UNEP-30

  அத்தியாயம்..30


வாழ்க்கை என்னும் நந்தவனத்தில் தினமும் பூத்து குலுங்கும் மலர்களின் வாசமாய், நாளும் பொழுதும், காதல் பட்டாம்பூச்சிகளாய் ஆடி ஓடி கூடி களித்து என அத்தனை மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழ்ந்தனர் ஆரவ்ஜெயந்தனும், அமிர்தாவும்.


இதோ, இருவரும் கணவன் மனைவியாய், ஆதர்ஷ தம்பதிகளாய், காதல் வாழ்க்கையை வாழ துவங்கி இன்றோடு ஒரு வருட காலம் முழுமையாக நிறைவடைந்திருந்தது.


கடலும் அலையும் போல, கரையும் நுரையும் போல, வானும் நிலவும் போல, வானவில்லும் வர்ணமும் போல என இருவரும் அத்தனை அந்நியோன்யமாக, ஒருவர் இன்றி மற்றவர் இல்லை என்று இணை பிரியா தம்பதிகளாய் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


அன்றைய நாளில், தென்னிந்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதின் பட்டியலில் ஆரவ்ஜெயந்தன் பெயரும் இடம்பெற்றிருக்க, அதற்கு தான் இருவரும் கிளம்பி கொண்டிருந்தனர். நிச்சயம் அவனுக்கு விருது கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது தான், இருந்தாலும் இந்த வருடம் இளைய இயக்குனர்களின் வரவு அதிகமாகவே இருந்தது. அதுவும் அவர்கள் படைப்புகளும் திறம்பட இருக்க, இந்த வருட விருத்திற்கு ஏகப்பட்ட இயக்குனர்கள் போட்டியில் இருந்தனர்.


“அமிர்தா மா, நேரமாச்சு சீக்கிரம் வெளியே வா. வர வர நீ ரொம்ப லேட் பண்ற” என குளியலறை வாசலில் இருந்து ஆரவ் உள்ளே இருக்கும் அமிர்தாவிடம் குரல் கொடுக்க, குளித்து முடித்து, வெளியே வந்த அமிர்தாவோ,


“யாரு? நான் லேட் பண்றேன். என்னால் தான் இப்போ நேரமாச்சு அப்படி தானே!!”


என அவனை பார்த்து முறைத்துகொண்டே கேட்க, அவனோ அவளை பார்த்து அசடு வழிந்தான்.


பின்னே, நேரமாகிறது சீக்கிரம் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறியவளை, இன்னும் நேரமிருக்கிறது, பொறுமையாக செல்வோம் என உப்பு சாப்பில்லாத காரணம் கூறி, அவளை இழுத்தணைத்து, அவளுடன் கூடலை நிகழ்த்தி, நேரத்தை ஓட்டி விட்டு, தற்பொழுது அவளால் தான் நேராமாகிறது என்று கூறினால் அவளுக்கு கோபம் வருவது நியாயம் தானே!!


மனைவியின் முறைப்பில் அப்படியே சரண்டர் ஆனவன்,


“சரி, என்னால் தான் லேட், ஒத்துகிறேன். பிளீஸ் மா, பங்ஷனுக்கு லேட் ஆகுது சீக்கிரம் ரெடி ஆகு,” என்று கெஞ்சி கேட்க, போனால் போதென்று மன்னித்தாள் அவன் மனையாள்.


“சரி, வெளியே போங்க, சாரி மாத்திட்டு வரேன்”

என்று கூற, ஆரவ்வோ,


“இருந்தாலும், நீ ரொம்ப அநியாயம் பண்ற தெரியுமா அமிர்தா? நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷத்திற்கு மேலே ஆகுது. இதுவரை கணக்கே இல்லாமல் நான் உன்னை முழுசா பார்த்து இருக்கேன். ஆனாலும் ட்ரெஸ் மாத்தும் போது மட்டும், எங்கிருந்து தான் உனக்கு கூச்சம் வருமோ தெரியல? என்னை உடனே வெளியே துரத்திற”

என அவன் சலித்து கொள்ள, 


“அதெல்லாம் அப்படி தான். இப்போ போக போறீங்களா இல்லையா? உங்களுக்கு தான் லேட் ஆகும், எனக்கு ஒன்னுமில்லை”

என அவள் தோள்களை குலுக்கி கொள்ள, அவனும் 


“போறேன் போறேன்” என்று கதவை சாற்றிவிட்டு, பால்கனியில் வந்து நின்று கொண்டான். எப்பொழுதும் போல கணவனின் கண்ணியத்தில் தற்பொழுதும் பூரித்து போனாள் அமிர்தா. மனைவி கூறியதை  மறுப்பு தெரிவிக்காமல் ஏற்று கொள்ளும் கணவன் அமைவதும் வரம் தானே!!


