அமிர்தாவிற்கு. நிர்மலா பல நேரம் தாயாய் இருந்து அவளை பார்த்து கொண்டாலும், சில நேரம் மாமியாராய் தான் அவளிடம் நடந்து கொண்டார். அவரின் மாமியார் குணத்தில், எல்லா பெண்களை போலவும், அமிர்தாவிற்க்கும் கொஞ்சமாக இல்லை, நிறையவே பயம் தான் அவர் மீது.


“சரி, வெளியே கூப்பிட வேண்டாம், நாம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, நம்ம ரூமில், நமக்கே நமக்கான இடத்தில், கூப்பிடலாம்ல. யார் என்ன சொல்ல போறா”

என அவனும் விடாது போராட, அமிர்தாவிற்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சட்டென்று அவனை அணைத்து கொண்டு மார்பில் சாய்ந்து கொண்டவள்,


“ஏங்க இப்படி பண்றீங்க? எனக்கு அப்படிலாம் கூப்பிட வராது சொன்னா கேட்கவே மாட்டேன்கிறீங்க. சரி உங்களுக்காக முயற்சி பண்றேன். ஆனால் உடனே வராது, கொஞ்சம் கொஞ்சமாக தான் பழக முடியும்”


என்றதும், அவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. அவளது நெற்றியில் தன் முத்தத்தை பதித்தவன்,


“அப்பாடா, இப்போ தான் ஹாப்பியா இருக்கு. இதை சொல்ல வைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கு உன்கிட்ட?, சரி என்னை இப்போ உரிமையாய்  கூப்பிடு பார்க்கலாம்” என கூற அவளோ,


“சாப்பிட வாங்க…,” என்றதும் அவளை முறைத்தான் ஆரவ்.


“ச்சே ச்சே இல்லை, இல்லை,  சாப்பிட வா…டா,”

என்று அவனுக்கே கேட்காத வகையில் அழைக்க,


“ஒண்ணுமே கேட்கல,”


“டேய் சாப்பிட வாயேன் டா” என சத்தமாக கத்தியவள், சட்டென்று நாக்கை கடித்து கொண்டு அவனை பார்த்து திருத்திருக்க, அவனோ திகைத்து, பின் அவளை கண்டு சத்தமாக சிரிக்க, அவளோ வெட்கத்துடன், அவன் மார்பில் மேலும் ஒன்றி போனாள். அவனும் சிரிப்புடன் அவளை இறுக அணைத்து கொண்டான்.


அதன் பின் அவள் எப்பொழுது அவனை மரியாதையுடன் அழைத்தாலும், அவனும் மரியாதையுடன் தான் அழைப்பான்.


என்னங்க என்று அமிர்தா தொடங்கும் முன்னே, அவனிடமிருந்து வரும் பதில் சொல்லுங்க என்பதாக தான் இருக்கும். 


இது போல் பல நேரம் மாறி மாறி பேசி, அவர்களது வாழ்க்கையை  மேலும் இனிமையாக்கி கொண்ட தருணங்கள் ஏராளம்.


தற்பொழுது அதெல்லாம் நியாபகத்தில் வந்து அவளது வேதனையை இன்னும் அதிகரிக்க செய்தது.


“உங்களை, இனி நீங்க ஆசைப்பட்ட போலவே கூப்பிறேன், என்கிட்ட வந்துருங்க” என மனதோடு கதறியவள், விமானத்தில் அமர்ந்து ஜன்னல் வழியே வெளி உலகத்தை வெறித்து பார்த்தாள்.


முதன் முதலில் விமான பயணம், அவள் கருத்தில் அதெல்லாம்  பதியவே இல்லை.


அவன் வெளியூர் கிளம்பிய நாள் அவள் மனதில் வந்து போனது.


அன்றைய நாள் அழகாய் மலர்ந்து மனம் பரப்பி கொண்டிருக்க,  

ஆரவ்வை காண்பதற்காக, அவன் மும்பையில் ஒத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அவன் இல்லம் வருகை புரிந்தனர் . வந்தவர்கள் ஆரவ்விற்கும், அமிர்தாவிற்கும் திருமண வாழ்த்து கூறி, பூங்கொத்து கொடுக்க, அவர்கள் வாழ்த்தை ஏற்று, வந்தவர்களை உபசரித்தான் ஆரவ். பின் வந்தவர்கள், தாங்கள் வந்ததன் நோக்கத்தை கூறி, படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை கவனிக்க கூறினர்.


அதன்படி, அமெரிக்காவில், தற்பொழுது நிலவும் பனி பொழிவின் போது எடுக்க வேண்டிய பகுதிகளை உடனே எடுத்து விட கூறினர். அதனால் அவன் இன்றே தன்னுடைய குழுவுடன் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று கூறியதும், அவனோ திரும்பி அமிர்தாவை பார்த்தான்.


திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் முடிந்து இருக்கிறது. சட்டென்று ஒரு பிரிவு என்றால் அவள் அதை எப்படி எடுத்து கொள்வாளோ என அவன் மனம் அவளை நினைத்து வருந்தியது. 


அன்று மாலையே புறப்பட வேண்டும், என்று அவர்கள் கூறிவிட்டு செல்ல, அவனும் சரியென்று ஒத்து கொண்டான். அவனால் திரைப்படம் தள்ளி போவதை விரும்பவில்லை. ஏற்க்கனவே அவன் ஒத்து கொண்ட படம் தான். இடையில் தான் என்னென்னமோ நடந்து திருமணமும் முடிந்து விட்டது. இத்தனை நாட்கள் அவர்கள் தனக்காக யோசித்து நேரம் கொடுத்ததே பெரிய விஷயம். தன் மேல் கொண்ட நம்பிக்கையை தான் காபாற்றுவது தானே தொழில் தர்மம். அதனால் புறப்படுவதற்கான ஏற்பாட்டை கவனிக்க ஹரியிடம் கூறியவன், மனைவியை தேடி அறைக்குள் நுழைந்தான்.


அமிர்தாவோ அவன் ஊருக்கு  எடுத்து செல்ல தேவையான பொருள்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.


“வாங்க.., உங்க டிரஸ், திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சு இருக்கேன். எது எது வேணும் சொன்னா, எல்லாமே பேக்கில் அடுக்கி வச்சுடுவேன். அப்புறம்  அங்கே ரொம்ப பனி பெய்யும்னு சொன்னாங்க. அப்போ நான் ஒரு மூணு நாலு ஸ்வட்டர் எடுத்து வைக்கிறேன். நீங்க மாத்தி மாத்தி போட்டுக்குங்க”


என தான் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு, நடமாடினாள். அவ்வளவு பேசியவள், அவன் கண்ணை நேர்க்கொண்டு பார்த்து பேசவில்லை.


அவனை பார்த்தால் உடைந்து விடுவோம் என்று தோன்றவே, அவன் கண்களை சந்திப்பதை தவிர்த்தாள். இயல்பாக இருப்பது போல அவள் காட்டி கொண்டாலும், அவளுக்குள் இருக்கும் வருத்தம் அவனுக்கு தெரிந்தது.


அவள் கைப்பிடித்து தன்னை நோக்கி திருப்பி நிற்க வைத்தவன், அவளை பார்க்க, அமிர்தாவோ இமை தாழ்த்தி

கொண்டாள்.


“என்னை பாரு அமிர்தா” என்று அவளை பார்க்க வைக்க, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்கள் விழிநீர் விழ காத்து கொண்டிருந்தது.


சட்டென்று அவன் மார்பிலே சாய்ந்து இறுக அணைத்து கொண்டவள், ஒரு மூச்சு கதறி அழ, அவனும் அவளை இறுக அணைத்து கொண்டான்.