அவள் கணவன் எப்பொழுதும் அவளுக்கு வரம் தான்!!


தற்பொழுது புடவையை ஓரளவிற்கு கட்ட தெரிந்து கொண்டவள், கட்டி முடித்து, கணவனை அழைத்து சரிபார்க்க கூற, அவனும் சரியில்லாத இடத்தை எல்லாம் சரிசெய்து விட்டு,


“நீயும் தான் புடவை கட்ட கத்துகிற கத்துகிற இன்னும் கூட சரியா கட்ட தெரியல. நான் கட்டி விடுறேனாலும் விட மாட்டேன்கிறே”


என ஆரவ் சலித்து கொள்ள, அமிர்தாவோ,


“ஐயோடா, நீங்க புடவையை கட்டி விடுறேன் சாக்குல, என்னென்ன செய்வீங்கனு எனக்கு தெரியாது. அப்புறம் நாம நாளைக்கு தான் பங்க்ஷன் போக முடியும். பரவயில்லையா?”


என கேலி செய்து சிரிக்க, ஆரவ்வும் அதனை ஒத்து கொண்டான்.


இருவரும் தயாராகி கீழே வரவேண்டி அறையின் கதவை திறக்க தாழ்ப்பாளில் கைவைக்கும் சமயம், 


“ஒருநிமிஷம்” என்றதும் அவனோ அவளை திரும்பி பார்க்க, சட்டென்று அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்து இருந்தாள் அமிர்தா.


முத்தம் வழங்கி விலக்கியவள், 


“இன்னைக்கு கண்டிப்பா உங்களுக்கு தான் அவார்ட் கிடைக்கும். அதுக்கு தான் என்னோட வாழ்த்துக்களை முன்னமே சொல்லிட்டேன்”


என மனமார வாழ்த்து கூறியவளை, இறுக அணைத்து கொண்டவன்,


“தேங்க்ஸ் அமிர்தா” என்றான் நெகிழ்வாக.


“சரி, சரி கிளம்பலாம் நேரமாச்சு. விட்டா இன்னைக்கு முழுக்க கட்டிபிடிச்சுட்டே இருப்பீங்களே நீங்க” 


என்று ஆரவ்விற்கு அமிர்தா நினைவூட்ட, ஆரவ்வும் சிரிப்புடன் அவளை விட்டு விலகி அறையை திறந்து கொண்டு வெளியே வந்தான். அவனை தொடர்ந்து அமிர்தாவும் வர, இருவரும் ஜோடியாக கீழிறங்க, அங்கே அவர்களின் வரவை எதிர்பார்த்தப்படி நின்றிருந்தனர் பாலகிருஷ்ணனும், நிர்மலாவும்.


இருவரும் வரவும், நிர்மலா, அவர்களுக்கு நெட்டி முறித்து,


“ரெண்டு பேரும் செம அழகா இருக்கீங்க. கூடவே ஒரு பாப்பாவும் இருந்தா பார்க்க இன்னும் அழகா இருக்கும்”


என்றதும், அத்தனை நேரம் கலகலவென இருந்த அமிர்தாவின் முகம் சட்டென்று சுருங்கி போனது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்பது அவ்வப்பொழுது  வரும் வருத்தம் தான். ஆனாலும் ஆரவ்வின் அன்பு அதை மறக்க செய்து விடும்.


மனைவியின் முகம் மாற்றத்தை கண்டவன் தாயிடம், 


“ம்மா, பாப்பா வரும் போது வரட்டுமே!! இப்போ என்ன அதுக்குள் அவசரம்?”

என கேட்க, 


“நான் சாதாரணமா தான் சொன்னேன் ஆரவ். சரி பத்திரமா போய்ட்டு வாங்க. கண்டிப்பா இந்த வருஷமும் நீ தான் அவார்ட் வாங்குவ. அம்மாவோட வாழ்த்துக்கள். ஆரத்தி தட்டோட வெயிட் பண்றேன்”

என வழியனுப்ப, 

அதற்கு மேல் அவரை என்னெவென்று அவன் கேட்க? 