“அமிர்தா மா, இப்படி அழுதா, நான் எப்படி ஊருக்கு கிளம்ப முடியும்? அழுத்துட்டே வழியனுப்பினா என்னால் அங்கே வேலையே பார்க்க முடியாதே!! சரி வேணும்னா இந்த படம் நான் டைரக்ட் பண்ணலன்னு கேன்சல் பண்ணிடவா? என்ன நஷ்டஈடு கேட்பானுங்க பார்த்துக்கலாம்”


என்றதும், அமிர்தாவோ அவனை  நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். கண்களை துடைத்து கொண்டு,


“அதெல்லாம் வேண்டாம், நீங்க கிளம்புங்க நான் அழல”

என்றதும், அவனும் அவள் நெற்றியில் இதழ் பதித்து, 


“சரிங்க” என்றான் அவளை இயல்புக்கு கொண்டு வர.  பின் இருவரும் சேர்ந்தே அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்தனர். சில பல அணைப்புகளும், கண்ணீரும், சமாதானங்களும், சிரிப்பும், முத்தமும் என இருவருக்குள்ளும் எல்லாம் நடந்து ஆரவ் அமெரிக்காவை நோக்கி புறப்பட்டான்.


புன்னகை முகமாக தான் அவனை வழியனுப்பி வைத்தாள், இருந்தாலும், மனம் அவன் அருகாமையை எண்ணி ஏங்கி தவிக்க தான் செய்தது.


ஆரவ்விற்கு அவனுடைய இயக்கம் எத்தனை முக்கியம் என்பது அவளுக்கு தான் தெரியுமே!! அவனுக்காக இந்த பிரிவை ஏற்று கொண்டாள்.


விமான நிலையம் சென்றது, அமெரிக்கா வந்து சேர்ந்தது, அங்கு தங்கியது, ஓய்வெடுத்தது, உண்ணது, உறங்கியது என ஒன்று விடாமல் அவளுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருந்தான். அடிக்கடி வீடியோ காலில் அழைத்தும் பேசுவான்.


ஒருவார காலம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. அதன் பின் அன்றைய நாளில் வழக்கமாக அந்த நேரத்தில் வரும் ஆரவ்வின் அழைப்பு அன்று வரவில்லை. அடிக்கடி அலைபேசியை எடுத்து பார்த்தப்படி தான் இருந்தாள்.


அன்றைய நாள் முழுவதும் அவனிடமிருந்து அழைப்பு வரவே இல்லை. அங்கு நிலவும் காலநிலையில் ஒருவேளை தொடர்பு கிடைக்காமல் இருந்து இருக்கலாம் என தன்னையே தேற்றி கொண்டாள். ஏனென்றால் அவன் அழைக்கும் பொழுது ஒவ்வோரு முறையும் கூறிவிடுவான்,


“இங்க குளிர், மைனஸ் டிகிரியில் இருக்கு. அவ்வளவு பனி பெய்யுது. சிக்னல் சரியா கிடைக்காமல் கூட இருக்கும். போன் பண்ணலைன்னா பயப்படாதே. சரியானதும் நானே கூப்பிடுவேன்”

என அறிவுறுத்தி இருக்க, அதனால் எதையும் பெரிதாக யோசிக்காமல் இருந்தாள்.


அடுத்த நாளும் அழைப்பு வராமல் இருக்க, கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது. நேராக நிர்மலாவிடம் சென்றவள்,


“அத்தம்மா, அவங்க உங்களுக்கு ஏதாச்சும் போன் பண்ணாங்களா?”