"சரி ம்மா" என்று விடைபெற்று கொண்டான். பாலகிருஷ்ணனுக்கும் மனைவி பேசியதில் வருத்தம் தான். அவர்கள் முன் கேட்காது, ஆரவ்விற்கு வாழ்த்து கூறி அனுப்பியவர், அவர்கள் சென்றதும்,


“நிர்மலா, என்ன இது? வர வர நீ பேசுறது எதுவும் சரியில்லை”

என கண்டித்தார். நிர்மலாவோ,


“இப்போ நான் என்ன பேசிட்டேன், எதுக்கு நீங்க இவ்வளவு கோபப்படுறீங்க?”

என்று பதிலுக்கு கேட்க, 


“என்ன கேட்டீயா? இப்போ எதுக்கு அவங்களுக்கு இன்னும் குழந்தை உண்டாகலைனு குத்தி காட்டி பேசுற”


“என்னங்க நீங்க? எல்லார் வீட்டுலையும் கேட்கிறது தானே!! இதில் என்ன தப்பு இருக்கு? நான் என்ன கல்யாணம் ஆன அடுத்த மாசமேவா கேட்டேன். ஒரு வருஷம் ஆகிடுச்சு. குழந்தை இருந்தா நல்ல இருக்கும்னு தானே சொன்னேன். எனக்கும் ஆசை இருக்கும் தானே என் பிள்ளையோட பிள்ளையை தூக்கி வளர்க்க. அதில் என்ன குற்றத்தை கண்டுபிடிச்சீங்க?”

என விளக்கம் கொடுத்தவரிடம், 


“குழந்தை எப்போ பெத்துக்கணும் என்பது அவங்க விருப்பம். அதில் நீ தலையிடறது தப்பு. மருமக பொண்ணு முகமே தொங்கி போச்சு. சந்தோஷமா கிளம்பி வந்தவங்க, வருத்தமா போறதுக்கு காரணம் நீதான். அது புரியுதா உனக்கு”

என குற்றம் சாட்டினார் நிர்மலாவை.


“மருமக பொண்ணு வருத்தப்படுறான்னு என்பதற்காக, என்னால் கேட்காமல் இருக்க முடியாதுங்க. அவங்க இன்னும் பத்து வருஷம் கழிச்சு பெத்துக்கணும் நினைச்சா, அதையெல்லாம் ஒத்துக்க முடியுமா? அதுக்குள் நான் செத்து போயிட்டா?!!”

என்று அவரின் நியாயத்தை கூற, பாலகிருஷ்ணனோ,


“என்ன நிர்மலா ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என்றதும்,


“நான்  நடைமுறையை தான் சொன்னேங்க. இதில் தப்பு எதுவும் எனக்கு தெரியல”


என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட, பாலகிருஷ்ணனுக்கு மனைவி கூறியதை தவறென்றும் எண்ண முடியவில்லை. அதற்காக சரியென்றும் கூற முடியவில்லை.


விழாவிற்கு, ஆரவ் ஜெயந்தனும் அமிர்தாவும் காரில் பயணம் மேற்கொள்ள, பெருத்த அமைதி நிலவியது அங்கே. வெளியே வேடிக்கை பார்த்தப்படி வந்த அமிர்தாவின் மனம் நிர்மலா கூறியதில் தான் வலம் வந்து கொண்டிருந்தது.


அவர் கூறியது தவறென்று கூற முடியாது. எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு தானே!! கடவுள் ஏன் தனக்கு இன்னும் அந்த பாக்கியத்தை தரவில்லை என்று அவளுக்கு வருத்தமாக இருக்க, அவளின் மனவருத்தம் அவள் முகத்திலும் பிரதிப்பலித்தது.


பயணம் தொடங்கியதில் இருந்து, அவன் புறம் திரும்பாது, எதையோ யோசித்து கொண்டே வரும் மனைவியை பார்த்தவன்,


“என்ன? யோசனை எல்லாம் பலமா இருக்கு!! என்னவாம் என் பொண்டாட்டிக்கு”


என்று அவளின் மௌனத்தை கலைக்க, அதில் அவன் புறம் திரும்பியவள், அவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள். மனதின் புழுக்கத்தை, ஏனோ அவனிடம் கூற முடியவில்லை.


அமிர்தாவிற்கு தான் தெரியுமே! ஆரவ் எத்தனை அன்பு அவன் தாய் மீது வைத்திருக்கிறான் என்பது. அவரை பற்றி குறை கூறினால், அது நன்றாக இருக்காது, தேவையில்லாது மனஸ்தாபம் தான் வரும், என்று யோசித்தவள், அவனிடம் ஒன்றும் கூறாது, அவனது மார்பில் வந்து தன் தலையை சாய்த்து கொண்டாள்.


இளைப்பாற இடம் கிடைத்தால் சோகம் கூட சொர்க்கம் தானே!!