எனக் தயங்கி தயங்கி கேட்க,  அவரோ,


“இல்லையே அமிர்தா, அவன் இது போல தான் ஷூட்டிங் வந்துட்டா, நம்மளை எல்லாம் மறந்துடுவான். வேலை முடிஞ்சதும் கால் பண்ணுவான். ஏன் உனக்கு பண்ணலையா?” எனக் கேட்க,


“ஆமாம், ரெண்டு நாள் ஆச்சு அவர் போன் பண்ணி, அதான் உங்களுக்கு ஏதாச்சும் பண்ணாரான்னு கேட்கலாம் வந்தேன்”

என்றதும், 


“பண்ணுவான் கவலைப்படாதே. சில நேரத்தில் போன் சிக்னல் சரியா கிடைக்காது அதனால் கூட இருக்கலாம். நீ வந்து சாப்பிடு”

என ஆறுதல் கூறியவர் உணவுண்ண அழைக்க, அவளும் சரியென்று அமர்ந்தாள்.


தட்டில் உணவை போட்டு  எடுத்து வைத்தவளுக்கு ஒரு பருக்கை கூட இறங்கவில்லை. 


‘அவர் சாப்பிட்டாரா? இல்லையான்னு தெரியலையே!!’

என கவலைப்பட்டவளுக்கு உணவு உள்ளே செல்லவில்லை.


அந்த நேரம் பார்த்து அவளுடைய அலைபேசி அலற, அவன் தான் அழைத்து இருக்கிறானோ, என மேஜை மேல் வைத்த அலைபேசியை எடுக்க ஓடினாள்.


வந்த வேகத்தில் மேஜையின் அடியில் இருந்த இடத்தில்,  காலில் வேறு இடித்து கொள்ள, அதனையெல்லாம் பொருட்படுத்தாது, அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைக்க, அது ஏதோ விற்பனையை பற்றி இருந்தும் சப்பென்று ஆகிவிட்டது அவளுக்கு.


அலைபேசியை வைத்து விட்டு திரும்பும் போது தான் அவள் காலில் உள்ள வலியையே அவள் உணர்ந்தாள். இடித்த இடத்தில் இருந்து ரத்தம் வர, அதனை கண்ட நிர்மலாவோ,


“என்ன மா இது? பார்த்து வர கூடாது. பாரு ரத்தம் வருது. போ போய் காலில் மருந்து போடு”

என அனுப்பி வைக்க, அவளும் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவள் அலைபேசியை தான் பார்த்து கொண்டிருந்தாள். இதே போல் தான் அடுத்த நாளும் சென்றது. அழைப்பு வரும்போதெல்லாம் அவன் தான் அழைக்கிறான் என பதறி போய் எடுத்து பார்த்தால், அவனாக இருக்காது.


இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று அவளே அவனுக்கு அழைக்க, இணைப்பு கிடைக்கவில்லை என்ற செய்தி தான் வந்தது. தற்பொழுது பயம் பிடித்து கொண்டது.


மனம் தாறுமாறாக என்னென்னமோ யோசித்து அவளை அச்சுறுத்தியது. உடனே பாலகிருஷ்ணனிடம் வந்தவள்,


“மாமா, அவங்க மூணு நாளா போன் பண்ணல. நான் போன் பண்ணாலும் அவங்களுக்கு போக மாட்டேங்குது.. நீங்க என்னன்னு பார்கிறீங்களா?”


என்று கேட்க, அவள் முகத்தில் தெரிந்த பயத்திலும், குரலில் தெரிந்த நடுக்கத்திலும், பாலகிருஷ்ணனோ,


“பயப்படாதே மா. நான் பார்க்கிறேன் இரு”

என்றவர் ஆரவ்விற்கு அழைப்பு விடுத்தார்.


அவனுக்கு அழைப்பு செல்லவில்லை என்றதும், ஹரிக்கு அழைக்க, அழைப்பு சென்றதும், அவனோ,


“சார்.. அது.. வந்து.., ஆரவ் சாரை மூணு நாளா காணும். அவரை தான் தேடிட்டு இருக்கோம்”

என்றதும் அதிர்ந்து போனார் பாலகிருஷ்ணன்.