அவள் சொன்னால் தான் அவனுக்கு தெரிய வேண்டுமா அவள் மனநிலை. சொல்லாமலே புரிந்து கொள்ளும் காதல் கணவன் அல்லவா அவன்!!


“அம்மா, சொன்னதை யோசிச்சுட்டு இருக்கியா?”

என அவன் மார்பில் வந்து தஞ்சம் புகுந்ததும் கேட்டு விட்டான் அவளிடம். சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், எப்படி? என்ற கேள்வியோடு அவனை நோக்க,


“என் வைப் மனசில் என்ன இருக்குனு எனக்கு தெரியாதா என்ன? அந்தளவுக்கு கூட புரிஞ்சுக்காம இருப்பேனா நான்? அம்மா சொன்னது கஷ்டமா தான் இருக்கும். அதுக்காக வருத்தப்படாதே!!”

என்று ஆறுதல் கூற, அமிர்தாவோ,


“அத்தம்மா கேட்டதில் எந்த தப்பும் இல்லையே!! அவங்களோட நியாயமான ஆசை தானே இது. ஒருவேளை எனக்கு தான் குறையோ, அதனால் தான் இன்னும் நமக்கு பாப்பா வரலையோ? நீங்க என்னை கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாதுங்க”

என்று பேச்சு வாக்கில் தன்னை மறந்து அவள் பாட்டுக்கு கூறிக்கொண்டே போக, அதிர்ந்து போனான் ஆரவ். அவள் அப்படி கூறியதும் அதிர்ச்சியில் சட்டென்று காரை நிறுத்தி விட்டான் ஆரவ்.


திடீரென அவன் காரை நிறுத்தியதில், யோசனையாய் அமிர்தா அவனை பார்க்க, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


ஆரவ்வின் கார் நின்றதும், பின்னால் வந்த ஹரி மற்றும் அவனின் பாதுகாவலர்கள் வந்த காரும் நிறுத்தப்பட்டது.


 ஹரி வேகமாக வந்து ஆரவ்வின் கார் கண்ணாடியை தட்ட, ஆரவ்வும் கண்ணாடியை இறக்கி விட்டு அவனை பார்த்தான்.


“சார், எனி பிரோப்ளேம்? எதுக்கு கார் நிறுத்தினீங்க” என ஹரி கேட்க, ஆரவ்வோ,


“நத்திங் ஹரி போலாம்” என்றவன், காரை அங்கிருந்து கிளப்பினான். அவன் எடுத்த வேகத்திலே அவனின் கோபம் அமிர்தவிற்கு புரிய, 


“என்ன? என்னாச்சு? ஏன் கோபமா இருக்கீங்க?” என்று கேட்டவளுக்கு, திரும்பி ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.


“என்னன்னு சொல்லுங்க!!” என அவனை போட்டு உலுக்க, அதற்கும் அவன் அசைந்தானில்லை.


‘என்ன வார்த்தை சொல்லிவிட்டால்? குறை இருக்கிறதாம், ஏன் கல்யாணம் பண்ணீங்கனு என்னையே கேட்கிறா?’ என நினைக்க நினைக்க மனமே ஆறவில்லை அவனுக்கு.


எத்தனை காதலோடு, அவனோடு அவள் வாழ்வு பிணைக்கப்பட்டது. எத்தனை போராட்டத்திற்கு பின் இணைந்தார்கள். ஏதாவது ஒன்று நடந்தால் தன்னையே வருத்தி கொண்டு, என்னையும் சேர்த்து நோகடிக்கிறாள் என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.


“நான் ஏதாவது சொல்லிட்டேனே?!!” என்று கேட்டவளுக்கு அந்த நிமிடம் அவள் என்ன கூறினாள் என்பதே நினைவு வரவில்லை.


“ஸாரி, நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா. நீங்க பேசாமல் இருந்தா நான் எப்படி? பேசுங்களேன். இனி எதுவும் சொல்ல மாட்டேன். மிசஸ். ஆரவ் ஜெயந்தன் நல்ல பொண்ணாச்சே, அவளை மன்னிக்க கூடாதா?!!”


என குழந்தை போல் பாவனையில் கொஞ்சியவளை கண்டதும், அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. வாய்க்குள் அடக்கி கொண்டாலும், வெளியே அமைதியாக தான் இருந்தான். அவளோ மீண்டும்,


“பிளீஸ்.., பிளீஸ்.., பேசுங்க. இனி பாப்பாவை பத்தி எதுவும் பேச மாட்டேன். ப்ரோமிஸ்”


என தன் தலையில் வைத்து சத்தியம் செய்து அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பி பேச வைக்க, அவனோ மீண்டும் சாலை பக்கம் திரும்பி விட்டான். இரண்டு மூன்று முறை அப்படியே செய்ய, அதற்கு மேல் அவனால் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.


ஒற்றை கையால் வாகனத்தை செலுத்தியவன், மற்றொரு கையால் அவளை தன் மேலே சாய்த்து கொண்டான். அவன் மார்பில் வந்து ஒட்டி கொள்ள, 


“பாப்பா பத்தி பேசினத்துக்கு கோபப்படல. உன்னை ஏன் கல்யாணம் பண்ணேன்? உன்கிட்ட குறை இருக்குனு சொன்னீயே அதுக்கு தான் கோபம். இனி இப்படி பேச கூடாது. நீ தான் என் வாழ்க்கையோட பூரணமே!! உன்னை நீயே குறையா சொன்னா எனக்கு கோபம் வரதா?! 


அமிர்தாவா, உன்கிட்ட குறை இருக்குன்னு நீ என்ன வேணும்னா சொல்லிக்கலாம். ஆனால் மிசஸ். ஆரவ் ஜெயந்தனை குறை சொல்லும் போது மிஸ்டர். ஆரவ் ஜெயந்தனுக்கு வலிக்குது”


என்று கூறியதும், அவனை இறுக அணைத்து கொண்டாள் அமிர்தா. அந்த அணைப்பே அவனிடம் ஆயிரம் கதைகளை சொன்னது.


புரிதலான காதலுக்கு, புது மொழி எதுவும் தேவைப்படாதே!! ஒற்றை அணைப்பு, ஒற்றை கண் சிமிட்டல், ஒற்றை பாவனை போதுமே, எல்லாமே தன் துணையிடம் ஒப்புவித்து விடும்.


நேராக விருது வழங்கும் விழாவிற்கு வந்து சேர்ந்ததும், வந்திருந்த அனைவரையும் விழா குழுவினர் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று உரிய மரியாதையை அளித்து இருந்தனர். 


கூட்டத்தை கண்டதும் தானாக பயம் வந்து ஒட்டி கொள்ள, அமிர்தா ஆரவ்வின் முழங்கையை பற்றியது தான், விடவே இல்லை. 


மரியாதை நிமித்தமாக அனைவரும் அவனிடம் வந்து பேசி, வாழ்த்து கூற, அனைத்தையும் அவனது வழக்கமான பாணியில் இடது மார்பில் தன் வலது கையை வைத்து ஏற்று கொண்டான்.


புகைப்பட கலைஞர்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தள்ள, அவர்களுக்கும் போதுமான அளவு ஒத்துழைப்பு கொடுத்தான்.


பின், நாயகன், நாயகிகள் வந்து அவனை சூழ்ந்து கொண்டு பேச, அவனை விட்டு அங்கிருந்து விலகி கொண்டாள் அமிர்தா.


எங்கு சென்றாலும் நடப்பது தானே!! அவன் பேசி முடிக்கும் வரை ஒதுங்கி நின்று அவனையே தான் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள். 


அவன் கண்கள் அவளை பார்க்கும் போது ரசிப்பதை காட்டிலும், அவன் பார்க்காத பொழுது அவனை பார்த்து ரசிக்கும் ரசனை கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தது தான்!!


பின் விழா ஆரம்பிக்க, ஆடல், பாடல், நகைச்சுவை, நாடகம் என களைகட்டியது அந்த இடம். இடை இடையே திரைப்பட துறையில் இருக்கும் அத்தனை பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட, அத்தனை உணர்ச்சி பெருக்காய் சென்றது அந்த விழா.


எல்லாவற்றையும் கண்ட அமிர்தாவிற்கு இது புது அனுபவமாக இருந்தது.


அடுத்து சிறந்த இயக்குனரருக்கான விருது அறிவிக்கப்பட, திரையில் இருந்த இயக்குனர் புகைப்படங்களில் ஆரவ்வின் புகைப்படமும் தெரிய, அமிர்தாவோ உடனே, கண்களை மூடி, கைகளை கூப்பி கடவுளிடம் வேண்டி கொண்டிருந்தாள்.


முணுமுனுக்கும் சத்தம் கேட்டு ஆரவ் திரும்பி பார்க்க, அமிர்தாவின் செய்கையை கண்டதும் அவனுக்கோ புன்னகை மலர்ந்தது.