“என்ன ஹரி சொல்ற? ஆரவ்வை காணுமா?”


என்றதும் அருகில் நின்றிருந்த அமிர்தாவோ உறைந்து போனாள். ஒரு நொடி அவள் இதயமே தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது என்றே சொல்லலாம்


“ஐய்யயோ என்னங்க சொல்றீங்க என் பிள்ளைய காணுமா?”

என நிர்மலா அழுது கரைய, அமிர்தாவிற்கு அதிர்ச்சியில் கண்ணீர் கூட வரவில்லை.


“கொஞ்ச நேரம் சும்மா இரு நிர்மலா. ஆரவ் என்ன சின்ன குழந்தையா காணாமல் போக. அடுத்து என்னன்னு பார்க்கலாம்”

என மனைவியை அதட்டியவர், மருமகளிடம்,


“ஆரவ்விற்கு எதுவும் ஆகி இருக்காது மா. தைரியமா இரு” என்றதும் அவளோ மலங்க மலங்க விழித்தாள்.


‘அவருக்கு எதுவும் ஆகி இருக்காது தான். அவர் தானே என்னை பார்த்துகனும். நிச்சயம் அவருக்கு ஒன்னும் ஆகி இருக்காது. என்னை தனியா விட மாட்டார்’ என தனக்குள் முனகி கொண்டே இருந்தாள் அமிர்தா.


அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு சதாசிவமும், கலாவும் அங்கு வந்து விட்டு இருந்தனர். 


அஞ்சலி நிர்மலாவிற்கும், அமிர்தாவிற்கும் ஆறுதல் கூறிக்கொண்டுஇருக்க, பாலகிருஷ்ணன் அங்கு தொடர்பு கொண்டு ஆரவ்வின் நிலையை அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.


சதாசிவமும், “தைரியமா இருங்க. தம்பிக்கு ஒன்னும் ஆகி இருக்காது” என ஆறுதல் கூற, கலா நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.


பாலகிருஷ்ணனின் அருகில் சென்று, அவருக்கு துணையாக சதாசிவம் நிற்க, அஞ்சலி இருவருக்கும், குடிக்க கொண்டு வர வேண்டும் என்று உள்ளே சென்று விட்டாள்.


இது தான் சமயம் என கலாவோ நிர்மலாவிடம் மெல்லிய குரலில், 


“நான் தான் அப்பவே சொன்னேனே, இவ ஒரு ராசி கெட்டவனு, சொன்னதை கேட்டீங்களா? இப்ப பாருங்க எங்க வந்து கொண்டு நிறுத்தி இருக்கானு. ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாம். எத்தனை தடவை வெளியூர் போயிருப்பாங்க, இப்படி ஒரு தடவையாவது நடந்து இருக்குமா? இப்போ நடந்து இருக்குன்னா யோசிங்க"   என பற்ற வைக்க, நிர்மலாவோ சட்டென்று அமிர்தாவை திரும்பி பார்த்தார்.


அமிர்தாவிற்கும் கலா சொன்னது காதில் விழத்தான் செய்தது. அவளும் அந்நேரம் அவரை திரும்பி பார்க்க, அவர் முகமே சரியில்லை. அமிர்தாவை உயிரோடு மரிக்க செய்ய, அந்த பார்வையே போதுமானதாக இருந்தது அவள் அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள். 


மனமெல்லாம் ரணமாகி போனது அவளுக்கு. என் ராசியால் தான் அவருக்கு இப்படி ஆனதோ?!! என அவளே நம்பும் அளவிற்கு இருந்தது நிர்மலாவின் பார்வை. அதன் பின் அவர் அவளிடம் பேசவே இல்லை. ஒதுக்கம் தான் காண்பித்தார்.