“அமிர்தா, என்ன பண்ற?” என மெல்ல அவளிடம் கேட்க, 

“உங்களுக்கு தான் அவார்ட் கொடுக்கணும்னு வேண்டிட்டு இருக்கேன். இல்லைனா சாமி கிட்ட சண்டை போட்டுடுவேன் சொல்லிட்டு இருக்கேன்”

என அதேபோல் மெல்லிய குரலில் கூறியதும், அவனது புன்னகையோ இன்னும் விரிந்தது.


“அவார்ட் கிடைகலைன்னாலும் பரவாயில்லை. எனக்கு தான் நீ கிடைச்சு இருக்கியே போதும்” என்று அப்பொழுதும் காதல் செய்பவனை கண்டு முறைத்து பார்த்தாள் அமிர்தா.


“போங்க, எனக்கு நீங்க அவார்ட் வாங்கணும் அவ்வளவு தான். இருங்க சாமி கிட்ட டீல் பேசிக்கிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

என்றவள் மீண்டும் வேண்டுதலுக்கு  செல்ல, அதற்குள் வந்திருந்த விருந்தினர் பெயரை அறிவிக்க தயாரானார்.


அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்க, ஆரவ் சாதாரணமாக தான் இருந்தான். யாருக்கு கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என்பது தான் அவன் எண்ணம். ஆனால் அமிர்தா, அதீத பதற்றத்துடன், இருக்கையின் விளிம்பில் அமர்ந்து கொண்டு, மேடையை பார்ப்பதும், பின் கடவுளை கும்பிடுவதுமாக இருக்க, ஆரவ் அவளை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான்.


விருந்தினர் சட்டென்று அவன் பெயரை அறிவித்ததும், அமிர்தாவிற்கோ சந்தோஷம் தாளவில்லை.  உடனே கடவுளுக்கு நன்றி தெரிவித்தவள், அவன் கைப்பிடித்து குலுக்கி வாழ்த்து கூறினாள். ஆரவ் எப்பொழுதும் போல தற்பொழுதும் அந்த மகிழ்ச்சியை அமைதியாக தனுக்குள் புகுத்தி கொண்டான்.


அவனை மேடைக்கு அழைக்க, ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக மேடை ஏறியவன் விருதை வாங்கும் முன், அவர்களிடம்,


“என் வைப் கூட இந்த விருதை வாங்கணும்னு ஆசைப்படுறேன்” என்றதும், அமிர்தாவோ அதிர்ந்து பார்த்தாள் அவனை. அறிவிப்பாளரும்,


“மிசஸ். ஆரவ்ஜெயந்தன் மேடைக்கு வாங்க” என்று அழைக்க, அவளோ ஆரவ்வை பார்த்து “எதுக்கு?, நான் வரல” என்றபடி சங்கடத்துடன் மறுக்க, அவனோ கண்களாலையே அவளை மேடைக்கு அழைத்தான்.


சுற்றி அத்தனை பேர் இருக்க, மேடை ஏறவே அவளுக்கு அத்தனை நடுக்கமாக இருந்தது. கை, கால்கள் எல்லாம் உதற பயந்து கொண்டே மேடை ஏறியவள், அவன் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள். ஆரவ் தான் அவளை இழுத்து பிடித்து தன் அருகில் நிற்க வைத்தான்.


இருவரும் சேர்ந்தே விருது வாங்க, அந்த அழகிய தருணம் புகைப்படமாக சேமிக்கப் பட்டது. 


அமிர்தாவிற்கு அத்தனை பெருமையாக இருந்தது. இவன் என் கணவன் என்று மனதோடு கர்வம் கொண்டாள்.


விழா இனிதே நிறைவடைய, ஆரவ் மனைவியுடன் வெளியே வரும் நேரம் பத்திரிகையாளர்கள், சூழ்ந்து அவனுக்கு வாழ்த்து தெரிவித்து, சில பல கேள்விகள் கேட்க, அனைத்திற்கும் பொறுமையாகவே பதில் கூறினான் ஆரவ். அமிர்தா அவன் பின்னே தள்ளி நின்றிருந்தாள்.


கடைசியாக, “சார், ஒரு பெர்சனல் குவிஸ்டின். எப்போ எங்களுக்கு குட் நியூஸ் சொல்ல போறீங்க” என்றதும், அமிர்தாவும் ஆரவ்வும் சங்கடமாக ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.


முகத்தில் எந்த எதிர்வினையும் காட்டாது, ஆரவ்வோ,


“இட்ஸ் டூ மை பெர்சனல். எல்லாமே உங்க கிட்ட சொல்ல முடியாது. வேற கேளுங்க”


என்று கூறிவிட, பத்திரிக்கையாளர்களும்  தேவையானவற்றை கேட்டு பதிலை வாங்கி கொண்டு அவனை வழியனுப்பினர்.


வீட்டிற்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற நிர்மலா,


“நான் கேட்டதுக்கு அவ்வளவு கோபப்பட்டீங்க? இப்போ பாருங்க எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க”


என உடன் ஆரவ்வும் அமிர்தாவும் இருக்கும் பொழுதே, பாலகிருஷ்ணனிடம் கேட்க, ஆரவ்வும் அமிர்தாவும் கேள்வியாய் அவரை நோக்கினார்.


“அது ஒன்னுமில்ல கண்ணா, காலையில் பாப்பா பத்தி உங்க கிட்ட பேசினத்துக்கு உன் அப்பா என்னை திட்டிட்டே இருந்தார். ஏன் இதையெல்லாம் கேட்கிற? அது அவங்க விருப்பம், அப்படி இப்படின்னு. அதுக்கு நான் சொன்னேன் கல்யாணம் முடிஞ்சு உடனேயே கேட்கலையே, ஒரு வருஷம் கழிச்சு தானே கேட்கிறேன் சொன்னேன். அது மட்டுமில்ல, நான் மட்டும் இல்ல எல்லாரும் கேட்க தான் செய்வாங்க சொன்னேன். அதே போல தானே நடந்து இருக்கு. அந்த ரிப்போர்ட்டார் கேட்டான் தானே!!


எல்லாரும் இப்பவே கேட்க ஆரம்பிசுட்டாங்க. இப்பவே அதுக்கான வழியை பாருங்க”


என்றதும், அமிர்தாவிற்கோ விழிகள் கலங்கியது.


“ம்மா, என்ன இது? நீங்களா இப்படியெல்லாம் பேசுறீங்க? எல்லாரும் இதையே கேட்டா, எங்களுக்கு கஷ்டமா இருக்காதா? இப்போ என்ன அவசரம் குழந்தை வரும் போது வரட்டுமே. உடனே வந்தாகனும்னா  அது என்ன கடையில் விக்கிற பொருளா, வாங்கிட்டு வந்து கொடுக்க”


என அவன் காட்டமாகவே கேட்க, அமிர்தாவோ அவனின் கையை பிடித்து கொண்டாள்.


எங்கே இருவருக்கும் சண்டை வந்து விடுமோ என்று அவளுக்கு அச்சமாக இருந்தது.


“என்ன கண்ணா பேசுற நீ? அந்தந்த காலத்தில் அது அதுன்னு நடக்க வேண்டாமா? ஒரு விஷயம் கிடைகலைன்னா அதுக்கான முயற்சியில் இறங்கனும். இதுவரை குழந்தை உண்டாகலைனா, அடுத்து டாக்டரை தான் போய் பார்க்கணும். ஏதாவது குறை இருக்கான்னு அவங்களை பார்த்தா தானே தெரியும்”


என்று அமிர்தாவை பார்த்து கொண்டே கூற, அமிர்தாவால் அங்கு நிற்கவே முடியவில்லை. தன்னிடம் தான் குறை இருக்குமென்று கூறுகிறார்கள் என்று அவளுக்கு வேதனையாக இருந்தது. 


அழுகை பெருங்கேவலாக மாற, அங்கு நிற்க முடியாது, அறையை நோக்கி வேகமாக ஓடினாள்.


மனைவியின் வேதனை ஆரவ்விற்கு புரியாமல் இல்லை. அவளே அதையே தானே திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்கிறாள்.


“ம்மா, இனி இதை பத்தி பேசாமல் இருங்க. குழந்தை வரும் போது வரட்டும். நீங்க இவ்வளவு ஸ்ட்ரெஸ் பண்ணறது சரியில்லை. எல்லாருக்கும் கஷ்டத்தை தான் கொடுக்கும் புரிஞ்சுக்கோங்க”


என தாயிடம் இறைஞ்சினான்ஆரவ். அவரை ஓரளவிற்கு மேல் கடிந்து கொள்ள முடியவில்லை அவனால். தாய்ப்பாசம் தடுத்தது. அதற்காக மனைவியையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை.