தொடர் முயற்சி தோல்வியடைய, பாலகிருஷ்ணன், நேரில் சென்று பார்த்தால் ஏதாவது வழி கிடைக்கும் என்று முடிவு செய்தவர், கிளம்ப ஆயுத்தமாக, நிர்மலாவோ, தானும் உடன் வருகிறேன் என்று அடம் பிடித்தார்.


“நிர்மலா, நீ வந்தால் தேவையில்லாமல் உன்னை வேற பார்த்துக்க வேண்டி வரும். அங்கே போன தான் தெரியும் நிலவரம் என்னன்னு. அதனால் நீ இங்கேயே இரு, நான் பார்த்துட்டு சொல்றேன்"


என்று முடிவாக கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தவர் முன் வந்து நின்றாள் அமிர்தா.


“மாமா, நானும் வரவா?" என கண்ணில் நீருடன் கலங்கி போய் நின்றிருந்தவளை காண முடியவில்லை அவரால். மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் “வா மா" என்று அழைத்து கொண்டு வந்து விட்டார்.


நீண்ட நேர விமான பயணம் முடிவுக்கு வர, அமெரிக்காவில் கால் பதித்தாள், அவளின் உயிரை தேடி....


பாலகிருஷ்ணனும், அமிர்தாவும் நேராக ஆரவ் மற்றும் படக்குழுவினர் தங்கிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். ஹரி அவர்களை வரவேற்க,


"என்ன ஹரி?  என்னாச்சு? ஆரவ் எங்கே? எங்கே போனான்? ஏதாவது தகவல் கிடைச்சதா? ஏன் என்கிட்ட முன்னமே சொல்லலை. மூணு நாளா என் பையனை காணும் என்கிட்டே சொல்லனும் தோணவே இல்லையா உனக்கு" என பால கிருஷ்ணன் கோபப்பட, ஹரியோ,


“சார், சொல்ல கூடாதுனு இல்லை, நாங்களே கண்டு பிடிச்சுடலாம் தான் சொல்லலை. எபபவும் போல ஷூட்டிங்க்கு  கூப்பிட,  அவரறைக்கு போன பின்னாடி தான் அவர் அங்கே இல்லைனு என்ற விஷயமே எங்களுக்கு தெரிஞ்சது. அவர் போனும் கையில் எடுத்துட்டு போல. ரூமில் தான் இருக்கு. எங்க போனார் என்ன ஆச்சுன்னு எங்களுக்கும் புரியல. இங்கே போலீசில் கம்பளைண்ட் பண்ணி இருக்கோம். அவங்களுக்கு தேடுறாங்க. நாங்களும் ஒரு பக்கம் தேடிட்டு இருக்கோம்" என்று விளக்கம் கொடுத்தான்.


அமிர்தாவால் கதறி அழவும் முடியவில்லை, அவனை நினைத்து அழாமலும் இருக்க முடியவில்லை. ஆனால் அவளின் வேதனையை கண்ணீரில் கரைக்க முயன்று கொண்டிருந்தாள். வீண் முயற்சி தான்.


“பயமா இருக்கு ஹரி. அவனுக்கு ஒன்னும் ஆகி இருக்காதுல" என அவர் துவண்டு போக, ஹரியோ,


“சார், எனக்கு நம்பிக்கை இருக்கு, அவருக்கு ஒன்னும் ஆகி இருக்காது. நீங்க வருத்தப்படாதீங்க" 


என ஆறுதல் கூறினான்.


"சரி  இப்போ என்ன பண்ணறதா இருக்க? என பாலகிருஷ்ணன் கேட்க, 


“ஆரவ் சாரை தேடி போலாம் இருக்கேன் சார், போலீசும் ஒரு பக்கம் விசாரிக்கட்டும், நாமளும்  போய்  விசாரிக்கலாம். ஏதாவது குளூ கிடைச்சா போதும், அதை வச்சு கண்டுபிடிச்சுடலாம். நேத்து இங்கே பனிப்பொழிவு அதிகம் இருந்தது. கொஞ்சம் தூரமா போய் தேட முடியல. இன்னைக்கு கொஞ்சம் கம்மியா இருக்கும்னு சொல்லி இருக்காங்க, விட்ட இடத்தை எல்லாம் இன்னைக்கு தேடி பார்க்கலாம்னு இருக்கேன் சார்"


என்றதும் அவரும், “சரி நானும் வரேன். தேடி பார்ப்போம்,” என கூறிக் கொண்டிருக்கும் போதே  அமிர்தா உடனே,


“நானும் வரேன்" என்றாள்.