“சரி கண்ணா, உனக்கு கஷ்டமா இருக்குன்னா நான் இனி கேட்கல. எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். உனக்கு பிடிச்சு இருக்குன்ற ஒரே காரணத்துக்காக தான் அமிர்தாவை நீ கல்யாணம் பண்றதுக்கே சம்மதிச்சேன். என்னோட நியாயமான ஆசையையும் உன் சந்தோஷத்திற்காக விட்டு கொடுக்கிறேன். இனி நான் எதுவும் பேசல”


என்றவர் உள்ளே சென்று விட, ஓய்ந்து போய்விட்டான் ஆரவ். பாலகிருஷ்ணன் வந்து அவன் தோள் தட்டி,


“விடு ஆரவ், உன் அம்மா இப்படி தான். நான் பார்த்துகிறேன். நீ போய் அமிர்தாவை சமாதானப்படுத்து”


என்று ஆறுதல் கூறி சென்று விட, ஆரவ் தன் அறையை நோக்கி சென்றான்.


அறையின் விளக்கை கூட போடாது, கட்டிலில் கால்களின் இடுக்கில் தலைசாய்த்து அழுது கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவள் தலை கோத, பாய்ந்து அவனை கட்டி கொண்டு தேம்பினாள் அமிர்தா.


“அமிர்தா, என்ன இது? எத்தனை தடவை சொல்லி இருக்கேன், அழ கூடாது. அதுவும் நான் கூட இருக்கும் பொழுது அழுகைன்னா என்னென்னே உனக்கு தெரிய கூடாதுன்னு.


விடு, அம்மா ஏதோ சொல்லிட்டாங்க. இனி பாப்பாவை பத்தி பேச மாட்டாங்க. நான் அவங்க கிட்ட பேசிட்டேன். அதனால் வொரி பண்ணாதே. சீக்கிரமே நமக்கு அழகாய், உன்னை போல அழு மூஞ்சியா இல்லாமல், சிரிச்ச முகமாய் ஒரு குட்டி இளவரசி வரும் பாரு”


என கண் சிமிட்டி கூறியவனை முறைத்தவள்,


“நான் அழுமூஞ்சியா?” என்றாள் உறுத்து விழித்தப்படி.


“இல்லையா பின்னே, உன் முகத்தை பாரு” என்றவன் அவளது கண்ணீர் முகம் முழுவதும் இருந்ததை சுட்டி காட்டி, அதனை துடைத்து விட்டு, கலைந்த கூந்தலை சரிசெய்து காட்ட,


“அது, அத்தம்மா கேட்டதும் கஷ்டமா போச்சு. அதான். இனி அழ மாட்டேன்” என்றவள் முகத்தை துடைத்து கொண்டு, அவன் மார்பிலே ஒன்றி கொண்டவள், 


“எனக்கு இளவரசி வேண்டாம் இளவரசன் தான் வேணும் உங்களை போல” என்றாள் ஆசையாக.


அவளை அணைத்து கொண்டவன்,


“அப்போ என்ன பண்ணலாம், நாம ரெண்டு இளவரசி, ரெண்டு இளவரசன் பெத்துக்கலாம்”

என்றதும், 


“நாலு பாப்பாவா?” என அமிர்தா வாயை பிளந்தாள்.


“நாலு மட்டும் போதாது தான். வேணும்னா எட்டு பாப்பா பெத்துப்போமா. வீடு முழுக்க பாப்பாவா இருக்கும். ஜாலியா இருக்கும்ல” என்றான் கனவில் மிதந்தபடி.


“ஹ்ம்ம் இருக்கும்.., இருக்கும்.., உங்களுக்கு என்ன? ஷூட்டிங் இருக்குனு போய்டுவீங்க. நான் தானே பார்த்துக்கணும். தனியா எப்படி பார்த்துக்க முடியும்” என கேள்வி கேட்க,


“அப்படியா சொல்ற? அப்போ என்ன பண்ணலாம் ஷூட்டிங் போகும் போது, பிள்ளைங்களுக்குன்னு தனி கேரவன் வச்சுப்போம்.எங்கே போனாலும் கூடவே கூட்டிட்டு போயிடலாம். நாம ரெண்டு பேருமே பார்த்துக்க முடியும்”


என அவன் யோசனை கூற, அதற்கு அவள் பதில் கூறவென்று அந்த இரவு, அவர்களின் கனவுகளோடு  இனிமையாய் கடந்தது.


மேலும் மூன்று மாதங்கள் கடந்திருக்க, ஆரவ் படப்பிடிப்பு ஒன்றிற்கு சென்று விட்டு நாடு திரும்பிய பொழுது, அவனை கூட்டி வர சென்ற அமிர்தா, முகம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டாள் என்ற செய்தி அவன் தலையில் இடியாய் இறங்கியது..


காதலை பைத்தியகராதனமாக

காட்டினால்

எப்படி இருக்கும் 

என்று கேட்கிறாய்?

பதில் என்னவாக இருக்கும்

நம்மை போல தான்!!


பிடிக்கும்..
























 





Comments