“இல்லை மா, இங்க வேதரே சரியில்லை. நாங்க போய் பார்த்துட்டு வரோம். நீ ஆரவ் ரூமில் இரு. எப்படியும் கன்டுபிடிச்சுடலாம். வருத்தப்படாதே மா"


என  பாலகிருஷ்ணன் அவளை இருக்க சொல்ல,


“பிளீஸ் மாமா நானும் வரேன். அவரை எப்படியும் கண்டுபிடிச்சுடலாம். அவர் என்னை விட்டு எங்கும் போக மாட்டார். எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னால் இங்கே இருக்க முடியாது. மூச்சு முட்டியே செத்து போயிடுவேன் போல இருக்கு. ப்ளீஸ் மாமா என்னையும் கூட்டிட்டு போங்க"  


என கெஞ்ச, அங்கிருந்தவர்களால் அவளின்  நிலையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. பட குழுவினர் கூட அவளின் நிலையை கண்டு பரிதாபப்பட்டனர். 


“சரி மா வா போலாம்" என பாலகிருஷ்ணன் அவளையும் அழைத்து கொண்டு செல்ல மூவரும் அவனை தேடி புறப்பட்டனர்.


தெரிந்த, தெரியாத,  இடங்கள் என ஒரு இடம் விடவில்லை. அந்த பகுதியில் இருந்த அத்தனை சாலைகளிலும் இருந்த இண்டு இடுக்குகள் எல்லாவற்றிலும்  சுற்றி திரிந்து அவன் புகைப்படம் காண்பித்து என அவர்கள் அலைந்து திரிந்து தேடினர். ஆரவ்வோ கிடைத்த பாடில்லை. 


சோர்ந்து போய்விட்டாள் அமிர்தா, அவன் காணாமல் போய்விட்டான் என்ற செய்தி அறிந்தது முதல் பச்சை தண்ணீர் கூட அவள் அருந்தவில்லை.  இடையில் நிறுத்தி அனைவரும் உணவு, தேநீர் என உண்ட பொழுது கூட அவள் திட்டவட்டமாக வேண்டாம் என மறுத்து விட்டாள். 


அவளை ஓரளவிற்கு மேல் கட்டாயப்படுத்தவும் அவர்களால் முடியவில்லை.


ஒருநாள் முழுக்க தேடியும் அவனை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. காவல்துறையினரும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டனர்.


நம்ம ஊர் என்றால் ஓரளவிற்கு தெரிந்த நபர்களை வைத்து தேடி பார்த்து இருக்கலாம். வேறு நாடு என்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காலநிலை வேறு ஒத்துழைப்பு கொடுக்காததால், இனி நாளை தான் தேட முடியும் என்று மீண்டும் ஹோட்டலிற்கே புறப்பட்டனர்.


காரின் பயணம் அனைவருக்கும் அமைதியாகவே அமைந்தது. அனைவரது வேண்டுதலும் அவனை சீக்கிரம் கண்டுபிடித்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது.


சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரின் பயணத்தை கலைத்தது அமிர்தாவின் குரல்.


“அண்ணா, அண்ணா வண்டியை நிறுத்த சொல்லுங்க. சீக்கிரம்ண்ணா”


என அமிர்தா ஹரியை பார்த்து கத்த,

ஹரியோ 

“என்ன மா, என்னாச்சு?” என்று கேட்டு கொண்டே அருகில் இருந்த ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொல்ல, அவர் நிறுத்தியதும் சட்டென்று கீழே இறங்கியவள், எதிரே இருந்த சாலையை கடந்து ஓடினாள்.


“அமிர்தா, என்ன மா என்னாச்சு?” என பாலகிருஷ்ணனும், ஹரியும்  இறங்கி அவள் பின்னாலே ஓடினர்.


அவள் கடந்த நேரம் வண்டிகள் இல்லாமல் இருக்க, இவர்களால் சட்டென்று அப்படி கடக்க முடியவில்லை.


நேராக அவள் வந்து சேர்ந்த இடம், இறைவனின் சன்னதி. சின்ன கோவில் போன்ற அமைப்பில் இருந்த இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தவள், ஒரே மூச்சாக ஓவென வாய்விட்டு கதறி அழுதாள்.


“உங்களை எப்படி கும்பிடனும்னு எனக்கு தெரியாது. ஆனால் எல்லா தெய்வமும் ஒன்னு தான் என்பது எனக்கு தெரியும். தயவுசெய்து என் வேண்டுதலுக்கு செவி சாய்ங்க. அவர் எனக்கு வேணும். எப்படியாவது அவரை என் கண்ணில் காமிச்சுடுங்க. அவரில்லாமல் நான் எப்படி வாழுவேன்?


ஏன் என்னை இவ்வளவு சித்திரவதை பண்றீங்க? அப்படி என்ன பாவம் செஞ்சுட்டேன் நான்? உங்களுக்கு என்னை கதற வைகனும்ன்னா, அதுக்கு மொத்தமாவே என்னை இல்லாமல் பண்ணிடுங்க. அவரை கஷ்டப்படுத்த வேணாம். உங்களை கெஞ்சி கேக்கிறேன், அவரை திருப்பி கொடுத்துங்க”


என கைகூப்பி அவள் கதறிய கதறல் கல் நெஞ்சையும் கதற செய்வது போல் இருந்தது.


அதற்குள் சாலையை கடந்து வந்த இருவரும், அவளின் அழுகையை காண அவர்களுக்கும் கண்ணீர் சுரந்தது.


கண்ணீரை துடைத்து கொண்ட பாலகிருஷ்ணன், 


“அமிர்தா, ஆரவ்

நிச்சயம் கிடைச்சுடுவான். நீ அவன் மேல் வச்சு இருக்கிற அன்பு அவனை சீக்கிரம் கொண்டு வந்து சேர்த்திடும். வா மா போலாம்”

என அவளை கைப்பிடித்து அழைத்து வர, அவளுடைய அழுகை நின்றபாடில்லை.


ஹோட்டலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த வரவேற்பு அறையில் சோர்வாக அமர, மற்றவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆரவ் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரித்தனர்.


சிறிது நேரம் அமர்ந்திருந்த அமிர்தாவிற்கு தலை சுற்றுவது போல இருக்க, அவளோ


“நான் ரூமுக்கு போறேன்” என்று கூறிவிட்டு ஆரவ்வின் அறைக்கு செல்ல எத்தனிக்க, அவளுக்கோ தள்ளாட்டமாக இருந்தது.


கண்கள் எல்லாம் இருட்டி கொண்டு வர, தலையை உதறி உதறி அறைக்குள் வந்து சேர்ந்தவள், நினைவிழுந்த நிலையில் அப்படியே கட்டிலில் சரிந்து விழுந்தாள்.




உன்னை நேசிக்கும் முன்

பிரிவு என்பது

எனக்கு வெறும் வார்த்தை தான்!!


நேசித்த பின்பு தான் உணர்கிறேன்

பிரிவு வெறும் வார்த்தை இல்லை

என்னை மரிக்க செய்யும் ஆயுதம்

என்று!!



பிடிக்கும்..











 














Comments